Friday, 20 April 2012

தீப்பொறி


            தாயம்மாளுக்கு உள்ளம் கொள்ளாச் சந்தோஷம்.  இன்று அவள் மகள் மீனா சிபிஜி பள்ளிக்குப் போகப் போகிறாள்.  பணக்காரக் குழந்தைகள் போகும் பள்ளிக்குத் தன் மகளும் போகும் மகிழ்ச்சி அவளுக்கு.  "ரிக்ஷா ரெடியா இருக்கா? பிள்ளையைக் கொண்டுபோய்விட்டு வரலாம் வா.  நல்ல சொக்காயாப் போடு" என்று கணவனுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தாள்.  "அய்ய!! இந்தா இருக்கும் கார்பொரேஷன் ஸ்கூல்ல படிச்சா ஆவாதாக்கும். அந்த ஸ்கூலைப் பார்த்தாலே பயம்மா இருக்குப் புள்ள.. நம்ம கொயந்த எப்படி சமாளிக்குமோ தெர்லயே...." என்ற கணவனை அடக்கி "த, சும்மா இரு. எம் புள்ள நல்லா படிக்கணும்.  இந்த ஜில்லாவுக்கே கலெக்டரா வரணும்.  செய்வியா கண்ணு?.." என்று மகளைக் கேட்டாள்.  "அம்மா, நீ கவலைப் படாதே.  எனக்குக் கிடைச்ச இந்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திப்பேன்மா. எனக்கு இந்த ஸ்கூலைப் பற்றி பயம் இல்லை.  என்னோட ஸ்கூலில் நான்தான் எல்லாப் பாடங்களிலும் முதல் ரேங்க் வாங்குவேன். இங்கேயும் நல்லா படிப்பேன்மா" என்று உறுதியுடன் கூறிய மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்.

           வேதாவுக்கு ஒரே பரபரப்பு.  கோடை விடுமுறை முடிந்து இன்று ஸ்கூல் திறக்கிறது. மகள் நிவேதாவுக்குப் புதுச் சீருடை, புத்தகப் பை, ஷூ என்று பார்த்து பார்த்து வாங்கியிருந்தாள்.  லிப் ஸ்டிக்கைப் போட்ட வண்ணம் ", நிவேதா எல்லாம் பேக்கில் வைச்சுண்டியா?அப்பாவைக் காரை ரெடியா வைச்சிருக்க சொல்லு. இன்னைக்கு டிராஃபிக் அதிகம் இருக்கும்.  சீக்கிரமே கிளம்பனும்" என்று மகளை அவசரப்படுத்தினாள். "அம்மா, நான் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். டைம் இருக்கும்மா" என்று நிதானமாகக் கிளம்பும் மகளைப் பெருமையுடன் பார்த்தான் நியந்த்.

         சிபிஜி பள்ளியின் வாசலில் கார்களும் வேன்களும் வந்த வண்ணம் இருந்தன.  வாட்ச்மேன் திறமையாகப் போக்குவரத்தைச் சரி செய்துகொண்டிருந்தார். ரிக்ஷாவில் வந்து இறங்கிய தாயம்மாள் மகள் மீனாவுடன் பள்ளி தலமையாசிரியைச் சென்று பார்த்தாள்.  அவர் 3பி ஆசிரியை அழைத்து மீனாவை அறிமுகப்படுத்தி வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். 

         வழியில் வேதாவைப் பார்த்த தாயம்மா, " அம்மா. நல்லா இருக்கீங்களா?" என்று விசாரித்தாள்.  வேதாவுக்குத் தன் வீட்டில் வேலை செய்த தாயம்மாளை அங்கு பார்த்து வியப்பு.  "அம்மா, எம்புள்ளைய இந்த வருஷத்திலேந்து இந்த ஸ்கூல சேர்த்திருக்கேம்மா மூணாம்பு படிக்குது." என்று பெருமையும் கொஞ்சம் கவலையுமாக.  "அம்மா, கவுர்மெண்ட் செலவு செய்யுறதால, ஏதோ ஆசையில் சேர்த்துட்டம்மா. இங்க வந்தவுடன் பயம்மா இருக்கும்மா. எம்புள்ள புழைச்சுக்கும் இல்லம்மா." என்றாள். வேதா தாயம்மாவைத் தட்டிக் கொடுத்து, " கவலைப்படாதே. என் மகளும் இங்கு 3-வது படிக்கிறாள். ஏதாவது வேணும்னா கேளு" என்றாள். வகுப்பிற்கு வந்து தாயம்மாளையும் மீனாவையும் நிவேதாவிற்கு அறிமுகப்படுத்தினாள்.  'வேலைக்காரியின் மகளா', 'போய் பேசினால் மத்தவங்க என்ன நினைப்பாங்களோ' 'பேசாமல் ஒதுக்கினால் தப்பா நினைப்பாங்களோ' என்று மற்ற மாணவிகள் தயங்கி நிற்க, நிவேதா மீனாவின் கையைப் பிடித்து "மீனா, இன்னியிலிருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ். என் பக்கத்துலேயே உட்கார்ந்துக்க. என்ன வேணும்னாலும் கேளு" என்று அருகில் அமர்த்தினாள்.  திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் மருண்டிருந்த மீனாவிற்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. 

        நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சிபிஜி பள்ளி தலமையாசிரியர் கூறுகிறார்: "இந்த வருடம் நல்லாசிரியர் விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.  இதை என் மாணவிகள் நிவேதா மற்றும் மீனாவுடன் பெற்றுக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.  Right to education விதிப்படி எங்கள் பள்ளியில் ஏழைக்குழந்தைகளை சேர்க்க நான் இசைந்த போது ஒருசில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து பெரும் எதிர்ப்பு இருந்தது. எப்படி சமாளிப்பது என்று முதல் நாள் டென்ஷனோடு நாங்களிருந்தபோது, நிவேதா இயல்பாக மீனாவை ஃப்ரெண்டாக ஏற்றுக்கொண்டாள்.  மேலும் தினமும் லன்ச் டயத்தில் மீனாவிற்குப் பாடம் சொல்லித்தரத் தொடங்கினாள். அவளைப் பார்த்து மற்ற மாணவிகளும் மீனாவைப் போன்ற மாணவிகளுக்கு உதவத் தொடங்க, முதல் மூன்று மாதங்களிலேயே அவர்கள் எளிதாகப் பாடங்களைப் புரிந்து கொண்டார்கள். எங்கள் வேலையும் எளிதானது. அடுத்தடுத்த வருடங்களில் மேலும் பல மாணவிகள் நிவேதாவைப் போல் உதவி செய்தனர்.  எங்கள் ஆசிரியர்களும் விடுமுறை நாட்களில் விருப்பத்துடன் இந்த புதிய மாணவிகளுக்கு உதவத் தொடங்கினார்கள். நாங்கள் இப்பொழுது எங்களுக்கு விதிக்கப்பட்ட 25% மேலாகவே வறுமையில் வாடும் பெற்றோர்களின் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்கிறோம்.  பிரதி பலன் எதிபாராமல் அன்று இயல்பாக நிவேதா ஏற்படுத்திய பொறி இன்று பேரொளியாக வளர்ந்திருக்கிறது.  அதனால் நிவேதாவும், தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த மாணவியாக வளர்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதால் மீனாவும் இந்த விருதை என் சார்பாகப் பெற்றுக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்".