ஞாயிறு காலைப் பொழுது சோம்பலாக விடிந்தது. நானிருக்கும் வான்கூவரில் பனிப் பொழிவு வேறு. குளிருக்கு இன்னும் இதமாகப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றியது. இந்தக் குளிருக்கு ஒரு மசாலா டீயும் சூடாக பஜ்ஜியோ, பொங்கல் வடையோ சாப்பிட்டால் எவ்வளவு இதமாக இருக்கும்!! ஊரில் என் அம்மா மழைக் காலத்தில் இது போல் பொங்கல், வடை, அல்லது மிளகு குழம்பு என்று குளிர்காலத்துக்கு ஏற்றபடி சுவையாகச் சமைத்துக் கொடுப்பார். இங்கு பேச்சிலர் லைஃப். எனக்கோ சமையல் சுத்தமாக வராது. உணவு விடுதியில் கூட இங்கு என்ன பெரிதாகக் கிடைக்கும்? ஒரு டோ நட்டோ, மஃபினோதானே. சலிப்புடன் ஒரு காஃபி அருந்திவிட்டு சூப்பர் ஸ்டோருக்கு சாமான் வாங்கக் கிளம்பினேன்.
வழக்கம்போல் ஜூஸ், பால், மோர், டார்டிலா என்று உப்புசப்பில்லாத சாமான்களை வண்டியில் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து "டேய் ஸ்ரீதர், எப்படா வந்தே?" என்று ஒரு குரல் கேட்கவும் அதிர்ந்து திரும்பினால் என் நீண்ட நாள் நண்பன் வைத்தி நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் என் சலிப்பெல்லாம் பறந்து போனது. "நான் இந்த ஊருக்கு வந்து ஒரு மாதம்தான் இருக்கும். நீ எப்படியிருக்கே " என்றேன். என் வண்டியில் இருக்கும் ரெடிமேட் உண்வுப் பொருட்களை சுட்டிக்கொண்டே "அப்ப இன்னும் நீ
eligible bachelor தானா இல்ல அம்மணியை ஊருக்கு அனுப்பியிருக்கியா?" என்றான். "இல்லடா உனக்கு சொல்லாமலா. இன்னும் இரண்டு மாசத்தில கல்யாணம். அதுவரைக்கும் இப்படி ஓட்ட வேண்டியதுதான்" என்றேன்.
Grocery வாங்கியபின் அவன் பேச்சைத் தட்ட முடியாமல் அவன் வீட்டிற்குப் போனேன். வைத்தியின் மனைவி கொடுத்த காஃபியைக் குடித்த வண்ணம் எங்கள் சுற்றம் நட்பு பற்றி
update செய்து கொண்டோம். அடுத்த ஞாயிறு கட்டாயம் வரவேண்டும் என்று வைத்தியும் அவன் மனைவியும் வற்புறுத்தியதால் வருவதாகச் சொல்லி விடைபெற்றேன். சலிப்பாக விடிந்த நாள் வைத்தியின் வரவால் சந்தோஷமானதாக மாறியிருந்தது.
தினமும் அவனுடன் மாலையில் ஒரு மணி நேரமாவது கடலை போடுவது வழக்கமாகிவிட்டது. அவன் திருமணத்தன்று அவனைப் பார்த்ததுதான் கடைசி. அதற்குப் பின்னர் வேலை, குடும்பம் என்று அவரவர் கூட்டுக்குள் அடங்கியதால் அதிகம் தொடர்பு இல்லை. இப்பொழுது எங்கள் நட்பைப் புதுப்பிக்க வாய்ப்பு கிட்டியது குறித்து இருவருக்குமே மகிழ்ச்சி.
ஞாயிறு ஒரு பதினோரு மணி அளவில் போன் செய்துவிட்டு வைத்தி வீட்டிற்குப் போனேன் (இங்கெல்லாம் சொந்தத் தம்பியானாலும் போன் செஞ்சிட்டுத்தான் பார்க்க போகனுங்க). போகும் வழியில்
gas-station-ல் காரை நிறுத்தி காஸ் நிரப்பிக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது திடீரென்று பக்கத்தில் ஒருவர் என் கையைப் பிடித்து கெஞ்சும் பாவனையில் ஏதோ சொல்ல முற்பட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரைப் பார்க்க பாவமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் கையிலிருந்த 10 டாலரை அவர் கையில் திணித்துவிட்டு வேகமாக அங்கிருந்து வந்துவிட்டேன்.
வைத்தியின் வீட்டிற்கு வந்தால் அவன் மனைவிதான் இருந்தார். அவன் அருகிலிருக்கும் மாலுக்குப் போயிருப்பதாக சொன்னவாறு காஃபி கொடுத்தார் அவர் மனைவி. பேச வேண்டும் என்பதற்காக 'எப்படி இருக்கீங்க. வேன்கூவர் பிடித்திருக்கிறதா?' என்று கேட்டேன். கொஞ்சம் தயங்கிய அவர் பின்னர் 'வைத்தி உங்கள் நல்ல நண்பர்தானே. உங்களை என் அண்ணனாக எண்ணிச் சொல்கிறேன். எனக்கு இங்க பிடிக்கவே இல்லை. உங்கள் நண்பரும் என்னை ஒழுங்க கவனிப்பதில்லை.' என்று லேசாக ஆரம்பித்து சூடேறி, கொதித்துப் பொங்கிவிட்டார். 'என் அப்பா இப்படி ஒரு இடத்தில் என்னைத் தள்ளிவிட்டுட்டாரே.. அவரிருந்தாலாவது சொல்லலாம். அவரும் போய் சேர்ந்துட்டார். எனக்கு சொல்லி அழக்கூட நாதியில்லையே. நீங்கதான் அண்ணா எனக்கு ஹெல்ப் பண்ணனும். .." என்று கண்ணீர் சிந்தும் அவரிடம் என்ன சொல்ல என்று தெரியவில்லை. இப்படி ஒரு
awkward ஆன
situation-ல் மாட்டிக் கொண்டோமே என்று விழித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் எனக்கு ஒரு ஃபோன் வரவே இதாண்டா சாக்கு என்று வெளியே வந்து ஃபோன் பேசலானேன். நல்லவேளை கொஞ்ச நேரத்தில் வைத்தி வந்துவிட்டான். சந்தோஷத்தையும் சிரிப்பையும் தன்னுடனே வெளியில் கூட்டிச் சென்றிருப்பான் போலும்; அவன் வந்தவுடன் வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது. ஒன்றும் நடவாதது போல் அவன் மனைவியும் எங்களோடு கலகலவென்று சிரித்துப் பேசினாள்.
'என்னடா இது. வைத்தி மனைவி சொன்னதை நம்புவதா? அவளுக்கு உண்மையிலேயே பிரச்சினை இருக்குமா? அப்படி இருந்தால் என் உயிர் நண்பன் கெட்டவனா? அப்படி இருந்தாலும் அவனைத் திருத்துவதற்கு நான் முயற்சி செய்ய வேண்டும்தானே' என்று எனக்குள் பல சிந்தனைகள். இடையில் காலையில் என்னிடம் கெஞ்சிய அந்த மனைதர் உருவம் வேறு வந்து போனது.
Appadurai ப்ளாகில் படித்தோமே. ஒரு வேளை என்னிடம் கெஞ்சியது வைத்தியின் மாமனார்தானா.' சரி எப்படியும் வைத்தியிடம் பேசிப் பார்ப்பது என்று முடிவெடுத்தேன். சாப்பாடு முடிந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு பக்கத்தில் வீடு பார்க்க வேண்டும் என்று சாக்குச் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.
போகும் வழியில் டிம் ஹார்டனில் நிறுத்தி காஃபி வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். கொஞ்சம் தயக்கத்திற்கு பின் ' என்னடா, கல்யாண வாழ்க்கை எப்படி போயிண்டிருக்கு" என்று ஆரம்பித்தேன். 'சூப்பர். உனக்கும் இன்னும் இரண்டு மாசத்தில் தெரியுமே. லைஃபே டோட்டலா சேஞ்சாயிடும்" என்றான். சரி இப்படி சுத்தி வளைப்பது வேலைக்காகாது என்று முடிவு பண்ணி நேராக விஷயத்திற்கு வந்தேன். " என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு நீதாண்டா. நீயும் உன் குடும்பமும் எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னுதான் நான் நினைப்பேன். இன்னைக்குக் காலையில் உன் வைஃப் ஒரே புலம்பல்டா. அவங்களை சரியா கவனிக்கிறதில்லையா?" என்று மெதுவாக ஆரம்பித்தேன். "சே சே. என்னடா தமாஷ் பண்றியா. ஆமாம், இந்த டிம் ஹார்டன் காஃபி மாதிரி சூப்பர் காஃபி வேற கிடையாதில்ல. பேஷ், பேஷ், ரொம்ப நன்னாருக்கு..." என்று உசிலைமணி போல் மிமிக்ரி செய்தான். இப்படி பேச்சை மாத்தரானே என்று எண்ணியபடி சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்களுக்கு இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தவர் எங்களையே பார்ப்பது போல் தோன்றியது. மீண்டும் திரும்பிப் பார்க்கும் போது கையெடுத்துக் கும்பிட்டார். வெள்ளைக்காரன் கையெடுத்துக் கும்பிடுவதா? 'அட மடையா. சந்தேகமே இல்லை. அது வைத்தியின் மாமா(ஆவி)தான். இவன் ஏதோ டபாய்க்கிறான். 47 நாட்கள் மாதிரி இவன் அவங்களை துன்புறுத்துகிறானோ? அண்ணன் மாதிரின்னு என்னை சொன்னாங்களே. நம்ப கட்டாயம் ஹெல்ப் பண்ணித்தான் ஆகனும். இதுல என் ஃபிரண்டின் எதிர்காலமும் இருக்கே' என்று எண்ணியவாறு 'இங்க பாரு வைத்தி. நீ நல்ல பையன். உங்க அப்பா அம்மா எல்லோரும் நீ இங்க சந்தோஷமாக இருக்கிறதா நினைச்சிண்டு இருக்கா. ஆனா அப்படி இல்லைன்னு தெரியறது. உன் வைஃப் சொன்னதை வைச்சு மட்டும் இல்லை. நீயே கொஞ்சம் ஆர்டிஃபிஷியலா சந்தோஷத்தைப் பூசிக் கொள்வதை என்னால் புரிஞ்சிக்க முடியுது. என்ன பிரச்சினை. அவங்களை ட்ரபிள் பண்ணாதே. அப்புறம் அவங்க 911 -க்கு ஃபோன் செஞ்சாங்கன்னா என்னாகும்? அவங்க அழுகையைப் இன்னோரு தடவைப் பார்த்தால் எனக்கே கோவம் வந்துவிடும் போலிருக்கு " என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு
big brother தோரணையில் பேசினேன். அதற்குள் கையெடுத்துக் கும்பிட்ட வெள்ளைக்காரர் கிட்டே வந்து " மாப்பிள்ள யூ ஆர் க்ரேட்" அப்படின்னு வைத்தியிடம் சொல்லிவிட்டு என் கன்னத்தில் பொளேரென்று ஒரு அடி வைத்தார். நான் ஆடிப்போய்விட்டேன். கூட்டம் கூடும் முன் என்னைக் கூட்டிக் கொண்டு வைத்தி காரிலேறினான். திரும்பிப் பார்க்கும்போது அந்த வெள்ளைக்காரன் "
I dont know what I was doing. I really dont know. I am sorry" என்று சொல்வது தெரிந்தது.
பதறிப் போன என்னை ஆசுவாசப் படுத்திய வைத்தி, " ஸ்ரீதர். எனக்கும் யாரிடமாவது சொன்னால் தேவலாமென்றிருந்தது. நீ என் ஃப்ரெண்டுதானே. நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். அப்ப நாங்க கேல்கரியில் இருந்தோம். எனக்கும் ஷாலினிக்கும் கல்யாணமாகி இரு வருஷங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். இதுக்கப்புறம் உனக்கு சந்தோஷமே இல்லடா என்று நினைத்தோ என்னவோ கடவுள் எங்களை அப்படி திகட்ட திகட்ட ஹாப்பியா இருக்கவிட்டார். இரண்டரை வருஷங்களில் அவ கன்சீவானா. ஆனா அவள் கர்ப்பப்பை வீக்கா இருப்பதால் கவனமாயிருக்கனும்னு டாக்டர் சொன்னார். ஷைலு எவ்வளவு சொல்லியும் ரெஸ்ட் எடுக்காம ஏதாவது வேலை செஞ்சிண்டே இருப்பா. ஒரு நாள் நல்ல ஸ்னோ அன்னைக்கு. நான் ஸ்னோவைத் தள்ளிக் கொண்டிருக்க சொல்ல சொல்லக் கேட்காமல் எனக்கு உதவ வந்தாள். கொஞ்ச நேரத்தில்
tired ஆகிட்டா. ப்ச்.. அவ்வளவுதான்,
miscarriage ஆயிடுச்சு. அதில் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டா. தான் தான் காரணமென்று மனம் வருந்தி அதை மறைக்க என்னிடம் எதற்காவது கோவம் கொள்ளத் தொடங்கினாள். அவளோட
guilty feeling-ஐ மறக்க என்னைக் குறை சொல்வது வழக்கமாக மாறிவிட்டது. நானும் முதலில் அதைப் பெரிசா எடுத்துக்கலை. அது வளர்ந்து இப்படி ஒரு
psychological disorder ஆக ஆகும்னு எதிர்பார்க்கலை. சரி, இடம் மாறினால் அவளுக்குச் சரியாகுமென்று இங்க மாத்தல் வாங்கிண்டு வ்ந்தேன். பெரிய
change ஒன்னுமில்ல. அவங்க அம்மாவிற்கு இங்க வர விசா கிடைக்கவில்லை. இங்க அவ மனசுக்கு இதமா நடக்க ஒரு நெருங்கிய ஃப்ரெண்டும் இல்லை. இப்படிதான் எப்ப சான்ஸ் கிடைச்சாலும் என்னைப் பத்தி கதை கட்டி குறை சொல்லுவா. பாரேன் உன்னைப் பார்த்து ஒருவாரம் கூட இல்ல . அதுக்குள்ள இப்படி. என்ன செய்யறதுன்னு தெரியலை.." என்று வருத்தப்பட்டான்.
" சாரிடா வைத்தி. நானும் சீரியசா உங்கிட்ட பேசியிருக்கக் கூடாது. ஆனா காலையில் கேஸ் ஸ்டேஷனில் ஒருத்தர் திடீரென்று கையெடுத்துக் கும்பிடறார். அப்புறம் உன் மனைவி கண்ணீர் விட்டு அழறா. இங்க வந்தா அந்த வெள்ளைக்காரன் முகத்தில் காலையில் பார்த்த மனிதன் போலவே வேதனை. நான் நம்ப ரெண்டு பேரும் விரும்பிப் படிக்கும் நசிகேதவெண்பா ப்ளாகில் சொல்லப்பட்ட நிகழ்ச்சியையும் கமெண்ட்சையும் நினைத்துப் பார்த்தேன். உன் மாமனார்தான் என்னிடம் உதவிக்குக் கெஞ்சுவதாக தப்பாக அர்த்தம் செய்து கொண்டு உன்னைக் கொஞ்சம் மிரட்டினேன். உன்னோட வாழ்க்கையில் பிரச்சினைன்னா சரி செய்ய வேண்டியது என் கடமையில்லையா. அதான் இப்படி.... அது சரி அந்த வெள்ளைக்காரன் எப்படி மாப்பிள்ள அப்படின்னான்? " என்றேன். வைத்தியும் யோசித்துவிட்டு " நீ சொல்வது போல் என் மாமனாரின் ஆவி உன்னிடம் உதவி கேட்டிருக்கலாம். ஆனால் நீ நினைச்ச மாதிரியில்ல. என் பொண்ணு சொன்னத கேட்டு மாப்பிள்ளைய எதுவும் சொல்லிடாத என்று கெஞ்சியிருக்கலாம். அந்த வெள்ளைக்காரன் மாப்பிள்ள அப்படின்னு கூப்பிட்டது என் மாமனார் குரல் மாதிரிதான் இருந்தது. நல்ல வேளைடா நீ தப்பிச்ச. என் மாமனார் குத்து சண்டை பயில்வானாக்கும். ஒன்னு விட்டார்னா தாடை பேர்ந்துக்கும். " என்றான். நான் தாடையை மெதுவாகத் தடவிக்கொண்டே , " உனக்காக அதையும் தாங்கிப்பேன். நண்பேண்டா..." என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தேன். "உன் மனைவியை நல்லா பார்த்துக்கோ. அவங்களுக்கு மனம்விட்டுப் பேச ஒரு துணை வேணும். பேசாமல் லீவு எடுத்துண்டு அவங்களோடு ஊருக்குப் போயிட்டு அங்க விட்டுவிட்டு வா. நான் கல்யாணத்திற்குப் போறேன் இல்ல. வரும்போது எங்களோடு வரட்டும். அதற்கப்புறம் என் வைஃப் அவங்களுக்கு நல்ல துணையா இருப்பா. அடுத்த குழந்தை பிறந்துவிட்டால் அவங்க உன் பழைய ஷாலினியா ஆயிடுவாங்க" என்றேன். வைத்தியும் "
lets hope for the best. anyway உன் கிட்ட பேசினது மனசுக்கு இதமாக இருக்கு. அதுக்காக வீட்டுக்கு வராம இருந்துடாத. அடுத்த சண்டே கட்டாயம் வா..." என்று சிரித்தபடி விடை கொடுத்தான்.
(துரை, உங்க நசிகேத வெண்பாவில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியைப் படித்ததும் தோன்றியது இந்தக் கதை. உங்களுக்கு நன்றி)