Sunday, 30 May 2010

அம்மா என்றால் அன்பு

               சென்ற பதிவில் பம்மலைப் பற்றி எழுதியபோது அந்த ஊரில் நாங்கள் கழித்த இனிமையான பொழுதுகள் நினைவுக்கு வந்தன.  மலரும் நினைவலைகளில் மூழ்கிய நான் சில முத்தான நிகழ்ச்சிகளைப் பதிவிட ஆசைப்படுகிறேன். அடுத்த 2-3 பதிவுகள் இவற்றைப் பற்றி இருக்கும். (அலர்ட் கொடுத்தாச்சு, எஸ்கேப் ஆக நினைப்பவர்கள் இப்பவே ரெடியாயிடுங்க!!).

              பம்மலில் எங்கள் வீடு ஒன்றரை க்ரௌண்டில் அமைந்தது.  அதில் முக்கால் க்ரௌண்டில் வீடு கட்டி மீதியைச் சும்மா விட்டிருந்தார்கள்.  வீட்டிற்குக் குடிபுகுந்த புதிதில் என் சகோதர சகோதரிகள் தங்கள் தோட்டக் கலை ஆர்வத்தைப் பரிசோதனைப் பண்ணிப் பார்த்தார்கள்.  தென்னை, வாழை, என்று என் அம்மாவும் என்னென்னவோ நட்டார்கள்.  இவையெல்லாம் வளர்ந்ததோ இல்லையோ புல் மட்டும் காடாக மண்டியது.  இதனால் அத்தனை ஜந்துக்களையும் (insects) எங்கள் வீட்டில் பார்க்கலாம்.  ஒரு நாள் இரவு, எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம்.  திடீரென்று விழித்த என் பாட்டி, ஜன்னலில் ஏதோ தெரியவே என் அம்மாவை எழுப்பினார்.  என் அம்மாவும் அதைப் பார்த்து பயந்து என் அண்ணனை எழுப்பினார்.  இந்த சத்தத்தைக் கேட்டு நாங்களும் எழுந்து பார்த்தால்....

              ஜன்னல் கம்பியில் ஒரு பாம்பு சுற்றிக் கொண்டு தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.    லைட்டைப் போடலாமா, போட்டால் பாம்பு உள்ளே குதித்துவிடுமோ என்று யோசித்து பக்கத்து ரூமில் லைட்டைப் போட்டு பார்த்தோம்.  பாம்புதான்; கட்டுவிரியன் என்று எங்கள் பாட்டி identify பண்ண எங்களுக்கோ திகில். என் அண்ணன் இருவரும் கொடியில் துணி உலர்த்தப் பயன்படும் கொம்பைக் கொண்டு 'உஸ், சூ' எனப் பலவிதமாக சத்தம் எழுப்பியவாறே ஜன்னல் பக்கத்தில் லேசாக தட்டிச் சத்தம் எழுப்பினர்.  சில நிமிடங்களுக்குப் பிறகு இவர்கள் கம்பு சுற்றிய அழகைப் பார்த்தோ இல்லை 'துர்கா பரமேஸ்வரி, குழந்தைகளைக் காப்பற்று' என்ற என் பாட்டி மற்றும் அம்மாவின் பிரார்த்தனைக்கு இறங்கியோ என்னவோ பாம்பு வெளிப்பக்கமாக இறங்கிச் சென்றது.  'டகாலெ'னப் பாய்ந்து ஜன்னல் கதவை மூடி 'அப்பாடா' என பெருமூச்சு விட்டோம்.  பின்னர்தான் பார்த்தோம் என் அருமை சகோதரி இத்தனை அமளியிலும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பதை. ('இந்த பாம்பு ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து கொண்டு என்ன யோசித்துக் கொண்டிருந்தது?  ஏன் உள்ளே வரவில்லை' என்று கேட்பவர்களுக்கு --- என் குடும்பத்தில் எல்லோரும் குரட்டை மன்னர்கள்.  விதவிதமான ஸ்ருதியில் வந்து கொண்டிருந்த chorus குரட்டையைக் கேட்டு உள்ளே வர பயந்திருக்கும் என்பது என் கருத்து!!!). மறு நாள் காலையில் விழித்தததும்தான் அந்த கும்பகர்ணிக்கு விஷயம் தெரிந்தது.

               என்னடா, தலைப்புக்கும் விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று யோசிக்கிரீங்களா, இதோ விஷயத்திற்கு வருகிறேன்.  அந்த அக்காவிற்கு கல்யாணமாகிக் குழந்தையும் பிறந்தது.  அந்தக் குழந்தை தூக்கத்தில் சின்னதாக முனகினாலும் டக்கென்று விழித்துவிடுவாள் என் அக்கா.  இந்த மாற்றம் எப்படி வந்தது?  தாயாகிவிட்டாலே மனதிலும் பழக்க வழக்கங்களிலும் பெரும் மாற்றம் வருவது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

               இதே அக்கா பற்றி இன்னொரு சுவையான நிகழ்ச்சி.  எங்கள் வீடு அந்த கால கட்டட முறைப்படி கட்டப்பட்டது. Ceiling மிக உயரத்தில் இருக்கும்.  மேலும் மழைக் காலத்தில் எல்லாம் ஒழுக ஆரம்பிக்கும்.  ஒவ்வொரு மழைக்கால முடிவிலும் கொத்தனார் வந்து 'சொருகோடு' போடுகிறேன் என்று சுண்ணாம்பு அது இதென்று எதையோ வைத்து மொட்டை மாடியைப் பூசிவிடுவார்.  இவற்றின் cumulative effect -ஆக கோடைக் கால இரவுகளில் என்னவோ ஒரு furnace-ல் இருப்பது போல் ஒரு வெப்பம் வந்துவிடும்.  நம்மாலேயே தாங்க முடியாது; பாவம் என் அக்காவின் குழந்தை எப்படி தாங்கும்?.   இரவெல்லாம் தூங்காமல் அழும். என் அம்மா, அக்கா மற்றும் பாட்டிக்கு night shift தான்.  என் அம்மா பாட்டு பாடி சமாதானம் செய்ய முயல என் அக்கா குழந்தையை ஆட்டி pacify பண்ண முயற்சி செய்வாள்.

                ஒரு நாள் இந்த மாதிரி நடக்கும்போது என் பாட்டி horlicks கலந்து வந்து என் அம்மாவிடம், " இந்திரா, இதக் கொஞ்சம் குடிச்சுக்கோ.  பாடிப் பாடி தொண்டை கட்டி விட்டது பார்" என்று கொடுத்தார்.  என் அம்மாவோ "அம்மா, என் பொண்ணுக்கு கொடு.  அவதான் குழந்தைய வச்சிண்டு நடையா நடக்கறா" என்றார்.  என் அக்காவோ " என்னை அப்புறம் கவனிக்கலாம்.  முதலில் என் குழந்தையை சமாதான செய்யுங்கள்.  பாவம் அழுது அழுது வாடிவிட்டது" என்றாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பாசம் ஒரு direction-லேயே flow ஆவது (அதாவது ஒவ்வொருவரும் தன் குழந்தையைப் பற்றியே சிந்தித்தது) வியப்பாக இருந்தது.  தாய்ப் பாசத்திற்கான classic example ஆன இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.

 (இன்னும் உம் கொட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு, கதை முடிந்து விட்டது போய்ட்டு வாங்க.  என்ன, அந்த குழந்தை அழுகையை நிறுத்தியதா என்று கேக்கறீங்களா?  எப்படியோ,
ஒரு கூலர், இரண்டு fan என்று வைத்து நிலமையைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டோம்!!!)

Tuesday, 25 May 2010

YES WE CAN

              எனக்குச் சொந்த ஊர் பல்லாவரத்தை அடுத்து உள்ள பம்மல்.  நாங்கள் அந்த ஊருக்கு குடிபெயர்ந்த புதிதில் (1975 என்று நினைக்கிறேன்) அதிக வீடுகள் கிடையாது.  கொல்லைக் கதவைத் திறந்து வைத்தால் காற்று உண்மையிலேயே பிய்த்துக் கொண்டு போகும் ( கொல்லைக் கதவே இப்பல்லாம் அரிதாகி விட்டது இந்த அடுக்குமாடி உலகில்!!!  என் மகள் என் அம்மா வீட்டிற்கு போனபோது 'ஐய்! பாட்டி வீட்டிற்கு ரெண்டு வாசல்' என்று ஆச்சர்யப்பட்டுப் போனாள்). கொசுவெல்லாம் கொஞ்சம் கூடக் கிடையாது. கிணற்று தண்ணீர் அவ்வளவு நன்றாக இருக்கும்.  பின்னர் அங்கு முளைத்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்றதாக ஆனது. நிறைய வீடுகளும் வர காற்றுகூட கஷ்டப்பட்டுதான் வந்தது. திருடனைப் பற்றிக்கூட கவலைப்படாமல் கதவைத் திறந்து வைத்து நாங்கள் காற்றை அனுபவித்த காலம் போய் இந்த கொசுவிற்காகக் கதவு ஜன்னல் எல்லாம் மூட வேண்டியதாகிவிட்டது.

               இரு வருடங்களுக்கு முன் திரும்பவும் சொந்த ஊருக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. சிவன் கோவில் பக்கம் உள்ள குளத்தை ஆழப்படுத்தியது மட்டுமில்லாமல் ஒரு சிறுவர் பூங்கா, ஏரியைச் சுற்றி வாக்கிங் போக அழகான ஒரு பாதை என்று பம்மல் அழகாக மிளிர்ந்தது.  எல்லாம் exnora-வின் கைவண்ணம். வேளச்சேரி, பள்ளிக்கரணை பக்கமெல்லாம் குப்பையை மலையாகக் குவித்து வைப்பது மட்டுமிலாமல், அதை எரித்து அதனால் வரும் கொடுமையான நாற்றம் நம்மை 'எப்படித்தான் மக்கள் அங்கு குடியிருக்கிறார்களோ' என்று எண்ண வைக்கிறது.  பம்மலில் குப்பைகள் இல்லாமல் இருப்பதும் exnora-வின் கைவண்ணமே.

              சமீபத்தில் ஆனந்தவிகடனில் பம்மல் exnora-வைச் சேர்ந்த இந்திர குமார் அவர்களின் பேட்டி படித்ததும் மிகவும் வியப்பாக இருந்தது.  நமது வீட்டிலேயே மொட்டைமாடியில் தண்ணீர் சேகரிக்கும் வழி, காய்கறி பயிரிடும் யோசனைகளைப் படித்ததும் 'இத்தனை சிறிய இடத்தில் இவ்வளவு செய்யலாமா' என்று ஆச்சரியமாக இருந்தது.  வெட்டிவேர், தேற்றான் கொட்டைகள் (இது எப்படி இருக்கும்?) எல்லாம் இவ்வளவு powerful-ஆ?  இவர் சொல்லும் யோசனைகளைப் பின்பற்றினால் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இருக்காதே?!!!Saturday, 8 May 2010

அந்த நாள் ஞாபகம் - 3

              "Uncle, uncle!!" என்று யாரோ தன்னை உலுக்கியதால் மெதுவாகக் கண் விழித்தார் நேதன்.  கார் கதவு திறந்திருக்க, steering wheel மேல் கவிழ்ந்த நிலையிலிருந்த நேதன் சுதாரித்து எழுந்தார். எதிரில் நின்ற வினோதைக் குழப்பத்துடன் பார்த்தார்.  இதற்குள் அங்கு வந்துவிட்ட போலிஸிடம் நேதன் தனக்குத் தெரிந்தவர் என்றும் அவரைத் தன் காரில் கவனமாக அழைத்துச் செல்வதாகவும் கூறி அனுப்பி வைத்தான் வினோத்.  நேதனுடையக் காரைப் பூட்டிவிட்டு அவரைத் தன் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

              " Uncle, நான் உங்களுக்கு எந்த தீங்கும் செய்யமாட்டேன். கவலைப் படாதீங்க.  உங்க காரை என் வீட்டிற்கு எடுத்து வர towing company-க்குச் சொல்லிவிட்டேன்.  இன்னக்கு என்னோட தங்கி நாளைக் காலை டொரோண்டோ போங்க." என்றான் வினோத். "உங்க காரில் பாம் எல்லாம் வைக்கலை.  ஒரு சின்ன அதிர்ச்சி வைத்தியம் , அவ்வளவுதான்!  நீங்க shock- லேர்ந்து இன்னும் சரியாகலை. Tim Hortons-ல் ஒரு காஃபி வாங்கிக் கொண்டு பேசியபடியே வீட்டுக்கு போவோம். that should make you feel better" என்று மேலும் தொடர்ந்தான் வினோத்.

               "Uncle, உங்களுக்குத் தெரியுமே, எனக்குச் சின்ன வயசிலேயே கார் என்றால் பயம்.  பேச்சு வந்தவுடன் ஸ்வேதா, ஸ்வேதா என்றுதான் அதிகம் சொல்வேனாம்.  என் அப்பா அம்மா கூட அது யருடா உன்னோட
girl friend- ஆ என்று கேலி செய்வார்களாம். பத்தாவது படிக்கும்போது ஒரு கார் விபத்தைப் பார்க்கும்போது எனக்கு என் முன்பிறவி நினைவுகள் தெளிவாகத் தெரிந்தது.  என்னை ஒரு பாவி அநியாயமாக் கொன்னு என் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டானே என்று கோவத்தில் குமுறினேன்.  ஒருமுறை என் குடும்பத்தினருடன் மதுரை செல்லும்போது அம்மாவுக்குத் தெரியாமல் முன் பிறவியில் நான் இருந்த வீட்டிற்குப் போய்ப் பார்த்தேன்.  என் மனைவியும் மகள் ஸ்வேதாவும் நான் இல்லாமல் வாழப் பழகியிருந்தனர்.  மகள் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தாள். நான் எப்படி என்னை அறிமுகப் படுத்திக் கொள்வது என்று புரியவில்லை.  இனி அந்தக் குடும்பத்தில் எந்த விதத்திலும் என்னை இணைத்துக் கொள்வது இயலாது என்று புரிந்தது.  ஒரே குழப்பமாக இருந்தது".

              "பின்னர் படிப்பில் கவனத்தை முழுமையாகத் திருப்பினாலும் அப்பப்ப என் முன்பிறவி நினைவுகள் என்னைக் குழப்பிக் கொண்டே இருந்தன.  பள்ளிப் படிப்பு முடிந்ததும் என் பெற்றோர் என்னை வெளி நாட்டுக்கு அனுப்பிப் படிக்கவைக்க முடிவு செய்தனர். எல்லோரும் U.S. போக அறிவுரை சொல்ல என் மனதில் ஒரு குரல் என்னை Canada செல்ல உந்தியது.  என் பெற்றோரும்  U.S-ல் நடந்த துப்பாக்கி ஷூட்டிங்கெல்லாம் கேள்விப் பட்டு கனடாவே நல்லது என்று முடிவு செய்தனர்."

               "இங்கு வந்த ஒரு வருடத்திலேயே உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.  வினோதோடு உங்களைப் பார்த்ததும் முதலில் ஆச்சர்யமாக இருந்தது. சென்ற பிறவியில் என் ஆசை மகளையும் மனைவியையும் பிரியக் காரணமானவன் என்பதால் கோவமும் வெறுப்பும் வந்தது.  கடைசியில் உங்களைப் பழிவாங்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி திருப்தியும் வந்தது.  அந்த எண்ணத்தோடே வினோதிடமும் உங்களிடமும் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன்.  உங்களோடுப் பழகப் பழக உங்களின் நல்ல குணம் என் எண்ணத்தை மாற்றியது.  மேலும் உங்களைக் கொல்வதால் நான் achieve செய்யப் போவது என்ன? முன் பிறவியில் என் மகளான ஸ்வேதாவுக்கோ என் மனைவிக்கோ இது தெரியக் கூட வாய்ப்பு இல்லை.  மேலும் அவர்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  இந்தப் பிறவியில் என் பெற்றோர் என்மீது மிக அன்பு வைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுக்கத் தைரியமில்லை.  உங்களைக் கொன்று வினோதையும் aunty-யையும் அனாதையாக்குவதால் என்ன பயன்?  உங்கள் தவறுக்கு அவர்களுக்குத் தண்டனை அளிப்பது எப்படி நியாயம்?  இப்படி பல கேள்விகள் என்னைக் குழப்பின.  chemical engineering புத்தகங்களைவிட psycology புத்தகங்களைத்தான் நான் அதிகம் படித்திருக்கிறேன்.  ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவது என்று முடிவு செய்தேன்.  அதுதான் இந்த நாடகம். வேறு யாருக்கும் அடிபடக்கூடாது என்று நீங்கள் signal-க்கு முன்னாலேயே நிறுத்துவீர்களென்று எதிர்பார்த்தேன். அது போலவே செய்தீர்கள்.  எப்படியும் உங்களை இங்கு பிடித்துவிடலாம் என்று நினைத்து உங்களை rental car-ல் பின் தொடர்ந்து வந்தேன்" என்றான்.

               " இந்த அதிர்ச்சியில் நான் heart attack வந்து செத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றார் நேதன்.  சில நிமிட யோசனைகளுக்குப் பிற்கு, "அது நிச்சயமாக நான் கொடுக்க நினைத்த தண்டனை அல்ல.  அப்படி நடந்திருந்தால் அது கடவுள் உங்களுக்குக் கொடுத்த தண்டனை.  அதற்கு நான் பொறுப்பு அல்ல"  என்றான் வினோத்.  சில நிமிட அமைதிக்குப் பிறகு "anyway vinaodh, உனக்கு நன்றி.  இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தில் ஒரு நாள் heart attack வந்துவிடும் என்று நினைப்பேன்.  இப்பொழுது எனக்கு மனம் லேசாகிவிட்டது. may be இதுகூட நீ எனக்குக் கொடுத்த psycological treatment என்று நினைக்கத் தோன்றுகிறது.  அது சரி, அந்த பேகில் ஏதோ wrap செய்து வைத்திருந்த்தே.  அதில் என்னதான் இருக்கு?  என்றார் நேதன். "  இன்று இரவே உங்கள் கார் வ்ந்துவிடுமில்லையா, நீங்களே பாருங்கள்" என்றான் வினோத் புன்னகையுடன்.  அன்று இரவு நேதனும் வினோதும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். 12 மணியளவில் நேதன் காரும் வந்துவிட்டது.  ஆவலுடன் அந்தப் பையைப் பிரித்தார்.  அதில் goldplated முருகன் 'யாமிருக்கப் பயமேன்?' என்று சிரித்துக் கொண்டிருந்தார்!!!!.