LK மற்றும் RVS அவர்களின் வலைப்பூக்களில் தங்கள் பெயர்காரணம் பற்றி படித்ததும் எனக்கும் அது குறித்து எழுதத் தோன்றியது. பெயர் என்றால் உண்மையிலேயே 'பெத்த (பெரிய) பெயர்' எங்கள் குடும்பத்தில் பல பேருக்கு உண்டு. என் தாத்தாவின் பெயர் யஞ்யநாராயண ஐயர். '
black board-ல் இந்தப் பக்கம் ஆரம்பித்து அந்தப் பக்கம் வரை கையெடுக்காமல் எழுதுவேனாக்கும்' என்று அவர் தன் பெயரைப் பற்றி பெருமையாகச் சொல்வார். தாத்தாவின் பெருமையைக் காப்பாற்ற பேத்தியான எனக்கும் நீளமான பெயர் -- 'கீதா சரஸ்வதி வெங்கட சுப்ரமணியன்'.
கனடாவிலும் பின்னர் அரபு நாடுகளிலும் இந்தப் பெயரைப் படிக்க அவர்கள் படும் பாடும், பெயரைப் படித்து அதைப் படுத்தும் பாட்டையும் சொல்ல இந்தப் பதிவு போதாது. நான் UBC-ல் வேலை செய்யும்போது யூனிவர்சிட்டி ஆஃபீசில் என்னை '
lady with the lo..ng name' என்றுதான் அடையாளம் சொல்லுவார்கள். எப்போதும் என் முழுப்பெயரைப் பேப்பரில் எழுதி அதைக் கையில் வைத்திருப்பேன். அவர்களுக்கு என் பெயரைச் சொல்லிக் கட்டுப்படியாகாதென்பதால் ரெடியாகக் கையிலிருக்கும் பேப்பரை எடுத்துக்காட்டி 'இந்தப் பெயருக்கு ஏதாவது மெசேஜ் இருக்கா' என்று கேட்டுவிடுவேன்.
என் வீட்டில் என் பெயரைச் சுருக்கிக் 'கீது' என்று கூப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் வேலை செய்பவர் ஒருமுறை நான் எங்கே போயிருக்கிறேன் என்பதை 'கீது கீதாம்மா' (
Geedhu keedha? என்று படிக்கவும்) என்று கேட்க இன்று வரையில் என் அண்ணன் என்னை அப்படிச் சொல்லிக் கடுப்பேத்துவான்.
இப்படி நீட்டினாலும், வெட்டினாலும் (நகை)சுவை சேர்க்கும் பெயர் என்னுடையது. சமீபத்தில் என் பெயருக்குக் கிடைத்தது மற்றொரு ப(ம)ட்டம். என் மகள் படிக்கும் பள்ளியின் ஆண்டு மலரைப் படித்து என் மகள் சிரித்துக் கொண்டே 'அப்பா இதைப் பாரேன்" என்று என் கணவரிடம் காட்டினாள். இருவரும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கவே என்ன என்று கேட்டேன். அதில் ஒரு கவிதை எழுதிய மாணவியின் பெயர் கீது மட்டம். 'எப்படி உன் திறமை கேரளாவரைக்கும் தெரிஞ்சிருக்கே' என்று என் கணவரும் மகளும் அன்று முழுவதும் என்னைக் கிண்டல் செய்தார்கள்.
இப்படி கிண்டல் செய்தாலும் எனக்கு என் பெயர் பிடிக்கும். என்னை மறந்தாலும் யாரும் என் நீளமான
unique பெயரை மறக்கமாட்டார்கள். மேலும் இந்தப் பெயரில்தான் இமெயில் ஐடி தெரிவு செய்ய
gitaven, gitasara, saraswat, g2etha என்று கூகிளும் யாஹூவும் மலைத்துப் போகுமளவு சாய்ஸ் கிடைக்குமே.
பெயர்களைப் பற்றி எழுதும்போது என் மகளின் பள்ளி ஆசிரியையின் வேடிக்கையான பெயர் நினைவுக்கு வருகிறது. அவர் பெயர் 'உப்புமா புரி'. முதலில் நம்ப மறுத்த நான் பள்ளி கையேட்டில் அவர் பெயரைப் பார்த்ததும் அன்று முழுதும் சிரித்தேன்.
என் வீட்டில் உறவுமுறைப் பெயர் குழப்பமும் காமெடியாக இருக்கும். என் அம்மாவின் அம்மாவை (அதாவது பாட்டியை) நாங்கள் சித்தி என்றே அழைப்போம். அவரின் (அதாவது என் பாட்டியின்) அக்காவை நாங்கள் எல்லோரும் அக்கா என்றே அழைப்போம். ஒருமுறை என் சகோதரி என் அம்மா, பாட்டி (சித்தி) மற்றும் என் பாட்டியின் அக்கா (அக்கா) எல்லோருடனும் கோவில் சென்றிருக்கிறார். அங்கு அவரின் தோழியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கையில் இவர்களைத் தோழிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். 'இது என் அம்மா. (பின் வயதான என் பாட்டியைக் காட்டி) இது என் சித்தி. (பின் என் பாட்டியைவிட கிட்டத்தட்ட 10-12 வயது மூத்த அவரின் சகோதரியைக் காட்டி) இது எங்க அக்கா' என்று அவள் சொன்னதைக் கேட்டு அந்தத் தோழிக்கு மயக்கம் வராத குறைதான்.
குழப்பங்களைக் எழுதிக் குழம்பச் செய்வது என்று ஆனபின் மொழி வேறுபாட்டால் ஏற்பட்ட குழப்பங்களையும் எழுதிவிடுகிறேன். நான் வேலைக்குச் சென்றபோது எனக்கு ஆஃபீசிலிருந்து கார் அனுப்புவார்கள். நானும் என்னுடன் பணிபுரியும் நண்பரும் ஒன்றாகச் செல்வது வழக்கம். எங்கள் காரோட்டி ஒரு மலையாளி. ஒரு நாள் என்னுடன் பணிபுரியும் நண்பர் வரவில்லை. அதையொட்டி எனக்கும் டிரைவருக்கும் நடந்த உரையாடல்.
நான்: ஏன் அவர் இன்று வரவில்லை.
டிரைவர்: அவர் ராவிலே போயி.
நான்: அது சரி, இப்ப ஏன் வரலே?
டிரைவர்: அதானே பறஞ்சது, ராவிலே போயி.
நான் உடனே இருவருக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில், "
I understand that. why didn't he come now?' என்று கொஞ்சம் எரிச்சலோடு கேட்கவும் '
madam, he went early in the morning' என்று அவர் சொல்லவும்தான் மலையாளத்தில் ராவிலே என்றால் விடிகாலை என்று பொருள் என அறிந்தேன்.
அது போல் கனடாவில் Quebec-ல் பெரும்பாலும் French பேசுவார்கள். அங்கு இருந்த சமயம் தினமும் காலையில் என்னைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தவாறே 'ca va?' என்று கேட்பார்கள். இதென்னடா காலங்கார்த்தால சாவா, சாவா என்கிறார்களே என்று எனக்கு சங்கடமாயிருக்கும். பின்னர்தான் அறிந்தேன் 'comment ca va?" (how are you) என்பதைத்தான் சுருக்கி 'ca va' என்று கேட்கிறார்கள் என்று.
இந்த கதம்ப மாலைக்குச் செண்டாக நான் சிறுவர்மலரில் படித்து ரசித்த ஒரு ஜோக்:
ராமு: உன் அண்ணன் பாடுவானா?
சோமு: சுமாராப் பாடுவான்.
ராமு: (எப்பொழுதிலிருந்து அண்ணன் பாட்டு பாடுவான் என்ற பொருளில்) எப்பொழுதிலிருந்து?
ராமு: எப்பவுமே சுமாராதான் பாடுவான்.