Wednesday 21 November 2012

திண்ணைப் பேச்சு


           வாங்க, வாங்க, உட்காருங்க!.  ரொம்ப நாளாச்சு திண்ணைப் பேச்சு பேசி. தீபாவளியெல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? நாங்களும் இங்கு குவைத்தில் வெடியெல்லாம் வெடித்துக் கொண்டாடினோம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னால் குவைத் கவர்மெண்டே ஒரு மெகா வான வேடிக்கை நடத்தியது. பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. என்னது, ஒபாமா தீபாவளி கொண்டாடியது போல் இங்கும் கொண்டாடினாங்களான்னு கேட்கிறீங்களா? இல்ல, இல்ல, இந்த வான வேடிக்கை குவைத்தின் constitution-க்கான 50-ம் ஆண்டு விழாவிற்காக. ஒரு மணி நேரம் தொடர்ந்து வெடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது இந்த விழா.



 மேலும் அதிகப் புகைப்படங்களையும், காணொளியையும் இங்குபார்க்கலாம்.

            தீபாவளிக்கு இன்னொரு விசேஷம்: சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் விண்வெளியிலிருந்து நம் மக்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்கிறார். (அவரென்ன அமிஞ்சிக்கரைக்குப் போவது போல் அடிக்கடி விண்வெளிக்குப் போய் வருகிறார்!!!). அவர் விண்கலத்தில் தன் அறையில் ஓம் என்று ஒட்டியிருந்ததையும், அவரின் தந்தை அளித்த உபநிஷத்துக்களை அங்கு படித்தார் என்றும் அறிந்து ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

             இரண்டு வாரங்களுக்கு முன் என் மகளுக்காக To the Arctic என்ற 3D டாகுமெண்டரி படம் பார்த்தோம்.

                    

              உண்மையிலேயே என்னையும் அந்தப் படம் கவர்ந்தது. வெள்ளை வெளேரென்ற பனிமலையில் இரு குட்டிகளைக் காக்க அந்தத் தாய் polar bear படும் பாட்டைப் பார்த்தால் பாவமாக இருக்கு. இந்தக் குட்டிகளுக்கு வில்லன் யாருன்னு பார்த்தால் இன்னொரு male polar bear தான். சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லைன்னு இந்த குட்டி polar bear- ஐச் சாப்பிடத் துரத்துகிறது. அதனிடமிருந்து காப்பாற்றப் போராடி, முடியாது என்று தெரிந்தவுடன், "முதல்ல என்னைக் கொல்லுடா தைரியமிருந்தா...!!!" என்று உருமி சவால்விட்டு அந்த male polar bear-ஐ அரண்டு ஓட வைக்கும்போது  தாய் போலார் பியரின் தாய்மை உணர்வு 'அட' போட வைக்கிறது. அண்டம் வெப்பமயமாக்கலால் பனி உருகி, நீண்ட கோடைக்காலத்தால் ஆர்டிக்கில் வாழும் உயிரினங்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது நாம் என்ன ஒரு சுய நலத்துடன் கார், a/c என்று பயன்படுத்தி வெப்ப மயமாக்கலை அதிகப் படுத்துகிறோமே என்று வெட்கமாக இருந்தது. வெடி வெடிப்பது, எரிபொருளை தேவையில்லாமல் பயன்படுத்துவது எல்லாம் குறைத்து Reduce, Reuse, Recycle என்ற 3R கொள்கையை முடிந்தவரை பின்பற்றுவோமாக!!!.

          சென்ற வாரம் குவைத்தில் வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் காயத்ரி வீணை இசையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜயலக்ஷ்மி அவர்கள் கண் பார்வையற்றவர். ஆனால் அவரின் வீணை இசையைக் கேட்டால் எப்படி இப்படி வாசிக்க முடிகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.


 இந்த மார்கழி சீசனில் இவரின் கச்சேரி இருந்தால் கட்டாயம் போய் கேளுங்கள்.

           என் மகள் ஃப்ரென்ச் பாடம் படிக்கையில் சமஸ்கிருதத்துக்கும் ஃப்ரென்ச்சுக்கும் எண்ணிக்கையில் (ordinal numbers) இருக்கும் ஒற்றுமையை கவனித்து வியந்தேன்.
english      french                          sanskrit
seventh- septieme (செப்டிமி) - சப்தமி
eighth -  huitieme (விட்டிமி) - அஷ்டமி
ninth -   neuvueme (நுவேமி) - நவமி
tenth -   dixieme (டிக்சிமி) - தசமி
சரிங்க, அடிக்கடி வாங்க. இன்னொரு நாள் இந்த மாதிரி பேசலாம்..

Monday 17 September 2012

ஆறில் சனி

         ஒரு குடும்பத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் என்று மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.

        ஆறு மனமே ஆறு!! இதனால் எத்தனை நன்மைகளிருக்கின்றன தெரியுமா? தாய்மார்களே, சமையல் எரிவாயுவைச் சேமிக்கும் பொருட்டு வெகு நேரம் கொதிக்க வைப்பது, வெகு நேரம் வறுப்பது எல்லாம் கட். அதனால் உங்களுக்கு டிவி சீரியல் பார்க்க அதிக நேரம் கிடைக்குமே!!.

        ஆறு சிலிண்டர்தான் என்றால் மீதி நாளுக்கு எப்படி சமைப்பது? சமைக்காமல் அப்படியே காய் கனிகளைச் சாப்பிட வேண்டியதுதான்!!. இதனால் எவ்வளவு நன்மைகள் -- உடல் எடை குறையும்; சர்க்கரை வியாதி, cholesterol எல்லாம் கட்டுக்கு வரும்; நேரம் மிச்சமாகும்.

         வயசானவங்களுக்கு இப்படி என்றால் இளைய தலைமுறைக்கு இன்னும் பல லாபங்கள். மனதிற்குப் பிடித்ததை ஹோட்டலில் சாப்பிடலாம்.  யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

        அரசாங்கத்துக்கும் எவ்வளவு நன்மை!!  இப்படி ஹோட்டலில் சாப்பிடுவது அதிகமானால் hotel industry வளரும்;  நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். ஹோட்டல் சாப்பாட்டில் வயறு கோளாறு வந்தால் ஹாஸ்பிட்டல் போவார்கள். மருத்துவத் துறையும் வளரும்!!!! 

       சமையல் கேசும் அதிகம் கிடைக்காது;  induction  அடுப்பு வேலை செய்ய மின்சாரமும் தொடர்ந்து கிடைக்காது என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?  லங்கணம் பரம ஔஷதம் என்று பாதி நாள் சாப்பிடாமல் இருக்க வேண்டியதுதான். இதனால் செலவும் கம்மி!! இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று ஒபாமா உட்பட பல பேரிடம் ஏச்சு வாங்க வேண்டாம்.

         அதை எல்லாம் விட இந்த கேஸ் சிலிண்டர் கொண்டுதரும் தொழிலாள வர்க்கத்துக்குதான் எத்தனை மவுசு வரும்!!.  கற்பனை பண்ணிப் பாருங்கள்.

தலை தீபாவளிக்குச் ஜவுளி எடுத்து வந்த கணவனிடம் மனைவி கேட்கிறார்:
மனைவி: என்னங்க.. மாப்பிள்ளைக்கு இவ்வளவு பணத்தில் வான்ஹுசைன் சட்டை வாங்கியிருகீங்களே, ரொம்ப சந்தோஷங்க!!
கணவன்: அடியே, அது கேஸ் சிலிண்டர்காரருக்கு.  அதைப் பத்திரமா வை.  மாப்பிள்ளைக்கு முறுக்கே அவர் தயவில்தான் வரும் தெரிஞ்சிக்கோ!

கிராமத்தில் புதியதாக வந்தவர்: அது யாருங்க, MP யா இல்ல  MLA வா? எல்லாரும் வணக்கம் சொல்றாங்க?
நண்பர்: அதுதான் எங்க கிராமத்தில் கேஸ் சிலிண்டர் போடறவரு. நீங்களும் ஒரு வணக்கம் வைங்க, உங்களுக்கு உதவும்.

        அது சரி அது என்ன கணக்கு, ஐந்து, பத்து இல்லை, ஒரு டஜன் என்று round fingure ஆக இல்லாமல் ஆறு சிலிண்டர்கள் என்று முடிவு செஞ்சாங்க? ஏன்னா, எட்டில் சனி, ஏழரை சனி எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம், இப்ப இந்தியர்களுக்கு ஆறில் சனி!!! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் 6-8 மணி நேரம் வரை மின் தட்டுப் பாடு அமலுக்கு வந்தது. இப்போது எரிவாயு தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் கேஸ் சிலிண்டருக்கு ரேஷன் வந்து விட்டது. இனிமேல் எந்த பிரச்சினையையும் சரி செய்ய யோசிக்காமல் குடிமக்களின் தேவைகளை அடக்கி சர்வாதிகாரமாக ஆளத் தயங்க மாட்டார்கள் போலிருக்கிறது. இந்திய மக்களை ஆறில் சனி பிடித்திருப்பதால் இனி இப்படியும் சட்டங்கள் வரலாம்:

1.பல இடங்களில் பருவ மழை பொய்த்து இருப்பதால் மக்களே ஒரு நாளுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆறு லிட்டர் தண்ணி தான் வழங்கப்படும்.
2.விளைச்சல் குறைவால் மக்களே, ஒரு குடும்பத்துக்கு வருடத்திற்கு 6 Kg அரிசிதான் வழங்கப்படும்.
3.ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் மின்சாரம் (க்கும், அதுதான் ஏற்கனவே இருக்கே!!!).
4.கடுப்பில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் சார்பாக ஒரு சட்டம்: ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம்தான் டிவி சீரியல் பார்க்கலாம்.
5.வெறுப்பிலிருக்கும் மக்கள் சார்பாக ஒரு சட்டம்: ஆறு கோடிக்கு மேல் எந்த அரசியல்வாதியும் ஊழல் செய்யக் கூடாது. ஆறு வருஷத்துக்கு மேல் எந்த அரசியல்வாதியும் அரசியலில் இருக்கக்கூடாது.

Sunday 26 August 2012

நீல் நிலா

“That’s one small step for man, one giant leap for mankind,”

Hats off to you.

Friday 20 April 2012

தீப்பொறி


            தாயம்மாளுக்கு உள்ளம் கொள்ளாச் சந்தோஷம்.  இன்று அவள் மகள் மீனா சிபிஜி பள்ளிக்குப் போகப் போகிறாள்.  பணக்காரக் குழந்தைகள் போகும் பள்ளிக்குத் தன் மகளும் போகும் மகிழ்ச்சி அவளுக்கு.  "ரிக்ஷா ரெடியா இருக்கா? பிள்ளையைக் கொண்டுபோய்விட்டு வரலாம் வா.  நல்ல சொக்காயாப் போடு" என்று கணவனுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தாள்.  "அய்ய!! இந்தா இருக்கும் கார்பொரேஷன் ஸ்கூல்ல படிச்சா ஆவாதாக்கும். அந்த ஸ்கூலைப் பார்த்தாலே பயம்மா இருக்குப் புள்ள.. நம்ம கொயந்த எப்படி சமாளிக்குமோ தெர்லயே...." என்ற கணவனை அடக்கி "த, சும்மா இரு. எம் புள்ள நல்லா படிக்கணும்.  இந்த ஜில்லாவுக்கே கலெக்டரா வரணும்.  செய்வியா கண்ணு?.." என்று மகளைக் கேட்டாள்.  "அம்மா, நீ கவலைப் படாதே.  எனக்குக் கிடைச்ச இந்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திப்பேன்மா. எனக்கு இந்த ஸ்கூலைப் பற்றி பயம் இல்லை.  என்னோட ஸ்கூலில் நான்தான் எல்லாப் பாடங்களிலும் முதல் ரேங்க் வாங்குவேன். இங்கேயும் நல்லா படிப்பேன்மா" என்று உறுதியுடன் கூறிய மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்.

           வேதாவுக்கு ஒரே பரபரப்பு.  கோடை விடுமுறை முடிந்து இன்று ஸ்கூல் திறக்கிறது. மகள் நிவேதாவுக்குப் புதுச் சீருடை, புத்தகப் பை, ஷூ என்று பார்த்து பார்த்து வாங்கியிருந்தாள்.  லிப் ஸ்டிக்கைப் போட்ட வண்ணம் ", நிவேதா எல்லாம் பேக்கில் வைச்சுண்டியா?அப்பாவைக் காரை ரெடியா வைச்சிருக்க சொல்லு. இன்னைக்கு டிராஃபிக் அதிகம் இருக்கும்.  சீக்கிரமே கிளம்பனும்" என்று மகளை அவசரப்படுத்தினாள். "அம்மா, நான் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். டைம் இருக்கும்மா" என்று நிதானமாகக் கிளம்பும் மகளைப் பெருமையுடன் பார்த்தான் நியந்த்.

         சிபிஜி பள்ளியின் வாசலில் கார்களும் வேன்களும் வந்த வண்ணம் இருந்தன.  வாட்ச்மேன் திறமையாகப் போக்குவரத்தைச் சரி செய்துகொண்டிருந்தார். ரிக்ஷாவில் வந்து இறங்கிய தாயம்மாள் மகள் மீனாவுடன் பள்ளி தலமையாசிரியைச் சென்று பார்த்தாள்.  அவர் 3பி ஆசிரியை அழைத்து மீனாவை அறிமுகப்படுத்தி வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். 

         வழியில் வேதாவைப் பார்த்த தாயம்மா, " அம்மா. நல்லா இருக்கீங்களா?" என்று விசாரித்தாள்.  வேதாவுக்குத் தன் வீட்டில் வேலை செய்த தாயம்மாளை அங்கு பார்த்து வியப்பு.  "அம்மா, எம்புள்ளைய இந்த வருஷத்திலேந்து இந்த ஸ்கூல சேர்த்திருக்கேம்மா மூணாம்பு படிக்குது." என்று பெருமையும் கொஞ்சம் கவலையுமாக.  "அம்மா, கவுர்மெண்ட் செலவு செய்யுறதால, ஏதோ ஆசையில் சேர்த்துட்டம்மா. இங்க வந்தவுடன் பயம்மா இருக்கும்மா. எம்புள்ள புழைச்சுக்கும் இல்லம்மா." என்றாள். வேதா தாயம்மாவைத் தட்டிக் கொடுத்து, " கவலைப்படாதே. என் மகளும் இங்கு 3-வது படிக்கிறாள். ஏதாவது வேணும்னா கேளு" என்றாள். வகுப்பிற்கு வந்து தாயம்மாளையும் மீனாவையும் நிவேதாவிற்கு அறிமுகப்படுத்தினாள்.  'வேலைக்காரியின் மகளா', 'போய் பேசினால் மத்தவங்க என்ன நினைப்பாங்களோ' 'பேசாமல் ஒதுக்கினால் தப்பா நினைப்பாங்களோ' என்று மற்ற மாணவிகள் தயங்கி நிற்க, நிவேதா மீனாவின் கையைப் பிடித்து "மீனா, இன்னியிலிருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ். என் பக்கத்துலேயே உட்கார்ந்துக்க. என்ன வேணும்னாலும் கேளு" என்று அருகில் அமர்த்தினாள்.  திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் மருண்டிருந்த மீனாவிற்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. 

        நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சிபிஜி பள்ளி தலமையாசிரியர் கூறுகிறார்: "இந்த வருடம் நல்லாசிரியர் விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.  இதை என் மாணவிகள் நிவேதா மற்றும் மீனாவுடன் பெற்றுக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.  Right to education விதிப்படி எங்கள் பள்ளியில் ஏழைக்குழந்தைகளை சேர்க்க நான் இசைந்த போது ஒருசில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து பெரும் எதிர்ப்பு இருந்தது. எப்படி சமாளிப்பது என்று முதல் நாள் டென்ஷனோடு நாங்களிருந்தபோது, நிவேதா இயல்பாக மீனாவை ஃப்ரெண்டாக ஏற்றுக்கொண்டாள்.  மேலும் தினமும் லன்ச் டயத்தில் மீனாவிற்குப் பாடம் சொல்லித்தரத் தொடங்கினாள். அவளைப் பார்த்து மற்ற மாணவிகளும் மீனாவைப் போன்ற மாணவிகளுக்கு உதவத் தொடங்க, முதல் மூன்று மாதங்களிலேயே அவர்கள் எளிதாகப் பாடங்களைப் புரிந்து கொண்டார்கள். எங்கள் வேலையும் எளிதானது. அடுத்தடுத்த வருடங்களில் மேலும் பல மாணவிகள் நிவேதாவைப் போல் உதவி செய்தனர்.  எங்கள் ஆசிரியர்களும் விடுமுறை நாட்களில் விருப்பத்துடன் இந்த புதிய மாணவிகளுக்கு உதவத் தொடங்கினார்கள். நாங்கள் இப்பொழுது எங்களுக்கு விதிக்கப்பட்ட 25% மேலாகவே வறுமையில் வாடும் பெற்றோர்களின் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்கிறோம்.  பிரதி பலன் எதிபாராமல் அன்று இயல்பாக நிவேதா ஏற்படுத்திய பொறி இன்று பேரொளியாக வளர்ந்திருக்கிறது.  அதனால் நிவேதாவும், தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த மாணவியாக வளர்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதால் மீனாவும் இந்த விருதை என் சார்பாகப் பெற்றுக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்".

Saturday 31 March 2012

கலிகாலம்


















































(அன்பு வாசகர்களே, சாரி இன்று பதிவு ஒன்றும் கிடையாது).

Thursday 29 March 2012

திண்ணைப் பேச்சு-3

               பெயரிலொன்றும் பெரிய பெருமை இல்லை என்று பெரியவர்கள் சொன்னாலும் நீயா நானா நிகழ்ச்சியில் பெயர் சரியாக அமையாமல் நொந்த கதையைப் பலர் சொன்னார்கள்.  பெண்களுக்குப் புகழேந்தி என்று ஆண்கள் பெயரும் ஆண்களுக்குக் கல்யாணி, கண்மணி என்று பெண்கள் பெயரும் வைக்கப்படுவது கேட்டு ஆச்சர்யமாக இருந்தது.  அதிலும் ஒருவர் இப்படி பெண் பெயர் வைத்ததால் மற்றவர்களின் ஏளனத்துக்கு ஆளானது குறித்து அழாத குறையாகக் கூறிய போது வருத்தமாக இருந்தது.  ஆனால் அந்த விஷயத்தைக் கூட நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட அன்னக்கொடி என்ற பெயருடைய ஒருவர் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. அவர் கடன் வசூல் செய்யும் வேலையில் சேர்ந்தாராம். அவருடைய பாஸ் அவரைத் தன்னிடம் கடன் வாங்கியவர் வீட்டிலெல்லாம் அறிமுகம் செய்து இவர்தான் இனிமேல் வசூல் செய்ய வருவார் என்றாராம்.  அன்னக்கொடி என்ற அவரின் பெயரைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒருவர் "ஏய், அன்னக்காவடி வந்திருக்கார் பாரு, வட்டிக் காசை எடுத்து வா" என்றாராம். தன் பெயர் இப்படி இருகிறதே என்று வெட்கி வேதனைப் படாமல் "எங்கள் காலேஜில் நடந்த எலக்ஷனில் 'பாவாடை' என்ற பெயருடையவர் போட்டி போட்டார். அவரே தன் பெயரைப் பற்றிக் கவலைப் படாதபோது நாமும் இந்தப் பெயரை ஈசியாக எடுத்துக் கொள்ளவேண்டும்" என்று அவர் கூறிய போது  'what is in a name' என்பதை உண்மையென்று உணர்ந்தேன். எந்த விஷயத்தையும் நாம் நோக்கும் கோணம்தான் அதைப் பெரியதாகவோ அல்லது அற்பமானதாகவோ ஆக்குகிறது.

               சில வாரங்களாக சன் டீவியில் மீண்டும் 'சிவாஜி வாரம்' எம்ஜியார் வாரம்' என்று சினிமா வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.  எங்களுக்குக் குவைத்தில் வசதியாக இரவு 8.30 மணிக்கு வருவதாலும், என் மகளுக்கு விடுமுறையானபடியாலும் தினம் சினிமா பார்க்கிறோம்.  பழைய சினிமாக்களில் அம்மா பாசம், அண்ணா-தங்கை , அண்ணா-தம்பி உறவு பற்றி அதிகம் பேசப்பட்டதைக் கவனித்தேன்.  இப்பொழுதெல்லாம் சீரியலிலும் சினிமாவிலும் இளம் வயது காதல், அடுத்தவன் மனைவியைக் காதலிப்பது என்று வரையறை இல்லாமல் வருவதுதான் சமூகம் சீரழியக் காரணமோ என்று தோன்றியது.

              சமூகம் சீரழிவது இருக்கட்டும், உலகமே டிசம்பர் 21,2012-ல் அழியப் போகிறதென்று சொல்கிறார்களே. அதுவும் ஃப்ரான்சிலுள்ள  Pic de Bugarach என்ற இடத்தில் கூடியுள்ள மக்களை மட்டும் கடவுள் (aliens)அடுத்த உலகத்திற்க்குக் கூட்டிச் செல்வார் என்ற நம்பிக்கையில் பலர் அங்குக் கூட ஆரம்பித்துவிட்டார்களாம்.


அது என்ன அந்த இடத்தில் சிறப்பு என்று கேட்கிறீர்களா? பொதுவாக மலையில் உச்சியில் இருக்கும் கற்கள் மலை அடிவாரத்தில் இருக்கும் கற்களைவிட வயது (geological age) குறைவானதாக இருக்கும்.  இந்தக் குறிப்பிட்ட மலையில் மட்டும் மலை முகடு வயதில் அதிகமாகவும் அடிவாரம் குறைவானதாகவும் இருக்கும் அதிசயம் நிகழ்ந்திருப்பதாகவும் அது Nostradamusஅவர்கள் குறிப்பிலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். நித்யானந்தா, யாகவா முனிவர் போல சாமியார்களின் கேலிக் கூத்து இங்கு என்றால் இதைப்போல் மூட நம்பிக்கை ஐரோப்பிய மக்களுக்கு!!!.

              ஆனால் பூமியின் பல தட்டுக்கள் நேர்விசை அழுத்தத்துக்கு (horizontal pressure) ஆளாகும்போது நடுப்பகுதி உயர்ந்து மலையாகிறது.




 பூமியின் மேல் தட்டு உயர்ந்து மலை முகடாகிறது. அதனால் மலைமுகடு வயதில் குறைந்ததாகவும் மலை அடிவாரம் வயது முதிர்ந்ததாகவும் அமைகிறது.  சில சமயம் இத்தகைய அழுத்தம் ஏற்படும் இடத்தில் பிளவு(fault) இருந்தால் Pic de Bugarach மாதிரி உல்டாவாகவும் அமையும் என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  இதைப் பற்றிய விளக்கத்தை hudsonvalleygeologist.blogspot.com என்ற ப்ளாகில் பார்க்கலாம்.
எது எப்படியோ Pic de Bugarach பார்ப்பதற்கு அழகான இடம் போலத்தான் தோன்றுகிறது!!! 2013-ல் (உலகம்) பிழைத்துக் கிடந்தால் போய்ப் பார்க்கலாம்!!!!!

Wednesday 7 March 2012

புரட்சிப் பெண்கள்


              ஹிந்து பேப்பரில் படித்த இரு பெண்மணிகளைப் பற்றிய செய்திகள் என்னை ரொம்பவே கவர்ந்தது.  என் மகளிடம் கூட அவர்களைப் பற்றிய செய்தியைச் சொல்லி இவர்களைப் போல் தைரியம், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றேன்.

            முதலாமவர் சமீபத்தில் மறைந்த நடிகை எஸ்.என்.லக்ஷ்மி அவர்கள்.  ஹிண்டுவில் அவரைப் பற்றிப் படித்ததும் பிரமிப்பு அடங்கவில்லை.

 எம்ஜியாரின் பாக்தாத் திருடன்படத்தில் இவரே சிறுத்தையோடு சண்டை போட்டாராம். அசந்து போன எம்ஜியார் 'இந்தப் படத்தில் இவங்கதான் உண்மையான ஹீரோ' என்று பாராட்டினாராம். அந்த காலத்திலேயே தானே காரோட்டிக்கொண்டுதான் படப்பிடிப்புக்கு வருவாராம்.  இந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தக் காலத்திலும் தானே காரோட்டுவாராம். சாய்சங்க பஜனைகள் போது பக்தர்களின் காலணியைவாங்கி அடுக்கும் சேவையும் செய்வாராம். தன்னுடன் பணிபுரிந்த பலரின் குழந்தைகளுக்குப் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். சுயசம்பாத்தியத்தில் வாழ்ந்தது, தைரியம் மிகுந்தவராக இருந்தது, சமூகத்திற்குத் தன்னால் முடிந்த தொண்டு செய்தது என்று நிறைவு தரும் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

          அடுத்தவர் Dr.T.S.கனகா அவர்கள்.

நியூரோ சர்ஜனாக வேண்டி போராட்டங்களைச் சந்தித்தாலும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.   பெண் என்ற காரணத்தால் அவருக்கு நியூரோ சர்ஜன் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரும்பாடானதாம். அவரை ஸர்ஜரி பக்கமே வரவிடாமல் பல ஆண் மருத்துவர்கள் தடுக்க, ஒரு நாள் ஒரு துணை மருத்துவர் வர இயலாத நிலையில்தான் முதன் முதலாக சர்ஜரி அறைக்கு அசிஸ்டெண்டாகப் போகும் வாய்ப்பு கிடைத்ததாம். விடாது போராடி முன்னேறியது மட்டுமில்லாமல் brain stimulation பற்றிப் பல ஆராய்ச்சி கட்டுரைகளும் எழுதியுள்ளாராம்.  இவையெல்லாம்விட வியப்படைய வைத்தது, 79 வயதானபோதும் தனது துறையில் முன்னேற்றங்கள் குறித்துப் பேச துருக்கி நாட்டுக்குப் போகப் போகிறாராம்.  அவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சல்யூட்!http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2961929.ece