Monday, 30 May 2011

அலை பேசுதே

           
              அலைக் கற்றை விவகாரம் பெரிய புள்ளிகளையெல்லாம் படுத்தியெடுக்கிறது என்றால் இந்த அலைபேசி நம்மைப் போல் சாமான்யர்களை எப்படி மாற்றியிருக்கிறது!  ஒரு பூக்காரி கூட "எங்க கீர? வர சொல பல்லாவரம் ஸ்டேஸனாண்ட புள்ள டூசன் போயிருக்கு, அத்த இட்டாந்துரு" என்று  செல்லில் பேசி அலட்சியமாக அதைச் சுருக்குப் பையில் போட்டு முடிந்து வைக்கும் அளவு நாட்டில் செல்லின் செல்வாக்குப் பரவியிருக்கிறது.

               சென்னையிலிருந்து கும்பகோணம் இரயிலில் போவதற்குள் ஒரு சந்தைக் கடை போல் ஒவ்வொருவரும் செல்லில் கத்தி கத்தி பேசுவது ஒரு கதம்பமாகக் கேட்பதற்குச் சுவையாக இருக்கும்.  கண்ணை மூடி அங்கங்கே வரும் பேச்சை மட்டும் கேட்டால் அது ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும். இங்கே ஒரு சாம்பிள்:
seat number 23: 'ஆமாம், மாப்பிள்ள ரொம்ப நல்லவர்"
seat number 35: 'அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும், மூஞ்சில நாலு அப்பு அப்பிட்டுதான் பேசுவேன்"
-------------------------
seat number 42: '..எனக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு..."
seat number 53: 'அவ்வளவு சீக்கிரத்தில அது நடந்துருமா? பிரச்சினை பண்ண மாட்டோம்?  அண்ணாச்சின்னா சும்மாவா?"
--------------------------
              ஒரு வழியா எல்லோரும் உரையாடிவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் நோக்கியா ரிங்க் டோன் ' டட டண் டன் டட டண் டன் டான்...." கேட்டவுடன் ஒரு பத்து பேர் அவசர அவசரமாக லைட்டைப் போட்டு கைப் பை, சட்டைப் பை என்று தேடி மொபைல் ஃபோனைப் பார்க்க, ஃபோன் வந்த ஒருவர் மட்டும் " இப்பதாண்டா படுத்தேன் செல்லம், குட் நைட்..." என்று கொஞ்சிப் பேச மற்றவர்களெல்லாம் கடுப்போடு மீண்டும் தூங்கப் போவார்கள்.

              பொது ரிங்க் டோனால் இந்தப் பிரச்சினை என்றால் சிலரின் ஸ்பெஷல் ரிங்க் டோனால் வேறு பிரச்சினைகள்.  கோவிலில் கூட்டத்தில் நீந்தி கர்ப்பக்ருஹம் அருகில் வந்தவுடன் கண்மூடி சாமியைக் கும்பிடும்போது 'என் உச்சி மண்டைல சுர்ருங்குது..." என்று ஒருவரின் செல்போன் ஒலித்தால் உண்மையிலேயே அவர்  உச்சி மண்டையில் நங் என்று குட்டத் தோன்றும்.

               செல்ஃபோன் பல நேரங்களில் செல்லா ஃபோன் ஆகிவிடுகிறது.  அதுவும் கிராமங்களில் செல்ஃபோன் ரிங் மட்டும்தான் கேட்கும். பேச ஆரம்பித்தால் வெறும் சத்தம்தான் கேட்கும்.  ஒருமுறை கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் என் உறவினர் வீட்டுக்கு வர ஒரு நண்பர் வழி கேட்டு செல்ஃபோனில் அழைத்தார்.  ஹாலில் உட்கார்ந்திருந்த நண்பர் "ஹலோ, கேக்கலையா... இப்ப கேக்குதா?.." என்று கேட்ட வண்ணம் முதலில் வாசலுக்குப் பின் தெருவிற்கு, பின் மெயின் ரோடுவரை போய்விட்டார்.  போன் செய்தவர் "இப்பதான் தெளிவா கேக்குது.  தெளிவா பாக்கக்கூட முடியுது.  அப்படியே லெஃப்ட்டில திரும்பிப் பாருங்க, நான் நின்னுண்டிருக்கேன்..." என்றாரே பார்க்கலாம்.

              சிலருக்கோ செல்ஃபோன் செல்ல ஃபோனாயிருக்கும்.  குளிக்கப் போகும்போதுகூட கையில் எடுத்துப் போவார்கள். அதுவும் கல்லூரி மாணவ/மாணவிகள் தூங்கும்போதுகூட செல்ஃபோனைப் பிரிவதில்லை. நடுராத்திரி தூங்கும்போது திடீரென்று எழுந்து பார்த்தால் பக்கத்தில் படுத்திருப்பவர்  தலை வரை போர்வை மூடியிருக்க உள்ளே இருந்து கொள்ளிவாய்ப் பிசாசு போல் வெளிச்சம் வர பயந்து லைட்டைப் போட்டுப் பார்த்தால் போர்வைக்குள்ளிருந்து கையில் செல்ஃபோனுடன் வெளிவருவார்கள்.  கேட்டால் நண்பர்களுடன் சாட்டிங்காம்!!!.

              இன்னும் சிலருக்கோ செல்ஃபோன் 'கொல்'ஃபோனாகிவிடுகிறது.  ஒருமுறை ஸ்டெர்லிங்க் ரோட்டில் ஆட்டோவில் பொய்க்கொண்டிருந்தேன்.  சிக்னலில் நிற்கும்போது பைக்கில் ஒருவர் செல்ஃபோனில் " வழி சொல்லுங்கண்ணே. ஆ, சரி, மேல சொல்லுங்க.  ரைட்ல கட் பண்ணனுமா...சரி, சரி, மேல எப்படி போறது...?" என்று பேசிக்கொண்டே இருக்க எங்கள் ஆட்டோ டிரைவர் ஹாரன் அடித்து, "சரிதாம்பா, இப்படி பேசிக்குனு போனால் நேர மேலதான் போணும்.  ஓரத்தில நிப்பாட்டிக்க; பொறவு பேசு.." என்றார்.  மிகச் சரியான ஆலோசனையாக எனக்குப் பட்டது.

               ஒரு சிலர் செல்ஃபோனை பயன்படுத்துவதில் 'கருமி'யாக இருப்பர்.  Missed call  விடுபவர்கள் ஒருவகை என்றால் இவர்கள் அதற்கும் மேல்.  அவசரத்திற்குப் தோடர்புகொள்ளத்தானே செல்ஃபோன். இவர்களோ சார்ஜ் வீணாகுமென்று (பேட்டரி சார்ஜ்!!) செல்ஃபோனை அணைத்தே வைத்திருப்பார்கள். தேவையானபோது மட்டும் on செய்து பேசிவிட்டு மீண்டும் அணைத்துவிடுவார்கள்.  இவர்களின் ரிங்க் டோனே இதுதானோ என்று எண்ணுமளவு எப்பொழுது ஃபோன் செய்தாலும் ' இந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்ற செய்திதான் வரும்!!!

              இன்னும் சிலரோ செல்ஃபோன் பயன்படுத்தி இந்த சமூகத்தையே வருத்தும் 'கிருமி'யாக இருப்பர்.  ஃபோனைக் கண்டபடி ஃபோட்டோ எடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்தி அதையும் இணையத்தில் இட்டு பிறரை, குறிப்பாகப் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்.  அதுவும் இந்த அவலம் கல்லூரியில் நடக்கிறது என்று அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.  செல்போனைக் கல்லூரியில் தடை செய்ததும் ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றியது.

             ஒரு நிமிஷம் இருங்க! என் செல்ஃபோன் ஒலிக்கிறது; பேசிவிட்டு வருகிறேன். " ஹலோ, யாரு?  என்ன பேசறது கேக்கலையா? ... இப்ப கேக்குதா? இப்ப கேக்குதாஇப்பவாவது கேக்குதா? ... என்ன, ஹியரிங்க் எய்ட் ரிப்பேர் பண்ணனுமா?  அட, ராங்க் நம்பருங்க!!!..."
(thanks to shutterstock.com for the picture)

Monday, 9 May 2011

'விஜய்'யீ பவ


              இந்தியாவில் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.  நூற்றுக் கணக்கில் வரும் சேனல்களில் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.  அட, எதிலும் ஒன்றும் பார்க்க சகிக்காவிட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தாலே பதினைந்து நிமிடம் கழிந்துவிடுமே!.  இங்கு எங்களுக்குக் கேபிள்வாலா புண்ணியத்தில் இரண்டே இரண்டு தமிழ் சேன்ல்கள்தான் வரும்.  அதிலும் ஜெயா டிவி 'வரும் ஆனால் வராது'  ரகம்.  ஒன்று சத்தமே வராது; இல்லை ஒரே சத்தமாக (back ground noise) இருக்கும்.  அதனால் கிடைக்கும் ஒரே சேனல் சன் தான்.  அதிலும் பாதி நேரம் சீரியல்கள்தான் லைன் கட்டி வரும்.  எனக்கு இந்தியும் பிடிக்'காத தூரம்' என்பதால் பெரும்பாலும் ND TV -யோ இல்லை CNN- ஓ தான் பார்க்க நேரிடும். அவர்களும் ஒசாமா, 2ஜி என்று எதுவும் சிக்காத பெரும்பாலான நாட்களில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

            ஒரு மாதமாகத்தான் 'பெஹலா நெட்வொர்க்கின் உதவியால் பாலைவனச் சோலை போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது.  பத்திரிகைகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை சிலாகித்து எழுதியிருப்பதைப் படித்ததில் விஜய் டிவி பார்க்க ஆர்வமாக இருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரும்பாலான நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் நேரம் தெரியாததால் ( இந்திய நேரப்படி இங்கு ஒளிபரப்பு கிடையாது) பார்க்க முடியாமல் இருந்து ஒரு வழியாக அந்த time difference-ஐக் கண்டு பிடித்து இரு வாரங்களாகத்தான் நிகழ்ச்சிகளை ரெகுலராகப் பார்க்கிறேன். ஜுனியர் சூப்பர் சிங்கரில் 'நாக்க முக்க' பாடி கலக்கிய சிறுமிக்குத் திருஷ்டி சுத்திப் போடவேண்டும்.  சத்திய ராஜின் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியும் ('minute to win' நிகழிச்சியின் காப்பியாக இருந்த போதும்) ரசிக்க முடிகிறது. சூப்பர் சிங்கர் மற்றும் அது இது எது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவரின் நகைச்சுவை அந்த நிகழ்ச்சிகளுக்குப் பெரும் பலம் என்று நினைக்கிறேன்.

             இவை எல்லாவற்றையும் விட ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நடத்தும் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது.  ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சியை இந்தியா வரும்போது பார்த்திருக்கிறேன்.  அவர் ஆங்கிலமே கலக்காமல் தமிழ் பேசும் அழகை வியந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ( atleast போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்திலாவது)தமிழ் படிக்க முடியாத, பிடிக்காத இன்றைய தலைமுறையினரிடம் தமிழார்வத்தை உண்டு செய்தால் மகிழ்ச்சியே.
       
           அதிலும் ரேவதிப் பிரியா, காவ்யா அவர்கள் பங்கு கொண்ட இந்த episode மிகவும் அருமை.  விடை கண்டு பிடிப்பவரா அல்லது அதற்கான க்ளூ கொடுப்பவரா யார் அதிக புத்திசாலி என்று வியக்கும் வண்ணம் இருவரும் அருமையாக செய்திருக்கிறார்கள்.  'பிரயத்தனம்' என்ற சொல்லுக்குப் 'ப்ரும்ம' என்ற க்ளூ கொடுத்து வெற்றி பெரும் வரை ஆட்டம் 20/20 கிரிக்கெட் பந்தயம் போல் விறுவிறுப்பாக இருந்தது.  கடைசியில் 'சிறந்த தகுதிகள் இருந்தும் திரையுலகில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற முடியாத தனக்குத் தாய் மொழி பெற்றுக் கொடுத்த வெற்றி இது என்று அவர் (காவ்யா) குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. (இந்த நிகழ்ச்சியைப் பார்க்க கீழே  உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.)


.http://123tamiltv.com/vijay-tv-oru-vaarthai-oru-latcham-23-04-11.html


இவர்களைத் தொடர்ந்து விளையாடிய வடிவுக்கரசியும் வியக்கும் அளவு சிறப்பாக ஆடினார்.

 தமிழ் சொற்களுக்குத் தமிழிலேயே குறிப்புகள் கொடுத்து கண்டுபிடிக்க வைப்பது ஒரு சுவையான சவாலாகத்தான் இருக்கிறது.