Sunday 30 May 2010

அம்மா என்றால் அன்பு

               சென்ற பதிவில் பம்மலைப் பற்றி எழுதியபோது அந்த ஊரில் நாங்கள் கழித்த இனிமையான பொழுதுகள் நினைவுக்கு வந்தன.  மலரும் நினைவலைகளில் மூழ்கிய நான் சில முத்தான நிகழ்ச்சிகளைப் பதிவிட ஆசைப்படுகிறேன். அடுத்த 2-3 பதிவுகள் இவற்றைப் பற்றி இருக்கும். (அலர்ட் கொடுத்தாச்சு, எஸ்கேப் ஆக நினைப்பவர்கள் இப்பவே ரெடியாயிடுங்க!!).

              பம்மலில் எங்கள் வீடு ஒன்றரை க்ரௌண்டில் அமைந்தது.  அதில் முக்கால் க்ரௌண்டில் வீடு கட்டி மீதியைச் சும்மா விட்டிருந்தார்கள்.  வீட்டிற்குக் குடிபுகுந்த புதிதில் என் சகோதர சகோதரிகள் தங்கள் தோட்டக் கலை ஆர்வத்தைப் பரிசோதனைப் பண்ணிப் பார்த்தார்கள்.  தென்னை, வாழை, என்று என் அம்மாவும் என்னென்னவோ நட்டார்கள்.  இவையெல்லாம் வளர்ந்ததோ இல்லையோ புல் மட்டும் காடாக மண்டியது.  இதனால் அத்தனை ஜந்துக்களையும் (insects) எங்கள் வீட்டில் பார்க்கலாம்.  ஒரு நாள் இரவு, எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம்.  திடீரென்று விழித்த என் பாட்டி, ஜன்னலில் ஏதோ தெரியவே என் அம்மாவை எழுப்பினார்.  என் அம்மாவும் அதைப் பார்த்து பயந்து என் அண்ணனை எழுப்பினார்.  இந்த சத்தத்தைக் கேட்டு நாங்களும் எழுந்து பார்த்தால்....

              ஜன்னல் கம்பியில் ஒரு பாம்பு சுற்றிக் கொண்டு தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.    லைட்டைப் போடலாமா, போட்டால் பாம்பு உள்ளே குதித்துவிடுமோ என்று யோசித்து பக்கத்து ரூமில் லைட்டைப் போட்டு பார்த்தோம்.  பாம்புதான்; கட்டுவிரியன் என்று எங்கள் பாட்டி identify பண்ண எங்களுக்கோ திகில். என் அண்ணன் இருவரும் கொடியில் துணி உலர்த்தப் பயன்படும் கொம்பைக் கொண்டு 'உஸ், சூ' எனப் பலவிதமாக சத்தம் எழுப்பியவாறே ஜன்னல் பக்கத்தில் லேசாக தட்டிச் சத்தம் எழுப்பினர்.  சில நிமிடங்களுக்குப் பிறகு இவர்கள் கம்பு சுற்றிய அழகைப் பார்த்தோ இல்லை 'துர்கா பரமேஸ்வரி, குழந்தைகளைக் காப்பற்று' என்ற என் பாட்டி மற்றும் அம்மாவின் பிரார்த்தனைக்கு இறங்கியோ என்னவோ பாம்பு வெளிப்பக்கமாக இறங்கிச் சென்றது.  'டகாலெ'னப் பாய்ந்து ஜன்னல் கதவை மூடி 'அப்பாடா' என பெருமூச்சு விட்டோம்.  பின்னர்தான் பார்த்தோம் என் அருமை சகோதரி இத்தனை அமளியிலும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பதை. ('இந்த பாம்பு ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து கொண்டு என்ன யோசித்துக் கொண்டிருந்தது?  ஏன் உள்ளே வரவில்லை' என்று கேட்பவர்களுக்கு --- என் குடும்பத்தில் எல்லோரும் குரட்டை மன்னர்கள்.  விதவிதமான ஸ்ருதியில் வந்து கொண்டிருந்த chorus குரட்டையைக் கேட்டு உள்ளே வர பயந்திருக்கும் என்பது என் கருத்து!!!). மறு நாள் காலையில் விழித்தததும்தான் அந்த கும்பகர்ணிக்கு விஷயம் தெரிந்தது.

               என்னடா, தலைப்புக்கும் விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று யோசிக்கிரீங்களா, இதோ விஷயத்திற்கு வருகிறேன்.  அந்த அக்காவிற்கு கல்யாணமாகிக் குழந்தையும் பிறந்தது.  அந்தக் குழந்தை தூக்கத்தில் சின்னதாக முனகினாலும் டக்கென்று விழித்துவிடுவாள் என் அக்கா.  இந்த மாற்றம் எப்படி வந்தது?  தாயாகிவிட்டாலே மனதிலும் பழக்க வழக்கங்களிலும் பெரும் மாற்றம் வருவது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

               இதே அக்கா பற்றி இன்னொரு சுவையான நிகழ்ச்சி.  எங்கள் வீடு அந்த கால கட்டட முறைப்படி கட்டப்பட்டது. Ceiling மிக உயரத்தில் இருக்கும்.  மேலும் மழைக் காலத்தில் எல்லாம் ஒழுக ஆரம்பிக்கும்.  ஒவ்வொரு மழைக்கால முடிவிலும் கொத்தனார் வந்து 'சொருகோடு' போடுகிறேன் என்று சுண்ணாம்பு அது இதென்று எதையோ வைத்து மொட்டை மாடியைப் பூசிவிடுவார்.  இவற்றின் cumulative effect -ஆக கோடைக் கால இரவுகளில் என்னவோ ஒரு furnace-ல் இருப்பது போல் ஒரு வெப்பம் வந்துவிடும்.  நம்மாலேயே தாங்க முடியாது; பாவம் என் அக்காவின் குழந்தை எப்படி தாங்கும்?.   இரவெல்லாம் தூங்காமல் அழும். என் அம்மா, அக்கா மற்றும் பாட்டிக்கு night shift தான்.  என் அம்மா பாட்டு பாடி சமாதானம் செய்ய முயல என் அக்கா குழந்தையை ஆட்டி pacify பண்ண முயற்சி செய்வாள்.

                ஒரு நாள் இந்த மாதிரி நடக்கும்போது என் பாட்டி horlicks கலந்து வந்து என் அம்மாவிடம், " இந்திரா, இதக் கொஞ்சம் குடிச்சுக்கோ.  பாடிப் பாடி தொண்டை கட்டி விட்டது பார்" என்று கொடுத்தார்.  என் அம்மாவோ "அம்மா, என் பொண்ணுக்கு கொடு.  அவதான் குழந்தைய வச்சிண்டு நடையா நடக்கறா" என்றார்.  என் அக்காவோ " என்னை அப்புறம் கவனிக்கலாம்.  முதலில் என் குழந்தையை சமாதான செய்யுங்கள்.  பாவம் அழுது அழுது வாடிவிட்டது" என்றாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பாசம் ஒரு direction-லேயே flow ஆவது (அதாவது ஒவ்வொருவரும் தன் குழந்தையைப் பற்றியே சிந்தித்தது) வியப்பாக இருந்தது.  தாய்ப் பாசத்திற்கான classic example ஆன இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.

 (இன்னும் உம் கொட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு, கதை முடிந்து விட்டது போய்ட்டு வாங்க.  என்ன, அந்த குழந்தை அழுகையை நிறுத்தியதா என்று கேக்கறீங்களா?  எப்படியோ,
ஒரு கூலர், இரண்டு fan என்று வைத்து நிலமையைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டோம்!!!)

9 comments:

எல் கே said...

அருமையான பதிவு.
//அந்தக் குழந்தை தூக்கத்தில் சின்னதாக முனகினாலும் டக்கென்று விழித்துவிடுவாள் என் அக்கா. ///
தாய்மையின் பரிமாணம் அது.

ஒரு சில தந்தைகளும் அவ்வாறு விழிப்பது உண்டு. சிறு வயதில் கும்பகர்ணனுக்கு தம்பி என்று பெயர் வாங்கியவன் நான். இப்பொழுது என் பெண் சிணுங்கும் குரல் கேட்டாலே தூக்கம் ஓடி போகிறது. அவள் தூங்கியப்பிறகே தூக்கம் வருகிறது

meenakshi said...

ஒப்பற்ற உண்மை! என் அப்பா தவறியதற்கு நான் இந்தியா சென்றபோது, வெளி வேலைகளை முடித்து விட்டு வந்து, நான் சற்று சோர்ந்து உட்கார்ந்த போது, சாதம் பிசைந்து வந்து எனக்கு ஊட்டி விட்டார்கள். அப்பா தவறிய அந்த மனநிலையிலும் அவர்கள் என்னிடம் காட்டிய அன்பு. இதை விட பெரிது, பாதி ராத்திரியில் கரண்டு போனதை உணராமல் தூங்கி கொண்டிருந்த என் குழந்தைகளுக்கு நான் விசிறிகொண்டிருந்த போது, என் அருகில் உட்கார்ந்து என் அம்மா எனக்கு விசிறினார். 'தாயன்புக்கு ஈடேதம்மா, ஆகாயம் கூட அது போதாது.....'
அருமையான பதிவு! முடிந்தால் உங்கள் அம்மா பாடிய பாட்டு ஒன்றை பதிவிடுங்களேன்.

geetha santhanam said...

நன்றி மீனாக்ஷி. நானும் என் அம்மாவின் 'அபிராமி அந்தாதி' (துரை கொடுத்த CD)யிலிருந்து ஓரிரு பாடல்களை எங்கள் ப்ளாக்கிற்கு அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் கேட்டு செய்கிறேன்.
நன்றி LK. நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. அதுவும் மகளென்றால் அப்பாவிற்கு extra பாசம்தான். (என் மகளையும், என் கணவரையும் பார்த்ததால் சொல்கிறேன்) ---கீதா

ஸ்ரீராம். said...

தாய்ப் பாசத்துக்கு இணையேது...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான பதிவு கீதா... அம்மா என்றால் அன்பு தான் எப்பவும்....அது எந்த ஊரு நாடு மொழினாலும் மாறாது....

அப்பாதுரை said...

nostalgic

geetha santhanam said...

பதிவைப் படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி துரை, அப்பாவி தங்கமணி. ---கீதா

geetha santhanam said...

பதிவைப் படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி துரை, அப்பாவி தங்கமணி. ---கீதா

சாய்ராம் கோபாலன் said...

கீது, என்னுடைய வெளியூர் பயணத்தில் இதை மிஸ் செய்துவிட்டேன். மனம் விட்டு சிரித்தேன். அதேபோல் உங்கள் பம்மல் வீட்டை அப்படியே வலம் வந்தது போல் ஒரு உணர்வு இதை படிக்கும்போது. துரை சொல்லியதுபோல் nostalgic தான் !