Tuesday 30 August 2011

மங்காத்தா


               மங்காத்தா - ஒரு சீட்டாட்டத்தின் விறுவிறுப்புடனான படம்.  கிரிக்கெட்டில் பெட்டிங்க் மூலம் வரும் 500 கோடி பணத்தைக் கடத்த நான்கு பேர் முனைய, ஐந்தாவதாக அஜீத் வந்து அவர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்வதுதான் கதை.

              அஜீத் அவரது ரோலை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.  Anti- hero ரோலுக்கேற்ப முக பாவனைகளும் gestures எல்லாம் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்.  சுருக்கமாக, தனது ஐம்பதாவது படத்தில் அஜீத் அவரது ரசிகர்களை ஏமாற்றவில்லை.

              படத்தின் பிண்ணனி இசை மிகவும் அருமை.  காட்சியின் விறுவிறுப்பை இசையால் அதிகமாக்கியிருக்கிறார் யுவன்.  மற்றபடி அர்ஜுன், த்ரிஷா, லஷ்மி ராய் எல்லாரும் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.  ப்ரேம் காமெடிக்குக் கொஞ்சம் உதவியிருந்தாலும் பணம் கொள்ளையில் அவர் சேர்வதற்கு காரணம் அவ்வளவு அழுத்தமாக இல்லை.  அதுவும் ஒரு சாதாரணப் பூட்டை (ஒரு டிஜிட்டல் பூட்டாவது பயன்படுத்தியிருக்கலாம்) எப்படியோ அலார்மோடு இணைப்பதெல்லாம் காதில் பெரிய பூ.
 மொத்தத்தில் பொழுதுபோக்கும் மசாலா படம். 'உள்ளே' வந்த ரசிகர்கள் 'வெளியே' போகா வண்ணம்  அஜீத்தும் இசை அமைப்பாளரும்  மங்காத்தாவைத தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

Saturday 27 August 2011

ஹலோ, ஹவ் ஆர் யூ?

               நான் அன்றும் வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு வாக்கிங் செல்லக் கிளம்பினேன்.  பெசண்ட் நகர் பீச் பக்கம் ஒரு மணி நேரம் என் நண்பர்களோடு நடந்து விட்டு பின் கொஞ்ச நேரம் அன்னா ஹசாரே, 2 ஜி, புதிய சட்டசபை என்று ஹாட் டாப்பிக்கெல்லாம் அலசிவிட்டு மெதுவாக பஸ் ஸ்டாண்ட் வருவேன்.  அங்கே ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து அங்கு வரும் மக்களை வேடிக்கைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் ரிடையர்ட் லைஃபை அனுபவிக்கும் மிடில் க்ளாஸ் மஹாதேவன்.  நான் அரக்கப் பரக்க ஓடி வேலை செய்த காலத்தில் சக மனிதர்களைத் திரும்பிப் பார்க்கவே நேரமில்லை.  அதனால் இப்பொழுது பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து எல்லாரையும் வேடிக்கைப் பார்ப்பது, வழி கேட்பவர்களுக்கு வழி சொல்வது, பஸ் ஏறமுடியாமல் கஷ்டப்படும் சிறுவர்/ வயதானவர்களுக்கு உதவுவது  என்று பொழுது போக்குவேன். 

               பத்து நாட்களுக்கு முன் இப்படி வேடிக்கை பார்க்கும் போது ஒரு சுவையான நிகழ்ச்சி.  ஒரு இளைஞன்  back pack மாட்டிக் கொண்டு டீஸண்டான உடை போட்டுக் கொண்டு வந்தான்.  பஸ் ஸ்டாண்டில் இருப்பவர்களைப் பார்த்து ஸ்னேகமாக ஆனால் கொஞ்சம் கூச்சத்துடன் புன்னகைத்தான்.  ஒரு பத்து நிமிடம் கழித்து வடக்கத்திக்காரர் போல் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்து இவன் புன்னகைக்க அவர் இயந்திரத்தனமாக 'ஹலோ, ஹவ் ஆர் யூ?' என்றார்.  இவனோ ' ஐ அம் ராமசாமி' என்றான் கூச்சத்துடன். அந்த வடக்கத்திக்காரர் அவன் பதிலை லட்சியம் செய்யாமல் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு, பஸ் வருகிறதா என்று பார்ப்பதிலேயே கவனமாக இருந்தார்.  'என்னாடா இது, டீஸண்டா ட்ரெஸ் பண்ணியிருக்கான், இப்படி இங்லீஷ் பேசறானே' என்று எனக்கு ஆச்சர்யம். அடுத்த சில நிமிடங்களில் டிப்-டாப் ஆசாமியின் பஸ் வர அவன் போய்விட்டான்.

            அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த ஒரு பத்து நாட்களில் மூன்று முறை இந்த காட்சி நடந்தது.  எனக்கு அந்த டிப்-டாப் இளைஞனிடம் அனுதாபம் ஏற்பட்டது.  நாளை எப்படியும் அந்த இளைஞன் வந்தவுடன் அவனுக்கு இங்லீஷ் கற்க ஆர்வமிருந்தால் சொல்லிக் கொடுக்கத் தாயாரென்று சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  ஆனால் என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் இரண்டு நாட்கள் வாக்கிங் போகமுடியவில்லை.  மறு நாள் வழக்கம் போல் பஸ் ஸ்டாண்டில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அந்த இளைஞன் வந்தான்.  கொஞ்ச நேர இடைவெளியில் அந்த வடக்கத்திக்காரரும் வந்தார்.  வழக்கம் போல் 'ஹவ் ஆர் யூ?' என்று சொல்ல டிப் டாப் இளைஞன் 'fine,thanks ' என்று தெளிவாகப் பேச எனக்கு ஒரே ஆச்சர்யம்.   அவனது பஸ் வர அவன் போய்விட்டான். 

             மாலை நான்கு மணியளவில் காய்கறி வாங்க மார்கெட் போயிருந்தேன்.  ஒரே கூட்டமாயிருக்க என்ன என்று விலக்கிப் பார்த்தால் அந்த டிப்-டாப் இளைஞனைப் போலீஸ் கைது செய்து கொண்டிருந்தார்கள்.  என்ன என்று விசாரிக்கையில் இரண்டு மூன்று இடங்களில் பாம் வைத்தான் என்று கைது செய்தார்களென்று சொல்லிக்கொண்டார்கள்.  எனக்கு ஒரே அதிர்ச்சி. அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கு நண்பர் ஆதலால் அவர் மூலம் பின்னர் விஷயம் தெரிய வந்தது.  அந்த டிப்-டாப் ஆசாமியும் வடக்கத்திக்காரரும் கூட்டுக் களவாணிகள். ஹவ் ஆர் யூ? என்ற கேள்விக்கு ஐயம் ராமசாமி என்றால் பாம் தாயாரில்லை என்றும், ஐயம் ஃபைன் என்றால் தயார் என்றும் சங்கேத பாஷையில் பேசிக் கொண்டார்கள் என்றும் அறிந்தேன்.  எப்படி இவர்களைப் பிடித்தார்கள் என்று மேலும் ஆவலுடன் கேட்க 'அந்த இளைஞன் இப்படி தப்பாக இங்லீஷ் பேசுவதைப் பற்றி தன் மனைவியின் மூலம் கேள்விப்பட்ட கான்ஸ்டபிள் கேலியாக அதைப் பற்றி சொன்னதாகவும், அதில் ஏதோ தவறிருப்பதாக உள்மனது சொல்ல அவனைப் பின் தொடர்ந்து அவனைப் பற்றி தெரிந்துகொண்டார்களாம்.  அவனைக் கையும் களவுமாகப் பிடிக்கப் பொறுமையாகப் பின் தொடர்ந்து மார்கெட்டில் பாமை வைத்துவிட்டு செல்லும்போது கையும் களவுமாகப் பிடித்ததார்களாம்.

           மறுநாள் வழக்கம் போல் வாக்கிங் போகையில் என் நண்பர் 'ஹலோ ஹவ் ஆர் யூ?' என்று என்னைல் கேட்க அவசர அவசரமாக அவர் வாயை மூடினேன். 

(எங்கள் ப்ளாகில் வந்த அவன் இவன் அவர் பதிவைப் படித்தபோது தோன்றிய கதை இது.    நான் முதல் முதல் எழுதிய கதையும் எங்கள் ப்ளாகில் படித்த பதிவை ஒட்டியே எழுதப்பட்டது. எங்கள் ப்ளாகுக்கு ஒரு thanks.


Tuesday 23 August 2011

கிருஷ்ண ஜெயந்தி

              கிருஷ்ண ஜெயந்தி என்றால் நாங்கள் சிறு வயதில் கொண்டாடியதுதான் நினைவு வரும்.  என் அம்மாவும் பாட்டியும் சீடை, முறுக்கு, திரட்டிப்பால் என்று செய்ய வீட்டில் வாசனை தூக்கும்.  ஆனால் இரவு பூஜை வரை நாக்கைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.  மாலையில் வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வரைவோம்.  இதெல்லாம் விட மாலையில் பூஜை முடிந்ததும் என் அம்மா அவர்கள் செய்யும் பஜனையை என்றுமே மறக்க முடியாது.  'கிருஷ்ணா முகுந்தா முராரே...', 'ஜிலுஜிலு ஜிலிஜிலுவென..', என்று பல பாடல்களை அவர் பாட, என் அண்ணன் ஒரு பலகையை வைத்து தாளம் போட நாங்கள் அனைவரும் பட்சணம், பசியை மறந்து பஜனையில் லயித்ததும் என்றும் நினைவில் நிற்பவை.

             திருமணமானபின் வளைகுடா நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை ISCON-ஐச் சேர்ந்த நண்பர் வீட்டில் கொண்டாடினோம். நிறைய பேரின் பங்கேற்பில் நூறுவகைக்கு மேல் பட்சணங்கள் நிவேதனம் செய்து, இரவு பனிரெண்டு மணிக்குப் புத்தாடை உடுத்தி ஆடல் பாடல்களோடு கொண்டாடியது பசுமையாக நினைவிருக்கிறது.

              என் நண்பரின் மகளுக்குப் பிடித்த தெய்வம் கிருஷ்ணர்.  எப்பொழுதும் கிருஷ்ணர் கதைதான் விரும்பிக் கேட்பாள்.  ஒரு முறை நான் அவளிடம் கிருஷ்ணர் பற்றி கிருஷ்ணரின் அப்பா பேர் என்ன, கம்சன் யார் என்று ஒரு மினி quiz நடத்த, டாண் டாணென்று சரியான பதில் அளித்தாள்.  கடைசியாக 'யாருக்குக் கிருஷ்ணரை ரொம்ப பிடிக்கும்' என்று (அவள் ராதா என்று சொல்வாள் என்று எண்ணி) கேட்க அவளோ 'எனக்குதான்!' என்று பதில் சொன்னாளே பார்க்கலாம்.!! அவளுக்கு நான்கு வயதாகும்போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது.  கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணர் பாதம் போடுவதைப் பார்த்த அவள் ஏனென்று கேட்க என் தோழி கிருஷ்ணர் இன்று நம் வீட்டுக்கு வருவார்; அதற்குத்தான் என்றாராம்.  குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி.  கிருஷ்ணரைப் பார்க்கலாமா? எப்ப வருவார்? எல்லார் வீட்டுக்கும் வருவாரா? என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.  என் தோழியும் குழந்தையிடம் கிருஷ்ணர் இரவு வருவார் என்று நம்பிக்கை அளித்த வண்ணம் இருந்தாள்.  இரவு பூஜை முடிந்து நாங்களெல்லாம் திரட்டிப்பால், சீடையை ஒரு பிடி பிடிக்கத் தயாராக அவள் மட்டும் 'கிருஷ்ணர் வரட்டும்; அவரோடு சேர்ந்து சாப்பிடலாம்' என்றாள்.  நாங்களும் குழந்தை மனசை நோக வைக்க வேண்டாம் என்று கிருஷ்ணர் இரவு கட்டாயம் வருவார்; அவர் எல்லார் வீட்டுக்கும் போய்விட்டு வருவார். நீ சாப்பிடு' என்று சொன்னோம். அவளோ பிடிவாதமாக சாப்பிட மறுத்துவிட்டாள். நேரமாக ஆகக் குழந்தை சாப்பிடவில்லையே என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது.  உடனே என் தோழியின் கணவர் சமயோசிதமாக தன் நண்பருக்கு ஃபோன் செய்து 'கிருஷ்ணர் வந்து கொண்டு இருக்கார்.  வழியில் டிராஃபிக் ஜாமானதால் வர இன்னமும் நிறைய  நேரமாகுமாம்' என்று சொல்லச் சொன்னார்.  குவைத்தில் சில நேரங்களில் டிராஃபிக்கில் மாட்டிய அனுபவம் இருந்ததால் அந்தக் குழந்தையும் சாப்பிட சம்மதித்து சாப்பிட்டுத் தூங்கியும்விட்டாள்.  காலை எழுந்ததும் முதல் கேள்வியாக 'அம்மா, கிருஷ்ணர் வந்தாரா?' என்றாளாம்.    இன்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவள் நினைவுதான் எங்களுக்கு வரும்.

           கடைசியாக ஒரு சின்ன சந்தேகம்.  ஜெயந்தி என்றால் என்ன அர்த்தம்?  பிறந்த தினம்?  ஆனால் பல பெண்களின் பெயர் ஜெயந்தி என்று இருக்கிறதே? பிறந்த தினம் என்றா பெயர் வைப்பார்கள்!!.