Sunday 28 November 2010

அதிகமில்லை ஜெண்டில்மேன்!

               இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில்(26.11.2010) மழை வெள்ளத்தில் நீந்தி பள்ளி செல்லும் சிறார்களைப் பற்றிய செய்தி படித்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது.


அரசியல்வாதிகள் கோடி கோடியாக மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் செலவழித்து இந்த மலைவாழ் மக்களுக்கு நல்ல பள்ளியோ, இந்த ஆற்றைக் கடந்து போக ஒரு பாலமோ கட்டிக் கொடுத்திருக்கலாம்.

              இல்லை துணை இல்லாவிட்டாலும் துணிவு இழக்காத இந்தப் பெண்கள் (நன்றி: இந்த வார ஆனந்த விகடன்) போல





 பலருக்கு குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றியிருக்கலாம்.

              இவர்களின் தேவையை நிறைவேற்ற தேவை, "அதிகமில்லை ஜெண்டில்மேன்! (உங்கள் கொள்ளையில்) ஒரு துளி போதுமே."

Thursday 25 November 2010

சித்திரமும் கைப்பழக்கம்

 scare crow
r
robot


 chef

படங்கள் : vaibhavi

Wednesday 17 November 2010

(ஃ)போகஸ் செய்திகள்

JPC- யில் சேரத் தயக்கம்

பல கோடி ரூபாய் ஊழலுக்காக JPC அமைக்க வேண்டும் என்று பார்லிமெண்டில் பெருங்கூச்சல் எழுப்பினார்கள் எம்பிக்கள்.  ஆனாலும் 1.75 lakh crores-க்கு எத்தனை சைபர் என்ற குழப்பத்தின் காரணமாக அந்தக் குழுவில் இடம் பெற அரசியல் தலைவர்கள் தயக்கம் காட்டி வருவதாகச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

சேரும் ஷேரும்.

'சேர் (chair) என்பது தோளில் தொங்கும் துண்டைப் போன்றது; ஷேர்(share) என்பது இடுப்பில் கட்டிய வேட்டி போன்றது. அதனால் கண்மணிகளே, சேர் போனாலும் ஷேர் இருப்பதால் கவலை வேண்டாம்' என்று தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

எடியூரப்பா பெயர்  மாற்றம்.

எடியூரப்பா என்ற பெயர் சமயத்தில் இடையூரப்பா என்று ஒலிப்பதால்தான் அடுத்தடுத்து இடையூறாக வருவதாகத் தன் குடும்ப ஜோசியர் கூறியதால் அவரின் ஆலோசனைப்படி எடியூரப்பா தனது பெயரை உடையூரப்பா என்று மாற்றிக் கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள்.

CBI அதிகாரிகள் ஒட்டுமொத்த ராஜினாமா

காமன்வெல்த் கேம்ஸ், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று இடைவிடாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதோடு எதற்கெடுத்தாலும் CBI விசாரணைக்கு உத்தரவிடுவதால் வேலைப் பளு தாங்காமல் தாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ராஜினாமா செய்யப் போவதாக CBI அதிகாரிகள் மிரட்டல்.

ஓரவஞ்சனை - ஓபாமாவின் புலம்பல்

அடுத்தடுத்து கோடிக் கணக்கில் ஊழல் புரியும் இந்திய அரசியல்வாதிகள் தனது இந்தியப் பயணத்தின் போது வெறும் நடனமாட மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டு ஊழல் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொடுக்காமல் விட்டது பெரும் ஓர வஞ்சனை என்று அமெரிக்க அதிபர் ஓபாமா வன்மையாகக் கண்டித்தார்.

சினிமா தியேட்டரில் ஈ ஓட்டினார்கள்

இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் திறமை பற்றிய விவரம் விறுவிறுப்பாகவும் அவர்களின் உரைகள் சரியான காமெடி பீஸாகவும் இருப்பதால் தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுவதால் பெரும்பான்மையான திரையரங்குகளில் கூட்டமே இல்லை என்று தெரிய வருகிறது.

Wednesday 10 November 2010

1980 - 2010





1980

             மாலை ஆறரை மணியாகிவிட்டது. சீதாவோ எத்தனை முறை கூப்பிட்டாலும் "அஞ்சே நிமிஷம்மா" என்று தோழிகளுடன் பக்கத்து மைதானத்தில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்தாள்.  வந்தவுடன் அக்கா அண்ணாக்களுடன் விளையாட்டு, சண்டை etc.,.  "ஏண்டி நாளைக்கு ஸ்கூல்ல பேச்சுப் போட்டின்னு சொன்னியே. prepare பண்ணியாச்சா?" என்று அம்மா சமையலறையில் சமைத்தபடியே கேட்டாள்.  "அம்மா, அதெல்லாம் அக்கா என்னென்ன points சொல்லனும்னு சொல்லியிருக்கா,  நான் develop பண்ணிப்பேன்.  கவலைப் படாதே.  நான் இப்ப homework பண்ணிண்டு இருக்கேன்." என்றாள் சீதா.  ஹோம் வொர்க் முடித்த பின்னர் அடுத்த நாளுக்காக time-tableபடி புத்தகத்தை அடுக்கி வைத்துக் கொண்டாள்.  இதற்குள் அம்மா டின்னருக்குக் கூப்பிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதை பேசியபடி சாப்பிட்டனர்.

              மறு நாள் ஸ்கூலுக்குப் போகும்போது 'அம்மா, நான் நல்லா பண்ணனும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ" என்று சொல்லியபடி குதூகலத்துடன் ஸ்கூலுக்குப் போன சீதா பேச்சுப் போட்டியில் தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றாள்.  மாலையில் பெருமிதத்துடன் வந்த மகளை அணைத்து " நீ நல்லா பண்ணுவேன்னு தெரியும். very good. சரி போய் விளையாடு" என்று அனுப்பி வைத்தாள் அம்மா.

2010

              நான்கு மணிக்கு ஸ்கூலிலிருந்து வந்தாள் அனன்யா.  அம்மா வைத்திருந்த பூஸ்டையும் டிபனையும் சாப்பிடும்போதே ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தாள்.  " அனன்யா, சீக்கிரம் ஹோம் வொர்க் பண்ணு.  இன்னைக்கு விளையாடப் போக வேண்டாம்.  ரெண்டு நாள் கழிச்சு பேச்சுப் போட்டி இருக்கில்ல.  தினமும் இரண்டு தடவை சொல்லிப் பாரு.  நான் இண்டர் நெட்டில் பார்த்து நிறைய points எழுதி வச்சிருக்கேன்.  அதையும் சேர்த்து மனப்பாடம் பண்ணிக்கோ.  ஆறு மணிக்குப் பாட்டு க்ளாஸ் வேற இருக்கு." என்றாள் அம்மா.  அன்றும் அதற்கு மறு நாளும் விளையாட்டு கட்.  பேச்சுப் போட்டிக்கு முதல் நாள் அம்மா டென்ஷனாக இருந்தாள்.  "யார் யாரெல்லாம் போட்டியில் இருக்காங்க?  யார் ஜட்ஜ் தெரியுமா?" என்று ஏதாவது கேட்ட வண்ணம் இருந்தாள்.  ஒரு நான்கு முறையாவது அனன்யாவைச் முழு உரையையும் சொல்ல வைத்திருப்பாள். கையால் இப்படி action பண்ணு, முகத்தில் expression இன்னும் கொஞ்சம் வேணும், இந்த இடத்தில் modulation இன்னும் கொஞ்சம் better-ஆ இருக்கட்டும் என்று அட்வைஸ் கொடுத்த வண்ணம் இருந்தாள்.  இத்தனை ரிஹர்ஸலுக்குப் பிறகும் அனன்யா ரொம்ப டென்ஷனாகவே இருந்தாள்.  'அம்மா நான் நல்லா பண்ணுவேனாமா?' என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள். டிவி பார்த்துக் கொண்டிருந்த அப்பா ' என்ன, மணி ஏழரை ஆறதே.  பிட்சா ஆர்டர் பண்ணவா.  பாவம் நீங்க ரெண்டு பேரும் போட்டிக்கு பிஸியா prepare பண்ணிண்டு இருக்கேளே" என்றார்.  எட்டு மணிக்கு சுனைனா பார்த்த வண்ணம் அனன்யாவும், ஏதோ சீரியல் பார்த்த வண்ணம் அப்பாவும் அம்மாவும் பீட்ஸா சாப்பிட்டனர். டின்னருக்குப் பிறகு அப்பா அம்மா இருவருக்கும் பேச்சுப் போட்டிக்கான உரையை இருமுறை சொல்லிக் காட்டிய பிறகே அனன்யா தூங்கப் போனாள்.

             காலையில் அனன்யாவைச் சீக்கிரம் எழுப்பிய அம்மா அவளுக்கு முக்கிய points எல்லாம் ஒரு முறை நினைவூட்டினாள்.  'relaxed-ஆ இரு. confident-ஆ பேசு. all the best" என்ற அட்வைஸுடன் மகளை முத்தமிட்டுப் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். அன்று முழுவதும் 'இப்ப போட்டி ஆரம்பித்திருக்கும்; இப்ப அனன்யா பேசியிருப்பாள்; இப்ப முடிவு சொல்லியிருப்பார்கள்' என்று அம்மாவின் எண்ணங்கள் அனன்யாவைப் பற்றியே இருந்தது.

            மாலை அனன்யா ' அம்மா, நான் நல்லா பேசினேன். எனக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது" என்று கூறிய வண்ணம் வந்தாள். " கவலைப் படாதே.  உங்க ஸ்கூலில் இருக்கும் பாலிடிக்ஸுக்கு உனக்கு மூன்றாம் பரிசு கிடைத்ததே பெரிசு. I am very happy that you got some prize. be happy. we will buy you a nice gift today " என்று மகளைத் தேற்றினாள்.  மாலை அப்பா வந்ததும் மூவரும் பேச்சுப் போட்டியில் வென்றதற்காக அனன்யாவிற்கு கிஃப்ட் வாங்க கடைக்குப் போனார்கள்.

Tuesday 2 November 2010

உச்சி மீது வெடிவந்து வீழுகின்ற போதிலும்....





              நம் பண்டிகைகளிலேயே நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருப்பது தீபாவளிக்குத்தான். பள்ளியில் படிக்கும்போது என் தோழிகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளி countdown ஆரம்பித்துவிடுவோம்.  புது ஆடையை உடுத்தி பெருமையோடு வலம் வருவதில் ஒரு ஆர்வம். அன்று முதல் இன்று வரை எல்லா வயதினருக்கும் ( பிற மதத்தினருக்குக் கூட) தீபாவளி ஸ்பெஷல் வெடிகள்தான். என் அக்கா, அண்ணன்மார்களின் உதவியால் வெடி வெடிப்பது என் ஆர்வத்தைத் தூண்டியதே அன்றி ஒருபோதும் பயமே இருந்ததில்லை. சிறு வயதில் என் அம்மா வெடிகளை வாங்கி எங்களுக்குள் பங்கு போட்டுக் கொடுப்பார்.  அதை வெயிலில் காய வைத்து தீபாவளியன்று ஒரு வெடிகூட வீணாகாமல் போட்டி போட்டுக் கொண்டு வெடிப்போம். என்னுடைய favorite  எலக்ட்ரிக் சரம் மற்றும் atom bomb தான்.  அதுபோல் புஸ்வானத்தை யார் வீட்டில் வைத்தாலும் அது முடியும் வரை ரசிப்பேன்.



              கல்யாணமாகி முதலில் அபுதாபி, பின்னர் கனடாவில் வசித்தபோது தீபாவளியானால் இந்த வெடிகளை வெடிக்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கும்.

              என் மகள் வெடிகளை வெடிக்க வாய்ப்பு கிட்டாதோ என்ற என் ஏக்கம் குவைத் வந்ததும் தீர்ந்தது.  நல்ல வேளை, குவைத்தில் வெடிகளுக்குத் தடையில்லை.  கடந்த நான்கு வருடங்களாக எல்லோரும் ஒன்று கூடி வெடித்து மகிழ்கிறோம்.  என் மகளுக்கும் என்னைப் போல் வெடி வெடிப்பதில் ஆர்வம் உண்டு (உடனே அவள் ரொம்ப தைரியசாலி என்று எண்ணாதீர்கள். She is afraid of anything that moves and has more than two legs . ஆனால் amusement park-ல் எல்லா rides -லும் தைரியமாகப் போவாள்.  நான்தான் பயந்து அவள் இறங்கி வரும்வரை கண்களை இறுக்க மூடிக் கொண்டிருப்பேன்)..முதலில் கொஞ்சம் தயங்கினாலும் மத்தாப்பு, சங்கு சக்கரமென்று மூன்று வயதிலேயே (அதுதான் அவள் கொண்டாடிய முதல் தீபாவளி) வெடிக்கத் துவங்கினாள். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ராக்கெட் சரியாக அவள் தலையில் லேண்டாகியது.  கொஞ்சம் தலைமுடியையும் பொசுக்கிவிட்டது.  பயத்தில் அவள் கத்த, கூட இருந்த நானும் நடுங்கக் கொண்டாட்டம் போய் திண்டாட்டமாகியது.  பக்கத்திலிருந்தவர்கள் '  paste தடவினால் சரியாகும், பௌடர் போட்டால் சரியாகும்...' என்று எது சொன்னாலும் உடனே அங்கிருந்த கடையில் நுழைந்து எடுத்து அவள் தலையில் தடவி அவள் தலையை ஒரு வண்ணக் களஞ்சியமாக்கிவிட்டேன். இதற்குள் அவள் தலையில் ஒன்றும் பெரிய காயமில்லை என்று எனக்குப் புரிந்துவிட்டதால் நான் நிதானமானேன்.  ஆனால் என் மகளோ அழுகையை நிறுத்தவேயில்லை.  நாங்கள் அப்பொழுதுதான் புது வீட்டிற்கு குடி புகுந்து ஒரு வாரமாகியிருந்தது.  என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு டாக்டர்.  அவரிடம் கொண்டு காட்டினோம். அவரும் கவலைப் பட ஒன்றுமில்லை என்று கூறினார்.  அவர் ஒரு டாக்டர் என்று அறியாததால் (மூன்று வயது குழந்தைதானே.  அவர் வீட்டில் casual dress-ல் இருந்ததால் அவரை டாக்டரென்று நம்ப மறுத்தாள்).  "எனக்கு டாக்டர்கிட்ட போகணும்" என்று கீறல் விழுந்த ரெகார்ட் போல அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.  பின்னர் ஹாஸ்பிடல் போய் வந்ததும்தான் அழுகையை நிறுத்தினாள். எங்கள் பக்கத்து வீட்டு டாக்டர் இன்றும் அவளைப் பார்க்கும்போது "டாக்டர்கிட்ட போகணும்னு அடம்பிடித்த முதல் குழந்தை நீதான்" என்று சொல்லிச் சிரிப்பார்.

            அடுத்த வருடம் கொஞ்சம் பயந்தாலும் நாங்கள் தைரியம் கூறவே வெடிக்கத் தயாரானாள்.  நாங்களும் மற்றவர்களெல்லாம் வருவதற்கு முன்னரே வெடித்துவிட்டு வர முடிவு செய்தோம் (எங்கள் நண்பர் வட்டாரத்தில் எங்களுக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்ற பட்டப் பெயர் உண்டு).  புஸ்வாணம், சங்கு சக்கரம், மத்தாப்பு எல்லாம் கொளுத்தி திருப்தியுடன் வீட்டிற்குத் திரும்ப எத்தனித்தோம். அப்போது சுமார் ஒரு மீட்டர் தள்ளி யாரோ விட்ட தரைச் சக்கரம் சூப்பர்மேன் போல் ஒரு தாவு தாவிக் குதித்து எங்களனைவரையும் விட்டுவிட்டு சரியாக வைபவியின் காலில் வந்து விழுந்து வணக்கம் சொல்லியது.  'ஒரு காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே...' பாட்டுக்கு அபிநயம் பிடிப்பது போல் அவள் குதிக்கத் தொடங்கினாள். ஒருமாதிரி அவளைச் சமாதானப்படுத்தி வீட்டிற்குக் கூட்டி வந்தோம்.

             சென்ற முறை தீபாவளியை எந்த சிக்கலும் இல்லாமல் நன்றாக வெடித்துக் கொண்டாடினோம்.  பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்குப் பயந்து மற்றவர்களிடமிருந்து தள்ளி நின்றே வெடித்தோம். இந்த முறை தீபாவளிக்கு வெடி வாங்கியாகிவிட்டது.  என் மகள் தூக்கத்தில் கூட மத்தாப்பு, சங்கு சக்கரம் என்று புலம்பும் அளவு மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாள். நாங்களும் ஆவலுடன் தீபாவளியை எதிர் நோக்கி இருக்கிறோம்.

             lநீங்களும் நிறைய வெடித்து தீபாவளியை மகிழ்சியுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் எண்ணச்சிதறல் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

(மேலேயுள்ள diwali greeting ஐ வரைந்தது எங்கள் மகள் வைபவி)