Wednesday, 21 November 2012

திண்ணைப் பேச்சு


           வாங்க, வாங்க, உட்காருங்க!.  ரொம்ப நாளாச்சு திண்ணைப் பேச்சு பேசி. தீபாவளியெல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? நாங்களும் இங்கு குவைத்தில் வெடியெல்லாம் வெடித்துக் கொண்டாடினோம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னால் குவைத் கவர்மெண்டே ஒரு மெகா வான வேடிக்கை நடத்தியது. பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. என்னது, ஒபாமா தீபாவளி கொண்டாடியது போல் இங்கும் கொண்டாடினாங்களான்னு கேட்கிறீங்களா? இல்ல, இல்ல, இந்த வான வேடிக்கை குவைத்தின் constitution-க்கான 50-ம் ஆண்டு விழாவிற்காக. ஒரு மணி நேரம் தொடர்ந்து வெடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது இந்த விழா. மேலும் அதிகப் புகைப்படங்களையும், காணொளியையும் இங்குபார்க்கலாம்.

            தீபாவளிக்கு இன்னொரு விசேஷம்: சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் விண்வெளியிலிருந்து நம் மக்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்கிறார். (அவரென்ன அமிஞ்சிக்கரைக்குப் போவது போல் அடிக்கடி விண்வெளிக்குப் போய் வருகிறார்!!!). அவர் விண்கலத்தில் தன் அறையில் ஓம் என்று ஒட்டியிருந்ததையும், அவரின் தந்தை அளித்த உபநிஷத்துக்களை அங்கு படித்தார் என்றும் அறிந்து ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

             இரண்டு வாரங்களுக்கு முன் என் மகளுக்காக To the Arctic என்ற 3D டாகுமெண்டரி படம் பார்த்தோம்.

                    

              உண்மையிலேயே என்னையும் அந்தப் படம் கவர்ந்தது. வெள்ளை வெளேரென்ற பனிமலையில் இரு குட்டிகளைக் காக்க அந்தத் தாய் polar bear படும் பாட்டைப் பார்த்தால் பாவமாக இருக்கு. இந்தக் குட்டிகளுக்கு வில்லன் யாருன்னு பார்த்தால் இன்னொரு male polar bear தான். சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லைன்னு இந்த குட்டி polar bear- ஐச் சாப்பிடத் துரத்துகிறது. அதனிடமிருந்து காப்பாற்றப் போராடி, முடியாது என்று தெரிந்தவுடன், "முதல்ல என்னைக் கொல்லுடா தைரியமிருந்தா...!!!" என்று உருமி சவால்விட்டு அந்த male polar bear-ஐ அரண்டு ஓட வைக்கும்போது  தாய் போலார் பியரின் தாய்மை உணர்வு 'அட' போட வைக்கிறது. அண்டம் வெப்பமயமாக்கலால் பனி உருகி, நீண்ட கோடைக்காலத்தால் ஆர்டிக்கில் வாழும் உயிரினங்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது நாம் என்ன ஒரு சுய நலத்துடன் கார், a/c என்று பயன்படுத்தி வெப்ப மயமாக்கலை அதிகப் படுத்துகிறோமே என்று வெட்கமாக இருந்தது. வெடி வெடிப்பது, எரிபொருளை தேவையில்லாமல் பயன்படுத்துவது எல்லாம் குறைத்து Reduce, Reuse, Recycle என்ற 3R கொள்கையை முடிந்தவரை பின்பற்றுவோமாக!!!.

          சென்ற வாரம் குவைத்தில் வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் காயத்ரி வீணை இசையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜயலக்ஷ்மி அவர்கள் கண் பார்வையற்றவர். ஆனால் அவரின் வீணை இசையைக் கேட்டால் எப்படி இப்படி வாசிக்க முடிகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.


 இந்த மார்கழி சீசனில் இவரின் கச்சேரி இருந்தால் கட்டாயம் போய் கேளுங்கள்.

           என் மகள் ஃப்ரென்ச் பாடம் படிக்கையில் சமஸ்கிருதத்துக்கும் ஃப்ரென்ச்சுக்கும் எண்ணிக்கையில் (ordinal numbers) இருக்கும் ஒற்றுமையை கவனித்து வியந்தேன்.
english      french                          sanskrit
seventh- septieme (செப்டிமி) - சப்தமி
eighth -  huitieme (விட்டிமி) - அஷ்டமி
ninth -   neuvueme (நுவேமி) - நவமி
tenth -   dixieme (டிக்சிமி) - தசமி
சரிங்க, அடிக்கடி வாங்க. இன்னொரு நாள் இந்த மாதிரி பேசலாம்..