Monday, 8 February 2010

வருங்காலத்தில் நான்...... (2)

             ஆர்வமாகக் கடிதங்களைப் புரட்டினான் என் பேரன்.  கடிதங்களில் இணைக்கப்பட்ட passport size புகைப்படங்களை உற்றுப் பார்த்தான்.  ஒரு புகைப்படத்தைப் பார்த்து," தாத்தா, இவங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே!" என்று சொல்லியபடி கடிதத்தை வாசித்தான். 'அன்புள்ள ஐயா, எனக்கும் சீதா, ரமாவைப்போல் பெரிய புரட்சி பெண்ணாகவேண்டும் என்று ஆசைதான்.  ஆனால் என் குடும்பத்தில் முதலில் பள்ளிப் படிப்பை முடிக்கும் பெண்ணே நான்தான். பழமைவாதியான என் தந்தை பள்ளிப் படிப்பு முடிந்ததும் எனக்குக் கல்யாணம் செய்துவிடுவார்கள் என்று தெரியும்.  வருங்காலத்தில் நல்ல ஒரு குடும்பத் தலைவியாக வருவேன்.  என் மகளை நன்கு படிக்க வைப்பேன்' என்று எழுதியிருந்தது.

          "யாரென்று தெரியவில்லையா?  நிறைய கதைகளையும் நாவல்களையும் எழுதிய பம்மல் பாரதிதான் இது.  அவளின் திறமைகளை ஊக்குவிக்கும் கணவர், மாமியார் அமைந்ததால் இன்று தமிழ் நாடே போற்றும் எழுத்தாளர் ஆகியிருக்கிறாள்" என்றேன்.

            இன்னொரு கடிதத்தால் கவரப்பட்ட என் பேரன், "தாத்தா, 'இந்த நாட்டிற்கு சிறந்த சேவையாற்றுவேன்' என்று உணர்ச்சிகரமாக எழுதியிருக்காங்களே.  இவங்க யார் தாத்தா?" என்றான்.  அதை வாங்கிப் பார்த்து "ஓ, இவங்களா, ------ கட்சியின் மகளிர் அணி தலைவிதான் இவங்க" என்றேன்.  "அப்படியா, இனிமேல் இவங்களால சேவையெல்லாம் செய்ய முடியாது, சேவை சாப்பிடத்தான் முடியும்!!!" என்றான் பேரன் சிரித்துக்கொண்டே.

          "தாத்தா, இது யாரு, உங்களுக்கு செமையா ஐஸ் வைத்திருப்பது.  'உங்களைப் போலவே சிறந்த ஆசிரியராக வருவேன்னு எழுதியிருக்காரே"  என்றவாரே பெயரைப் படித்தவன் ஃபோட்டோவை உற்று உற்று பார்த்தான்.  " தாத்தா, இது என் science teacher தானே" என்று கேட்டான்.  நான் ஆமாம் என்றதும் சந்தோஷமாக குதித்தான்.  "தாத்தா, எனக்கு மட்டுமில்லை, என் ஸ்கூலில் எல்லாருக்கும் பிடித்த ஒரே டீச்சர் இவர்தான்" என்றதும் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

            நான் ஒரு கடிதத்தை படித்து யோசனையில் ஆழ்வதைக்கண்ட பேரன் என்ன ஆயிற்று என்று துளைத்து எடுத்தான்.  " இவன் பள்ளியில் கிரிகெட்டில் கில்லாடி.  பார், கவாஸ்கர் போல் பெரிய ஆட்டக்காரராக வருவேன் என்று எழுதியிருக்கிறான்.  அதற்கான திறமையும் இருந்தது.  ஆனால் அவன் பெற்றோர் IIT நுழைவுத் தேர்வுக்குப் படிப்பதற்காக கிரிகெட்டை மூட்டை கட்டி வை என்று வற்புறுத்தியதால் ஆயிரத்தில் ஒருவனாக வந்திருக்க வேண்டியவன், இப்போது ஒரு வெளி நாட்டு கம்பெனியில் பத்தொடு பதினொன்றாக ஒரு software engineer-ஆக இருக்கிறான்.  இவனாவது பரவாயில்லை.  இவன் ஃப்ரெண்ட், சிறந்த தடகள வீரனாக வந்திருப்பான்.  அவன் பெற்றோரும் முடிந்தவரை ஊக்குவித்தார்கள்.  மாநில அளவில் முதன்மையாக வந்தான்.  ஆனால் பாவம் கல்யாணத்திற்குப் பிறகு மனைவி கொடுத்த குடைச்சலால் விளையாட்டில் கவனம் குறைந்து, இப்போது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்த வேலையில் காலத்தைக் கழிக்கிறான்!!!" என்று வேதனையோடு சொன்னேன்.

            "சரி தாத்தா, இதுவரை நீங்கள் அனுப்பிய லெட்டரில் மறக்க முடியாதது எது?" என்று கேட்டான்.
            என்னால் அதை மறக்க முடியுமா?  மூன்று வருடங்களுக்கு முன் இதைப்போல் அந்த வருடத்திற்கான கடிதங்களை அனுப்பினேன்.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் நான் வீட்டில் தனியாக இருந்தேன்.  கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தேன்.  ஒருவன் வந்து, "சார், என்னைத் தெரியவில்லையா?  நான்தான் ஆகாஷ்.  உங்கள் கடிதம் கிடைத்தது ஐயா" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே அழத் தொடங்கினான்.  சிறிது நேரத்தில் அழுகைக் குறைந்து, "ஐயா!  பள்ளிப் படிப்பு முடிந்ததும், என் விருப்பத்திற்கேற்ப மருத்துவம் படிக்க முடியவில்லை.  எங்களுக்குப் பணம் கொடுக்க வசதி இல்லாததால் BSc., - ல் சேர்ந்தேன் என்று உங்களுக்குத் தெரியும்.  பின்னர் சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டேன்.  என் அப்பாவின் மருத்துவ செலவுக்குக் கூட பணமில்லை.   G.H-ல் கூட எதற்கெடுத்தாலும் லஞ்சம்.  கடைசியில் அவரின் உடல் கிடைக்கக் கூடப் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.  அப்போது ஒருவர் உதவி செய்தார்.  பின்னர்தான் தெரிந்தது அவர் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்பது.  பல கஷ்டங்களால் மனம் வெறுத்துப் போனதாலும் அவரின் போதனைகளாலும் அவர்கள் இயக்கத்தில் சேரலாம் என்ற மன நிலையில் இருந்தேன்.  அப்போதுதான் உங்களால் அனுப்பப்பட்ட என் வருங்கால இலட்சியம் பற்றிய கடிதம் கிடைத்தது.  உங்களின் வாழ்க்கையால் கவரப்பட்டு இந்த நாட்டின் மக்களுக்கு நானும் சேவை செய்வேன் என்ற என் மனநிலை சூழ்நிலைகளால் எந்த அளவு மாறிவிட்டது என எண்ணி வருந்தினேன்.  உடனடியாக போலீசில் சரணடைந்தேன்.  என் துணையோடு போலீசும் தீவிரவாதிகளைப் பிடித்தது.   இப்போது   undercover agent -ஆக போலீஸில் வேலை பார்க்கிறேன்.  உயிருக்கு ஆபத்தான வேலை என்றாலும், உயிருள்ள வரை நாட்டிற்காக உழைப்பதில் சந்தோஷமாக இருக்கிறது" என்றான்.  எனக்கு அன்று பாரத ரத்னா பட்டம் கிடைத்தது போல சந்தோஷம் கிடைத்தது.

             கதையைக் கேட்ட என் பேரன், "தாத்தா, ஏன் அத்தை, அப்பா எல்லோரும் குறைந்த சம்பளமானாலும் ஆசிரியர் வேலையை சந்தோஷமாகச் செய்கிறார்கள் என்று இப்பொழுதுதான் புரிந்தது. நானும் உங்களைப் போல் ஒரு நல்ல டீச்சராக வருவேன் தாத்தா" என்றான்.  சந்தோஷத்தில் அவனை அணைத்து முத்தமிட்டேன்.    

வருங்காலத்தில் நான்...... (1)

             நான் அந்தக் கடிதங்களை எடுத்து வைத்து உட்கார்ந்தவுடன் என் மனைவி "இந்த வருஷ தண்ட செலவை ஆரம்பிச்சாச்சா?" என்று சலித்துக்கொண்டாள்.  உள்ளேயிருந்து வந்த மகன்,"அம்மா அப்படித்தான்.  நீங்கள் எல்லா கடிதங்களையும் ரெடி பண்ணி வையுங்கள் அப்பா.  நான் வரும்போது ஸ்டாம்ப் வாங்கி வருகிறேன்" என்று சொல்லிச் சென்றான்.  மிகவும் ஆவலோடு வந்த பேரனோ, "தாத்தா, எனக்கு லீவுதானே.  நான்  cricket coaching class முடிஞ்சு வந்ததும் ரெண்டு பேரும் கடிதங்களைப் படிக்கலாம் தாத்தா please..."   என்றான்.

            நான் ஒரு retired ஸ்கூல் வாத்தியார்.  நான் என் தொழிலையும், என் மாணவர்களையும் உயிரைவிட அதிகமாக நேசித்தேன், நேசிக்கிறேன்.  ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களிடம் அவர்கள் வருங்கால இலட்சியத்தைக் கடிதத்தில் குறித்து கொடுக்க சொல்வேன்.  சரியாகப் பத்து வருடங்கள் கழித்து அந்தக் கடிதங்களை அவர்களுக்குத் திருப்பி அனுப்புவேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.  மாணவப் பருவ இலட்சிய பாதையிலே பயணித்தவர்களும் உண்டு; இலக்கே இல்லாமல் (லக்கே இல்லாமல் என்றும் சொல்லலாம்) தவறிப் போனவர்களும் உண்டு. முதல் சில வருடங்கள் பலர் ஏளனம் செய்தபோதும் விடாமல் கடிதங்களை எழுதச் சொன்னேன்.  பின்னர் மாணவர்களும் பெற்றோரும் தீவிரமாக ஆலோசனை செய்து எழுதும் அளவிற்கு இந்த கடிதங்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

           "தாத்தா, நான் வந்துட்டேன்!!" என்ற பேரனின் குரல் என் நினைவலைகளை நிறுத்தியது.  இருவரும் சேர்ந்து ஒவ்வொரு கடிதமாகப் படிக்கத் தொடங்கினோம்.

"தாத்தா, அது என்ன பத்து வருடக் கணக்கு?" என்றான் பேரன்.

"பத்து வருடத்தில் எவரும் தனது career பற்றி நிலையான முடிவு எடுத்து பயணம் செய்யத் தொடங்கியிருப்பார்கள்.  தன் நிலையை மாற்ற வேன்டும் என்றாலும் அவர்களுக்குப் போதிய அவகாசம் கிடைக்கும்.  அதனால்தான் பத்து வருடங்கள் என்று முடிவு செய்தேன்" என்றேன்.

"அது சரி தாத்தா. எப்படி எல்லோர் முகவரியும் உனக்குக் கிடைக்கும்.  பத்து வருடங்களில் எவ்வளவு இடம் மாறினார்களோ ?" என்றான்.

"உனக்குத்தான் அப்பா பலமுறை சொல்லியிருக்கிறாரே நான் மாணவர்களிடம் எத்தனை நெருக்கமாகப் பழகினேன் என்று. என் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்னமும் எனக்குக் கடிதமோ, வாழ்த்து அட்டைகளோ அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  மேலும் பத்து வருடங்கள் கழித்து இந்த கடிதங்களைப் படிப்பதில் ஒரு த்ரில் இருப்பதாலும் என்னிடம் தங்கள் முகவரியை எப்படியாவது தெரிவிப்பார்கள்.  இவர்கள்  மூலம் தொடர்பில் இல்லாதவர்களின் முகவரியும் கிடைத்துவிடும். ஒவ்வொரு வருடமும் 80% கடிதங்களை எப்படியாவது அனுப்பிவிடுவேன்.  சரி வா, கடிதங்களைப் படிப்போம்" என்றேன்.

---தொடரும்