Showing posts with label europe. Show all posts
Showing posts with label europe. Show all posts

Friday, 22 October 2010

ஹலோ யூரோப் - வெனிஸ்

             வெனிஸ் நகரின் அழகைப் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம் (சமீபத்தில் வந்த 'houseful' ஹிந்தி படத்தில்கூட பார்த்திருக்கலாம்).  அதனால் வெனிஸ் நகரத்திற்குப் போவதை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அந்த நகரின் கொடுமையான வெயிலிலும் கொட்டும் வியர்வையிலும் என் ஆவல் நொடியில் காலியாகிவிட்டது. கட்டாயமாக sunscreen lotion, cooling glass, cap, umbrella, ஒரு டவல், நிறைய தண்ணீர் இவை அத்தனையும் எடுத்துக் கொண்டு போனால் ஏதோ கொஞ்சம் பிழைப்போம்.

             வெனிஸ் நகரம் 117 சிறு தீவுகள் இணைந்தது.  இந்தத் தீவுகளை 150 கால்வாய்கள் இணைக்கின்றன.  இந்த கால்வாய்களைக் கடக்க சுமார் 409 சிறு சிறு பாலங்கள் உள்ளன.  இதிலிருந்தே இந்த நகரம் நீரால் சூழ்ந்த நகரம் என ஊகிக்கலாம்.



               நீருக்கடியில் மிக ஆழத்தில் மரக்கட்டைகளை இறக்கி சம நிலைப்படுத்தி அதன்மேல் கட்டிடங்களை எழுப்பி இருக்கிறார்கள். நீருக்கடியில் மரம் உளுத்துப் போகுமே!  ஆனால் நீருக்கடியில் ஆழத்தில் மண்ணுக்குள் புதைத்திருப்பதால் இந்த மரக்கட்டைகள் இத்தனை வருடங்களான பின்னும் உளுத்துப் போகாமலிருக்கின்றன. அதன் மேல் எழுப்பப்பட்ட கட்டிடங்களும் நிலைத்திருக்கின்றன.  ஆனால் எல்லா கட்டிடங்களுமே அதன் பழமையை உணர்த்தும் வகையில் காரை பெயர்ந்தும், விரிசல்களுடனும் இருக்கின்றன. வெள்ள ஆபாயத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் முதல் தளத்தில் யாரும் வசிப்பதில்லை.

            
               நகரெங்கும் சுற்றுலா வந்த வெளி நாட்டவர்களைப் பார்க்க முடிகிறது.  கடைத்தெருக்களிலும் நல்ல கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.  உலகத்திலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்படும் புகழ்பெற்ற St.Mark square (piazza)இங்குதான் இருக்கிறது. போகும் வழியெல்லாம் கடைகளும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிறைந்திருக்கிறார்கள். உங்கள் பர்ஸையும், பாஸ்போர்ட்டையும் மிக பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 St.Marks Basilica

               St.Mark square பிற ஐரோப்பிய நகரச் சந்தை சதுக்கத்தைப் போல நிறைய கடைகளும், நீண்ட பெரிய கட்டிடங்களும் கொண்டதாக இருக்கிறது.  ஒருபுறம் பெரிய மேடையும் (நாடகம் மற்றும் கூட்டங்கள் நடத்த) மற்ற புறங்களில் அழகிய நீண்ட கட்டிடங்களும் அமைந்துள்ளன.  ஒரு மூலையில் பெரிய மணிக்கூண்டும் உள்ளது.  இந்த சதுக்கத்தில் மிக அதிக அளவில் உள்ள புறாக்கள் நம் கையில் கொஞ்சம் தானியத்தை வைத்திருந்தால் நம் தலை மற்றும் கையில் வந்தமர்கின்றன. இப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.

          
  வெனிஸ் நகரத்தின் தனிச்சிறப்பே அங்குள்ள gondola (பொன்னியின் செல்வனில் வரும் ஓடம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது) தான்.  அதிலேறி வெனிஸ் நகரக் கால்வாய்களில் பயணம் செய்து அந்நகரின் பழமையானக் கட்டிடங்களைப் பார்ப்பது சுவையான அனுபவமாக இருந்தது. மிகக் குறுகிய கால்வாயிலும் திருப்பங்களிலும் gondola- வை லாவகமாக ஓட்டிச் செல்வதை ரசித்தபடியே நகரை ஒரு சுற்று சுற்றி வந்தோம்.

              Bridge of sigh எனும் பாலம் வெனிஸ் நகரை அந்நகரின் சிறைச்சாலையிருக்கும் தீவோடு இணைக்கிறது.  சிறைக்குச் செல்லும் கைதிகள் இந்தப் பாலத்தின் ஜன்னல் வழியே வெனிஸைப் பார்த்து பெருமூச்சுவிட்டு செல்வார்களாம்.   அதனால் அந்தப் பெயர்.


 இந்தக் காலத்தில், காதலர்கள் இந்த பாலத்தினடியில் மாலை வேளையில் gondola-வில் ஒன்றாகச் சென்றால் காதல் கைகூடும் என்ற மூட நம்பிக்கை இருக்கிறதாம். (ஓடக்காரர்களே கிளப்பிவிட்டிருப்பார்கள்.  சும்மாவா, ஒரு முறை ஓடத்தில் வலம் வர 100 யூரோ!!. ஒரு ஓடத்தில் அதிகபட்சமாக 6 பேர் உட்காரலாம்; அதனால் நாங்கள் அந்த வாடகையைப் பகிர்ந்துகொண்டோம்).

               வெனிஸ் கண்ணாடி பொருட்களின் வேலைப்பாட்டுக்கும் புகழ் பெற்றது.

அங்குள்ள முரானோ கண்ணாடி தொழிற்சாலைக்குச் சென்று அவர்களின் வேலைப்பாடுகளைப் பார்த்தோம்.  கண்ணாடியில் இவ்வளவு கைத்திறனைக் காட்ட முடியுமா என்று வியந்தோம்.  கண்ணாடியில் செய்யப்பட்ட நகைகள் மிகவும் அழகாக இருந்தன.  இத்தாலியில், கல்யாணத்திற்கு நேர்த்தியான வேலைப்பாடு மிக்க கண்ணாடி குவளைகளைப் பரிசாக அளிப்பார்களாம்.
பி.கு: நாங்கள் கேள்விப்பட்ட இன்னொரு சுவையான விஷயம்: இங்கு Bar-ல் நின்று கொண்டு மது அருந்துவது உட்கார்ந்து மது அருந்துவதைவிட செலவு குறைவானதாம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!!!.

Thursday, 21 October 2010

ஹலோ யூரோப் - அம்ஸ்டர்டம், மடுரோடம்

             அம்ஸ்டர்டம் நகரம் முழுதும் தெருக்களைப் போல் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாகக் காணப்படுகிறன. (இந்த கால்வாய்கள் UNESCO heritage site-ஆகப் பதுகாக்கப்படுகின்றன). சிறிய மற்றும் பெரிய படகுகள் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகும்.  நாங்கள் ஒரு ship cruise-ல் நகரைச் சுற்றிப் பார்த்தோம். நகரமே கால்வாய்களால் சூழப்பட்டுள்ளதால் இங்கும் நிறைய மேம்பாலங்களைப் பார்க்கமுடிகிறது. அவற்றுள் skinny bridge பாலம் மிகவும் குறுகலான (அதுவே பெயர்க்காரணமாயிற்று) ஒன்றாக இருந்தபோதிலும் இரவு நேரத்தில் அழகாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.


 இந்த பாலம், காதலர்கள் விரும்பி சந்திக்கும் lovers paradise சொல்கிறார்கள்.  அந்த பாலமே, அம்ஸ்டல் நதியின் இருபுறங்களில் வசித்த இரு சகோதரிகள் தினமும் சந்தித்துக்கொள்ள கட்டப்பட்ட பாலமாம்!! (தமிழ் நாட்டு உடன்பிறவா சகோதரிகள் போல செல்வாக்கு மிக்கவர்கள் போலும்!). அம்ஸ்டர்டம்மில் Nemo learning centre என்ற மிதக்கும் அறிவியல் அருங்காட்சியகமும் உள்ளது.  எங்களுக்கு உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.  உங்களுக்கு அம்ஸ்டர்டம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கட்டயமாக இந்த இடத்தைச் சுற்றிப் பாருங்கள்.

             அம்ஸ்டர்டம் ஷ்கிஃபோல் விமான நிலையத்தின் terminals ரோட்டின் இருபுறங்களிலும் அமைந்திருக்கிறது.  விமானங்கள் ஒரு டெர்மினலிலிருந்து மற்றொன்றிற்கு மேம்பாலங்கள் மேல் ஊர்ந்து செல்கின்றன.  ரோட்டில் நாம் செல்லும்போது நமக்கு மேல் விமானங்கள் ஊர்ந்து செல்லும் காட்சி வினோதமாக இருந்தது.


              பின்னர் அம்ஸ்டர்டம் நகரின் மினியேச்சரான மடுரோடம் சென்றோம்.  அம்ஸ்டர்டம் நகரில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடமும், தெருக்களும், அதன் ஒரிஜினல் அளவில் 1/25 அளவோடு இங்கு நிறுவப்பட்டுள்ளன.  அது மட்டுமில்லாமல் ஒரிஜினல் கட்டிடங்கள் எப்படியிருக்குமோ அதை அப்படியே replicate செய்திருக்கிறார்கள். மாடல்களின் நேர்த்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  இந்த மாடல்களெல்லாம் synthetic material-ல் செய்யப்பட்டவையாம். ஒவ்வொரு மாடலையும் செய்ய 1-3 வருடங்கள் வரை தேவைப்படுமாம்.  இந்த நகரை கவனித்துக் கொள்ள 35 பேர் வேலை செய்கிறார்கள்.  ஒரிஜினல் அளவில் 1/25 இருக்க வேண்டும் என்பதால் மரங்களைக் கூட இடைவிடாது இலைகளைக் வெட்டிக்கொண்டே (pruning) இருக்கிறார்கள். மடுரொடமில் சுற்றிப் பார்க்கும்போது மக்களெல்லாம் ஒரு giant போல் தோன்றுகிறார்கள்.

rijks museum model
rijks museum



weighing house and cheese market model

shopping mall model


மடுரோடம் உண்மையில் ஜார்ஜ் மடுரோ என்ற வீரரை கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்டதாம்.  ஹேக் நகரிலுள்ள பள்ளிக் குழந்தைகளால் இந்த நகருக்கு முனிசிபல் கௌன்சில் அமைக்கப்பட்டுள்ளது.  அவர்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்/மாணவியே ஒவ்வொரு புது மாடலையும் திறந்து வைக்கிறார்.
குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய இடம் மடுரோடம்.

Wednesday, 22 September 2010

ஹலோ யூரோப் -1 (லண்டன்)

              யூரோப்பில் நாங்கள் முதலில் சென்ற நகரம் லண்டன்.  விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போகும்போதே இருந்த போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அலுப்படைய வைத்தாலும் நகரின் தூய்மை அசத்தியது.
    
               லணடன் நகரத் தெருக்கள் மிகச் சிறியதாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.  நகர் முழுவதும் தெருக்களின் இருபுறமும் இடைவெளி இல்லாமல் அமைந்த பெரிய கட்டிடங்கள் இந்த தெருக்களை இன்னமும் சிறியதாகத் தோன்றச் செய்தன.


        
  லண்டனில் ஒவ்வொரு intersection-னிலும் ரோட்டில் வலப்புறமாக வாகனங்கள் வருமிடங்களில் 'look right' என்றும், இடப்புறத்திலிருந்து வாகனங்கள் வருமிடங்களில் 'look left' என்றும் பாதசாரிகளுக்கு ரோட்டைக் கடப்பதற்கு உதவும் வகையில் எழுதியிருப்பது அதிசயமாக இருந்தது.  இந்தியாவில் கிராமங்களில்கூட இப்படி எழுதிவைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.


          
              லண்டனின் மக்கள் நெரிசல் நம்மைப் பயமுறுத்துகிறது.  வேறு எந்த ஐரோப்பிய நகரத்திலும் இத்தனை நெரிசலைப் பார்க்கவில்லை.  அதுவும் முக்கிய ஷாப்பிங் வீதிகளான oxford street, Regent street-ல் மக்கள் வெள்ளம்தான்!!.  ஆனால் இத்தனைக் கூட்டம் இருந்தும் நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும்.


           இங்கு தெருக்களில் பலவிதமான வேஷம் போட்டவர்களையுமம் வித்தைக் காட்டுபவர்களையும் பார்க்கமுடிகிறது. இதோ மாதிரிக்கு ஒன்று:



             லண்டன் நகரத்தில் இந்திய உணவு விடுதிகளுக்குப் பஞ்சமே இல்லை.  மொத்த மக்கள் தொகையில் 6.6% இந்திய வம்சாவளியினராம்.

             லண்டன் நகரில் தேம்ஸ் நதிக்கரையில் நின்றபோது எனக்கென்னவோ 'ஜென்மம் சாபல்யம்' அடைந்ததுபோல் ஒரு பெருமிதம் (கனடாவிலும் அமெரிக்காவிலும் பல பெரிய நகரங்களுக்குச் சென்றபோதுகூட அப்படி உணரவில்லை).  தேம்ஸ் நதியின் குறுக்கே லண்டன் முழுவதும் 24 பாலங்கள் உள்ளன.


                                                                  aerial view of the bridges

               அவற்றில் வண்ணத்திலும் வடிவத்திலும் கவர்ந்தது ' tower bridge' தான்.  கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக திறந்து பின்னர் மூடிக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டது இது.

                                                                                 tower bridge

              இதுதவிர லண்டன் ப்ரிட்ஜ், மிலினியம் ப்ரிட்ஜ் என்று 100மீ தொலைவிற்கு ஒரு பாலம் அமைந்திருக்கிறது.

              லண்டனில் எங்களை மிகவும் கவர்ந்த விஷயம் லண்டனைச் சுற்றிப் பார்க்க யாருடைய guidance-ம் தேவையில்லை என்பதுதான்.  Big bus company போன்று ஓரிரண்டு கம்பெனிகளின் hop on- hop off பஸ்ஸில் ஒரு நாள் பயணச்சீட்டோ (அல்லது சலுகை விலையில் 2-3 நாட்களுக்கும் பயணச்சீட்டு கிடைக்கிறது) வாங்கிக் கொண்டு ஒரு பஸ்ஸில் ஏறினால் போதும்.  அதில் ஒலிபரப்பாகும் (அல்லது அமர்ந்துள்ள கைடு சொல்லும்) வர்ணனையைக் கேட்டுக் கொண்டே சென்றால் தேவையான நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு விருப்பமான சுற்றுலாத்தலத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வேறு ஒரு பஸ்ஸில் பயணத்தைத் தொடரலாம். இந்த பஸ்களில் வர்ணனை பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் இருப்பதால் எந்த நாட்டவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

               நாங்கள் முதலில் Madamme Tussaud's wax museum சென்றோம்.  அங்கு காந்தி, டெண்டுல்கர், அமிதாப், ஐஸ்வ்ர்யாராய் என்று இந்தியப் பிரபலங்களின் மெழுகுசிலைகளுடனும்  , ஓபாமா, மைக்கேல் ஜாக்ஸன் என்று பிற நாட்டு பிரபலங்களின் மெழுகு சிலைகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  பெரும்பாலான மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக இருந்தன.  ஒரு ஹாலில் 30-40 சிலைகள் அங்கங்கே நிறுத்தப்பட்டிருக்க மிக அருகாமையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிகிறது.  சில நேரங்களில் மெழுகுச் சிலைகளுக்கும் அருகில் நிற்கும் உயிருள்ள மனிதர்களுக்கும் வித்தியாசம் சொல்ல முடியாத அளவு இந்த சிலைகள் தத்ரூபமாக அமைந்திருந்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.

            பின்னர் லண்டனின் landmark-ஆக விளங்கும் London eye என்கிற பிரும்மாண்டமான (433மீ உயரமானது!) giant wheel-ல் ஏறி லண்டனின் aerial view-ஐ ரசித்தோம்.  ஒரு மூடப்பட்ட பெட்டியில் (capsule) செல்வதால் அந்த உயரம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இல்லை.



                                                                                    capsule
            
                Trafalgar square, Bigben, tower museum (இங்குகோஹினூர் வைரம் பதித்த அரசியின் கிரீடம் உள்ளிட்ட அரச குடும்பத்திற்குச் சொந்தமான தங்க ஆபரணங்கள், பாத்திரங்களைக் காணலாம்), Buckingham palace என்று பல இடங்களை hop on-hop off bus-ல் ஏறத்தாழ இருதினங்களுக்குள் சுற்றிப் பார்த்துவிடலாம்.
          
               லண்டனில் நாங்கள் பார்த்த மற்றொரு சுவையான exhibition, 'Ripley's believe it or not'. இங்கு பல வினோதமான, அதிசயமான பொருட்களைச் சேகரித்துப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.  தீக்குச்சியால் செய்யப்பட்ட டவர் ப்ரிட்ஜ், ஜெம்ஸ் சாக்கிலேட்டால் வரையப்பட்ட படம், பூசணி விதையில் வரையப்பட்ட படம், மற்றும் கீழுதட்டால் மூக்கைத் தொடுபவர் என்று வினோதமான மனிதர்கள் பற்றிய குறிப்புகள் என்று பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

                                                                      picture made with gems chocolate

                                                                J.T.Saylor who could touch his nose with his lips

               ஒரு அரிசியில் last supper படத்தை வரைந்திருந்தது மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது இந்தக் கண்காட்சி.




Sunday, 12 September 2010

உலகம் சுற்றும் வாலிபன்




          
                சமீபத்தில் SOTC டூர் கம்பெனியின் ஏற்பாட்டில் யூரோப்பில் சில நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. (ஆமாம், ஆமாம், பயணக் குறிப்புகள் பற்றிய பதிவு கட்டாயம் உண்டு!!).  எங்கள் டூர் மானேஜர் Mr. Rattan Daruwalla.  எங்களுடன் பல நாட்டிலிருந்தும் இந்தியர்கள் வந்திருந்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு.  அவர்களனைவரையும் ஒருமுகப்படுத்தி ஓரளவுக்குத் திருப்தி படுத்துவது உண்மையிலேயே கடினமான வேலை.  அந்த வேலையை மிகவும் லாவகமாக செய்தார் ரட்டன். எல்லா நகரங்களைப் பற்றியும் தகவல் சொல்வது அவரின் வேலைதான் என்றாலும் சில நுணுக்கமான தகவல்களைச் சொல்லும்போது வேலையில் அவரின் ஈடுபாட்டை எண்ணி வியந்தோம்.  தினமும் ஒரு பஜனைப் பாடலுடந்தான் பயணத்தைத் துவக்குவார். பின்னர் ஒரு ஜோக்கும் சொல்வார். நன்றாகப் பாடுவார். அவருடைய திறமையாலும், தினமும் ஒரு நாடெனச் சுற்றும் அவரின் வேலையாலும் கவரப்பட்டு அவரை ஒரு பேட்டி எடுத்தேன். (ஹி, ஹி, சுற்றுலாவிலும் ப்ளாகிற்கு மேட்டர் தேத்தும் கவலைதான்!!!).


                                                                 Mr.  Rattan Daruwalla


அவருடைய பேட்டி:

கே:  நீங்கள் இந்த வேலையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
 ப:   முதலில் ஒரு பிரபலக் கம்பெனியில் கிளர்க்காகத்தான் இருந்தேன்.  ஒரு நாளைப்போல் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான (monotonous) அந்த வேலை எனக்குக் கசந்தது. அப்போதுதான் இந்த வேலை வாய்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.  நான் இயல்பிலேயே கொஞ்சம் சுறுசுறுப்பாக, துறுதுறுவென்று இருப்பவன். இந்த வேலை எனக்கு ஏற்றதாக இருக்கும் என்று தோன்றியதால் இதில் சேர்ந்தேன்.  இன்றுவரை மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

கே: இந்த வேலையில் தங்களைக் கவர்ந்த விஷயங்கள் என்ன?
ப:  ம்ம்ம்... தினமும் புதிய மனிதர்களைச் சந்திப்பது; அவர்களின் எதிர்ப்பார்புகளைப் பூர்த்தி செய்யவேண்டிய சவால்; அதன் மூலம் கிடைக்கும் புதிய நட்பு; பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு; அதன் மூலம் அவர்களின் கலாச்சாரம், உடைகள், உணவு எனப் பல விஷயங்களை நேரிடையாகஅறியும் வாய்ப்பு.

கே: இந்த வேலையின் கஷ்டங்களாக நீங்கள் கருதுவது?
ப: வருடத்தில் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது; கட்டாயமாக நல்ல family support இருந்தாலொழிய இந்த வேலையைச் செய்வது கடினம். அதிகமாகப் (பெரும்பாலும் சுற்றுலா பேருந்திலேயே இருக்க நேரிடுவதால்) பயணம் செய்ய வேண்டியிருப்பதால் உண்டாகும் உடல் அயர்ச்சி; தினமும் ஒவ்வொரு நாட்டில்  வெவ்வேறு விடுதிகளில் தங்குவதால் தூக்கமின்மை மற்றும் உணவுப் பிரச்சினைகள்.
இவை தவிர இந்த வேலையில் job security கிடையாது.  பிடிக்கவில்லையென்றால் அன்றே பணி நீக்கம்தான். மற்ற வேலைகளில் இருப்பது போல் gratuity எல்லாம் கிடைக்காது.  அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டியதுதான் (உடலில் வலு இருக்கும்போதே முடிந்த அளவு சுற்றி சேர்க்கவேண்டியதுதான்).

கே: இந்த வேலையில் சேர விழைபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?
ப: கல்வித் தகுதியாக bachelors degree இருந்தால் போதுமானது.  சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியவேண்டும்.(SOTC யில்) பெரும்பாலும் இந்தியர்களே சுற்றுலா பயணிகளாக வருவதால் இந்தியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.  ஜெர்மன், ஃப்ரென்ச் போன்ற மற்ற மொழிகளில் கற்கும் ஆர்வமும் கொஞ்சம் தெரிந்தும் இருந்தால் நலம். எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுபவர்களாக இருக்க வேண்டும்.
பல நாடுகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு (update செய்துகொண்டே இருக்க வேண்டும்) அதைத் தேவையான நேரத்தில் சுவைபட சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.  நிறைந்த பொறுமை வேண்டும்.  பலதரப்பட்ட மனிதர்கள் ஒன்றாக 10-15 நாட்கள் பயணிப்பதால் பலமுறை சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். அதை சாமர்த்தியமாகத் தீர்க்கும் திறமை வேண்டும். எப்போது விட்டுக் கொடுக்கலாம், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் (assertive) என்ற வரையரையைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் சிறந்த management skill இருக்க வேண்டும்.

கே: இந்த வேலைக்காகச் சிறப்பாக ஏதாவது படிக்க வேண்டுமா?
ப: அப்படித் தேவையில்லை.  ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.  எங்கள் கம்பெனி நிறுவனர் நடத்தும் Couny academy யில் 3 மாத tourism course படிக்கலாம்.  இரண்டு மாதங்கள் கல்லூரியிலும் ஒரு மாதம் Zurich-ல் நேரடி பயிற்சியும் முடித்தால் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.

கே: இந்த வேலையில் நீங்கள் சந்தித்த சவால்கள்?
ப: customer களை நிறைவு செய்வது என்பது தினசரி சவால்தான்!!. சில பயணக் குழுவில் VIP சிலர் வருவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரும் மற்ற பயணிகள் போல்தான்.  அவர்களுக்கென்று எந்த சலுகையும் தர இயலாது.  அதை அவர்களுக்குப் புரிய வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்வது ஒரு சவால்.
ஒரு முறை என் பயணக் குழுவில் ஒருவர் எதிர்பாராவிதமாக உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.  அந்த சூழ்நிலையைச் சமாளித்தது என்னால் மறக்க முடியாதது.

கே: டூர் மானேஜராக உங்களைத் தனித்துக் காட்டும் அம்சமாக நீங்கள் நினைப்பது என்ன?
ப: என் பயணக் குழுவிடம் கட்டாயமாக punctuality-யை ஏற்படுத்துவேன்.  அப்பொழுதுதான் ஒரு நாளின் பயணத் திட்டத்தைச் சரியாக நிறைவு செய்ய முடியும்.  நான் நன்றாகப் பாடுவதாக என் customers பலர் பாராட்டியிருக்கிறார்கள்.  நீண்ட பயணங்களில் அவர்களோடு பாடி அவர்களை மகிழ்விப்பேன்.  தங்குமிடம், உணவு போன்ற ஏற்பாடுகளில் சிறு குறையும் இல்லாமல் முன்னேற்பாடுகளைத் திறம்படச் செய்வேன்.  போகும் நகரங்களைப் பற்றிய குறிப்புகளை internet-ல் படித்தும் அங்குள்ளவர்களிடம் பழகியும் update செய்துகொள்வேன்.

 நிறைய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக ரட்டனிடம் நன்றி சொல்லி விடை பெற்றேன்.  உலகம் சுற்ற ஆசை கொண்ட பல இளைய தலைமுறையினருக்கு இந்த பேட்டி பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதைப் போன்ற வித்தியாசமான, சுவாரசியமான வேலைகளுக்கும் முயற்சிக்கலாமே!!!.