Monday, 8 February 2010

வருங்காலத்தில் நான்...... (1)

             நான் அந்தக் கடிதங்களை எடுத்து வைத்து உட்கார்ந்தவுடன் என் மனைவி "இந்த வருஷ தண்ட செலவை ஆரம்பிச்சாச்சா?" என்று சலித்துக்கொண்டாள்.  உள்ளேயிருந்து வந்த மகன்,"அம்மா அப்படித்தான்.  நீங்கள் எல்லா கடிதங்களையும் ரெடி பண்ணி வையுங்கள் அப்பா.  நான் வரும்போது ஸ்டாம்ப் வாங்கி வருகிறேன்" என்று சொல்லிச் சென்றான்.  மிகவும் ஆவலோடு வந்த பேரனோ, "தாத்தா, எனக்கு லீவுதானே.  நான்  cricket coaching class முடிஞ்சு வந்ததும் ரெண்டு பேரும் கடிதங்களைப் படிக்கலாம் தாத்தா please..."   என்றான்.

            நான் ஒரு retired ஸ்கூல் வாத்தியார்.  நான் என் தொழிலையும், என் மாணவர்களையும் உயிரைவிட அதிகமாக நேசித்தேன், நேசிக்கிறேன்.  ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களிடம் அவர்கள் வருங்கால இலட்சியத்தைக் கடிதத்தில் குறித்து கொடுக்க சொல்வேன்.  சரியாகப் பத்து வருடங்கள் கழித்து அந்தக் கடிதங்களை அவர்களுக்குத் திருப்பி அனுப்புவேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.  மாணவப் பருவ இலட்சிய பாதையிலே பயணித்தவர்களும் உண்டு; இலக்கே இல்லாமல் (லக்கே இல்லாமல் என்றும் சொல்லலாம்) தவறிப் போனவர்களும் உண்டு. முதல் சில வருடங்கள் பலர் ஏளனம் செய்தபோதும் விடாமல் கடிதங்களை எழுதச் சொன்னேன்.  பின்னர் மாணவர்களும் பெற்றோரும் தீவிரமாக ஆலோசனை செய்து எழுதும் அளவிற்கு இந்த கடிதங்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

           "தாத்தா, நான் வந்துட்டேன்!!" என்ற பேரனின் குரல் என் நினைவலைகளை நிறுத்தியது.  இருவரும் சேர்ந்து ஒவ்வொரு கடிதமாகப் படிக்கத் தொடங்கினோம்.

"தாத்தா, அது என்ன பத்து வருடக் கணக்கு?" என்றான் பேரன்.

"பத்து வருடத்தில் எவரும் தனது career பற்றி நிலையான முடிவு எடுத்து பயணம் செய்யத் தொடங்கியிருப்பார்கள்.  தன் நிலையை மாற்ற வேன்டும் என்றாலும் அவர்களுக்குப் போதிய அவகாசம் கிடைக்கும்.  அதனால்தான் பத்து வருடங்கள் என்று முடிவு செய்தேன்" என்றேன்.

"அது சரி தாத்தா. எப்படி எல்லோர் முகவரியும் உனக்குக் கிடைக்கும்.  பத்து வருடங்களில் எவ்வளவு இடம் மாறினார்களோ ?" என்றான்.

"உனக்குத்தான் அப்பா பலமுறை சொல்லியிருக்கிறாரே நான் மாணவர்களிடம் எத்தனை நெருக்கமாகப் பழகினேன் என்று. என் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்னமும் எனக்குக் கடிதமோ, வாழ்த்து அட்டைகளோ அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  மேலும் பத்து வருடங்கள் கழித்து இந்த கடிதங்களைப் படிப்பதில் ஒரு த்ரில் இருப்பதாலும் என்னிடம் தங்கள் முகவரியை எப்படியாவது தெரிவிப்பார்கள்.  இவர்கள்  மூலம் தொடர்பில் இல்லாதவர்களின் முகவரியும் கிடைத்துவிடும். ஒவ்வொரு வருடமும் 80% கடிதங்களை எப்படியாவது அனுப்பிவிடுவேன்.  சரி வா, கடிதங்களைப் படிப்போம்" என்றேன்.

---தொடரும்


No comments: