Tuesday, 2 September 2014

படித்ததில் பிடித்தது                   சமீபத்தில் விகடன் வெளியீடான திரு.டி.கே.வி.தேசிகாச்சார் அவர்கள் எழுதிய 'உடலே உன்னை ஆராதிக்கிறேன்' புத்தகம் படித்தேன். யோகா பற்றிய இந்தப் புத்தகம் யோகா பற்றிய பல புதிய தகவல்களை எனக்குத் தந்தது. மேலும் யோகா செய்யும் முறையை மட்டும் விளக்காமல், சரியாகச் செய்யவில்லையென்றால் என்ன பிரச்சினைகள் வரும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் நான் அறிந்த சில தகவல்கள்:

        1. ஏறத்தாழ கி.மு.3000 - அதாவது சிந்து சமவெளி நகரங்களான மொகஞ்சதாரோ/ ஹரப்பாவில் வாழ்ந்த மக்களே கூட யோகா செய்திருக்கிறார்களாம். அங்கு அகழ்வாராய்ச்சியில் பல யோகா இலச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
       2.நூலாசிரியரின் தந்தை திரு.கிருஷ்ணமாச்சாரியார் யோகாவின் மூலம் இருதயத் துடிப்பை இரு நிமிடங்கள் நிறுத்தி வைக்கும் ஆற்றல் படைத்தவராம்.
       3. எந்த ஒரு ஆசனம் செய்தாலும் மாற்று ஆசனம் (பிரதி கிரியாசனம்- counter posture) ஒன்றை அடுத்து செய்ய வேண்டும். உதாரணமாக முதுகை முன் பக்கமாக வளைக்கும் ஆசனம் செய்தால் மாற்றாக முதுகை பின் பக்கமாக வளைக்கும் ஆசனம் பிரதி கிரியாசனமாக அமையும்.
      4. நான்கு வயதிலிருந்தே யோகப் பயிற்சியயைத் தொடங்கலாம் என்று சொல்லும் இவர், அவரவர் உடல் மற்றும் வயதுக்கேற்ற ஆசனங்கள் செய்வதே நல்லது என்கிறார்.
      5. பிராணாயாமம் செய்ய classic ratio ஒன்றைச் சொல்கிறார். 1:4:2. அதாவது மூசை ஐந்து செகண்ட் உள்ளே இழுத்து, 20 செகண்ட் உள்ளே நிறுத்தி, 10 செகண்ட் வெளியே விடவேண்டும்.
      6. யோகாசனத்தின் மூலம் ஆஸ்மா உட்பட பல வியாதிகளைக் கட்டுக்குக் கொண்டு வரமுடியும்.
       7. புத்தகங்களைப் பார்த்தோ அல்லது சி.டி.க்களைப் பார்த்தோ ஆசனங்கள் பயில்வது ஏற்புடையது அல்ல. தகுந்த ஆசிரியரின் மூலம் ஒருவரின் வயது, உடல் நிலை இவற்றுக்குத் தக்கவாறு ஆசனப் பயிற்சி பெறுவதே சாலச் சிறந்தது.

                                மேலும் இந்தப் புத்தகத்தில் வாசகர் கேள்வி பதில் மூலமும் பலத் துறை வல்லுநர்களின் பேட்டி மூலமும் ஆசனங்கள் குறித்த பல சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலத்தைப் பேண விரும்பும் அனைவருக்கும் ஒரு சிறந்த கேயேடு இந்தப் புத்தகம்.

                                சுய சிகிச்சைக் கலை பற்றி திரு.பாஸ்கர் அவர்களின் C.D- யைக் கேட்கும் வாய்ப்பும் சமீபத்தில் கிடைத்தது. ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் என்று உடலின் முக்கியமான பகுதிகள் ஆற்றும் வேலையை ஒரு சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும் வகையில் எளிமையாக விளக்குகிறார்.  நாம் உண்ணும் உண்வும், உண்ணும் முறையும் சரிவர இருந்தால் அதுவே நோய் தீர்க்கும் வழியாக அமையும் என்கிறார். அவரின் உரையை படிக்க அல்லது கேட்க anatomictherapy.org என்ற இணையதளத்தைப் பாருங்கள். அவரின் அறிவுரைகளில் சில:

1. உணவின் ஒவ்வொரு சுவையும் ஒரு உறுப்பு வேலை செய்யத் தூண்டும். உதாரணமாக, இனிப்பு இரைப்பையையும், புளிப்பு கல்லீரலையும் வேலை செய்யத் தூண்டுமாம். எனவே அறு சுவை உண்டி ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்.
2. அதற்காக தினமும் அறுசுவை விருந்து செய்ய வேண்டும் என்பதில்லை. கருப்பட்டி இனிப்புக்கும், வேப்பிலைப் பொடி கசப்பிற்கும் போதுமானது. உணவு உண்ட பின்னர் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உணவில் எந்த சுவை விடுபட்டாலும் அதைச் சரிசெய்துவிடுமாம்.
3. வாயை மூடிக் கொண்டு உணவை நன்கு மென்று சாப்பிடுதல் மிக நன்று (இதைத்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள்).
4. காலைச் சம்மணமிட்டுக் கொண்டு சாப்பிடுவது உணவு செரிமானத்திற்கு ஏற்றதாம். நாற்காலியி கூட சம்மண்மிட்டு உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்கிறார்.
5. உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்னும் நீர் அருந்தக் கூடாது.

Tuesday, 25 March 2014

மண் சிற்பங்கள்குவைத்தில் 'Proud to be Kuwait' என்ற  project-காக மண் சிற்பங்கள் பிரும்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. 28,000 ச.மீ பரப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த 80 சிற்பக்கலை வல்லுனர்கள் சேர்ந்து பல மண் சிற்பங்களைச் செய்துள்ளனர். அரபியரின் பிரபலமான கதைகளான ஆயிரத்தோரு இரவுகள், சிந்துபாத் மற்றும் அலாவுதீன் கதைகளிலிருந்து பல நிகழ்வுகளைச் சிற்பங்களாக வடித்துள்ளனர். மாலை வேளையில் கண்கவர் வண்ண ஒளியில் இந்தக் கதைகளில் சிலவற்றை நாடகமாகவும் காண முடிந்தது. இரண்டு மில்லிலயன் டாலர் செலவில் செய்யப்பட்ட இந்த பிரும்மாண்டமான மண் சிற்பங்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டும் வண்ணம் இருந்தன.

பகலில் சூரிய ஒளியில்

இரவில் வண்ண லேசர் ஒளியில்Thursday, 20 March 2014

கலர் தேர்தல் நானும் என் மகளும் துணிக் கடைக்குப் போக என் கணவரைத் துணைக்கு அழைத்தோம். " டிவிலே எலக்ஷன் பத்தி அலசிப் பேசிண்டிருக்கா. இப்ப போகனும்னா எப்படி? அப்பறமா போலாமே" என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார் அவர். "எங்கள் கல்லூரியில் ஒரு வீதி நாடகம் போடறோம் அப்பா. அதுக்குத்தான் துணி வாங்கனும். இன்னிக்கேப் போகணும்" என்று அடம் பிடித்தாள் என் பெண். ஒரு வழியாக அவரைச் சரிக்கட்டி ஜவுளிக் கடைக்குப் போனோம்.

"வாங்க, வாங்க. ரொம்ப நாளாக் காணுமே" என்று வரவேற்றார். அண்ணாச்சி. " என் பொண்ணு காலேஜில் ஏப்ரல் மாசம் முக்கியமான விழாவாம். அதுக்கு bulk-ஆத் துணி எடுக்கனும். காட்டுங்க அண்ணாச்சி" என்றோம்.

"இந்த துணி தரவா? இலை டிசைன் போட்டிருக்குப் பாருங்க. நல்ல ஸ்டிராங்கானத் துணி. சாயம் போகாது." என்றார் அண்ணாச்சி.
" நல்லாதான் இருக்கு. ஆனா 40 மீட்டருக்கும் குறைவா இருக்கும் போலிருக்கே. எங்க கல்லூரியில் எல்லாருக்கும் போறாதே. வேற துணியோடு சேர்த்து தைச்சா ஸ்டிராங்கா இருக்காது. நமக்கு மட்டும்னா பரவாயில்லை. எல்லாருக்கும்னு சேர்த்து வாங்கும்போது யோசிக்க வேண்டியிருக்கு......" என்றாள் மகள்.

"சரி இந்தத் துணி பாருங்க. கறுப்பு சிவப்பு கலந்து இருக்கு. சூரியன் மாதிரி டிசைன் கூட இருக்கு. கொஞ்சமா இருந்தாலும் வேற கலர் துணிகளும் 'கை' கொடுக்கும்" என்று புதிய பேல் துணியை விரிச்சுப் போட்டார்.
"ம்... நல்ல தரமா இருக்குமா? இது என்ன லைன்மாதிரி...இந்த 'அலைவரிசை'தான் கொஞ்சம் பயமுறுத்துது..யோசிக்க வேண்டியிருக்கே.. வேற காட்டுங்க" என்றேன்.

" இதைப் பாருங்க. பச்சை, வெள்ளை, ஆரஞ்சு கலர்ல இருக்கே. இதைத் தான் உங்க காலேஜுல ரொம்ப நாளா வாங்கிருக்காங்க...." என்றார் அண்ணாச்சி.
" இது பழைய கலர். எல்லாரும் இதை யூஸ் பண்ணி போரடிச்சு போயிருக்கா. போன தடவை வாங்கினது சாயம் வேற போயிடுத்து. ..." என்றாள் மகள்.
" இது புது ப்ராண்ட். 'ராகா'ன்னு புதுசா வந்திருக்கு..."
" புதுசா....  வேற வேற ப்ராண்டுன்னாலும் ஓனர் ஒருத்தர்தான். எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். வேற காட்டுங்க..." என்றோம்.

" அப்படியா. இந்த காவி கலர் எப்படி இருக்கு?" என்றார் அண்ணாச்சி.
" காவியா? சந்நியாசி கலர்னு நிறைய பேருக்குப் பிடிக்காதே....." என்று யோசித்தாள் மகள்.
" இல்லம்மா. இது 'நமோ' பிராண்டுங்க. ரொம்ப பேருக்குப் பிடிச்சிருக்கு. நிறையவும் உங்களுக்குக் கிடைக்கும்... " என்றார் அண்ணாச்சி.

அதற்குள் அவரிடம் ஒருவர் ஏதோ விஷயம் சொன்னார். அண்ணாச்சி "ஐயா, நீங்க பார்த்துட்டு இருங்க. அதுக்குள்ள வாசல்ல ஒருத்தர் தொடப்பம் எடுத்து வந்திருக்கார். இங்க க்லீன் செய்யறேங்கறார்" என்றார். நாங்கள் ஒரே குரலில் " ஐயோ, தொடப்பம் எடுத்துண்டு வராரா!!!!! அவர் இந்த வேலைக்கே 'ஆப்பு' வைச்சுருவாரு.  நாங்க இதுலேயே ஒண்ண செலெக்ட் செஞ்சுட்டு போயிடறோம். ப்ளீஸ்" என்று அலறினோம்.