Thursday, 30 September 2010

எந்திரன்- திரை விமர்சனம்


            

 குவைத்தில் எந்திரன் வியழக்கிழமையே ரிலீசாகிவிட்டது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த அனுபவம் முதல் முதலாகக் கிடைத்தது.

                முதலில் பாராட்ட நினைப்பது ரஜினிகாந்தின் dedication-ஐத்தான்.  ஒவ்வொரு ஷாட்டிலும் அவரின் உழைப்பும் ஈடுபாடும் தெரிகிறது.  பின் பாதியில் ஷங்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்.  இயந்திரன் ரஜினியுடன் scientist ரஜினி போராடும் காட்சிகளில் ஷங்கர், ரஜினி & ரஹ்மான் துணையுடன் ருத்ரதாண்டவமே ஆடுகிறார்.  அந்த graphics காட்சிகள் தமிழ் சினிமாவை வேறு ஒரு லெவெலுக்குத் தூக்கிச் சென்றுவிட்டது.

             மோஹஞ்சதாரோ பாடலும் எந்திரா பாடலும் மிக நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளன.  மொஹஞ்சதாரோ பாடலுக்கு ஐஸ்வர்யா பச்சனின் நடனம் கொஞ்சமும் விரசமில்லாமல் நன்றாக இருந்தது.  எந்திரா (அரிமா அரிமா) பாடலிலும் அவர் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார்.

           

             ரஜினிகாந்திற்கு மேக்கப் போட்டவரைப் பாராட்ட வேண்டும்.  ஐஸ்வர்யா   பச்சன்கூட சில ஃப்ரேம்களில் வயதானவராகத் தெரிகிறார். ஆனால் ரஜினிகாந்த் இளமையாகத் தெரிகிறார்.

             இவ்வளவு செலவு செய்தவர்கள் கதையோட்டத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.  சுஜாதாவின் இறப்பு கதையோட்டத்தில் வரும் தொய்வில் தெரிகிறது.  ஆனால் graphics சிறப்பால் அதை compensate செய்துவிட்டார் ஷங்கர்.

             தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மிகுந்த பொருட் செலவில், அதைவிட அதிக அளவு உழைப்பையும் கொட்டி எடுத்திருக்கிறார்கள்.  அவர்களைப் பெருமை படுத்தும் வகையில் நாம் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்ப்போம்.  இந்தப் படத்தைத் திரையரங்கில்  பார்த்தால்தான் ரசிக்கமுடியும்.

எந்திரன்                  என்ன யோசிக்கிறீங்க?  Photography எனக்குப் பிடித்த ஒன்று.  அதில் எந்திரனை (என் திறனை) வளர்க்க முயற்சி செய்கிறேன்.  எந்திறன் படம் செய்து கிடப்பதே.  எப்படி எந்திறன்? (என் திறன்).


ஹி ஹி, எந்திரன் விளம்பரத்தில் கொஞ்சம் குளிர் காயலாம் என்றுதான்...

Tuesday, 28 September 2010

ஹலோ யூரோப் - ப்ரஸ்ஸல்ஸ், அம்ஸ்டர்டம்


             லண்டனிலிருந்து யூரோ ஸ்டார் இரயில் மூலம் ஃப்ரான்ஸ் நாட்டின் calais என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  இங்கலீஷ் கால்வாயின் அடியில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை (tunnel)  வழியாக இந்த இரயில் செல்கிறது. இரயில் பெட்டியில் எங்களை பஸ்ஸோடு அப்படியே ஏற்றிவிட்டார்கள்.  நம் வாகனத்தோடு அப்படியே ஏற்றி இறங்குமிடத்தில் வாகனத்தோடு இறங்கிக் கொள்ளலாம்.  இதற்கு முன்பதிவு செய்யவேண்டும்.  கடலுக்கு அடியில் செல்லப் போகிறோம் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.  ஆனால் 98% நேரம் சுரங்கப் பாதையில் செல்வதால் இருட்டைத் தவிர வேறு ஒன்றும் பார்க்கவில்லை.  முழுவதும் சுரங்கப்பாதையில் செல்வதால் ஏதாவது பெரும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றாமலில்லை.  தீ விபத்தை அறிய கருவிகள் இருப்பதால் பயமில்லை என்கிறார்கள்.  அந்த கருவியின் வேலையில் (interfere) குழப்பம் உண்டு செய்யும் என்பதால் (flash)ஃபோட்டோ எடுக்கக் கூட அனுமதியில்லை. பயணத்தின்போது நாம் நமது வாகனத்திலிருந்து இறங்கி இரயில் முழுவதும் நடக்க வசதி உள்ளது. இந்தப் பயணம் த்ரில்லாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

             ஃப்ரான்ஸில் இறங்கினாலும் அங்கிருந்து நாங்கள் முதலில் பெல்ஜியம் சென்றோம்.  முதலில் ப்ரஸ்ஸல்ஸிலுள்ள 'அட்டொமியம்' (atomium) பார்த்தோம். ப்ரஸ்ஸல்ஸில் 1958-ம் வருடம் உலக வர்த்தகக் கண்காட்சியின்போது கட்டப்பட்டதாம் இது.  இரும்பு மூலக்கூறு (ஒன்றுமில்லீங்க, a molecule of Iron என்பதைத்தான் தமிழில் எழுதினேன்!!) வடிவத்தில் அமைக்கப்பட்டது இந்த அட்டோமியம்.  அதன் ஒவ்வொரு கோளத்திலும் ஒரு கண்காட்சி இருப்பதாகச் சொல்கிறார்கள்.  அடித்த வெயிலில் அலுமினியத்தால் செய்யப்பட்ட அந்த அட்டோமியம் மிகவும் சூடாக இருக்கும் (குளிர்சாதன வசதிக்கும் மீறி) என்று சொல்கிறார்கள்.  நாங்கள் வெளியிலிருந்து ஃபோட்டோ மட்டும் எடுத்துக் கொண்டோம்.  அதன் மேலுள்ள கோளத்தின் முனையிலிருந்து( சுமார் 102 மீ உயரம்) கீழே கயிற்றில் சறுக்கி சாகசம் புரிந்துகொண்டிருந்தனர் சிலர்.
அதை ரசித்துவிட்டு பஸ்ஸிலேறி ப்ரஸ்ஸல்ஸின் சந்தை சதுக்கத்தை (market square) நோக்கிப் போனோம். நகரத்தின் மையத்திலிருந்த market square மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது.கட்டிடங்களின் அழகு மனதைப் பறிப்பதாக இருந்தது.  பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை பல பொதுக்கூட்டங்கள், பெரு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் இந்த market square-ல்தான் நடக்குமாம்.  அங்கு எல்லா நேரத்திலும் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

 இங்கிருந்து சிறிது தொலைவில்தான் பெல்ஜியத்தின் icon ஆகச் சொல்லப்படும் manniken piss என்ற சிலை இருக்கிறது.


 இந்த சிலை மிகவும் சிறியது.  இதைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் இது எப்படி ஒரு நாட்டின் icon ஆகக் கருதப்படுகிறது என்ற வியப்பு நீங்கவில்லை.  இந்த சிலைக்கு விதவிதமான அலங்கார ஆடைகள் இருக்கின்றனவாம்.  அந்த ஆடைகளுக்காக டவுன் ஹாலில் ஒரு அருங்காட்சியகமும் இருக்கிறதாம்!!!

               மூட நம்பிக்கைகள் இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்திருந்தேன்.   யூரோப்பிலும் சில நகரங்களில் மக்களின் மூட நம்பிகையைப் பற்றி அறிய முடிந்தது.  Market square அருகிலேயே உள்ள இந்த சிலையின் பாதங்களைத் தடவிச் சென்றால் அதிர்ஷ்ட்டம் கிட்டும் என்று சொல்கிறார்கள்.


 அங்கு வரும் அனைவரும் அந்த சிலையை வருடிவிட்டுச் செல்வதைப் பார்க்க முடிந்தது.
.

               ப்ரஸ்ஸல்ஸ், லேஸ், சாக்லேட், waffels இவற்றிற்குப் புகழ் பெற்றது.  லேஸில் பின்னப்ப்ட்ட பல கலைப் பொருட்களை இங்கு வாங்கலாம்.

 waffels

waffels சாப்பிட்டோம்.  எங்களுக்கு என்னவோ அதன் சுவை பிடிக்கவில்லை.

              ப்ரஸ்ஸல்ஸ் நகர வீதியில் சுற்றிவிட்டு நெதர்லேண்ட் (நீதர்லேண்ட் என்றுதான் சொல்கிறார்கள்) நோக்கிப் போனோம். ஹாலந்த் என்றும் அழைக்கப்படும் நீதர்லேண்ட்ஸில் அம்ஸ்டர்டம், ஹேக் போன்ற நகரங்களை நன்றாகச் சுற்றிப் பார்த்தோம்.

முதலில் அம்ஸ்டர்டம் பற்றிய சில சுவையான செய்திகள்:

              நீதர்லேண்ட் நாடுதான் உலகிலேயே அதிக அளவு மக்கள் நெருக்கம் கொண்டது. மக்கள் நெருக்கத்தாலும், உள்ளேறி வரும் கடலைத் தடுக்கவும் land reclamation மூலம் கடல் நீரைத் தள்ளி நிலத்தை வாழ மற்றும் பயிர் செய்ய வசதியாக்கியிருக்கிறார்கள்.

dykes

கடல் நீரைப் புறம் தள்ள dykes கட்டி தண்ணீரைக் காற்றாலைகளின் உதவி கொண்டு கால்வாய்காளில் விட்டு நிலத்தை வாழ்வதற்கேற்றவாறு பண்படுத்தியிருக்கிறார்கள். இப்பொழுது காற்றாலைகளின் வேலையைப் பெட்ரோலால் இயங்கும் பம்புகளால் செய்கிறார்கள்.

               இந்த நாடு டூலிப் மலர்களுக்குப் பெயர்போனது.  உலகில் ஏற்றுமதி செய்யப்படும் மலர்களில் பெருமளவு இங்கிருந்துதான் செய்யப்படுகிறது.(திருப்பதி வெங்கடமலையானுக்கும் இங்கிருந்து பூ வருகிறது என்று கேள்விப்பட்டேன்!).

               அம்ஸ்டர்டமில் மக்கள் சைக்கிளைத்தான் அதிக அளவு உபயோகிக்கிறார்கள்.  முதன்முதலில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காகத் தனி பாதை அமைக்கப்பட்டதும் இங்குதான் (கி.பி.1930).  நகரத்தின் இடையில் தெருக்கள் போல கால்வாய்கள் இருப்பதால் படகையும் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

               ஹை வேயில் செல்லும் வாகனங்களின் இரைச்சலால் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க ரோட்டின் இரு பக்கமும் fiber wall அமைத்திருக்கிறார்கள்.


 அரசுக்குத்தான் மக்கள் மேல் எத்தனை கரிசனம்!!.

             இங்கு குளிர் காலங்களில் மக்கள் பெரும்பாலும் மரத்தாலான காலணிகளையே அணிகிறார்கள்.  இந்த ஷூக்கள் பல வண்ணங்களில் கண்ணைக் கவருவதாக இருக்கின்றன.பண்டை நாட்களில் தன் மனம் கவர்ந்த பெண்ணுக்குத் தன் கையாலேயே ஷூ செய்து அவள் வீட்டு வாயிலில் வைப்பார்களாம் காதலர்கள்.  அவள் அந்த ஷீவை ஏற்றுக் கொண்டால் காதலுக்குச் சம்மதம் என்று பொருளாம்.  (இந்தக் காலத்தில் ஷூவுக்குள் பேங்க் கணக்குப் புத்தகத்தையும் வைக்க வேண்டியிருக்கும்!!).

              முன் காலத்தில் இங்கு வீட்டின் வாயிலின் அளவை வைத்து வரி வசூலிக்கப்பட்டதாம்.  அதனால் பெரும்பாலான வீடுகளின் வாசற்கதவு மிகவும் சிறியதாகவே இருக்கும்.  பின் எப்படி வீட்டிற்குத் தேவையான furnitures-ஐ வீட்டுக்குள் கொண்டு செல்வது?  ஜன்னல் வழியாகத்தான் கொண்டு வருவார்களாம்.அதற்கு உதவும் வகையில் கட்டிடங்களின் மேலே ஒரு கொக்கி உள்ளது.  அதன் மூலம் கயிற்றைக் கட்டி, கயிற்றில் furnitures -ஐக் கட்டித் தூக்கி ஜன்னல் வழியே வீட்டிற்குள் இறக்குவார்களாம். (நம்மாட்களாக இருந்தால் வீட்டிற்கு வாசற் கதவே வைக்காமல் ஜன்னல் வழியே எகிறி குதித்துப் போயிருப்பார்கள்!).

அம்ஸ்டர்டம்மின் அடையாளமாகக் கருதப்படுவது அந்த நகரிலுள்ள காற்றாலைகள்தான் (windmill).


 முற்காலத்தில் நீரை அகற்ற கட்டப்பட்ட அவை பெரும்பாலும் பயன்பாடு இழந்து போனதால் அழிக்கப்பட்டுவிட்டன.  இருக்கும் 1000 காற்றாலைகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்ததனால் அவை பிழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  காற்றாலைகளின் பருத்த அடிப்பாகத்தில் கதவமைத்து பல ஏழை மக்களுக்கான குடியிருக்கும் வீடுகளாக மாற்ற்றிக் கொண்டுள்ளனர்.

               அம்ஸ்டர்டம் நகரைப் பற்றியும், மடுரோடம் என்ற சின்னஞ்சிறிய (miniature) அம்ஸ்டர்டம் நகர் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Wednesday, 22 September 2010

ஹலோ யூரோப் -1 (லண்டன்)

              யூரோப்பில் நாங்கள் முதலில் சென்ற நகரம் லண்டன்.  விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போகும்போதே இருந்த போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அலுப்படைய வைத்தாலும் நகரின் தூய்மை அசத்தியது.
    
               லணடன் நகரத் தெருக்கள் மிகச் சிறியதாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.  நகர் முழுவதும் தெருக்களின் இருபுறமும் இடைவெளி இல்லாமல் அமைந்த பெரிய கட்டிடங்கள் இந்த தெருக்களை இன்னமும் சிறியதாகத் தோன்றச் செய்தன.


        
  லண்டனில் ஒவ்வொரு intersection-னிலும் ரோட்டில் வலப்புறமாக வாகனங்கள் வருமிடங்களில் 'look right' என்றும், இடப்புறத்திலிருந்து வாகனங்கள் வருமிடங்களில் 'look left' என்றும் பாதசாரிகளுக்கு ரோட்டைக் கடப்பதற்கு உதவும் வகையில் எழுதியிருப்பது அதிசயமாக இருந்தது.  இந்தியாவில் கிராமங்களில்கூட இப்படி எழுதிவைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.


          
              லண்டனின் மக்கள் நெரிசல் நம்மைப் பயமுறுத்துகிறது.  வேறு எந்த ஐரோப்பிய நகரத்திலும் இத்தனை நெரிசலைப் பார்க்கவில்லை.  அதுவும் முக்கிய ஷாப்பிங் வீதிகளான oxford street, Regent street-ல் மக்கள் வெள்ளம்தான்!!.  ஆனால் இத்தனைக் கூட்டம் இருந்தும் நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும்.


           இங்கு தெருக்களில் பலவிதமான வேஷம் போட்டவர்களையுமம் வித்தைக் காட்டுபவர்களையும் பார்க்கமுடிகிறது. இதோ மாதிரிக்கு ஒன்று:             லண்டன் நகரத்தில் இந்திய உணவு விடுதிகளுக்குப் பஞ்சமே இல்லை.  மொத்த மக்கள் தொகையில் 6.6% இந்திய வம்சாவளியினராம்.

             லண்டன் நகரில் தேம்ஸ் நதிக்கரையில் நின்றபோது எனக்கென்னவோ 'ஜென்மம் சாபல்யம்' அடைந்ததுபோல் ஒரு பெருமிதம் (கனடாவிலும் அமெரிக்காவிலும் பல பெரிய நகரங்களுக்குச் சென்றபோதுகூட அப்படி உணரவில்லை).  தேம்ஸ் நதியின் குறுக்கே லண்டன் முழுவதும் 24 பாலங்கள் உள்ளன.


                                                                  aerial view of the bridges

               அவற்றில் வண்ணத்திலும் வடிவத்திலும் கவர்ந்தது ' tower bridge' தான்.  கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக திறந்து பின்னர் மூடிக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டது இது.

                                                                                 tower bridge

              இதுதவிர லண்டன் ப்ரிட்ஜ், மிலினியம் ப்ரிட்ஜ் என்று 100மீ தொலைவிற்கு ஒரு பாலம் அமைந்திருக்கிறது.

              லண்டனில் எங்களை மிகவும் கவர்ந்த விஷயம் லண்டனைச் சுற்றிப் பார்க்க யாருடைய guidance-ம் தேவையில்லை என்பதுதான்.  Big bus company போன்று ஓரிரண்டு கம்பெனிகளின் hop on- hop off பஸ்ஸில் ஒரு நாள் பயணச்சீட்டோ (அல்லது சலுகை விலையில் 2-3 நாட்களுக்கும் பயணச்சீட்டு கிடைக்கிறது) வாங்கிக் கொண்டு ஒரு பஸ்ஸில் ஏறினால் போதும்.  அதில் ஒலிபரப்பாகும் (அல்லது அமர்ந்துள்ள கைடு சொல்லும்) வர்ணனையைக் கேட்டுக் கொண்டே சென்றால் தேவையான நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு விருப்பமான சுற்றுலாத்தலத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வேறு ஒரு பஸ்ஸில் பயணத்தைத் தொடரலாம். இந்த பஸ்களில் வர்ணனை பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் இருப்பதால் எந்த நாட்டவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

               நாங்கள் முதலில் Madamme Tussaud's wax museum சென்றோம்.  அங்கு காந்தி, டெண்டுல்கர், அமிதாப், ஐஸ்வ்ர்யாராய் என்று இந்தியப் பிரபலங்களின் மெழுகுசிலைகளுடனும்  , ஓபாமா, மைக்கேல் ஜாக்ஸன் என்று பிற நாட்டு பிரபலங்களின் மெழுகு சிலைகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  பெரும்பாலான மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக இருந்தன.  ஒரு ஹாலில் 30-40 சிலைகள் அங்கங்கே நிறுத்தப்பட்டிருக்க மிக அருகாமையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிகிறது.  சில நேரங்களில் மெழுகுச் சிலைகளுக்கும் அருகில் நிற்கும் உயிருள்ள மனிதர்களுக்கும் வித்தியாசம் சொல்ல முடியாத அளவு இந்த சிலைகள் தத்ரூபமாக அமைந்திருந்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.

            பின்னர் லண்டனின் landmark-ஆக விளங்கும் London eye என்கிற பிரும்மாண்டமான (433மீ உயரமானது!) giant wheel-ல் ஏறி லண்டனின் aerial view-ஐ ரசித்தோம்.  ஒரு மூடப்பட்ட பெட்டியில் (capsule) செல்வதால் அந்த உயரம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இல்லை.                                                                                    capsule
            
                Trafalgar square, Bigben, tower museum (இங்குகோஹினூர் வைரம் பதித்த அரசியின் கிரீடம் உள்ளிட்ட அரச குடும்பத்திற்குச் சொந்தமான தங்க ஆபரணங்கள், பாத்திரங்களைக் காணலாம்), Buckingham palace என்று பல இடங்களை hop on-hop off bus-ல் ஏறத்தாழ இருதினங்களுக்குள் சுற்றிப் பார்த்துவிடலாம்.
          
               லண்டனில் நாங்கள் பார்த்த மற்றொரு சுவையான exhibition, 'Ripley's believe it or not'. இங்கு பல வினோதமான, அதிசயமான பொருட்களைச் சேகரித்துப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.  தீக்குச்சியால் செய்யப்பட்ட டவர் ப்ரிட்ஜ், ஜெம்ஸ் சாக்கிலேட்டால் வரையப்பட்ட படம், பூசணி விதையில் வரையப்பட்ட படம், மற்றும் கீழுதட்டால் மூக்கைத் தொடுபவர் என்று வினோதமான மனிதர்கள் பற்றிய குறிப்புகள் என்று பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

                                                                      picture made with gems chocolate

                                                                J.T.Saylor who could touch his nose with his lips

               ஒரு அரிசியில் last supper படத்தை வரைந்திருந்தது மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது இந்தக் கண்காட்சி.
Sunday, 12 September 2010

உலகம் சுற்றும் வாலிபன்
          
                சமீபத்தில் SOTC டூர் கம்பெனியின் ஏற்பாட்டில் யூரோப்பில் சில நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. (ஆமாம், ஆமாம், பயணக் குறிப்புகள் பற்றிய பதிவு கட்டாயம் உண்டு!!).  எங்கள் டூர் மானேஜர் Mr. Rattan Daruwalla.  எங்களுடன் பல நாட்டிலிருந்தும் இந்தியர்கள் வந்திருந்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு.  அவர்களனைவரையும் ஒருமுகப்படுத்தி ஓரளவுக்குத் திருப்தி படுத்துவது உண்மையிலேயே கடினமான வேலை.  அந்த வேலையை மிகவும் லாவகமாக செய்தார் ரட்டன். எல்லா நகரங்களைப் பற்றியும் தகவல் சொல்வது அவரின் வேலைதான் என்றாலும் சில நுணுக்கமான தகவல்களைச் சொல்லும்போது வேலையில் அவரின் ஈடுபாட்டை எண்ணி வியந்தோம்.  தினமும் ஒரு பஜனைப் பாடலுடந்தான் பயணத்தைத் துவக்குவார். பின்னர் ஒரு ஜோக்கும் சொல்வார். நன்றாகப் பாடுவார். அவருடைய திறமையாலும், தினமும் ஒரு நாடெனச் சுற்றும் அவரின் வேலையாலும் கவரப்பட்டு அவரை ஒரு பேட்டி எடுத்தேன். (ஹி, ஹி, சுற்றுலாவிலும் ப்ளாகிற்கு மேட்டர் தேத்தும் கவலைதான்!!!).


                                                                 Mr.  Rattan Daruwalla


அவருடைய பேட்டி:

கே:  நீங்கள் இந்த வேலையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
 ப:   முதலில் ஒரு பிரபலக் கம்பெனியில் கிளர்க்காகத்தான் இருந்தேன்.  ஒரு நாளைப்போல் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான (monotonous) அந்த வேலை எனக்குக் கசந்தது. அப்போதுதான் இந்த வேலை வாய்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.  நான் இயல்பிலேயே கொஞ்சம் சுறுசுறுப்பாக, துறுதுறுவென்று இருப்பவன். இந்த வேலை எனக்கு ஏற்றதாக இருக்கும் என்று தோன்றியதால் இதில் சேர்ந்தேன்.  இன்றுவரை மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

கே: இந்த வேலையில் தங்களைக் கவர்ந்த விஷயங்கள் என்ன?
ப:  ம்ம்ம்... தினமும் புதிய மனிதர்களைச் சந்திப்பது; அவர்களின் எதிர்ப்பார்புகளைப் பூர்த்தி செய்யவேண்டிய சவால்; அதன் மூலம் கிடைக்கும் புதிய நட்பு; பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு; அதன் மூலம் அவர்களின் கலாச்சாரம், உடைகள், உணவு எனப் பல விஷயங்களை நேரிடையாகஅறியும் வாய்ப்பு.

கே: இந்த வேலையின் கஷ்டங்களாக நீங்கள் கருதுவது?
ப: வருடத்தில் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது; கட்டாயமாக நல்ல family support இருந்தாலொழிய இந்த வேலையைச் செய்வது கடினம். அதிகமாகப் (பெரும்பாலும் சுற்றுலா பேருந்திலேயே இருக்க நேரிடுவதால்) பயணம் செய்ய வேண்டியிருப்பதால் உண்டாகும் உடல் அயர்ச்சி; தினமும் ஒவ்வொரு நாட்டில்  வெவ்வேறு விடுதிகளில் தங்குவதால் தூக்கமின்மை மற்றும் உணவுப் பிரச்சினைகள்.
இவை தவிர இந்த வேலையில் job security கிடையாது.  பிடிக்கவில்லையென்றால் அன்றே பணி நீக்கம்தான். மற்ற வேலைகளில் இருப்பது போல் gratuity எல்லாம் கிடைக்காது.  அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டியதுதான் (உடலில் வலு இருக்கும்போதே முடிந்த அளவு சுற்றி சேர்க்கவேண்டியதுதான்).

கே: இந்த வேலையில் சேர விழைபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?
ப: கல்வித் தகுதியாக bachelors degree இருந்தால் போதுமானது.  சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியவேண்டும்.(SOTC யில்) பெரும்பாலும் இந்தியர்களே சுற்றுலா பயணிகளாக வருவதால் இந்தியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.  ஜெர்மன், ஃப்ரென்ச் போன்ற மற்ற மொழிகளில் கற்கும் ஆர்வமும் கொஞ்சம் தெரிந்தும் இருந்தால் நலம். எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுபவர்களாக இருக்க வேண்டும்.
பல நாடுகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு (update செய்துகொண்டே இருக்க வேண்டும்) அதைத் தேவையான நேரத்தில் சுவைபட சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.  நிறைந்த பொறுமை வேண்டும்.  பலதரப்பட்ட மனிதர்கள் ஒன்றாக 10-15 நாட்கள் பயணிப்பதால் பலமுறை சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். அதை சாமர்த்தியமாகத் தீர்க்கும் திறமை வேண்டும். எப்போது விட்டுக் கொடுக்கலாம், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் (assertive) என்ற வரையரையைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் சிறந்த management skill இருக்க வேண்டும்.

கே: இந்த வேலைக்காகச் சிறப்பாக ஏதாவது படிக்க வேண்டுமா?
ப: அப்படித் தேவையில்லை.  ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.  எங்கள் கம்பெனி நிறுவனர் நடத்தும் Couny academy யில் 3 மாத tourism course படிக்கலாம்.  இரண்டு மாதங்கள் கல்லூரியிலும் ஒரு மாதம் Zurich-ல் நேரடி பயிற்சியும் முடித்தால் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.

கே: இந்த வேலையில் நீங்கள் சந்தித்த சவால்கள்?
ப: customer களை நிறைவு செய்வது என்பது தினசரி சவால்தான்!!. சில பயணக் குழுவில் VIP சிலர் வருவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரும் மற்ற பயணிகள் போல்தான்.  அவர்களுக்கென்று எந்த சலுகையும் தர இயலாது.  அதை அவர்களுக்குப் புரிய வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்வது ஒரு சவால்.
ஒரு முறை என் பயணக் குழுவில் ஒருவர் எதிர்பாராவிதமாக உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.  அந்த சூழ்நிலையைச் சமாளித்தது என்னால் மறக்க முடியாதது.

கே: டூர் மானேஜராக உங்களைத் தனித்துக் காட்டும் அம்சமாக நீங்கள் நினைப்பது என்ன?
ப: என் பயணக் குழுவிடம் கட்டாயமாக punctuality-யை ஏற்படுத்துவேன்.  அப்பொழுதுதான் ஒரு நாளின் பயணத் திட்டத்தைச் சரியாக நிறைவு செய்ய முடியும்.  நான் நன்றாகப் பாடுவதாக என் customers பலர் பாராட்டியிருக்கிறார்கள்.  நீண்ட பயணங்களில் அவர்களோடு பாடி அவர்களை மகிழ்விப்பேன்.  தங்குமிடம், உணவு போன்ற ஏற்பாடுகளில் சிறு குறையும் இல்லாமல் முன்னேற்பாடுகளைத் திறம்படச் செய்வேன்.  போகும் நகரங்களைப் பற்றிய குறிப்புகளை internet-ல் படித்தும் அங்குள்ளவர்களிடம் பழகியும் update செய்துகொள்வேன்.

 நிறைய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக ரட்டனிடம் நன்றி சொல்லி விடை பெற்றேன்.  உலகம் சுற்ற ஆசை கொண்ட பல இளைய தலைமுறையினருக்கு இந்த பேட்டி பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதைப் போன்ற வித்தியாசமான, சுவாரசியமான வேலைகளுக்கும் முயற்சிக்கலாமே!!!.

Thursday, 9 September 2010

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற..             
             சிறுவயதில் பள்ளிக்கூடம் தொடங்கிக் கல்லூரி வரை எனக்குத் தோழிகளைவிட பல ஆசிரியைகள் நெருக்கமானவர்கள்.  எனக்கு மிக அதிகமாக ஊக்கமளித்து என்னுள் எங்கோ புதைந்திருந்த திறமைகளை வலுக்கட்டாயமாக வெளிக்கொணர்ந்த பெருமை இந்த ஆசிரியர்களையே சாரும்.

             நான் படித்தது பல்லாவரம் தெரேஸா மகளிர் பள்ளி.  அந்த பள்ளியில் பெரும்பாலான ஆசிரியைகள் மாணவிகளைத் தன் மக்களுக்கும் அதிகமாக நேசித்ததாக உணர்வேன்.  பாடத்தை மட்டும் எடுத்துவிட்டு ஓட்டம் பிடிக்காமல் எப்போது அணுகினாலும் மாணவிகளின் தரம்,தேவை அறிந்து அதற்கேற்ப விளக்கங்கள் அளிப்பார்கள். அந்தப் பள்ளியில் நான் படித்த காலம் மறக்கமுடியாது.  இப்போதும் பல நாட்கள் என் கனவில் வருமளவு என் நினைவில் நின்ற காலம் அது.   ஐ.ஐ.டியில் படிக்கும்போது ஒருமுறை என் தோழியர்களிடம் ஒரு போட்டி.  யார் LKG தொடங்கி எல்லா ஆசிரியர்கள் பெயரையும் சரியாகச் சொல்கிறார்கள் என்பதே.  நான் எல்லாரையும் வரிசைப்பட சொன்னது அவர்களுக்கு ஆச்சர்யம்.  அவர்களால் அப்படி சொல்ல முடியாதது எனக்கு ஆச்சர்யம்.

             எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த எல்லாரையுமே பிடிக்கும் என்றாலும் அற்புதமேரி டீச்சர், ஜோஸ்பின் டீச்சர், அற்புதம் ஸிஸ்டர், தமிழ் இலக்கியங்களைச் சுவையாக நடத்திய நளினி ஆசிரியை மற்றும் சீதாலஷ்மி ஆசிரியை, +2வில் கணக்குக் கற்றுக் கொடுத்த ஹில்டா டீச்சர் (தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு +1-ல்தான் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்ந்த எங்களை இரண்டாம் பட்சமாக நடத்திய டீச்சர்களுக்கு இடையில் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி வகுப்பிலேயே நான் இரண்டாவது ரேங்க் எடுக்க காரணமானவர். இவரை இன்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!!), தேவிகாராணி டீச்சர் (+2 பரிட்சைக்கு முதல் நாள் நான் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு , அது பரிட்சையில் வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்திருந்தும், பரிட்சை அன்று அந்த பதிலை விளக்க ஓட்டமாக ஓடி வந்தவர்.  hats off!!!) இவர்களை என்றுமே மறக்கமுடியாது.

            தெரேஸா பள்ளியிலும் ஒரு டீச்சர் பெல் அடித்து மாணவிகள் ப்ரேயர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வீட்டுக்குப் போய்விடுவார்.  பெரும்பாலும் சரித்திரம், பூகேளம்தான் அவர் நடத்துவார்.  புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு மாணவிகளைப் படிக்கச் சொல்லிவிட்டு தான் தூங்கிவிடுவார். திடீரென்று விழித்துக் கொண்டு காதில் விழுந்த கடைசி வார்த்தையை ரிபீட் செய்வார்.  காமெடியாக இருக்கும். (ஒரு முறை நான் 'கிரானைட் பாறைகள்' என்று படித்துக் கொண்டிருக்க திடீரென்று கண்விழித்த அவர் 'என்ன நைட் பாறைகள்?' என்று கேள்வி கேட்க நாங்கள் 'கிரா நைட் பாறைகள்' என்று பின்பாட்டு பாடியதைப் பலமுறை சொல்லி சிரித்திருக்கிறேன்.)  Partiallity என்பதின் உச்சத்தை உணர்த்தியவர் இவரே.  ஒருமுறை என் தோழி பத்மபிரியா என்னைவிட அதிகம் மார்க் வாங்கினாரென்று அவரின் பேப்பரை வாங்கி மடமடவென்று நான்கு கேள்விகளுக்கு மார்க்கைக் குறைத்தார்.  நான் ஆடிப் போய்விட்டேன்.  தோழியிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டேன்!!!.

             பள்ளிப் படிப்பு முடிந்ததும் மீனாக்ஷி கல்லூரியில் வேதியல் படித்தேன்.  என் பள்ளி ஆசிரியைகளுக்கு ஈடாக இங்கும் பல devoted lecturers இருந்தார்கள். அவர்களில் முதன்மையானவராக (எனக்கு எடுத்த எல்லா டீச்சர்களிலும் முதல் ரேங்க் இவருக்குத்தான்) நான் நினைப்பது விஜயலக்ஷ்மி மேடம்தான்.  அவர் எங்களுக்கு  organic chemistry கற்றுக் கொடுத்தார்.  அவருடைய கேள்வித்தாள்களில் ஓரிரு கேள்விகள் தவிர எதுவுமே நேரிடையாக இருக்காது.  concept நன்கு புரிந்தால்தான் அவரின் கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.  முதல் டெஸ்டில் அனைத்து மாணவிகளும் 60-க்கும் கீழேதான் வாங்கினோம்.  "என் கேள்வித்தாள் இப்படித்தான் இருக்கும்.  நிறைய புத்தகங்களை லைப்ரரியிலிருந்து படியுங்கள். workout as many problems you can." என்று அட்வைஸ் செய்துவிட்டு போய்விட்டார். ஆனால் அந்த ஆண்டு இறுதியில் நாங்கள் அனைவரும் 85-95% வாங்குமளவு எங்களுக்குப் பாடம் நடத்தியதோடு organic chemistry யின் மேல் ஒரு காதலை வளர்த்தவர். ஒரு ஆசிரியர் எப்படி பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் நிச்சயமாக இவர் மட்டும்தான்.  அதே கல்லூரியில் இயற்பியல் எடுத்த சகுந்தலா மேடம், கணிதம் எடுத்த ஆலிஸ் (வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று நினைப்பாரோ என்னவோ அத்தனை மென்மையாகப் பேசுவார்) அவர்களையும் பல நேரங்களில் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.

               பின்னர் படித்தது பாண்டிசேரியில். அங்குள்ள ஆசிரியர்களும் தெரேஸா பள்ளிக்கு இணையாக தங்கள் பணியை ஒரு ஈடுபாட்டுடன் செய்தவர்கள்.  அவர்களில் முதன்மையானவர் Dr. சீதாராமன் அவர்கள்.  கண்டிப்பு மிக்கவர். மாணவர்களிடம் அக்கறை மிக்கவர்.  மிக முக்கியமாக தான் சிறிய தவறு செய்தாலும் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்குமளவு உயர்ந்த குணம் கொண்டவர். Dr.சிவராமன் அவர்களும் அந்தக் கல்லூரியில் தலைச் சிறந்த ஆசிரியர்.  அவரின் lectur-ஐக் கவனமாகக் கேட்டால் போதும், புத்தகங்களைப் படிக்காமலே நல்ல மார்க் வாங்கிவிடலாம்.  அவரை ஒரு அறிவுஜீவி என்று சொல்லலாம். கணக்கில் புலி.  சரியான வாய்ப்பு கிடைக்காததால் பெரிய அளவில் வரவில்லை. மேலும் Dr.ஸ்ரீனிவாசன், Dr.குணசேகரன், Dr.ஃபரூக் அவர்களும் மாணவர்களிடம் மிகுந்த அக்கறை காட்டுபவர்கள்.

               பின்னர் ஐ.ஐ.டியில் Dr. சங்கரராமன், Dr.கே.கே.பி, Dr. நாராயணன் மற்றும் பலர் எனக்கு முன்னேறும் வழிகாட்டியுள்ளனர்.  அவர்களுக்கும் நன்றி.

              நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றார் ஔவையார்.  அதுபோல் ஒரு பள்ளியில் நல்லாசிரியர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பல்லாயிரம் மாணவர்களும் உயர்வர்.

             இந்தப் பதிவை என் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியாக அர்ப்பணிக்கிறேன்.