Friday 2 December 2011

குளிர்காலம்


 வைபவியின் கைவண்ணம்

Wednesday 23 November 2011

தொடரும் தங்கத் தவளை (எங்கள் ப்ளாகின் கதைப் போட்டிக்கான கதை )

              எங்கள் ப்ளாகில் அறிவிக்கப்பட்டத் தங்கத்தவளைப் பெண்ணே கதையைத்  தொடர்ந்து எழுதப்பட்டது இது. (எங்கள் 2K + 11)
        
               அந்தப் பொன்னிற மங்கை, புங்கவர்மனிடம் சொன்னாள்: "மன்னா உங்களிடமிருந்து எனக்கு ஓர் உதவி தேவை. அந்த உதவியை உங்களால் மட்டுமே செய்ய இயலும். நான் பக்கத்து நாட்டு இளவரசி. என் கணவனுடன் இங்கு உல்லாசப் பயணம் வந்தேன். என் கணவரை ஓர் அரக்கன் பிடித்துப் போய், இங்கிருந்து மேற்கே ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி, ஓரிடத்தில் சிறை வைத்திருக்கின்றான். அடுத்த பௌர்ணமிக்குள் அவரை மீட்டு வந்துவிட்டால் அந்த அரக்கன் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இந்தப் பக்கம் மீண்டும் வராமல் சென்றுவிடுவான். வருகின்ற பௌர்ணமிக்குள் அவரை யாராலும் மீட்க முடியாவிட்டால், அரக்கன் என் கணவனைக் கொன்று, என்னைக் கடத்திச்  சென்றுவிடுவான். மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்றாள்.

            அடடா இது என்னடா சோதனை! அடகு வைத்த என்னுடைய கிரீடத்தையே என்னால் மீட்க முடியவில்லை. இவள் என்னவோ கணவனை மீட்டுக் கொடு என்கிறாள்' என்று மனதில் நினைத்துக் கொண்டே, "என்னால் மட்டுமே முடியும் என்றாயே? ஏன்? என்னைவிட வீரமானவன் யாருமில்லை என்றுதானே?" என்று கேட்டான்.  'ஹுக்கும், நீ சாப்பாடு, தூக்கம் தவிர வேறு எதிலும் பெரிய நாட்டம் காட்ட மாட்டாய்.  அதனால் உன்னை இந்த வேலைக்கு ஒத்துக் கொள்ள வைப்பதே முடியாத காரியம் என்பதால்தான் உன்னால்தான் என் கணவனைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்ததே அந்தப் பாழாய்ப் போன அரக்கன்தான்' என்று மனதில் எண்ணங்களை ஓடவிட்ட இளவரசி , "ஐயனே.  இளமையும் அழகும் பொருந்திய உங்களைப் பார்த்ததுமே நீங்கள்தான் எனக்கு உதவ முடியும் என்று முடிவு செய்துவிட்டேன்" என்றாள்.

            "அது சரி.  இதனால் எனக்கு என்ன லாபம்? ஏன்னா ஏழு கடல் ஏழு மலை தாண்டனும்னா எத்தனை பெரிய ஆபத்துக்களைச் சந்திக்கவேண்டும்!" என்றான் பு.வர்மன்.  "என் கணவரை மீட்டுக் கொடுத்தால் எங்கள் பரந்த ராஜ்ஜியத்தில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்குக் கொடுக்கிறோம்.  மேலும் என் கணவரின் தங்கையையும் உங்களுக்கு மணம் செய்து வைக்கிறோம்" என்றவுடன் பு.வர்மனுக்குக் கொஞ்சமே கொஞ்சம் இந்த வேலையில் நாட்டம் வந்தது. "உன் புருஷனையோ அந்த அரக்கனையோ எனக்குத் தெரியாதே.  எப்படி கண்டுபிடிப்பது...  ம்?" என்று மீசையைத் தடவியபடியே யோசித்தான் பு.வர்மன். கையில் இரண்டு மூன்று முடிகள் வந்தனவே தவிர யோசனை ஒன்றும் வரவில்லை.  தவளைப் பெண் பு.வர்மனிடம், " மன்னா.  கவலைப் படாதீர்கள்.  அந்த அரக்கனே என்ன செய்யவேண்டுமென்று சொல்லியிருக்கிறான். நீங்கள் மூன்று நாட்கள் உணவு , தூக்கமில்லாமல்  'நம் நஹ; கம் கஹ; டம் டஹ' என்ற மந்திரத்தை ஜபிக்கவேண்டும்..." என்றாள். அவள் முடிப்பதற்குள் " ஐயையோ, மூன்று நாள் சாப்பிடாமல், தூங்காமல் இருப்பதா. என்னை மன்னித்துவிடு" என்று ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான்.  அவன் கால்களை நகர முடியாவண்ணம் இருக்கப் பிடித்துக் கொண்டு "அரசே.  நீங்கள் இந்தப் பேதைக்கு உதவியே ஆகவேண்டும்.  நான் சொல்வதைச் சினம் கொள்ளாமல் கேட்கவேண்டும்.  நீங்கள் உணவு, தூக்கத்தை எதற்கும் துறக்க மாட்டீர்களென்பதால்தான் உங்களால்தான் என் கணவனை மீட்க முடியுமென்று அந்த அரக்கன் கூறினான்.  எப்படி உங்களைச் சம்மதிக்க வைப்பது என்று கவலைப் பட்டு அழுதவண்ணம் இந்தக் காட்டைச் சுற்றி வந்தபோது என் மேல் இரக்கம் கொண்ட ஒரு சந்நியாசி எனக்குச் சில வரங்களைக் கொடுத்தார்.  கவனமாகக் கேளுங்கள்." என்றவாறு மரப்பொந்தில் வைத்த மூட்டையை எடுத்துப் பிரித்தாள்.  "இந்த வேரை மென்றால் உங்களுக்குத் தூக்கம், பசி இரண்டையும் கட்டுப்படுத்தும் சக்தி கிடைக்கும்.  மூன்று நாட்கள் எனக்காக உங்கள் மனதைக் கட்டுப் படுத்திக்கொள்ளுங்கள்.  நான்காம் நாள் காலை நாமிருவரும் இந்த மந்திரக் கம்பளத்திலமர்ந்து ஏழு மலை, ஏழு கடல்களைத் தாண்டிவிடலாம்." என்றாள்.

             'பரவாயில்லை.  இந்தப் பெண்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறாளே.  கஷ்டப்படாமல் நாட்டையும், மங்கையையும் வாங்கிவிடலாம் போலிருக்கே' என்ற பு.வர்மனின் எண்ணத்தைத் தடை போடும் வண்ணம் "ஆனால் ஐயனே, அந்த அரக்கன் தன் சக்தியின் வடிவங்களை அரக்கர்களாக இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் மலைகளில் உங்களைத் தடுக்க ஏவிவிட்டிருப்பான்." என்றாள்.  "போச்சுடா. இதென்னம்மா மாத்தி மாத்தி பயமுறுத்துகிறாயே. இதுக்கு ஏதாவது வழியிருக்கா?" என்று கெஞ்சினான் பு.வர்மன்.  "இரண்டாம் மலையிலிருக்கும் அரக்கன் விஷ வாயுவைக் கக்கி நம்மை அழிக்க வருவான்.  நீங்கள் இந்த மந்திரக்கோலால் நம்மைச் சுற்றிக் கோடு போட நம்மைச்சுற்றி ஒரு மெல்லிய திரை உருவாகி நம்மை அந்த விஷ வாயுவிலிருந்து காப்பாற்றும்.  நான்காம் மலையில் பெரும் சுழற்காற்று ரூபத்தில் அரக்கனின் சக்தி நம்மை அலைக்கழிக்கும்.  நீங்கள் மன உறுதியோடு பறக்கும் கம்பளத்தை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டு பறந்தால் மலையைக் கடந்துவிடலாம். தவளையான என்னையும் பத்திரமாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ஆறாம் மலையில் ஒரு கழுகு வடிவில் வரும் அரக்கனின் சக்தி.  இந்த மந்திரக் கத்தியால் அதனை இரண்டாகப் பிளக்கவேண்டும்.  அந்தக் கழுகின் பிளவுபட்ட இரு பாகங்களும் கீழே விழுந்தால் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து நம்மைத் துரத்தும்.  அதனால் அதன் ஒரு பகுதியை உங்களுடனே வைத்திருங்கள்.  ஏழாம் மலையிலிருக்கும் எரிமலையில் அதை வீசிவிடுங்கள்.   ஏழு மலை ஏழு கடல் தாண்டியவுடன் வரும் காட்டின் நடுவில்தான் அந்த அரக்கன் என் கணவரை வைத்திருக்கிறான்.  இந்த சக்திகளை நாம் முறியடிக்கும்போதே அந்த அரக்கன் நாம் வருவதை உணர்ந்துவிடுவான்.  அதனால், நான் அந்த காட்டிற்குள் வரமுடியாது.  நீங்கள் மட்டும்தான் உள்ளே சென்று என் கணவரை மீட்க வேண்டும்" என்றாள்.  'கடைசியா வைச்சியே ஒரு ஆப்பு' என்று நினைத்தாலும் பு.வர்மனுக்கும் இந்த சவால் பிடித்திருந்தது.  "உங்களுக்கு மேலும் ஒரு உதவி. முனிவர் கொடுத்த இந்த தைலத்தை  நுகர்ந்தால் ஐந்து நாழிகைக்கு உங்கள் உருவம் மற்றவர் கண்ணுக்குத் தெரியாது.   அரக்கனுக்குத் தெரியாமல் அங்கு சென்று என் கணவரை மீட்டு வருவது உங்கள் பொறுப்பு.  இந்த பௌர்ண்மிக்குள் நாம் என் கணவரை எங்கள் நாட்டுக்குள் கொண்டு போகாவிட்டால் என் கணவர் இறந்துவிடுவார்.  பின் நானும் இறக்கவேண்டியதுதான் அண்ணா. எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்." என்று கண்ணீர்விட்டு அழுதாள்.  மங்கையின் கண்ணீர் கண்டு மன்னனின் மனம் பதறியது.  "தங்கையே! கவலைப் படாதே.  இப்பொழுதே அந்த வேரைக் கொடு.  மந்திரத்தையும் சொல்.  பசி தூக்கத்தை துறந்து அதை ஜெபித்து  இன்றிலிருந்து நான்காம் நாள் உன்னுடன் புறப்படுவேன்" என்றான்.
 சொல்லியவாறே நான்காம் நாள் அங்கிருந்து கிளம்பி வழியில் தோன்றிய இடர்களையெல்லாம் தவளைப் பெண்ணின் ஆலோசனைப்படி வென்று மந்திரவாதியிருக்கும் காட்டை அடைந்தான்.

             தன் அம்சங்களான கழுகு உள்ளிட்டத் தடைகளை அழித்து புங்கவர்மன் தவளைப் பெண்ணுடன் முன்னேறி வருவதை அறிந்து கொண்ட அரக்கன் தவளைப் பெண்ணின் கணவனை அழைத்தான்.  "பரவாயில்லை.  உன் மனைவி புத்திசாலிதான். எப்படியோ அந்த புங்கவர்மனை எல்லாவற்றையும் செய்ய வைத்துவிட்டாள்.  ஆனால் இங்கு வந்து உன்னைக் கண்டுபிடிப்பது அவனால் முடியவே முடியாது.  நான் உன்னை மாதிரி தோற்றம் கொண்ட பத்து பேரை உருவாக்கி உன்னுடனே உலவவிடப் போகிறேன்.  உனக்கும் இன்னும் அரை நாழியில் உன் நினைவு மறக்கும்படி செய்துவிடுவேன்.  புங்கவர்மன் உன்னை எப்படிச் சரியாகக் கண்டுபிடிக்கிறான் என்று பார்க்கிறேன்.  அவன் உன்னைத் தவிர உன்னுருவில் இருக்கும் வேறு யாரையாவது இந்தக் காட்டைவிட்டுக் கூட்டிக் கொண்டு போனால் அந்த நொடியிலேயே அவன் உயிரும் உன் உயிரும் பறிபோகும்.  ஹா...ஹா.. என்று பெரிதாகச் சிரித்தான்.  "கொடிய அரக்கனே! கடவுள் கிருபையாலும் என் மனைவியின் அசையாத நம்பிக்கையாலும் புங்கவர்மன் என்னைக் கண்டுபிடிப்பான். உனக்கு அழிவு நிச்சயம்" என்று ஆக்ரோஷமாகக் கத்தியதில் அரக்கன் பூஜைக்காக வைத்திருந்த சந்தனம், குங்குமம் அரசன் மேல் கைகளில் கொட்டியது.  அதைக் கோவமாகத் துடைத்துத் தன் மொட்டைத் தலையில் தடவிய வண்ணம் நகர்ந்தான்.  "ஹே--ஹே--ஹே" என்று கெக்கெலித்த வண்ணம் அரக்கன் காளி பூஜைக்குக் கிளம்பினான்.

             காட்டை அடைந்தவுடன் பு.வர்மன் தவளையை இறக்கிவிட்டு "அம்மா தாயே. இந்த இடத்திலேயே பத்திரமாக இரு.  திரும்பவும் உன்னைத் தேடி ஏழுமலை ஏழு கடலைத் தாண்டி என்னால் அலைய முடியாது.  அதுசரி, இப்ப உன் கணவனை எப்படி கண்டுபிடிப்பது?  ஏதாவது குடும்பப் பாட்டு இருக்கா உங்களுக்கு?" என்றான்.  " குடும்பப் பாட்டெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவருக்குப் பாட்டே பிடிக்காது.  ஆனால் மிக அழகாகச் சித்திரம் வரைவார்.  அவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.  உங்கள் திறமையைத்தான் நான் நம்பியிருக்கேன்" என்றாள் தவளைப் பெண்.

             புங்கவர்மன் தவளைப்பெண் கொடுத்தத் தைலத்தையும் கம்பளத்தையும் எடுத்துக் கொண்டு காட்டில் அரசனைத் தேடி அலைந்தான். தொலைதூரம் அலைந்தபின் ஒருவனைப் பார்த்தான்.  அவனை அணுகிக் கேட்கலாமென்று நெருங்கியபோது அவனைப் போலவே இன்னொருவனும் இருந்தான்.  ஆச்சர்யத்தோடு மறைந்து நின்று பார்த்தால் ஒரு பத்து பேர் இவனைப் போலவே ஏதோ வேலையைச் செய்துகொண்டிருந்தார்கள்.  பு.வர்மனுக்கு இவர்களில் யாரோதான் அரசன் என்பது விளங்கியது.  உண்மையான அரசனை எப்படிக் கண்டுபிடிப்பது?  சரி, இவர்களைக் கொஞ்ச நேரம் கண்காணிப்போம் என்று சத்தமில்லாமல் மரத்தின்மீது ஏறி வசதியான இடத்தில் அமர்ந்துகொண்டு யோசித்தான்.  உற்றுப் பார்த்ததில் ஒருவனின் மொட்டைத் தலையில் மட்டும் ஏதோ வித்தியாசமாக இருக்க, அவனைக் கூர்ந்து கவனித்தான்.  அவன் தலையில் சந்தனத்தால் அழகிய அன்னம் வரையப்பட்டிருந்தது. 'ஆஹா, தவளைப் பெண் அரசனுக்கு நன்கு ஓவியம் வரையவருமென்றாளே! தவளைப் பெண்ணின் நாட்டுக் கொடியில் அன்னம் இருக்கும் என்றும் சொன்னாளே. நமக்கு அடையாளம் தெரியத்தான் இவன் அன்னத்தைத் தன் தலையில் வரைந்திருக்க வேண்டும். அப்படியானால் இவன்தான் உண்மையான அரசன்!. பின்னிட்டடா புங்கவர்மா !!!' என்று தன்னைத்தானே பாராட்டியவாறு தவளைப் பெண் கொடுத்த களிம்பை நுகர்ந்தான்.  எவர் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்த அவன் அரசனைக் கையால் பிடித்துக் கொண்டு சென்று அவன் மூக்கிற்கு நேராக  தைலத்தை காண்பிக்க அவனும் பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான்.  அவனையும் பறக்கும் கம்பளத்தில் ஏற்றிக்கொண்டு விரைவாக வெளியேறித் தவளைப் பெண்ணையும் எடுத்துக் கொண்டு பறந்தான்.  நிமிடங்களில் காடடை விட்டு வெளியேறிச் சில நாழிகைக்குள் ஏழுகடல் ஏழு மலைகளைக் கடந்துவிட்டான்.  இதற்குள் பு.வர்மனும், அரசனும், தவளைப் பெண்ணும் அவரவர் உரு வரப்பெற்றனர்.  அரசனுக்கும் தன் நினைவு வந்தது.  தன் மனைவியை ஆரத்தழுவிக்கொண்டான். பு.வர்மனுக்கு இருவரும் நன்றி சொன்னார்கள்.

'எல்லாம் நல்லாதான் இருந்தது.  ஆனால் அந்த ஜோசியர் ஏதோ இனிமையான அனுபவம் கிட்டும் என்றார்.  ஏழுகடல், மலைகளைக் கடந்தும் ஒன்றும் இனிமையான அனுபவம் என்று சொல்லும்படியில்லையே' என்று யோசித்துக்கொண்டிருந்த பு.வர்மனிடம் தன் தங்கையை அறிமுகம் செய்தான் அரசன். அவள் அழகில் மயங்கிய பு.வர்மன் ஜோசியர் சொன்ன இனிமையான அனுபவம் இதுதான் என உணர்ந்தான்.  மனதிற்குள் பாராட்டினான் அவரை.

Monday 24 October 2011

HAPPY DIWALI

எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.  நன்றாக வெடி வெடித்து, இனிப்பு காரம் சாப்பிட்டு, டிவி பார்த்து, ஏழாம் அறிவு போன்ற தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்து சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

உங்களுக்காக தீபாவளியை முன்னிட்டு ஒரு மீள்பதிவு. 

இந்த வருடம் தீபாவளிக்கு ஏதாவது specielஆகச் செய்து அசத்தலாம் என்று net-ல் தேடிப்பார்த்தேன்.


அல்வா? நமக்குக் கொடுக்கத்தானே வரும், கிண்ட வராதே என்று reject செய்தேன். குலோப்ஜாமூன்? குடும்ப பாட்டு போல் எங்கள் குடும்ப பஷணம் அது. என் சகோதர, சகோதரி குடும்பங்களில் தீபாவளி தோறும் செய்யப்படும் ஒன்று. அதனால் அதையும் reject செய்தேன். புதிதாக ஏதாவது என்று மேலும் தேடினேன். கண்ணில் பட்டது 'மோஹந்தால்'. செய்முறையைப் பார்த்தேன். கடலை மாவை வறுத்து, condensed milk மற்றும் நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருந்து, கடைசியில் நெய் தடவிய plate-ல் கொட்டி துண்டம் போடவும் என்று இருந்தது. ஆஹா, easy யாக இருக்கே , இதையே செய்வோம் என்று முடிவு செய்தேன். (இவ்வளவு easy யா, இதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்று யோசித்திருக்க வேண்டாமோ?). கடலை மாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்து கிளறினேன், கிளறினேன், கிளறிக்கொண்டே இருந்தேன். It looked like a never ending process. அது ஒரு மாதிரி கோந்து போலவே இருந்தது. ஒரு level-க்குப் பின்னர், இதுதான் சரியான பதம் என்று நானே மனசைத் தேற்றிக்கொண்டு, plate-ல் கொட்டினேன். அதைத் துண்டங்களாக்குவது அதைவிட பெரிய கஷ்டமான வேலையாக இருந்தது. கத்தியால் லேசாகக் கோடு போட்டால், கத்தியை எடுத்தவுடனே ஒன்றாகச் சேர்ந்தது. கொஞ்சம் அழுத்தி வெட்டினால், மொத்தமாகக் கத்தியுடனே ஒட்டிக்கொண்டு வந்தது (இது கோந்துதான், சந்தேகமே இல்லை!!!!). சரி, ஆறினால் சரியாகி விடும் என்று ஒன்று, இரண்டு மணி நேரம் wait பண்ணியும் சரியாகததால், overnight இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். காலையில் எல்லோருக்கும் முன்னால் எழுந்து மெதுவாகப் பூனை போல் வந்து திறந்து பார்த்தேன். ம் ஹூம், ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு வேளை, 'மோஹன் தான்' வந்து அதைத் தட்டிலிருந்து எடுக்க வேண்டுமோ?!!. எனக்கு அறிந்தவர், தெரிந்தவர்களில் மோஹன் என்று யாரும் இல்லாததால் அதைச் சத்தம் போடாமல் dustbinனில் கொட்டினேன். கடையில் போய் காஜூ கட்லி, ஜாங்கிரி என்று வாங்கினேன்.


என் அம்மா தீபாவளியன்று காலையில் போன் செய்தார்.

அம்மா: "தீபாவளிக்கு என்ன பண்ணினே?"

நான்: "காஜூ கட்லி, ஜாங்கிரியெல்லாம்....."

அம்மா: (சந்தோஷமாக)"very good"

நான்: "பண்ணியிருந்ததை வாங்கி வந்துட்டேன்!"

அம்மா: (சுரத்தில்லாமல்)"ஓஹோ".

 
கடைசியில் என் அக்காவிடம் மட்டும், மோஹந்தால் மேட்டரைச் சொன்னேன். அவள் கூலாக, குலோப் ஜாமூன் பண்ணியிருக்க வேண்டியதுதானே என்றாள்!!!!
 



Wednesday 12 October 2011

நண்பேண்டா

               ஞாயிறு காலைப் பொழுது சோம்பலாக விடிந்தது.  நானிருக்கும் வான்கூவரில் பனிப் பொழிவு வேறு.  குளிருக்கு இன்னும் இதமாகப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றியது.  இந்தக் குளிருக்கு ஒரு மசாலா டீயும் சூடாக பஜ்ஜியோ, பொங்கல் வடையோ சாப்பிட்டால் எவ்வளவு இதமாக இருக்கும்!! ஊரில் என் அம்மா மழைக் காலத்தில் இது போல் பொங்கல், வடை, அல்லது மிளகு குழம்பு என்று குளிர்காலத்துக்கு ஏற்றபடி சுவையாகச் சமைத்துக் கொடுப்பார்.  இங்கு பேச்சிலர் லைஃப்.  எனக்கோ சமையல் சுத்தமாக வராது.  உணவு விடுதியில் கூட இங்கு என்ன பெரிதாகக் கிடைக்கும்? ஒரு டோ நட்டோ, மஃபினோதானே.  சலிப்புடன் ஒரு காஃபி அருந்திவிட்டு சூப்பர் ஸ்டோருக்கு சாமான் வாங்கக் கிளம்பினேன். 

             வழக்கம்போல் ஜூஸ், பால், மோர், டார்டிலா என்று உப்புசப்பில்லாத சாமான்களை வண்டியில் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தேன்.  பின்னாலிருந்து "டேய் ஸ்ரீதர், எப்படா வந்தே?" என்று ஒரு குரல் கேட்கவும் அதிர்ந்து திரும்பினால் என் நீண்ட நாள் நண்பன் வைத்தி நின்றுகொண்டிருந்தான்.  அவனைப் பார்த்ததும் என் சலிப்பெல்லாம் பறந்து போனது.  "நான் இந்த ஊருக்கு வந்து ஒரு மாதம்தான் இருக்கும்.  நீ எப்படியிருக்கே " என்றேன். என் வண்டியில் இருக்கும் ரெடிமேட் உண்வுப் பொருட்களை சுட்டிக்கொண்டே "அப்ப இன்னும் நீ eligible bachelor தானா இல்ல அம்மணியை ஊருக்கு அனுப்பியிருக்கியா?" என்றான்.  "இல்லடா உனக்கு சொல்லாமலா. இன்னும் இரண்டு மாசத்தில கல்யாணம். அதுவரைக்கும் இப்படி ஓட்ட வேண்டியதுதான்"  என்றேன்.  Grocery வாங்கியபின் அவன் பேச்சைத் தட்ட முடியாமல் அவன் வீட்டிற்குப் போனேன்.  வைத்தியின் மனைவி கொடுத்த காஃபியைக் குடித்த வண்ணம் எங்கள் சுற்றம் நட்பு பற்றி update செய்து கொண்டோம்.  அடுத்த ஞாயிறு கட்டாயம் வரவேண்டும் என்று வைத்தியும் அவன் மனைவியும் வற்புறுத்தியதால் வருவதாகச் சொல்லி விடைபெற்றேன்.  சலிப்பாக விடிந்த நாள் வைத்தியின் வரவால் சந்தோஷமானதாக மாறியிருந்தது.

             தினமும் அவனுடன் மாலையில் ஒரு மணி நேரமாவது கடலை போடுவது வழக்கமாகிவிட்டது.  அவன் திருமணத்தன்று அவனைப் பார்த்ததுதான் கடைசி.  அதற்குப் பின்னர் வேலை, குடும்பம் என்று அவரவர் கூட்டுக்குள் அடங்கியதால் அதிகம் தொடர்பு இல்லை.  இப்பொழுது எங்கள் நட்பைப் புதுப்பிக்க வாய்ப்பு கிட்டியது குறித்து இருவருக்குமே மகிழ்ச்சி.

              ஞாயிறு ஒரு பதினோரு மணி அளவில் போன் செய்துவிட்டு வைத்தி வீட்டிற்குப் போனேன் (இங்கெல்லாம் சொந்தத் தம்பியானாலும் போன் செஞ்சிட்டுத்தான் பார்க்க போகனுங்க).  போகும் வழியில் gas-station-ல் காரை நிறுத்தி காஸ் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்.  அப்பொழுது திடீரென்று பக்கத்தில் ஒருவர் என் கையைப் பிடித்து கெஞ்சும் பாவனையில் ஏதோ சொல்ல முற்பட்டார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரைப் பார்க்க பாவமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் கையிலிருந்த 10 டாலரை அவர் கையில் திணித்துவிட்டு வேகமாக அங்கிருந்து வந்துவிட்டேன்.
 
             வைத்தியின் வீட்டிற்கு வந்தால் அவன் மனைவிதான் இருந்தார்.  அவன் அருகிலிருக்கும் மாலுக்குப் போயிருப்பதாக சொன்னவாறு காஃபி கொடுத்தார் அவர் மனைவி.  பேச வேண்டும் என்பதற்காக 'எப்படி இருக்கீங்க. வேன்கூவர் பிடித்திருக்கிறதா?' என்று கேட்டேன்.  கொஞ்சம் தயங்கிய அவர் பின்னர் 'வைத்தி உங்கள் நல்ல நண்பர்தானே.  உங்களை என் அண்ணனாக எண்ணிச் சொல்கிறேன்.  எனக்கு இங்க பிடிக்கவே இல்லை.  உங்கள் நண்பரும் என்னை ஒழுங்க கவனிப்பதில்லை.' என்று லேசாக ஆரம்பித்து சூடேறி, கொதித்துப் பொங்கிவிட்டார்.  'என் அப்பா இப்படி ஒரு இடத்தில் என்னைத் தள்ளிவிட்டுட்டாரே.. அவரிருந்தாலாவது சொல்லலாம்.  அவரும் போய் சேர்ந்துட்டார்.  எனக்கு சொல்லி அழக்கூட நாதியில்லையே.  நீங்கதான் அண்ணா எனக்கு ஹெல்ப் பண்ணனும்.  .." என்று கண்ணீர் சிந்தும் அவரிடம் என்ன சொல்ல என்று தெரியவில்லை.  இப்படி ஒரு  awkward ஆன situation-ல் மாட்டிக் கொண்டோமே என்று விழித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் எனக்கு ஒரு ஃபோன் வரவே இதாண்டா சாக்கு என்று வெளியே வந்து ஃபோன் பேசலானேன். நல்லவேளை கொஞ்ச நேரத்தில் வைத்தி வந்துவிட்டான்.  சந்தோஷத்தையும் சிரிப்பையும் தன்னுடனே வெளியில் கூட்டிச் சென்றிருப்பான் போலும்; அவன் வந்தவுடன் வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது.  ஒன்றும் நடவாதது போல் அவன் மனைவியும் எங்களோடு கலகலவென்று சிரித்துப் பேசினாள்.

            'என்னடா இது. வைத்தி மனைவி சொன்னதை நம்புவதா? அவளுக்கு உண்மையிலேயே பிரச்சினை இருக்குமா?  அப்படி இருந்தால் என் உயிர் நண்பன் கெட்டவனா?  அப்படி இருந்தாலும் அவனைத் திருத்துவதற்கு நான் முயற்சி செய்ய வேண்டும்தானே' என்று எனக்குள் பல சிந்தனைகள்.  இடையில் காலையில் என்னிடம் கெஞ்சிய அந்த மனைதர் உருவம் வேறு வந்து போனது.  Appadurai ப்ளாகில் படித்தோமே. ஒரு வேளை என்னிடம் கெஞ்சியது வைத்தியின் மாமனார்தானா.'  சரி எப்படியும் வைத்தியிடம் பேசிப் பார்ப்பது என்று முடிவெடுத்தேன்.  சாப்பாடு முடிந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு பக்கத்தில் வீடு பார்க்க வேண்டும் என்று சாக்குச் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

              போகும் வழியில் டிம் ஹார்டனில் நிறுத்தி காஃபி வாங்கிக்கொண்டு அமர்ந்தோம்.  கொஞ்சம் தயக்கத்திற்கு பின் ' என்னடா, கல்யாண வாழ்க்கை எப்படி போயிண்டிருக்கு" என்று ஆரம்பித்தேன்.  'சூப்பர்.  உனக்கும் இன்னும் இரண்டு மாசத்தில்  தெரியுமே.  லைஃபே டோட்டலா சேஞ்சாயிடும்" என்றான்.  சரி இப்படி சுத்தி வளைப்பது வேலைக்காகாது என்று முடிவு பண்ணி நேராக விஷயத்திற்கு வந்தேன்.  " என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு நீதாண்டா.  நீயும் உன் குடும்பமும் எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னுதான் நான் நினைப்பேன்.  இன்னைக்குக் காலையில் உன் வைஃப் ஒரே புலம்பல்டா.  அவங்களை சரியா கவனிக்கிறதில்லையா?" என்று மெதுவாக ஆரம்பித்தேன்.  "சே சே. என்னடா தமாஷ் பண்றியா.  ஆமாம், இந்த டிம் ஹார்டன் காஃபி மாதிரி சூப்பர் காஃபி வேற கிடையாதில்ல.  பேஷ், பேஷ், ரொம்ப நன்னாருக்கு..." என்று உசிலைமணி போல் மிமிக்ரி செய்தான்.  இப்படி பேச்சை மாத்தரானே என்று எண்ணியபடி சுற்றும் முற்றும் பார்த்தேன்.  எங்களுக்கு இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தவர் எங்களையே பார்ப்பது போல் தோன்றியது.  மீண்டும் திரும்பிப் பார்க்கும் போது கையெடுத்துக் கும்பிட்டார்.  வெள்ளைக்காரன் கையெடுத்துக் கும்பிடுவதா?  'அட மடையா.  சந்தேகமே இல்லை.  அது வைத்தியின் மாமா(ஆவி)தான்.  இவன் ஏதோ டபாய்க்கிறான்.  47 நாட்கள் மாதிரி இவன் அவங்களை துன்புறுத்துகிறானோ?  அண்ணன் மாதிரின்னு என்னை சொன்னாங்களே.  நம்ப கட்டாயம் ஹெல்ப் பண்ணித்தான் ஆகனும்.  இதுல என் ஃபிரண்டின் எதிர்காலமும் இருக்கே' என்று எண்ணியவாறு 'இங்க பாரு வைத்தி.  நீ நல்ல பையன்.  உங்க அப்பா அம்மா எல்லோரும் நீ இங்க சந்தோஷமாக இருக்கிறதா நினைச்சிண்டு இருக்கா. ஆனா அப்படி இல்லைன்னு தெரியறது.  உன் வைஃப் சொன்னதை வைச்சு மட்டும் இல்லை.  நீயே கொஞ்சம் ஆர்டிஃபிஷியலா சந்தோஷத்தைப் பூசிக் கொள்வதை என்னால் புரிஞ்சிக்க முடியுது.  என்ன பிரச்சினை.  அவங்களை ட்ரபிள் பண்ணாதே.  அப்புறம் அவங்க 911 -க்கு ஃபோன் செஞ்சாங்கன்னா என்னாகும்?  அவங்க அழுகையைப் இன்னோரு தடவைப் பார்த்தால் எனக்கே கோவம் வந்துவிடும் போலிருக்கு " என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு big brother தோரணையில் பேசினேன். அதற்குள் கையெடுத்துக் கும்பிட்ட வெள்ளைக்காரர் கிட்டே வந்து " மாப்பிள்ள யூ ஆர் க்ரேட்" அப்படின்னு வைத்தியிடம் சொல்லிவிட்டு என் கன்னத்தில் பொளேரென்று ஒரு அடி வைத்தார்.  நான் ஆடிப்போய்விட்டேன்.  கூட்டம் கூடும் முன் என்னைக் கூட்டிக் கொண்டு வைத்தி காரிலேறினான்.  திரும்பிப் பார்க்கும்போது அந்த வெள்ளைக்காரன் " I dont know what I was doing.  I really dont know. I am sorry"  என்று சொல்வது தெரிந்தது.

              பதறிப் போன என்னை ஆசுவாசப் படுத்திய வைத்தி, " ஸ்ரீதர்.  எனக்கும் யாரிடமாவது சொன்னால் தேவலாமென்றிருந்தது.  நீ என் ஃப்ரெண்டுதானே.  நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.  அப்ப நாங்க கேல்கரியில் இருந்தோம். எனக்கும் ஷாலினிக்கும் கல்யாணமாகி இரு வருஷங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம்.  இதுக்கப்புறம் உனக்கு சந்தோஷமே இல்லடா என்று நினைத்தோ என்னவோ கடவுள் எங்களை அப்படி திகட்ட திகட்ட ஹாப்பியா இருக்கவிட்டார்.  இரண்டரை வருஷங்களில் அவ கன்சீவானா.  ஆனா அவள் கர்ப்பப்பை வீக்கா இருப்பதால் கவனமாயிருக்கனும்னு டாக்டர் சொன்னார்.  ஷைலு எவ்வளவு சொல்லியும் ரெஸ்ட் எடுக்காம ஏதாவது வேலை செஞ்சிண்டே இருப்பா. ஒரு நாள் நல்ல ஸ்னோ அன்னைக்கு.  நான் ஸ்னோவைத் தள்ளிக் கொண்டிருக்க சொல்ல சொல்லக் கேட்காமல் எனக்கு உதவ வந்தாள்.  கொஞ்ச நேரத்தில் tired ஆகிட்டா. ப்ச்.. அவ்வளவுதான், miscarriage ஆயிடுச்சு.  அதில் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டா.  தான் தான் காரணமென்று மனம் வருந்தி அதை மறைக்க என்னிடம் எதற்காவது கோவம் கொள்ளத் தொடங்கினாள்.  அவளோட guilty feeling-ஐ மறக்க என்னைக் குறை சொல்வது வழக்கமாக மாறிவிட்டது.  நானும் முதலில் அதைப் பெரிசா எடுத்துக்கலை.  அது வளர்ந்து இப்படி ஒரு psychological disorder ஆக ஆகும்னு எதிர்பார்க்கலை.  சரி, இடம் மாறினால் அவளுக்குச் சரியாகுமென்று இங்க மாத்தல் வாங்கிண்டு வ்ந்தேன்.  பெரிய  change ஒன்னுமில்ல. அவங்க அம்மாவிற்கு இங்க வர விசா கிடைக்கவில்லை.  இங்க அவ மனசுக்கு இதமா நடக்க ஒரு நெருங்கிய ஃப்ரெண்டும் இல்லை.  இப்படிதான் எப்ப சான்ஸ் கிடைச்சாலும் என்னைப் பத்தி கதை கட்டி குறை சொல்லுவா.  பாரேன்  உன்னைப் பார்த்து ஒருவாரம் கூட இல்ல .  அதுக்குள்ள இப்படி.  என்ன செய்யறதுன்னு தெரியலை.." என்று வருத்தப்பட்டான்.

              " சாரிடா வைத்தி.  நானும் சீரியசா உங்கிட்ட பேசியிருக்கக் கூடாது.  ஆனா காலையில் கேஸ் ஸ்டேஷனில் ஒருத்தர் திடீரென்று கையெடுத்துக் கும்பிடறார்.  அப்புறம் உன் மனைவி கண்ணீர் விட்டு அழறா. இங்க வந்தா அந்த வெள்ளைக்காரன் முகத்தில் காலையில் பார்த்த மனிதன் போலவே வேதனை. நான் நம்ப ரெண்டு பேரும் விரும்பிப் படிக்கும்  நசிகேதவெண்பா ப்ளாகில் சொல்லப்பட்ட நிகழ்ச்சியையும் கமெண்ட்சையும் நினைத்துப் பார்த்தேன். உன் மாமனார்தான் என்னிடம் உதவிக்குக் கெஞ்சுவதாக தப்பாக அர்த்தம் செய்து கொண்டு உன்னைக் கொஞ்சம் மிரட்டினேன்.  உன்னோட வாழ்க்கையில் பிரச்சினைன்னா சரி செய்ய வேண்டியது என் கடமையில்லையா.  அதான் இப்படி.... அது சரி அந்த வெள்ளைக்காரன் எப்படி மாப்பிள்ள அப்படின்னான்? " என்றேன்.  வைத்தியும் யோசித்துவிட்டு " நீ சொல்வது போல் என் மாமனாரின் ஆவி உன்னிடம் உதவி கேட்டிருக்கலாம்.  ஆனால்  நீ நினைச்ச மாதிரியில்ல.  என் பொண்ணு சொன்னத கேட்டு மாப்பிள்ளைய எதுவும் சொல்லிடாத என்று கெஞ்சியிருக்கலாம்.  அந்த வெள்ளைக்காரன் மாப்பிள்ள அப்படின்னு கூப்பிட்டது என் மாமனார் குரல் மாதிரிதான் இருந்தது.  நல்ல வேளைடா நீ தப்பிச்ச. என் மாமனார் குத்து சண்டை பயில்வானாக்கும். ஒன்னு விட்டார்னா தாடை பேர்ந்துக்கும். "  என்றான்.  நான் தாடையை மெதுவாகத் தடவிக்கொண்டே ,  " உனக்காக அதையும் தாங்கிப்பேன். நண்பேண்டா..." என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தேன்.  "உன் மனைவியை நல்லா பார்த்துக்கோ.  அவங்களுக்கு மனம்விட்டுப் பேச ஒரு துணை வேணும்.  பேசாமல் லீவு எடுத்துண்டு அவங்களோடு ஊருக்குப் போயிட்டு அங்க விட்டுவிட்டு வா.  நான் கல்யாணத்திற்குப் போறேன் இல்ல.  வரும்போது எங்களோடு வரட்டும். அதற்கப்புறம் என் வைஃப் அவங்களுக்கு நல்ல துணையா இருப்பா.  அடுத்த குழந்தை பிறந்துவிட்டால் அவங்க உன் பழைய ஷாலினியா ஆயிடுவாங்க" என்றேன்.  வைத்தியும் "lets hope for the best.  anyway உன் கிட்ட பேசினது மனசுக்கு இதமாக இருக்கு.  அதுக்காக வீட்டுக்கு வராம இருந்துடாத.  அடுத்த சண்டே கட்டாயம் வா..." என்று சிரித்தபடி விடை கொடுத்தான்.




(துரை, உங்க நசிகேத வெண்பாவில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியைப் படித்ததும் தோன்றியது இந்தக் கதை.  உங்களுக்கு நன்றி)

Thursday 15 September 2011

திண்ணைப் பேச்சு

                நம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி பித்து இருப்பது தெரியும்.  அதுவும் அதில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிடைத்தால் போதும் அவர்கள் தன்னை மறந்துவிடுகிறார்கள்.  உலகம் முழுதும் பெரும்பான்மை மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் என்ன பேசுகிறோம் என்று வரையரையில்லாமல் பேசுகிறார்கள்.  கோபிநாத் அவர்கள் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தாயைப் பற்றி குற்றப் பத்திரிகை வாசித்தது கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அம்மாவைப் பற்றி புரிந்து கொள்ளாதது ஒரு குறை; அவர்களின் அன்பை உணராததும் குறை; ஆனால் அதெல்லாம்விட பலர் முன்னிலையில் அம்மாவைப் பற்றி குறை கூறுவது என்னைப் பொறுத்தவரை பெரிய குற்றம் எனலாம். 
தொலைக்காட்சி, கணிணி போன்ற இயந்திரங்களுடன் manual கொடுப்பதுபோல் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வருபவர்களுக்கு ஒரு code of conduct கொடுத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

               அது போல் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் code of conduct கொடுத்தால்கூட பரவாயில்லை.  'மாமா வீபுதி குங்குமம் கொடுங்க' என்று கை நிறைய வாங்கிக் கொண்டு ஒரு சொட்டு இட்டுக் கொண்டு மீதியைச் சுவற்றில் கொட்டி கோவிலின் சுவற்றை அழுக்காக்குவது குற்றம் என்று சட்டமே போடலாம் என்று தோன்றும்.  நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் (ஷீரடியில் உதி வைத்திருப்பது போல்) ஒரு விரல் மட்டும் செல்லும் அளவு துளை போட்ட மூடியால் விபூதி இருக்கும் ட்ரேயை மூடி வைத்திருப்பதால் இங்கு அந்த மாதிரி அழுக்கு செய்யாமலிருக்கிறார்கள்.  இதை எல்லா  கோவிலிலும் நடைமுறைப்படுத்தலாம்.  (அப்படியே ஒரு கொசுறு தகவல்.  நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஐயர் கடையில் காபி கிடைக்கிறது.  ஒன்லி காபி மட்டும்தான் விற்கிறார்.  சூப்பரான காபி.)

            வேளச்சேரியருகே மெயின் ரோடுக்கருகிலேயே ஒரு அம்மன் கோவிலில் போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கும்பலாகக் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இரவு வீடு திரும்பி வரும் நேரத்தில் பார்த்தால் மக்கள் கூழைக் காய்ச்சி முடித்துவிட்டு அந்தக் கோயில் வாசல் முழுவதும் பிளாஸ்டிக் பேப்பர் பைகளை அப்படியே குப்பையாகப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். சுத்தம் சோறு போடும் என்பார்கள்.  இவர்கள் சோறு சாப்பிட்டு குப்பையைப் போடுகிறார்கள்!!

              கோவில் பற்றி பேசும்போது இந்த கோடை விடுமுறையில் கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் பார்த்த நினைவு வருகிறது.  ஒரு வாரம் நடந்த அந்த விழாவில் பல விஷயங்கள் கவனத்தைக் கவர்ந்தன. (1) ஒரு வாரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போன போதிலும் ஒரு இடத்திலும் குப்பையே காணப்படவில்லை. (2) மெயின் ரோடிலேயே இருந்த போதிலும் பெரிய அளவில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படவில்லை. (3).  போலீஸ், மருத்துவம், தீயணைப்பு என்று பல விஷயங்களுக்குச் செய்யப்பட்ட முன்னேற்பாடு. (4). கோவிந்தபுரம் போல் ஒரு உள்ளடங்கிய கிராமத்திலிருந்து அந்த நிகழ்ச்சியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது. (5) கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் பாண்டுரங்கனையும் ருக்குமணியையும் ஊர்வலமாகக் கொண்டு வந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. (6) எல்லா நிகழ்ச்சிகளையும் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடித்தது.

              காஞ்சிபுரமென்றால் சங்கர மடமும், காஞ்சி காமாக்ஷி கோவிலும், வரத ராஜ பெருமாள் கோவிலும் நினைவுக்கு வரும். இந்த முறை அங்குள்ள கைலாச நாதர் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது.  கோவிலெங்கும் சிற்பங்கள் மாமல்லபுரத்தை நினைவூட்டியது.  அங்கு பிரகாரத்துக்குள் ஒரு சுரங்கப் பாதை போல் உள்ளது.  பாதையின் நுழைவுப் பகுதி மரணவாயில் என்று அழைக்கப்படுகிறது.  தலையை முதலில் நுழைத்து குப்புறப் படுத்துதான் உள்ளே நுழைய முடியும். இப்படி நுழைந்தவுடனே ஒரு பெரிய இறக்கம் (படிகளெதுவும் கிடையாது.)  பின்னர் எழுந்து நடக்குமளவு உயரம் இருக்கிறது.  வெளியில் வரும் வழி ஜனன வாயிலென்று சொல்லப்படுகிறது.  அது மிகவும் சிறியது.  மீண்டும் குப்புறப்படுத்து ஒரு உன்னல் உன்னித்தான் (குழந்தை கர்ப்பவாயிலிலிருந்து வெளிவருவது போல்) வெளியே வர முடிகிறது.  அதனுள் சென்று வந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.  இந்தக் கோயில் பற்றிய ஒரு கதையும் உண்டு.  பூசல நாயனார் அவர்கள் மனதிற்குள் கற்பனையாக சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டி அதற்கு கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்தாராம்.  கைலாச நாதர் கோவில் கட்டிய மன்னனும் அதே நாளில் இந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் குறித்திருந்தாராம்.  சிவன் மன்னன் கனவில் தோன்றி தான் பூசல நாயனார் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் மன்னனின் கோவில் கும்பாபிஷேகத்தைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.  இந்தக் கோவிலின் அழகைப் பார்த்ததும் நாயனாரின் பக்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை.

Tuesday 30 August 2011

மங்காத்தா


               மங்காத்தா - ஒரு சீட்டாட்டத்தின் விறுவிறுப்புடனான படம்.  கிரிக்கெட்டில் பெட்டிங்க் மூலம் வரும் 500 கோடி பணத்தைக் கடத்த நான்கு பேர் முனைய, ஐந்தாவதாக அஜீத் வந்து அவர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்வதுதான் கதை.

              அஜீத் அவரது ரோலை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.  Anti- hero ரோலுக்கேற்ப முக பாவனைகளும் gestures எல்லாம் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்.  சுருக்கமாக, தனது ஐம்பதாவது படத்தில் அஜீத் அவரது ரசிகர்களை ஏமாற்றவில்லை.

              படத்தின் பிண்ணனி இசை மிகவும் அருமை.  காட்சியின் விறுவிறுப்பை இசையால் அதிகமாக்கியிருக்கிறார் யுவன்.  மற்றபடி அர்ஜுன், த்ரிஷா, லஷ்மி ராய் எல்லாரும் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.  ப்ரேம் காமெடிக்குக் கொஞ்சம் உதவியிருந்தாலும் பணம் கொள்ளையில் அவர் சேர்வதற்கு காரணம் அவ்வளவு அழுத்தமாக இல்லை.  அதுவும் ஒரு சாதாரணப் பூட்டை (ஒரு டிஜிட்டல் பூட்டாவது பயன்படுத்தியிருக்கலாம்) எப்படியோ அலார்மோடு இணைப்பதெல்லாம் காதில் பெரிய பூ.
 மொத்தத்தில் பொழுதுபோக்கும் மசாலா படம். 'உள்ளே' வந்த ரசிகர்கள் 'வெளியே' போகா வண்ணம்  அஜீத்தும் இசை அமைப்பாளரும்  மங்காத்தாவைத தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

Saturday 27 August 2011

ஹலோ, ஹவ் ஆர் யூ?

               நான் அன்றும் வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு வாக்கிங் செல்லக் கிளம்பினேன்.  பெசண்ட் நகர் பீச் பக்கம் ஒரு மணி நேரம் என் நண்பர்களோடு நடந்து விட்டு பின் கொஞ்ச நேரம் அன்னா ஹசாரே, 2 ஜி, புதிய சட்டசபை என்று ஹாட் டாப்பிக்கெல்லாம் அலசிவிட்டு மெதுவாக பஸ் ஸ்டாண்ட் வருவேன்.  அங்கே ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து அங்கு வரும் மக்களை வேடிக்கைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் ரிடையர்ட் லைஃபை அனுபவிக்கும் மிடில் க்ளாஸ் மஹாதேவன்.  நான் அரக்கப் பரக்க ஓடி வேலை செய்த காலத்தில் சக மனிதர்களைத் திரும்பிப் பார்க்கவே நேரமில்லை.  அதனால் இப்பொழுது பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து எல்லாரையும் வேடிக்கைப் பார்ப்பது, வழி கேட்பவர்களுக்கு வழி சொல்வது, பஸ் ஏறமுடியாமல் கஷ்டப்படும் சிறுவர்/ வயதானவர்களுக்கு உதவுவது  என்று பொழுது போக்குவேன். 

               பத்து நாட்களுக்கு முன் இப்படி வேடிக்கை பார்க்கும் போது ஒரு சுவையான நிகழ்ச்சி.  ஒரு இளைஞன்  back pack மாட்டிக் கொண்டு டீஸண்டான உடை போட்டுக் கொண்டு வந்தான்.  பஸ் ஸ்டாண்டில் இருப்பவர்களைப் பார்த்து ஸ்னேகமாக ஆனால் கொஞ்சம் கூச்சத்துடன் புன்னகைத்தான்.  ஒரு பத்து நிமிடம் கழித்து வடக்கத்திக்காரர் போல் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்து இவன் புன்னகைக்க அவர் இயந்திரத்தனமாக 'ஹலோ, ஹவ் ஆர் யூ?' என்றார்.  இவனோ ' ஐ அம் ராமசாமி' என்றான் கூச்சத்துடன். அந்த வடக்கத்திக்காரர் அவன் பதிலை லட்சியம் செய்யாமல் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு, பஸ் வருகிறதா என்று பார்ப்பதிலேயே கவனமாக இருந்தார்.  'என்னாடா இது, டீஸண்டா ட்ரெஸ் பண்ணியிருக்கான், இப்படி இங்லீஷ் பேசறானே' என்று எனக்கு ஆச்சர்யம். அடுத்த சில நிமிடங்களில் டிப்-டாப் ஆசாமியின் பஸ் வர அவன் போய்விட்டான்.

            அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த ஒரு பத்து நாட்களில் மூன்று முறை இந்த காட்சி நடந்தது.  எனக்கு அந்த டிப்-டாப் இளைஞனிடம் அனுதாபம் ஏற்பட்டது.  நாளை எப்படியும் அந்த இளைஞன் வந்தவுடன் அவனுக்கு இங்லீஷ் கற்க ஆர்வமிருந்தால் சொல்லிக் கொடுக்கத் தாயாரென்று சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  ஆனால் என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் இரண்டு நாட்கள் வாக்கிங் போகமுடியவில்லை.  மறு நாள் வழக்கம் போல் பஸ் ஸ்டாண்டில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அந்த இளைஞன் வந்தான்.  கொஞ்ச நேர இடைவெளியில் அந்த வடக்கத்திக்காரரும் வந்தார்.  வழக்கம் போல் 'ஹவ் ஆர் யூ?' என்று சொல்ல டிப் டாப் இளைஞன் 'fine,thanks ' என்று தெளிவாகப் பேச எனக்கு ஒரே ஆச்சர்யம்.   அவனது பஸ் வர அவன் போய்விட்டான். 

             மாலை நான்கு மணியளவில் காய்கறி வாங்க மார்கெட் போயிருந்தேன்.  ஒரே கூட்டமாயிருக்க என்ன என்று விலக்கிப் பார்த்தால் அந்த டிப்-டாப் இளைஞனைப் போலீஸ் கைது செய்து கொண்டிருந்தார்கள்.  என்ன என்று விசாரிக்கையில் இரண்டு மூன்று இடங்களில் பாம் வைத்தான் என்று கைது செய்தார்களென்று சொல்லிக்கொண்டார்கள்.  எனக்கு ஒரே அதிர்ச்சி. அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கு நண்பர் ஆதலால் அவர் மூலம் பின்னர் விஷயம் தெரிய வந்தது.  அந்த டிப்-டாப் ஆசாமியும் வடக்கத்திக்காரரும் கூட்டுக் களவாணிகள். ஹவ் ஆர் யூ? என்ற கேள்விக்கு ஐயம் ராமசாமி என்றால் பாம் தாயாரில்லை என்றும், ஐயம் ஃபைன் என்றால் தயார் என்றும் சங்கேத பாஷையில் பேசிக் கொண்டார்கள் என்றும் அறிந்தேன்.  எப்படி இவர்களைப் பிடித்தார்கள் என்று மேலும் ஆவலுடன் கேட்க 'அந்த இளைஞன் இப்படி தப்பாக இங்லீஷ் பேசுவதைப் பற்றி தன் மனைவியின் மூலம் கேள்விப்பட்ட கான்ஸ்டபிள் கேலியாக அதைப் பற்றி சொன்னதாகவும், அதில் ஏதோ தவறிருப்பதாக உள்மனது சொல்ல அவனைப் பின் தொடர்ந்து அவனைப் பற்றி தெரிந்துகொண்டார்களாம்.  அவனைக் கையும் களவுமாகப் பிடிக்கப் பொறுமையாகப் பின் தொடர்ந்து மார்கெட்டில் பாமை வைத்துவிட்டு செல்லும்போது கையும் களவுமாகப் பிடித்ததார்களாம்.

           மறுநாள் வழக்கம் போல் வாக்கிங் போகையில் என் நண்பர் 'ஹலோ ஹவ் ஆர் யூ?' என்று என்னைல் கேட்க அவசர அவசரமாக அவர் வாயை மூடினேன். 

(எங்கள் ப்ளாகில் வந்த அவன் இவன் அவர் பதிவைப் படித்தபோது தோன்றிய கதை இது.    நான் முதல் முதல் எழுதிய கதையும் எங்கள் ப்ளாகில் படித்த பதிவை ஒட்டியே எழுதப்பட்டது. எங்கள் ப்ளாகுக்கு ஒரு thanks.


Tuesday 23 August 2011

கிருஷ்ண ஜெயந்தி

              கிருஷ்ண ஜெயந்தி என்றால் நாங்கள் சிறு வயதில் கொண்டாடியதுதான் நினைவு வரும்.  என் அம்மாவும் பாட்டியும் சீடை, முறுக்கு, திரட்டிப்பால் என்று செய்ய வீட்டில் வாசனை தூக்கும்.  ஆனால் இரவு பூஜை வரை நாக்கைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.  மாலையில் வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வரைவோம்.  இதெல்லாம் விட மாலையில் பூஜை முடிந்ததும் என் அம்மா அவர்கள் செய்யும் பஜனையை என்றுமே மறக்க முடியாது.  'கிருஷ்ணா முகுந்தா முராரே...', 'ஜிலுஜிலு ஜிலிஜிலுவென..', என்று பல பாடல்களை அவர் பாட, என் அண்ணன் ஒரு பலகையை வைத்து தாளம் போட நாங்கள் அனைவரும் பட்சணம், பசியை மறந்து பஜனையில் லயித்ததும் என்றும் நினைவில் நிற்பவை.

             திருமணமானபின் வளைகுடா நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை ISCON-ஐச் சேர்ந்த நண்பர் வீட்டில் கொண்டாடினோம். நிறைய பேரின் பங்கேற்பில் நூறுவகைக்கு மேல் பட்சணங்கள் நிவேதனம் செய்து, இரவு பனிரெண்டு மணிக்குப் புத்தாடை உடுத்தி ஆடல் பாடல்களோடு கொண்டாடியது பசுமையாக நினைவிருக்கிறது.

              என் நண்பரின் மகளுக்குப் பிடித்த தெய்வம் கிருஷ்ணர்.  எப்பொழுதும் கிருஷ்ணர் கதைதான் விரும்பிக் கேட்பாள்.  ஒரு முறை நான் அவளிடம் கிருஷ்ணர் பற்றி கிருஷ்ணரின் அப்பா பேர் என்ன, கம்சன் யார் என்று ஒரு மினி quiz நடத்த, டாண் டாணென்று சரியான பதில் அளித்தாள்.  கடைசியாக 'யாருக்குக் கிருஷ்ணரை ரொம்ப பிடிக்கும்' என்று (அவள் ராதா என்று சொல்வாள் என்று எண்ணி) கேட்க அவளோ 'எனக்குதான்!' என்று பதில் சொன்னாளே பார்க்கலாம்.!! அவளுக்கு நான்கு வயதாகும்போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது.  கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணர் பாதம் போடுவதைப் பார்த்த அவள் ஏனென்று கேட்க என் தோழி கிருஷ்ணர் இன்று நம் வீட்டுக்கு வருவார்; அதற்குத்தான் என்றாராம்.  குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி.  கிருஷ்ணரைப் பார்க்கலாமா? எப்ப வருவார்? எல்லார் வீட்டுக்கும் வருவாரா? என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.  என் தோழியும் குழந்தையிடம் கிருஷ்ணர் இரவு வருவார் என்று நம்பிக்கை அளித்த வண்ணம் இருந்தாள்.  இரவு பூஜை முடிந்து நாங்களெல்லாம் திரட்டிப்பால், சீடையை ஒரு பிடி பிடிக்கத் தயாராக அவள் மட்டும் 'கிருஷ்ணர் வரட்டும்; அவரோடு சேர்ந்து சாப்பிடலாம்' என்றாள்.  நாங்களும் குழந்தை மனசை நோக வைக்க வேண்டாம் என்று கிருஷ்ணர் இரவு கட்டாயம் வருவார்; அவர் எல்லார் வீட்டுக்கும் போய்விட்டு வருவார். நீ சாப்பிடு' என்று சொன்னோம். அவளோ பிடிவாதமாக சாப்பிட மறுத்துவிட்டாள். நேரமாக ஆகக் குழந்தை சாப்பிடவில்லையே என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது.  உடனே என் தோழியின் கணவர் சமயோசிதமாக தன் நண்பருக்கு ஃபோன் செய்து 'கிருஷ்ணர் வந்து கொண்டு இருக்கார்.  வழியில் டிராஃபிக் ஜாமானதால் வர இன்னமும் நிறைய  நேரமாகுமாம்' என்று சொல்லச் சொன்னார்.  குவைத்தில் சில நேரங்களில் டிராஃபிக்கில் மாட்டிய அனுபவம் இருந்ததால் அந்தக் குழந்தையும் சாப்பிட சம்மதித்து சாப்பிட்டுத் தூங்கியும்விட்டாள்.  காலை எழுந்ததும் முதல் கேள்வியாக 'அம்மா, கிருஷ்ணர் வந்தாரா?' என்றாளாம்.    இன்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவள் நினைவுதான் எங்களுக்கு வரும்.

           கடைசியாக ஒரு சின்ன சந்தேகம்.  ஜெயந்தி என்றால் என்ன அர்த்தம்?  பிறந்த தினம்?  ஆனால் பல பெண்களின் பெயர் ஜெயந்தி என்று இருக்கிறதே? பிறந்த தினம் என்றா பெயர் வைப்பார்கள்!!.

Monday 30 May 2011

அலை பேசுதே

           
              அலைக் கற்றை விவகாரம் பெரிய புள்ளிகளையெல்லாம் படுத்தியெடுக்கிறது என்றால் இந்த அலைபேசி நம்மைப் போல் சாமான்யர்களை எப்படி மாற்றியிருக்கிறது!  ஒரு பூக்காரி கூட "எங்க கீர? வர சொல பல்லாவரம் ஸ்டேஸனாண்ட புள்ள டூசன் போயிருக்கு, அத்த இட்டாந்துரு" என்று  செல்லில் பேசி அலட்சியமாக அதைச் சுருக்குப் பையில் போட்டு முடிந்து வைக்கும் அளவு நாட்டில் செல்லின் செல்வாக்குப் பரவியிருக்கிறது.

               சென்னையிலிருந்து கும்பகோணம் இரயிலில் போவதற்குள் ஒரு சந்தைக் கடை போல் ஒவ்வொருவரும் செல்லில் கத்தி கத்தி பேசுவது ஒரு கதம்பமாகக் கேட்பதற்குச் சுவையாக இருக்கும்.  கண்ணை மூடி அங்கங்கே வரும் பேச்சை மட்டும் கேட்டால் அது ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும். இங்கே ஒரு சாம்பிள்:
seat number 23: 'ஆமாம், மாப்பிள்ள ரொம்ப நல்லவர்"
seat number 35: 'அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும், மூஞ்சில நாலு அப்பு அப்பிட்டுதான் பேசுவேன்"
-------------------------
seat number 42: '..எனக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு..."
seat number 53: 'அவ்வளவு சீக்கிரத்தில அது நடந்துருமா? பிரச்சினை பண்ண மாட்டோம்?  அண்ணாச்சின்னா சும்மாவா?"
--------------------------
              ஒரு வழியா எல்லோரும் உரையாடிவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் நோக்கியா ரிங்க் டோன் ' டட டண் டன் டட டண் டன் டான்...." கேட்டவுடன் ஒரு பத்து பேர் அவசர அவசரமாக லைட்டைப் போட்டு கைப் பை, சட்டைப் பை என்று தேடி மொபைல் ஃபோனைப் பார்க்க, ஃபோன் வந்த ஒருவர் மட்டும் " இப்பதாண்டா படுத்தேன் செல்லம், குட் நைட்..." என்று கொஞ்சிப் பேச மற்றவர்களெல்லாம் கடுப்போடு மீண்டும் தூங்கப் போவார்கள்.

              பொது ரிங்க் டோனால் இந்தப் பிரச்சினை என்றால் சிலரின் ஸ்பெஷல் ரிங்க் டோனால் வேறு பிரச்சினைகள்.  கோவிலில் கூட்டத்தில் நீந்தி கர்ப்பக்ருஹம் அருகில் வந்தவுடன் கண்மூடி சாமியைக் கும்பிடும்போது 'என் உச்சி மண்டைல சுர்ருங்குது..." என்று ஒருவரின் செல்போன் ஒலித்தால் உண்மையிலேயே அவர்  உச்சி மண்டையில் நங் என்று குட்டத் தோன்றும்.

               செல்ஃபோன் பல நேரங்களில் செல்லா ஃபோன் ஆகிவிடுகிறது.  அதுவும் கிராமங்களில் செல்ஃபோன் ரிங் மட்டும்தான் கேட்கும். பேச ஆரம்பித்தால் வெறும் சத்தம்தான் கேட்கும்.  ஒருமுறை கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் என் உறவினர் வீட்டுக்கு வர ஒரு நண்பர் வழி கேட்டு செல்ஃபோனில் அழைத்தார்.  ஹாலில் உட்கார்ந்திருந்த நண்பர் "ஹலோ, கேக்கலையா... இப்ப கேக்குதா?.." என்று கேட்ட வண்ணம் முதலில் வாசலுக்குப் பின் தெருவிற்கு, பின் மெயின் ரோடுவரை போய்விட்டார்.  போன் செய்தவர் "இப்பதான் தெளிவா கேக்குது.  தெளிவா பாக்கக்கூட முடியுது.  அப்படியே லெஃப்ட்டில திரும்பிப் பாருங்க, நான் நின்னுண்டிருக்கேன்..." என்றாரே பார்க்கலாம்.

              சிலருக்கோ செல்ஃபோன் செல்ல ஃபோனாயிருக்கும்.  குளிக்கப் போகும்போதுகூட கையில் எடுத்துப் போவார்கள். அதுவும் கல்லூரி மாணவ/மாணவிகள் தூங்கும்போதுகூட செல்ஃபோனைப் பிரிவதில்லை. நடுராத்திரி தூங்கும்போது திடீரென்று எழுந்து பார்த்தால் பக்கத்தில் படுத்திருப்பவர்  தலை வரை போர்வை மூடியிருக்க உள்ளே இருந்து கொள்ளிவாய்ப் பிசாசு போல் வெளிச்சம் வர பயந்து லைட்டைப் போட்டுப் பார்த்தால் போர்வைக்குள்ளிருந்து கையில் செல்ஃபோனுடன் வெளிவருவார்கள்.  கேட்டால் நண்பர்களுடன் சாட்டிங்காம்!!!.

              இன்னும் சிலருக்கோ செல்ஃபோன் 'கொல்'ஃபோனாகிவிடுகிறது.  ஒருமுறை ஸ்டெர்லிங்க் ரோட்டில் ஆட்டோவில் பொய்க்கொண்டிருந்தேன்.  சிக்னலில் நிற்கும்போது பைக்கில் ஒருவர் செல்ஃபோனில் " வழி சொல்லுங்கண்ணே. ஆ, சரி, மேல சொல்லுங்க.  ரைட்ல கட் பண்ணனுமா...சரி, சரி, மேல எப்படி போறது...?" என்று பேசிக்கொண்டே இருக்க எங்கள் ஆட்டோ டிரைவர் ஹாரன் அடித்து, "சரிதாம்பா, இப்படி பேசிக்குனு போனால் நேர மேலதான் போணும்.  ஓரத்தில நிப்பாட்டிக்க; பொறவு பேசு.." என்றார்.  மிகச் சரியான ஆலோசனையாக எனக்குப் பட்டது.

               ஒரு சிலர் செல்ஃபோனை பயன்படுத்துவதில் 'கருமி'யாக இருப்பர்.  Missed call  விடுபவர்கள் ஒருவகை என்றால் இவர்கள் அதற்கும் மேல்.  அவசரத்திற்குப் தோடர்புகொள்ளத்தானே செல்ஃபோன். இவர்களோ சார்ஜ் வீணாகுமென்று (பேட்டரி சார்ஜ்!!) செல்ஃபோனை அணைத்தே வைத்திருப்பார்கள். தேவையானபோது மட்டும் on செய்து பேசிவிட்டு மீண்டும் அணைத்துவிடுவார்கள்.  இவர்களின் ரிங்க் டோனே இதுதானோ என்று எண்ணுமளவு எப்பொழுது ஃபோன் செய்தாலும் ' இந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்ற செய்திதான் வரும்!!!

              இன்னும் சிலரோ செல்ஃபோன் பயன்படுத்தி இந்த சமூகத்தையே வருத்தும் 'கிருமி'யாக இருப்பர்.  ஃபோனைக் கண்டபடி ஃபோட்டோ எடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்தி அதையும் இணையத்தில் இட்டு பிறரை, குறிப்பாகப் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்.  அதுவும் இந்த அவலம் கல்லூரியில் நடக்கிறது என்று அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.  செல்போனைக் கல்லூரியில் தடை செய்ததும் ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றியது.

             ஒரு நிமிஷம் இருங்க! என் செல்ஃபோன் ஒலிக்கிறது; பேசிவிட்டு வருகிறேன். " ஹலோ, யாரு?  என்ன பேசறது கேக்கலையா? ... இப்ப கேக்குதா? இப்ப கேக்குதாஇப்பவாவது கேக்குதா? ... என்ன, ஹியரிங்க் எய்ட் ரிப்பேர் பண்ணனுமா?  அட, ராங்க் நம்பருங்க!!!..."




(thanks to shutterstock.com for the picture)

Monday 9 May 2011

'விஜய்'யீ பவ


              இந்தியாவில் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.  நூற்றுக் கணக்கில் வரும் சேனல்களில் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.  அட, எதிலும் ஒன்றும் பார்க்க சகிக்காவிட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தாலே பதினைந்து நிமிடம் கழிந்துவிடுமே!.  இங்கு எங்களுக்குக் கேபிள்வாலா புண்ணியத்தில் இரண்டே இரண்டு தமிழ் சேன்ல்கள்தான் வரும்.  அதிலும் ஜெயா டிவி 'வரும் ஆனால் வராது'  ரகம்.  ஒன்று சத்தமே வராது; இல்லை ஒரே சத்தமாக (back ground noise) இருக்கும்.  அதனால் கிடைக்கும் ஒரே சேனல் சன் தான்.  அதிலும் பாதி நேரம் சீரியல்கள்தான் லைன் கட்டி வரும்.  எனக்கு இந்தியும் பிடிக்'காத தூரம்' என்பதால் பெரும்பாலும் ND TV -யோ இல்லை CNN- ஓ தான் பார்க்க நேரிடும். அவர்களும் ஒசாமா, 2ஜி என்று எதுவும் சிக்காத பெரும்பாலான நாட்களில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

            ஒரு மாதமாகத்தான் 'பெஹலா நெட்வொர்க்கின் உதவியால் பாலைவனச் சோலை போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது.  பத்திரிகைகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை சிலாகித்து எழுதியிருப்பதைப் படித்ததில் விஜய் டிவி பார்க்க ஆர்வமாக இருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரும்பாலான நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் நேரம் தெரியாததால் ( இந்திய நேரப்படி இங்கு ஒளிபரப்பு கிடையாது) பார்க்க முடியாமல் இருந்து ஒரு வழியாக அந்த time difference-ஐக் கண்டு பிடித்து இரு வாரங்களாகத்தான் நிகழ்ச்சிகளை ரெகுலராகப் பார்க்கிறேன். ஜுனியர் சூப்பர் சிங்கரில் 'நாக்க முக்க' பாடி கலக்கிய சிறுமிக்குத் திருஷ்டி சுத்திப் போடவேண்டும்.  சத்திய ராஜின் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியும் ('minute to win' நிகழிச்சியின் காப்பியாக இருந்த போதும்) ரசிக்க முடிகிறது. சூப்பர் சிங்கர் மற்றும் அது இது எது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவரின் நகைச்சுவை அந்த நிகழ்ச்சிகளுக்குப் பெரும் பலம் என்று நினைக்கிறேன்.

             இவை எல்லாவற்றையும் விட ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நடத்தும் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது.  ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சியை இந்தியா வரும்போது பார்த்திருக்கிறேன்.  அவர் ஆங்கிலமே கலக்காமல் தமிழ் பேசும் அழகை வியந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ( atleast போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்திலாவது)தமிழ் படிக்க முடியாத, பிடிக்காத இன்றைய தலைமுறையினரிடம் தமிழார்வத்தை உண்டு செய்தால் மகிழ்ச்சியே.
       
           அதிலும் ரேவதிப் பிரியா, காவ்யா அவர்கள் பங்கு கொண்ட இந்த episode மிகவும் அருமை.  விடை கண்டு பிடிப்பவரா அல்லது அதற்கான க்ளூ கொடுப்பவரா யார் அதிக புத்திசாலி என்று வியக்கும் வண்ணம் இருவரும் அருமையாக செய்திருக்கிறார்கள்.  'பிரயத்தனம்' என்ற சொல்லுக்குப் 'ப்ரும்ம' என்ற க்ளூ கொடுத்து வெற்றி பெரும் வரை ஆட்டம் 20/20 கிரிக்கெட் பந்தயம் போல் விறுவிறுப்பாக இருந்தது.  கடைசியில் 'சிறந்த தகுதிகள் இருந்தும் திரையுலகில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற முடியாத தனக்குத் தாய் மொழி பெற்றுக் கொடுத்த வெற்றி இது என்று அவர் (காவ்யா) குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. (இந்த நிகழ்ச்சியைப் பார்க்க கீழே  உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.)


.http://123tamiltv.com/vijay-tv-oru-vaarthai-oru-latcham-23-04-11.html


இவர்களைத் தொடர்ந்து விளையாடிய வடிவுக்கரசியும் வியக்கும் அளவு சிறப்பாக ஆடினார்.

 தமிழ் சொற்களுக்குத் தமிழிலேயே குறிப்புகள் கொடுத்து கண்டுபிடிக்க வைப்பது ஒரு சுவையான சவாலாகத்தான் இருக்கிறது.

Tuesday 12 April 2011

சென்னைக் கதம்பம்


             என் மகளின் பள்ளி விடுமுறையை ஒட்டி சென்னைக்கு ஒரு விசிட் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது.  இரண்டு கல்யாணங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வேறு.  இப்பொழுதெல்லாம் கல்யாணம் ஒரு திருவிழா போல் நடக்கிறது.  வெஜிடபிள் கார்விங்க் என்று காய்கறியில் பிள்ளையார், கிருஷ்ணர் முதல்  பெங்குவின், பூக்கள் என்று கலக்குகிறார்கள்.  அதுபோக சின்னப் பசங்களுக்குக் குச்சிமிட்டாய், பஞ்சுமிட்டாய் கடை வேறு.  சில திருமணங்களில் மெஹந்தி மற்றும் தலையலங்காரக் கடைகளும் உண்டாம்.  எல்லாம் காண்டிராக்டர்களின் பிஸினஸ் டெக்னிக்தான்.

            திருமணம் என்றவுடன் தங்கம் , வெள்ளி விலை நினைவுக்கு வருகிறது.  ஒரு கையகல சின்ன வெள்ளித்தட்டு விலை  நான்காயிரமாகிறது.  டி நகர் தங்க மாளிகையில் கல்யாண சீர்வரிசை என்று வெள்ளியில் பெரிய தட்டு, பன்னீர் சொம்பு, சொம்பு போன்றவற்றை ஒரு கண்ணாடி பீரோவில் வைத்திருக்கிறார்கள். விலைவாசி ஏறும் போக்கைப் பார்த்தால் இன்னும் சில காலத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தங்கமாளைகைக்குக் கூட்டிக் கொண்டு வந்து 'நல்லா பாத்துக்கங்க' என்று இந்த சீர்வரிசைகளைக் காட்டி கூட்டிக் கொண்டு போக வெண்டியதுதான் போலும். 

              தேர்தல் நேரத்தில் ப்ளாகெல்லாம் படிக்க முடியாமல் சென்னையில் மாட்டிக் கொண்டோமே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்தது.  ஆனால் சென்னையில் call taxi டிரைவர்களிடம் என் கணவர் உரையாடிக் கொண்டு வந்தபோது அவர்களின் அரசியல் அலசல் ஆச்சர்யமாக இருந்தது. கால் டாக்சி ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று சாதாரண குடிமக்கள் கூட ஊழல், விலைவாசி உயர்வு, கூட்டணிக் கட்சிகளின் பலம் என்று அக்கு வேறு ஆணி வேறாக அலசுவதைக் கேட்கும்போது இந்தத் தேர்தலில் ஒரு நல்ல முடிவை மக்கள் ஆராய்ந்து எடுப்பார்கள் என்று தோன்றியது.  ஆனால் பாவம் அவர்களுக்கு ஒரு நல்ல மாறுதலை அளிக்கும் தலைமை இல்லையோ என்ற வருத்தம் தோன்றியது. தனியார் தொலைக்காட்சிகள் அழுகை சீரியலுக்குத்தான் லாயக்கு என்ற என் எண்ணம் மாறியது.  மக்களின் இந்தப் பரவலான அரசியல் அறிவுக்குத் தனியார் தொலைக்காட்சிகள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ப்ளாக் படிக்கும் மற்றும் எழுதும் மக்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: கட்டாயமாக உங்கள் ஓட்டைப் போடுங்கள். இத்தனை அரசியல் ஆர்வம் மற்றும் முதிர்ச்சியுடன் இருக்கும் அந்தப் பாமரர்களின் கனவு பலிக்க நீங்கள் செய்யக் கூடிய சின்ன விஷயம் உங்கள் ஓட்டைக் கட்டாயமாகப் போடுவதுதான்.

               அதே போல் என்னை வியப்பில் ஆழ்த்தியது உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் நம் மக்கள் காட்டிய ஆர்வம். எனக்குக் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கிடையாது.  கல்லூரிப் பருவத்துடன் கிரிக்கெட்டிற்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தன்று என் சகோதரி குழந்தைகளுடன் பீச்சிற்குப் போனால் அங்கு கூட்டமே இல்லை.  நல்லதாப் போச்சு என்று குழந்தைகள் ராட்டினம் மற்றும் இதர விளையாட்டுகளை ஆசை தீர விளையாடினார்கள். வீட்டிற்கு வந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்தால் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று ஒவ்வொரு ஆறுக்கும், நாலுக்கும் எழுந்த சந்தோஷக் கூச்சல் கேட்டு வியப்பாக இருந்தது. இந்தியா உலகக் கோப்பை வென்றதற்கு தீபாவளியைவிட அதிகம் வெடித்தார்களோ என்று தோன்றியது.




Monday 7 March 2011

Do good anyway


The Paradoxical Commandments
by Dr. Kent M. Keith


People are illogical, unreasonable, and self-centered.
Love them anyway.

If you do good, people will accuse you of selfish ulterior motives.
Do good anyway.

If you are successful, you will win false friends and true enemies.
Succeed anyway.

The good you do today will be forgotten tomorrow.
Do good anyway.

Honesty and frankness make you vulnerable.
Be honest and frank anyway.

The biggest men and women with the biggest ideas can be shot down by the smallest men and women with the smallest minds.
Think big anyway.

People favor underdogs but follow only top dogs.
Fight for a few underdogs anyway.

What you spend years building may be destroyed overnight.
Build anyway.

People really need help but may attack you if you do help them.
Help people anyway.

Give the world the best you have and you'll get kicked in the teeth.
Give the world the best you have anyway.



என் மகள் படிக்கும் பள்ளியில் notice board-ல் இருந்த கவிதை.  படித்ததும் பிடித்ததால் உங்களுடன் பகிர நினைத்தேன். (இதற்கும் மகளிர் தினத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

Tuesday 1 March 2011

கதம்பம்


          

              LK  மற்றும் RVS அவர்களின் வலைப்பூக்களில் தங்கள் பெயர்காரணம் பற்றி படித்ததும் எனக்கும் அது குறித்து எழுதத் தோன்றியது. பெயர் என்றால் உண்மையிலேயே 'பெத்த (பெரிய) பெயர்' எங்கள் குடும்பத்தில் பல பேருக்கு உண்டு. என் தாத்தாவின் பெயர் யஞ்யநாராயண ஐயர். 'black board-ல் இந்தப் பக்கம் ஆரம்பித்து அந்தப் பக்கம் வரை கையெடுக்காமல் எழுதுவேனாக்கும்'  என்று அவர் தன் பெயரைப் பற்றி பெருமையாகச் சொல்வார்.  தாத்தாவின் பெருமையைக் காப்பாற்ற பேத்தியான எனக்கும் நீளமான பெயர் -- 'கீதா சரஸ்வதி வெங்கட சுப்ரமணியன்'.

              கனடாவிலும் பின்னர் அரபு நாடுகளிலும் இந்தப் பெயரைப் படிக்க அவர்கள் படும் பாடும், பெயரைப் படித்து அதைப் படுத்தும் பாட்டையும் சொல்ல இந்தப் பதிவு போதாது.  நான் UBC-ல் வேலை செய்யும்போது யூனிவர்சிட்டி ஆஃபீசில் என்னை 'lady with the lo..ng name' என்றுதான் அடையாளம் சொல்லுவார்கள். எப்போதும் என் முழுப்பெயரைப் பேப்பரில் எழுதி அதைக் கையில் வைத்திருப்பேன்.  அவர்களுக்கு என் பெயரைச் சொல்லிக் கட்டுப்படியாகாதென்பதால் ரெடியாகக் கையிலிருக்கும் பேப்பரை எடுத்துக்காட்டி 'இந்தப் பெயருக்கு ஏதாவது மெசேஜ் இருக்கா' என்று கேட்டுவிடுவேன்.

             என் வீட்டில் என் பெயரைச் சுருக்கிக் 'கீது' என்று கூப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் வேலை செய்பவர் ஒருமுறை நான் எங்கே போயிருக்கிறேன் என்பதை 'கீது கீதாம்மா' (Geedhu keedha? என்று படிக்கவும்) என்று கேட்க இன்று வரையில் என் அண்ணன் என்னை அப்படிச் சொல்லிக் கடுப்பேத்துவான்.

              இப்படி நீட்டினாலும், வெட்டினாலும் (நகை)சுவை சேர்க்கும்  பெயர் என்னுடையது.  சமீபத்தில் என் பெயருக்குக் கிடைத்தது மற்றொரு ப(ம)ட்டம். என் மகள் படிக்கும் பள்ளியின் ஆண்டு மலரைப் படித்து என் மகள் சிரித்துக் கொண்டே 'அப்பா இதைப் பாரேன்" என்று என் கணவரிடம் காட்டினாள்.  இருவரும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கவே என்ன என்று கேட்டேன்.  அதில் ஒரு கவிதை எழுதிய மாணவியின் பெயர் கீது மட்டம்.  'எப்படி உன் திறமை கேரளாவரைக்கும் தெரிஞ்சிருக்கே' என்று என் கணவரும் மகளும் அன்று முழுவதும் என்னைக் கிண்டல் செய்தார்கள். 

              இப்படி கிண்டல் செய்தாலும் எனக்கு என் பெயர் பிடிக்கும். என்னை மறந்தாலும் யாரும் என் நீளமான  unique பெயரை மறக்கமாட்டார்கள். மேலும் இந்தப் பெயரில்தான் இமெயில் ஐடி தெரிவு செய்ய gitaven, gitasara, saraswat, g2etha என்று கூகிளும் யாஹூவும் மலைத்துப் போகுமளவு சாய்ஸ் கிடைக்குமே.

               பெயர்களைப் பற்றி எழுதும்போது என் மகளின் பள்ளி ஆசிரியையின் வேடிக்கையான பெயர் நினைவுக்கு வருகிறது.  அவர் பெயர் 'உப்புமா புரி'. முதலில் நம்ப மறுத்த நான் பள்ளி கையேட்டில் அவர் பெயரைப் பார்த்ததும் அன்று முழுதும் சிரித்தேன்.

               என் வீட்டில் உறவுமுறைப் பெயர் குழப்பமும் காமெடியாக இருக்கும்.  என் அம்மாவின் அம்மாவை (அதாவது பாட்டியை) நாங்கள் சித்தி என்றே அழைப்போம்.  அவரின் (அதாவது என் பாட்டியின்) அக்காவை நாங்கள் எல்லோரும் அக்கா என்றே அழைப்போம்.  ஒருமுறை என் சகோதரி என் அம்மா, பாட்டி (சித்தி) மற்றும் என் பாட்டியின் அக்கா (அக்கா) எல்லோருடனும் கோவில் சென்றிருக்கிறார்.  அங்கு அவரின் தோழியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கையில் இவர்களைத் தோழிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  'இது என் அம்மா. (பின் வயதான என் பாட்டியைக் காட்டி) இது என் சித்தி.  (பின் என் பாட்டியைவிட கிட்டத்தட்ட 10-12 வயது மூத்த அவரின் சகோதரியைக் காட்டி) இது எங்க அக்கா'  என்று அவள் சொன்னதைக் கேட்டு அந்தத் தோழிக்கு மயக்கம் வராத குறைதான்.

               குழப்பங்களைக் எழுதிக் குழம்பச் செய்வது என்று ஆனபின் மொழி வேறுபாட்டால் ஏற்பட்ட குழப்பங்களையும் எழுதிவிடுகிறேன்.  நான் வேலைக்குச் சென்றபோது எனக்கு ஆஃபீசிலிருந்து கார் அனுப்புவார்கள்.  நானும் என்னுடன் பணிபுரியும் நண்பரும் ஒன்றாகச் செல்வது வழக்கம். எங்கள் காரோட்டி ஒரு மலையாளி. ஒரு நாள் என்னுடன் பணிபுரியும்  நண்பர் வரவில்லை. அதையொட்டி எனக்கும் டிரைவருக்கும் நடந்த உரையாடல்.

நான்:  ஏன் அவர் இன்று வரவில்லை.
டிரைவர்: அவர் ராவிலே போயி.
நான்:  அது சரி, இப்ப ஏன் வரலே?
டிரைவர்: அதானே பறஞ்சது, ராவிலே போயி.

நான் உடனே இருவருக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில், " I understand that. why didn't he come now?' என்று கொஞ்சம் எரிச்சலோடு கேட்கவும் 'madam, he went early in the morning' என்று அவர் சொல்லவும்தான் மலையாளத்தில் ராவிலே என்றால் விடிகாலை என்று பொருள் என அறிந்தேன்.

              அது போல் கனடாவில் Quebec-ல் பெரும்பாலும் French பேசுவார்கள்.  அங்கு இருந்த சமயம் தினமும் காலையில் என்னைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தவாறே 'ca va?' என்று கேட்பார்கள்.  இதென்னடா காலங்கார்த்தால சாவா, சாவா என்கிறார்களே என்று எனக்கு சங்கடமாயிருக்கும்.  பின்னர்தான் அறிந்தேன் 'comment ca va?" (how are you) என்பதைத்தான் சுருக்கி 'ca va' என்று கேட்கிறார்கள் என்று.

              இந்த கதம்ப மாலைக்குச் செண்டாக நான் சிறுவர்மலரில் படித்து ரசித்த ஒரு ஜோக்:

ராமு: உன் அண்ணன் பாடுவானா?
சோமு: சுமாராப் பாடுவான்.
ராமு: (எப்பொழுதிலிருந்து அண்ணன் பாட்டு பாடுவான் என்ற பொருளில்) எப்பொழுதிலிருந்து?
ராமு: எப்பவுமே சுமாராதான் பாடுவான்.



Wednesday 23 February 2011

பொன்னாரம் பெரும்பாரம்


               


              சந்தியா இரயிலிலிருந்து இறங்கப் பெட்டி, பைகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.  நாத்தனார் மகளின் திருமணத்திற்குக் கும்பகோணம் போய்விட்டுக் குடும்பத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  அம்மா, அப்பா, பெண் என்று எல்லோரையும் எழுப்பி ரெடியாக இருக்கச் சொன்னாள்.  அவள் கணவன் மட்டும் நாளை மறு நாள் திரும்புகிறார்.  சந்தியாவின் மகளுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.  அந்த விசேஷம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதில் நினைத்தவாறே லக்கேஜெல்லாம் இறங்கும் வாசலுக்கருகில் கொண்டு வைத்து தானும் வாயிலுக்கருகே கம்பியைப் பிடித்தவாறு நின்று கொண்டாள்.

               அம்மா மெல்லிய குரலில் "நகையெல்லாம் பத்திரமா இருக்கா.  கைப் பையை ஒரு முறை செக் பண்ணிக்கோ" என்றார்.  நகைப் பையை கைப்பையில் வைத்தது நினைவிருந்தாலும் அம்மாவின் திருப்திக்காக ஒரு முறை அதை எடுத்துப் பார்த்து உள்ளே வைக்க எத்தனித்தாள்.  அப்போது திடீரன்று ட்ரெயின் நின்றதால் தடுமாறியதில் நகைப்பை கையிலிருந்து தூரத்தில் விழுந்தது.  உடனே பதறிப்போய் அம்மாவிடம் பையைக் கொடுத்துவிட்டு கீழே இறங்கினாள்.  "அம்மா, ட்ரெயின் போகத் தொடங்கினால் நீங்க போய் ஸ்டேஷனில் இருங்கோ.  நான் தேடி எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று அவள் சொல்லவும் ட்ரெயின் புறப்படவும் சரியாக இருந்தது.

               அதிகாலை வேளை. இருட்டு இன்னும் முற்றிலுமாக விலகவில்லை.  சூரியனே அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு கொஞ்சம் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் புதராக இருந்தது. இந்தப் பை எங்கே விழுந்ததோ தெரியவில்லை.  மகள் திருமணத்திற்காக வாங்கிய பெரும்பான்மை நகைகள் இந்தப் பையில்தான் இருந்தது.  அதை விட்டுவிட்டும் போக முடியாது. தன்னோடு வராதக் கணவனை மனதிற்குள் திட்டியவாறே புதர்களுக்குள் தேடலானாள்.  கடைசி நேரத்தில் டென்ஷன் படுத்திய அம்மாவிற்கும் மனதில் அர்ச்சனை நடந்தது. அவள் அம்மா கவலையுடன் இரெயிலிலிருந்து எட்டிப் பார்த்தவாறே செல்வது தெரிந்தது.  'பாவம் அம்மா, அவள் கவலை அவளுக்கு.  ட்ரெயினில் விட்டு விடப் போகிறோமே என்று எச்சரித்தார்.  நான்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்.  ஸ்டேஷன் வரப் போகிறதே என்று வாசலில் நின்றேன்.  இந்த பாழாப் போற டிரைவர் அப்பதானா சடன் ப்ரேக் போடணும்' என்று மனதில் நொந்தவாரே புதர்களின் பின்னால் போய்த் தேடலானாள். 'பிள்ளையாரப்பா, இந்தப் பை கிடைக்கணும்.  108 கொழக்கட்டை பண்றேன்.  காப்பாத்துப்பா' என்று வேண்டியவாறே தேடிக் கொண்டு போனாள்.

              'விடிகாலையில் ஸ்டேஷன்லயே ஆள் நடமாட்டம் கம்மி.  இவள் நடு வழியில் இறங்கிவிட்டாளே. நகை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.  என் பொண்ணு பத்திரமா வரணும்.  பிள்ளையாரப்பா, 108 கொழக்கைடை பண்றேன்.  காப்பாத்துப்பா' என்று சந்தியாவின் அம்மாவும் மனமுருக வேண்டிக் கொண்டாள். அதற்குள் ட்ரையின் ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டது.  முதலில் வயதால் தளர்ந்த தன் கணவரை இறக்கிவிட்டு பின் பேத்தியின் உதவியுடன் மற்ற சாமான்களை இறக்கிவைத்தாள் சந்தியாவின் அம்மா.  தான் போய் அம்மாவை அழைத்து வருவதாகச் சொன்ன பேத்தியைத் தடுத்து நிறுத்தி மகள் வரக்கூடிய வழியையே பார்த்த வண்ணம் பதைத்து நின்றாள் சந்தியாவின் அம்மா. 'வேகமாக நடந்தால் 1௦-15   நிமிடத்திற்குள் வந்துவிடலாம்.  உன் அம்மா நல்ல தைரியசாலி.  வந்துவிடுவாள்' என்று பேத்தியைச் சமாதானப்படுத்தினாள்.

             புதர்களுக்குள் பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்த சந்தியா கழுத்தில் ஏதோ குறுகுறுக்கவே திரும்பிப் பார்த்தாள்.  ஒரு ரௌடி அவள் தாலி சங்கிலியை எடுக்க முயன்று கொண்டிருந்தான்.  கண்மூடித் திறக்கு முன் அவன் மூக்கைப் பார்த்து குத்து விட்டு கீழே குனிந்து ரெயில்வே ட்ராக்கருகில் கிடந்த சரளைக் கற்களைச் சரமாரியாக அவன்மேல் வீசினாள்.  அதில் ஒன்று ரௌடியின் கண்ணைப் பதம் பார்க்கவே அவன் தடுமாறினான்.  அந்த வேகத்தில் அவனைக் கீழே தள்ளி மேலும் முகத்தில் மாறிமாறி குத்தினாள். எத்தனை வடிவேலு-கோவை சரளா காமெடி பார்த்திருப்பாள்!!. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பெரிய கல்லையும் அவன்மேல் தூக்கிப் போட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடத்தொடங்கினாள்.

                'அந்த நகைப் பை கிடைக்கலையே.  இந்த ரௌடி வேற வந்து படுத்திட்டான்.  அவன் எழுந்தால் என்ன செய்வானோ.  நகையாவது வேறு வாங்கிக்கலாம்.   போய் இரெயில்வே ஸ்டேஷன் போலீஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணலாம்.  அவாளோடு வந்து தேடிப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு.  நம்மை விட்டுப் போகாது" என்று பலவாறு எண்ணியவாறே தாலி செயினைக் கையில் இறுகப் பற்றியவாறு ஸ்டேஷன் நோக்கித் திரும்பிப் பார்க்காமல் ஓடினாள் சந்தியா.

                சந்தியா அடித்த அடியில் நரகத்திற்கும் பூமிக்குமாக ஷட்டில் செய்து கொண்டிருந்தான் அந்த ரௌடி.  கண்ணைத் திறக்க முடியவில்லை.  'சே! ஒரு செயினுக்கு இந்த அடி அடிக்குதே அந்தம்மா.  பெரிய ரௌடி பொம்பிளைதான்' என்று அவன் உள்மனது சொல்லிக்கொண்டிருந்தது.தலையில் வேறு பெரிய கல்லால் அடி விழுந்ததால் மயங்கிவிட்டான்.    மயங்கிய அவன் கைக்கு அருகில் இருந்த நகைப் பையிலிருந்த smiley face அவர்கள் இருவரையும் பார்த்து 'நகை'த்துக்கொண்டிருந்தது.

Tuesday 22 February 2011

நான் அவனில்லை


             அவனை நினைத்தாலே ஆத்திரமாக வருகிறது.  இன்று மட்டுமல்ல என் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனை நினைத்தாலே எனக்கு வருவது ஆத்திரம் மட்டுமே.  யார் அந்த அவன் என்று கேட்கிறீர்களா?  அந்தக் (நொந்த) கதையைச் சொல்கிறேன்.

              எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம்.  என் அப்பா, சித்தப்பா எல்லோரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.  நான் பிறந்து எட்டாவது மாதத்தில் மதன், என் சித்தப்பாவின் மகன் பிறந்தான்.  எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னரே அண்ணா ஆனதுடன் எதற்கெடுத்தாலும் தம்பிக்கு விட்டுக் கொடுக்கவும் பழக்கப்பட்டேன்.  அவன் உன்னைவிடச் சின்னவன்தானே, விட்டுக் கொடு என்று சொன்னவர்கள் நானே சின்னவன்தான் என்பதை மறந்தார்கள்.

              இது மட்டுமா? இரண்டு பேரும் ஒன்றாகவே பள்ளிக்குப் போகட்டும்; ஒருத்தருக்கு ஒருத்தர் துணை என்று இருவரையும் ஒரே பள்ளியில் ஒன்றாகச் சேர்த்தார்கள்.  அவன் படிப்பில் சுட்டி.  நானும் நன்றாகப் படிக்கும் ரகம்தான் என்றாலும் அவனை முந்தவேண்டும் என்று அதிக நேரம் படிக்க வேண்டியதாக இருந்தது.  பின்னே, என் தம்பி என்னைவிட அதிகம் மார்க் எடுத்தால் என் மதிப்பு என்னாவது? இப்படி எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து எனக்கு டென்ஷன் கொடுத்துக் கொண்டே இருப்பவனை நினைத்தால் ஆத்திரம் வராதா?

            பள்ளி, கல்லூரியில் அவனுடன் விருப்பமில்லாமல் ஒன்றாகப் படிக்க நேர்ந்தது.  மேல் படிப்பு முடிந்தவுடன் நான் பங்களூருவிலும் அவன் ஹைதராபாத்திலும் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை சேர்ந்தோம்.  இந்த ஐந்து வருடங்களாகத்தான் அவனைப் பார்க்காமல் நிம்மதியாக இருக்கிறேன்.

            பார்ப்பதற்கு நாங்கள் இருவரும் ஒரே ஜாடையில் இருப்போம்.  அவனுக்கு என்னைவிட கொஞ்சம் சப்பை மூக்கு; தாடை கொஞ்சம் வளைந்திருக்கும். மதன் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கிவிடுவான். என் அம்மா, அப்பா ஏன் இப்ப என் மனைவி கூட அவனுக்குத்தான் சப்போர்ட். "அவர் நல்லாத்தானே பழகறார்.  உங்கள் மனசில்தான் ஏதோ வீண் கோவம்" என்று என் மனைவிகூட அவனுக்குச் சான்றிதழ் கொடுக்கிறாள்.  எனக்கும் மதனுக்கும் ஒன்றாகவே திருமணம் ஆனாலும் அவனுக்கு இரு வருடங்கள் கழித்தே நான் குழந்தை பெற்றுக் கொண்டேன்.  பின்னே, நான் பெற்ற கஷ்டம் என் மகன் பட வேண்டாமே.  இப்பொழுது என் மகன்தான் குடும்பத்திற்கு இளையவன்.  அவன் யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டாமே.
    
             ஒரு நாள் என் மனைவி, மகனுடன் பிருந்தாவன் கார்டன்ஸ் பார்க்கப் போயிருந்தேன்.  என் மகனின் கைபிடித்து அழைத்துச் செல்லும்போது  திடீரென்று கால் தடுக்கிக் கீழே விழுந்தேன். மிக வேகமாக விழுந்ததால் முகத்திலிருந்து ரத்தம் கொட்ட அங்கேயே மயக்கமானேன்.  விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் இருக்கேன்.  என் மனைவி, அப்பா, அம்மா எல்லோரும் என்னைச் சுற்றி கவலையுடன் அமர்ந்திருக்கிறார்கள்.  என்னால் வாயை அசைக்க முடியவில்லை. என் அப்பா "இங்க பாரு.  உனக்கு ஒண்ணும் இல்ல. கவலைப் படாதே.  விழுந்த வேகத்தில் உன் கீழ் பற்கள் இரண்டு மேல் தாடையில் குத்தி உள்ளே சென்று விட்டதால் அதை எடுத்து, பின் கிழிந்த தாடையைப் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டுமாம்.  இரண்டு வாரத்தில் எல்லாம் குணமாகிவிடுமாம். கொஞ்சம் பொறுத்துக் கொள்"  என்றார்.  ப்ளாஸ்டிக் சர்ஜரி முடிந்து முதலில் வாயை அசைக்கவே முடியவில்லை.  கொஞ்ச நாட்களில் முன்னேற்றம் தெரிந்தது.  மெதுவாக ரெகுலர் உணவு கடித்து சாப்பிட முடிந்ததும்தான் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

            வீட்டிற்கு வந்து முதன்முறையாக என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து 'வீல்' என்று அலறினேன்.  அழுகை அழுகையாக வந்தது.  பின்ன என்னங்க, நான் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தேனோ, அவன் முகம் போல் என் முகம் மாறியிருந்தது.

Sunday 20 February 2011

தலைவன்


             சமீபத்தில் சன் டிவியில் டாக்டர் கலாம் அவர்களின் பேட்டி (மறு ஒளிபரப்பு) பார்த்தேன்.  மனதைத் தொடும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை அதில் அவர் நினைவு கூர்ந்திருந்தார். அதிலிருந்து சில துளிகள்:

            மகாத்மா காந்தி அவர்கள் டில்லி பிர்லா மந்திர் பிரார்த்தனை கூட்டத்திற்குச் செல்லும்போது வாசலில் நின்று மக்களுக்காக நிதி திரட்டுவாராம்.  அந்த நிதியை அன்றே வங்கியில் சேர்த்து மக்கள் நலனுக்காக அந்த நிதியைப் பயன்படுத்துவாராம்.  ஒருமுறை அப்படி சேகரித்த நிதியை வங்கியில் செலுத்தும் பொறுப்பை ஒருவரிடம் கொடுத்தாராம்.  அப்படி வங்கியில் செலுத்திய கணக்கில் காலணா குறைந்ததாம்.  மக்கள் சேவைக்காகச் சேர்த்த நிதியில் காலணா குறைந்ததற்காக மனம் வருந்தி மகாத்மா உண்ணாவிரதம் இருந்தாராம்.  நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கு!!

(ராஜாக்களும் கல்மாடிகளும் இருக்கும் இதே மண்ணில் இப்படி ஒரு தலைவர் இருந்திருக்கிறார்!!)

             சீனியர் புஷ்ஷின் இந்தியா வருகைக்கு முன் அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு சோதனைக்கு வந்தவர்கள் கலாம் அவர்களுக்கு,  " அமெரிக்க அதிபர் ராஷ்ட்டிரபதி பவனைப் பார்க்க வருகிறார்.  நீங்கள் அங்குள்ள கார்பெட்டை மாற்றி விடுங்கள்.  மேலும் அங்கு அதிபரின் பாதுகாப்பிற்காக எங்கள் பாதுகாப்பாளர்கள் ராஷ்ட்டிரபதிபவனின் முழுப் பாதுகாப்பையும் ஏற்பார்கள்' என்று ஆலோசனை சொன்னார்களாம். அதற்கு டாக்டர் அவர்கள் " ராஷ்ட்டிரபதி பவனின் இந்த கார்பெட் இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்கள் பலரின் பாதம் பட்டது. அதை மாற்றும் எண்ணமே இல்லை.  மேலும் எங்கள் நாட்டிற்கு வருகை தரும் வெளி நாட்டுத் தலைவரைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உண்டு. அதனால் எங்கள் காவலர்களே பாதுகாப்பு வேலையைச் செய்வார்கள்" என்று கண்ணியமாக ஆனாலும் கண்டிப்பாக அதை மறுத்தாராம்.

(இந்தியன்  என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!)







.

Tuesday 8 February 2011

'அரசி'யல்


மாயாவதிக்கு காலணி துடைக்கும் பாக்கியம்!!!



மாயாவதியின் காலிலே விழும் புண்ணியம்!!


ஜே ஜே!!