Wednesday, 23 February 2011

பொன்னாரம் பெரும்பாரம்


               


              சந்தியா இரயிலிலிருந்து இறங்கப் பெட்டி, பைகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.  நாத்தனார் மகளின் திருமணத்திற்குக் கும்பகோணம் போய்விட்டுக் குடும்பத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  அம்மா, அப்பா, பெண் என்று எல்லோரையும் எழுப்பி ரெடியாக இருக்கச் சொன்னாள்.  அவள் கணவன் மட்டும் நாளை மறு நாள் திரும்புகிறார்.  சந்தியாவின் மகளுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.  அந்த விசேஷம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதில் நினைத்தவாறே லக்கேஜெல்லாம் இறங்கும் வாசலுக்கருகில் கொண்டு வைத்து தானும் வாயிலுக்கருகே கம்பியைப் பிடித்தவாறு நின்று கொண்டாள்.

               அம்மா மெல்லிய குரலில் "நகையெல்லாம் பத்திரமா இருக்கா.  கைப் பையை ஒரு முறை செக் பண்ணிக்கோ" என்றார்.  நகைப் பையை கைப்பையில் வைத்தது நினைவிருந்தாலும் அம்மாவின் திருப்திக்காக ஒரு முறை அதை எடுத்துப் பார்த்து உள்ளே வைக்க எத்தனித்தாள்.  அப்போது திடீரன்று ட்ரெயின் நின்றதால் தடுமாறியதில் நகைப்பை கையிலிருந்து தூரத்தில் விழுந்தது.  உடனே பதறிப்போய் அம்மாவிடம் பையைக் கொடுத்துவிட்டு கீழே இறங்கினாள்.  "அம்மா, ட்ரெயின் போகத் தொடங்கினால் நீங்க போய் ஸ்டேஷனில் இருங்கோ.  நான் தேடி எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று அவள் சொல்லவும் ட்ரெயின் புறப்படவும் சரியாக இருந்தது.

               அதிகாலை வேளை. இருட்டு இன்னும் முற்றிலுமாக விலகவில்லை.  சூரியனே அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு கொஞ்சம் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் புதராக இருந்தது. இந்தப் பை எங்கே விழுந்ததோ தெரியவில்லை.  மகள் திருமணத்திற்காக வாங்கிய பெரும்பான்மை நகைகள் இந்தப் பையில்தான் இருந்தது.  அதை விட்டுவிட்டும் போக முடியாது. தன்னோடு வராதக் கணவனை மனதிற்குள் திட்டியவாறே புதர்களுக்குள் தேடலானாள்.  கடைசி நேரத்தில் டென்ஷன் படுத்திய அம்மாவிற்கும் மனதில் அர்ச்சனை நடந்தது. அவள் அம்மா கவலையுடன் இரெயிலிலிருந்து எட்டிப் பார்த்தவாறே செல்வது தெரிந்தது.  'பாவம் அம்மா, அவள் கவலை அவளுக்கு.  ட்ரெயினில் விட்டு விடப் போகிறோமே என்று எச்சரித்தார்.  நான்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்.  ஸ்டேஷன் வரப் போகிறதே என்று வாசலில் நின்றேன்.  இந்த பாழாப் போற டிரைவர் அப்பதானா சடன் ப்ரேக் போடணும்' என்று மனதில் நொந்தவாரே புதர்களின் பின்னால் போய்த் தேடலானாள். 'பிள்ளையாரப்பா, இந்தப் பை கிடைக்கணும்.  108 கொழக்கட்டை பண்றேன்.  காப்பாத்துப்பா' என்று வேண்டியவாறே தேடிக் கொண்டு போனாள்.

              'விடிகாலையில் ஸ்டேஷன்லயே ஆள் நடமாட்டம் கம்மி.  இவள் நடு வழியில் இறங்கிவிட்டாளே. நகை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.  என் பொண்ணு பத்திரமா வரணும்.  பிள்ளையாரப்பா, 108 கொழக்கைடை பண்றேன்.  காப்பாத்துப்பா' என்று சந்தியாவின் அம்மாவும் மனமுருக வேண்டிக் கொண்டாள். அதற்குள் ட்ரையின் ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டது.  முதலில் வயதால் தளர்ந்த தன் கணவரை இறக்கிவிட்டு பின் பேத்தியின் உதவியுடன் மற்ற சாமான்களை இறக்கிவைத்தாள் சந்தியாவின் அம்மா.  தான் போய் அம்மாவை அழைத்து வருவதாகச் சொன்ன பேத்தியைத் தடுத்து நிறுத்தி மகள் வரக்கூடிய வழியையே பார்த்த வண்ணம் பதைத்து நின்றாள் சந்தியாவின் அம்மா. 'வேகமாக நடந்தால் 1௦-15   நிமிடத்திற்குள் வந்துவிடலாம்.  உன் அம்மா நல்ல தைரியசாலி.  வந்துவிடுவாள்' என்று பேத்தியைச் சமாதானப்படுத்தினாள்.

             புதர்களுக்குள் பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்த சந்தியா கழுத்தில் ஏதோ குறுகுறுக்கவே திரும்பிப் பார்த்தாள்.  ஒரு ரௌடி அவள் தாலி சங்கிலியை எடுக்க முயன்று கொண்டிருந்தான்.  கண்மூடித் திறக்கு முன் அவன் மூக்கைப் பார்த்து குத்து விட்டு கீழே குனிந்து ரெயில்வே ட்ராக்கருகில் கிடந்த சரளைக் கற்களைச் சரமாரியாக அவன்மேல் வீசினாள்.  அதில் ஒன்று ரௌடியின் கண்ணைப் பதம் பார்க்கவே அவன் தடுமாறினான்.  அந்த வேகத்தில் அவனைக் கீழே தள்ளி மேலும் முகத்தில் மாறிமாறி குத்தினாள். எத்தனை வடிவேலு-கோவை சரளா காமெடி பார்த்திருப்பாள்!!. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பெரிய கல்லையும் அவன்மேல் தூக்கிப் போட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடத்தொடங்கினாள்.

                'அந்த நகைப் பை கிடைக்கலையே.  இந்த ரௌடி வேற வந்து படுத்திட்டான்.  அவன் எழுந்தால் என்ன செய்வானோ.  நகையாவது வேறு வாங்கிக்கலாம்.   போய் இரெயில்வே ஸ்டேஷன் போலீஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணலாம்.  அவாளோடு வந்து தேடிப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு.  நம்மை விட்டுப் போகாது" என்று பலவாறு எண்ணியவாறே தாலி செயினைக் கையில் இறுகப் பற்றியவாறு ஸ்டேஷன் நோக்கித் திரும்பிப் பார்க்காமல் ஓடினாள் சந்தியா.

                சந்தியா அடித்த அடியில் நரகத்திற்கும் பூமிக்குமாக ஷட்டில் செய்து கொண்டிருந்தான் அந்த ரௌடி.  கண்ணைத் திறக்க முடியவில்லை.  'சே! ஒரு செயினுக்கு இந்த அடி அடிக்குதே அந்தம்மா.  பெரிய ரௌடி பொம்பிளைதான்' என்று அவன் உள்மனது சொல்லிக்கொண்டிருந்தது.தலையில் வேறு பெரிய கல்லால் அடி விழுந்ததால் மயங்கிவிட்டான்.    மயங்கிய அவன் கைக்கு அருகில் இருந்த நகைப் பையிலிருந்த smiley face அவர்கள் இருவரையும் பார்த்து 'நகை'த்துக்கொண்டிருந்தது.

Tuesday, 22 February 2011

நான் அவனில்லை


             அவனை நினைத்தாலே ஆத்திரமாக வருகிறது.  இன்று மட்டுமல்ல என் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனை நினைத்தாலே எனக்கு வருவது ஆத்திரம் மட்டுமே.  யார் அந்த அவன் என்று கேட்கிறீர்களா?  அந்தக் (நொந்த) கதையைச் சொல்கிறேன்.

              எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம்.  என் அப்பா, சித்தப்பா எல்லோரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.  நான் பிறந்து எட்டாவது மாதத்தில் மதன், என் சித்தப்பாவின் மகன் பிறந்தான்.  எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னரே அண்ணா ஆனதுடன் எதற்கெடுத்தாலும் தம்பிக்கு விட்டுக் கொடுக்கவும் பழக்கப்பட்டேன்.  அவன் உன்னைவிடச் சின்னவன்தானே, விட்டுக் கொடு என்று சொன்னவர்கள் நானே சின்னவன்தான் என்பதை மறந்தார்கள்.

              இது மட்டுமா? இரண்டு பேரும் ஒன்றாகவே பள்ளிக்குப் போகட்டும்; ஒருத்தருக்கு ஒருத்தர் துணை என்று இருவரையும் ஒரே பள்ளியில் ஒன்றாகச் சேர்த்தார்கள்.  அவன் படிப்பில் சுட்டி.  நானும் நன்றாகப் படிக்கும் ரகம்தான் என்றாலும் அவனை முந்தவேண்டும் என்று அதிக நேரம் படிக்க வேண்டியதாக இருந்தது.  பின்னே, என் தம்பி என்னைவிட அதிகம் மார்க் எடுத்தால் என் மதிப்பு என்னாவது? இப்படி எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து எனக்கு டென்ஷன் கொடுத்துக் கொண்டே இருப்பவனை நினைத்தால் ஆத்திரம் வராதா?

            பள்ளி, கல்லூரியில் அவனுடன் விருப்பமில்லாமல் ஒன்றாகப் படிக்க நேர்ந்தது.  மேல் படிப்பு முடிந்தவுடன் நான் பங்களூருவிலும் அவன் ஹைதராபாத்திலும் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை சேர்ந்தோம்.  இந்த ஐந்து வருடங்களாகத்தான் அவனைப் பார்க்காமல் நிம்மதியாக இருக்கிறேன்.

            பார்ப்பதற்கு நாங்கள் இருவரும் ஒரே ஜாடையில் இருப்போம்.  அவனுக்கு என்னைவிட கொஞ்சம் சப்பை மூக்கு; தாடை கொஞ்சம் வளைந்திருக்கும். மதன் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கிவிடுவான். என் அம்மா, அப்பா ஏன் இப்ப என் மனைவி கூட அவனுக்குத்தான் சப்போர்ட். "அவர் நல்லாத்தானே பழகறார்.  உங்கள் மனசில்தான் ஏதோ வீண் கோவம்" என்று என் மனைவிகூட அவனுக்குச் சான்றிதழ் கொடுக்கிறாள்.  எனக்கும் மதனுக்கும் ஒன்றாகவே திருமணம் ஆனாலும் அவனுக்கு இரு வருடங்கள் கழித்தே நான் குழந்தை பெற்றுக் கொண்டேன்.  பின்னே, நான் பெற்ற கஷ்டம் என் மகன் பட வேண்டாமே.  இப்பொழுது என் மகன்தான் குடும்பத்திற்கு இளையவன்.  அவன் யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டாமே.
    
             ஒரு நாள் என் மனைவி, மகனுடன் பிருந்தாவன் கார்டன்ஸ் பார்க்கப் போயிருந்தேன்.  என் மகனின் கைபிடித்து அழைத்துச் செல்லும்போது  திடீரென்று கால் தடுக்கிக் கீழே விழுந்தேன். மிக வேகமாக விழுந்ததால் முகத்திலிருந்து ரத்தம் கொட்ட அங்கேயே மயக்கமானேன்.  விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் இருக்கேன்.  என் மனைவி, அப்பா, அம்மா எல்லோரும் என்னைச் சுற்றி கவலையுடன் அமர்ந்திருக்கிறார்கள்.  என்னால் வாயை அசைக்க முடியவில்லை. என் அப்பா "இங்க பாரு.  உனக்கு ஒண்ணும் இல்ல. கவலைப் படாதே.  விழுந்த வேகத்தில் உன் கீழ் பற்கள் இரண்டு மேல் தாடையில் குத்தி உள்ளே சென்று விட்டதால் அதை எடுத்து, பின் கிழிந்த தாடையைப் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டுமாம்.  இரண்டு வாரத்தில் எல்லாம் குணமாகிவிடுமாம். கொஞ்சம் பொறுத்துக் கொள்"  என்றார்.  ப்ளாஸ்டிக் சர்ஜரி முடிந்து முதலில் வாயை அசைக்கவே முடியவில்லை.  கொஞ்ச நாட்களில் முன்னேற்றம் தெரிந்தது.  மெதுவாக ரெகுலர் உணவு கடித்து சாப்பிட முடிந்ததும்தான் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

            வீட்டிற்கு வந்து முதன்முறையாக என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து 'வீல்' என்று அலறினேன்.  அழுகை அழுகையாக வந்தது.  பின்ன என்னங்க, நான் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தேனோ, அவன் முகம் போல் என் முகம் மாறியிருந்தது.

Sunday, 20 February 2011

தலைவன்


             சமீபத்தில் சன் டிவியில் டாக்டர் கலாம் அவர்களின் பேட்டி (மறு ஒளிபரப்பு) பார்த்தேன்.  மனதைத் தொடும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை அதில் அவர் நினைவு கூர்ந்திருந்தார். அதிலிருந்து சில துளிகள்:

            மகாத்மா காந்தி அவர்கள் டில்லி பிர்லா மந்திர் பிரார்த்தனை கூட்டத்திற்குச் செல்லும்போது வாசலில் நின்று மக்களுக்காக நிதி திரட்டுவாராம்.  அந்த நிதியை அன்றே வங்கியில் சேர்த்து மக்கள் நலனுக்காக அந்த நிதியைப் பயன்படுத்துவாராம்.  ஒருமுறை அப்படி சேகரித்த நிதியை வங்கியில் செலுத்தும் பொறுப்பை ஒருவரிடம் கொடுத்தாராம்.  அப்படி வங்கியில் செலுத்திய கணக்கில் காலணா குறைந்ததாம்.  மக்கள் சேவைக்காகச் சேர்த்த நிதியில் காலணா குறைந்ததற்காக மனம் வருந்தி மகாத்மா உண்ணாவிரதம் இருந்தாராம்.  நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கு!!

(ராஜாக்களும் கல்மாடிகளும் இருக்கும் இதே மண்ணில் இப்படி ஒரு தலைவர் இருந்திருக்கிறார்!!)

             சீனியர் புஷ்ஷின் இந்தியா வருகைக்கு முன் அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு சோதனைக்கு வந்தவர்கள் கலாம் அவர்களுக்கு,  " அமெரிக்க அதிபர் ராஷ்ட்டிரபதி பவனைப் பார்க்க வருகிறார்.  நீங்கள் அங்குள்ள கார்பெட்டை மாற்றி விடுங்கள்.  மேலும் அங்கு அதிபரின் பாதுகாப்பிற்காக எங்கள் பாதுகாப்பாளர்கள் ராஷ்ட்டிரபதிபவனின் முழுப் பாதுகாப்பையும் ஏற்பார்கள்' என்று ஆலோசனை சொன்னார்களாம். அதற்கு டாக்டர் அவர்கள் " ராஷ்ட்டிரபதி பவனின் இந்த கார்பெட் இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்கள் பலரின் பாதம் பட்டது. அதை மாற்றும் எண்ணமே இல்லை.  மேலும் எங்கள் நாட்டிற்கு வருகை தரும் வெளி நாட்டுத் தலைவரைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உண்டு. அதனால் எங்கள் காவலர்களே பாதுகாப்பு வேலையைச் செய்வார்கள்" என்று கண்ணியமாக ஆனாலும் கண்டிப்பாக அதை மறுத்தாராம்.

(இந்தியன்  என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!).

Tuesday, 8 February 2011

'அரசி'யல்


மாயாவதிக்கு காலணி துடைக்கும் பாக்கியம்!!!மாயாவதியின் காலிலே விழும் புண்ணியம்!!


ஜே ஜே!!