Tuesday, 1 March 2011

கதம்பம்


          

              LK  மற்றும் RVS அவர்களின் வலைப்பூக்களில் தங்கள் பெயர்காரணம் பற்றி படித்ததும் எனக்கும் அது குறித்து எழுதத் தோன்றியது. பெயர் என்றால் உண்மையிலேயே 'பெத்த (பெரிய) பெயர்' எங்கள் குடும்பத்தில் பல பேருக்கு உண்டு. என் தாத்தாவின் பெயர் யஞ்யநாராயண ஐயர். 'black board-ல் இந்தப் பக்கம் ஆரம்பித்து அந்தப் பக்கம் வரை கையெடுக்காமல் எழுதுவேனாக்கும்'  என்று அவர் தன் பெயரைப் பற்றி பெருமையாகச் சொல்வார்.  தாத்தாவின் பெருமையைக் காப்பாற்ற பேத்தியான எனக்கும் நீளமான பெயர் -- 'கீதா சரஸ்வதி வெங்கட சுப்ரமணியன்'.

              கனடாவிலும் பின்னர் அரபு நாடுகளிலும் இந்தப் பெயரைப் படிக்க அவர்கள் படும் பாடும், பெயரைப் படித்து அதைப் படுத்தும் பாட்டையும் சொல்ல இந்தப் பதிவு போதாது.  நான் UBC-ல் வேலை செய்யும்போது யூனிவர்சிட்டி ஆஃபீசில் என்னை 'lady with the lo..ng name' என்றுதான் அடையாளம் சொல்லுவார்கள். எப்போதும் என் முழுப்பெயரைப் பேப்பரில் எழுதி அதைக் கையில் வைத்திருப்பேன்.  அவர்களுக்கு என் பெயரைச் சொல்லிக் கட்டுப்படியாகாதென்பதால் ரெடியாகக் கையிலிருக்கும் பேப்பரை எடுத்துக்காட்டி 'இந்தப் பெயருக்கு ஏதாவது மெசேஜ் இருக்கா' என்று கேட்டுவிடுவேன்.

             என் வீட்டில் என் பெயரைச் சுருக்கிக் 'கீது' என்று கூப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் வேலை செய்பவர் ஒருமுறை நான் எங்கே போயிருக்கிறேன் என்பதை 'கீது கீதாம்மா' (Geedhu keedha? என்று படிக்கவும்) என்று கேட்க இன்று வரையில் என் அண்ணன் என்னை அப்படிச் சொல்லிக் கடுப்பேத்துவான்.

              இப்படி நீட்டினாலும், வெட்டினாலும் (நகை)சுவை சேர்க்கும்  பெயர் என்னுடையது.  சமீபத்தில் என் பெயருக்குக் கிடைத்தது மற்றொரு ப(ம)ட்டம். என் மகள் படிக்கும் பள்ளியின் ஆண்டு மலரைப் படித்து என் மகள் சிரித்துக் கொண்டே 'அப்பா இதைப் பாரேன்" என்று என் கணவரிடம் காட்டினாள்.  இருவரும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கவே என்ன என்று கேட்டேன்.  அதில் ஒரு கவிதை எழுதிய மாணவியின் பெயர் கீது மட்டம்.  'எப்படி உன் திறமை கேரளாவரைக்கும் தெரிஞ்சிருக்கே' என்று என் கணவரும் மகளும் அன்று முழுவதும் என்னைக் கிண்டல் செய்தார்கள். 

              இப்படி கிண்டல் செய்தாலும் எனக்கு என் பெயர் பிடிக்கும். என்னை மறந்தாலும் யாரும் என் நீளமான  unique பெயரை மறக்கமாட்டார்கள். மேலும் இந்தப் பெயரில்தான் இமெயில் ஐடி தெரிவு செய்ய gitaven, gitasara, saraswat, g2etha என்று கூகிளும் யாஹூவும் மலைத்துப் போகுமளவு சாய்ஸ் கிடைக்குமே.

               பெயர்களைப் பற்றி எழுதும்போது என் மகளின் பள்ளி ஆசிரியையின் வேடிக்கையான பெயர் நினைவுக்கு வருகிறது.  அவர் பெயர் 'உப்புமா புரி'. முதலில் நம்ப மறுத்த நான் பள்ளி கையேட்டில் அவர் பெயரைப் பார்த்ததும் அன்று முழுதும் சிரித்தேன்.

               என் வீட்டில் உறவுமுறைப் பெயர் குழப்பமும் காமெடியாக இருக்கும்.  என் அம்மாவின் அம்மாவை (அதாவது பாட்டியை) நாங்கள் சித்தி என்றே அழைப்போம்.  அவரின் (அதாவது என் பாட்டியின்) அக்காவை நாங்கள் எல்லோரும் அக்கா என்றே அழைப்போம்.  ஒருமுறை என் சகோதரி என் அம்மா, பாட்டி (சித்தி) மற்றும் என் பாட்டியின் அக்கா (அக்கா) எல்லோருடனும் கோவில் சென்றிருக்கிறார்.  அங்கு அவரின் தோழியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கையில் இவர்களைத் தோழிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  'இது என் அம்மா. (பின் வயதான என் பாட்டியைக் காட்டி) இது என் சித்தி.  (பின் என் பாட்டியைவிட கிட்டத்தட்ட 10-12 வயது மூத்த அவரின் சகோதரியைக் காட்டி) இது எங்க அக்கா'  என்று அவள் சொன்னதைக் கேட்டு அந்தத் தோழிக்கு மயக்கம் வராத குறைதான்.

               குழப்பங்களைக் எழுதிக் குழம்பச் செய்வது என்று ஆனபின் மொழி வேறுபாட்டால் ஏற்பட்ட குழப்பங்களையும் எழுதிவிடுகிறேன்.  நான் வேலைக்குச் சென்றபோது எனக்கு ஆஃபீசிலிருந்து கார் அனுப்புவார்கள்.  நானும் என்னுடன் பணிபுரியும் நண்பரும் ஒன்றாகச் செல்வது வழக்கம். எங்கள் காரோட்டி ஒரு மலையாளி. ஒரு நாள் என்னுடன் பணிபுரியும்  நண்பர் வரவில்லை. அதையொட்டி எனக்கும் டிரைவருக்கும் நடந்த உரையாடல்.

நான்:  ஏன் அவர் இன்று வரவில்லை.
டிரைவர்: அவர் ராவிலே போயி.
நான்:  அது சரி, இப்ப ஏன் வரலே?
டிரைவர்: அதானே பறஞ்சது, ராவிலே போயி.

நான் உடனே இருவருக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில், " I understand that. why didn't he come now?' என்று கொஞ்சம் எரிச்சலோடு கேட்கவும் 'madam, he went early in the morning' என்று அவர் சொல்லவும்தான் மலையாளத்தில் ராவிலே என்றால் விடிகாலை என்று பொருள் என அறிந்தேன்.

              அது போல் கனடாவில் Quebec-ல் பெரும்பாலும் French பேசுவார்கள்.  அங்கு இருந்த சமயம் தினமும் காலையில் என்னைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தவாறே 'ca va?' என்று கேட்பார்கள்.  இதென்னடா காலங்கார்த்தால சாவா, சாவா என்கிறார்களே என்று எனக்கு சங்கடமாயிருக்கும்.  பின்னர்தான் அறிந்தேன் 'comment ca va?" (how are you) என்பதைத்தான் சுருக்கி 'ca va' என்று கேட்கிறார்கள் என்று.

              இந்த கதம்ப மாலைக்குச் செண்டாக நான் சிறுவர்மலரில் படித்து ரசித்த ஒரு ஜோக்:

ராமு: உன் அண்ணன் பாடுவானா?
சோமு: சுமாராப் பாடுவான்.
ராமு: (எப்பொழுதிலிருந்து அண்ணன் பாட்டு பாடுவான் என்ற பொருளில்) எப்பொழுதிலிருந்து?
ராமு: எப்பவுமே சுமாராதான் பாடுவான்.



23 comments:

பத்மநாபன் said...

பெயர் கதம்பம் ஜோருங்க...

``ராவுல போயி`` ``குறைய`` போன்ற வார்த்தைகளில் ம.மக்களிடம் நானும் ஏமாற்ந்ததுண்டு.. ( குறைய என்றால் நிறைய என தமிழில் அர்த்தம் ) இப்ப தம்மலையாளம் பேசும் அளவுக்கு வந்தாச்சு...

வெளிநாடுகளில் நம் பெயர்கள் படும் பாடு வெகு நகைச்சுவையாக இருக்கும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

geetha santhanam said...

நன்றி பத்மநாபன்ஜி. வளைகுடா நாடுகளில் இருப்பதன் இன்னொரு பலன்- மலையாளம் புரியுமளவாவது கற்பது. எங்கள் வீட்டில் வேலை செய்பவர் தெலுங்கு. அவரிடம் முடிந்தவரை எல்லா வார்த்தைகளுக்கும் 'ஸ்டவ்வுலு, சோஃபாலு' என்று பேசி கொஞ்சம் 'காதா, லேதா' சொல்லி சமாளிப்பேன்.

அப்பாதுரை said...

சிரித்து மாளவில்லை.
இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.
'ச்ரேயஸ்.. ச்ரேயஸ்' என்று அழைக்கையில், வேலைக்காரியோ ஸ்கூல் ரிக்ஷாக்காரரோ சொன்னது: "ஏம்மா, பையனுக்கு அழகா சுரேஸ்னு பேரை வச்சுட்டு இன்னாத்துக்கு சிரியேயசுனு இஸ்த்து இஸ்த்து நாசமாக்குறீங்க?"

geetha santhanam said...

நன்றி துரை. இதை எழுதும்போது நானும் ஸ்ரேயசை நினைத்துக்கொண்டேன். லதாவுடைய தோழி லதாவிடம் கேட்டாராம். உங்க பேரான லதா, பிரஹதா இரண்டையும் சேர்த்து பேரனுக்கு பிரஹலாத் அப்படின்னு வைச்சீங்களான்னு. இது எப்படி இருக்கு?

எல் கே said...

ஹஹஹஹா நல்ல குழப்பங்கள் . அந்த பிரெஞ்சு குழப்பம் சூப்பர்

geetha santhanam said...

நன்றி LK ஜி

மோகன்ஜி said...

கீதா மேடம்! நகைச்சுவையுடன் எழுதியிருக்கிங்க! மலயாளத்துடன் ஆரம்ப நாட்களில் 'மல்லு' கட்டி பின்னர் எனக்கும் அந்தமொழி பழகிவிட்டது.
அப்பாஜியின் 'ஸ்ரேயஸ்' ரசித்தேன்.

ஆர்.வீ.எஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்கி நானும் இன்று பெயர் பிறந்த கதை பதிவிட்டிருக்கிறேன். பாருங்கள்

geetha santhanam said...

நன்றி மோகன்ஜி. உங்கள் பெயர் காரணத்தைத் தெரிந்துகொள்ள இதோ உங்கள் ப்ளாகிற்குச் செல்கிறேன்.

meenakshi said...

பெயர் படுத்தும் பாடு சூப்பர்! :) நல்ல நகைசுவையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! மிகவும் ரசித்தேன்!
'கீது கீதா.....' மனம்விட்டு சிரித்தேன்.
இந்த பதிவு எனக்கு நடந்த பல சுவாரசியமான நினைவுகளையும் நினைவூட்டியது. நான் முதன் முதலில் வேலைக்கு சென்றதே ஒரு கேரள அரசாங்க நிறுவனத்தில்தான். அங்கு என் பெயர் பட்ட பாடும், அவர்கள் பேசுவதை நான் புரிந்து கொள்ள பட்ட பாடும் மிகவும் சுவாரசியம். அவர்கள் ஆங்கிலத்தையும் மலையாளத்தில் பேசி விடுவார்கள். வேலைக்கு சென்ற புதிதில் நான் பட்ட அவஸ்த்தைகள் இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கிறது.

geetha santhanam said...

நன்றி மீனாக்ஷி. உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் எழுதி அனுப்புங்களேன். போட்டுவிடலாம்.

சாய்ராம் கோபாலன் said...

சூப்பர் கீதா சரஸ்வதி வெங்கட சுப்ரமணியன் - ஐயோ எனக்கு சோர்வு வந்து இன்னொரு காபி அம்மாவிடம் வாங்கி குடித்துவிட்டு மிச்சதை எழுதுகின்றேன்.
உன் பெயரை இந்த ஊர்காரர்களுக்கு ஸ்பெல் பண்ணி சொல்லி இருந்தால் உன் நிலைமை ? அதனால் தான் என் பெயர் இங்கே வந்த பிறகு சாய்ராம் என்பது போய் சாய் ஆனது !!

நான் என் சிறியவனுக்கு வேதாந்த் தவிர நான் யோசித்த இன்னொரு பெயர் "ப்ரஹன்" - பாட்டியின் பெயரை ஆணாக சுருக்கி. ஏனோ வைக்கவில்லை. முதலில் அபிஷேக் (என் மனைவி ஆதித்தியா போல் இவனுக்கு "A"வில் இருக்கட்டும் என்றதால்) என்று வைத்து அப்புறம் முதலில் யோசித்த வேதாந்த் மாற்றினோம்.

அதற்கே அவனுக்கு இருந்த ஒரே சாட்சியான Birth Certificate லண்டன் செல்லுமுன் பாஸ்போர்ட் வாங்க மாற்ற ஒரு பைசா லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று எட்டு மாதம் அலைந்தவன் நான் !! காரில் வெள்ளையும் சொள்ளையும் போட்டுபோவதால் அந்த பெங்களூர் அரசாங்க அதிகாரி காசு வாங்காமல் தரமாட்டேன் என்று ஒரே பிடிவாதம். நான் வாசலில் பிச்சைக்காரன் போல் உட்கார்ந்து பைசா கேள் உனக்கு வேண்டிய 1000 Rs போடுகின்றேன் என்று சொல்ல - ஒரே சண்டை. ஆகமொத்தம் அவரை பற்றி பெரிய அதிகாரியிடம் போட்டு கொடுத்து Birth Certificate பெயர் மாற்றி வாங்கினேன் (Rs 35 கொடுத்து !!). இப்போது அமைச்சர் ராஜா கட்டியிருக்கும் வீட்டை பார்த்தால் இந்த சேல்ஸ் வேலைக்கு பதில் பச்சையப்பன் கல்லூரியில் அரசியலை நாடி இருக்கலாம் என்று தோன்றுகின்றது !!

ஆனால் வேதாந்தத்துக்கு சர்மன் பெயர் "யஞ்யநாராயண்" தான் !! எந்த கோவிலில் அர்ச்சனை செய்தாலும் பெயர் சொன்னவுடன் "நீங்கள் திருநெல்வேலியா" என்று கேட்கும் அளவு அந்த பெயர் அவ்வளவு unique !!

"என் பிறந்தாய் மகனே" என்று புலம்பும் அளவு நான் மூன்றாவதாய் அடுத்தடத்து பிறந்ததால் என் பெயர் தான் என் வீட்டில் ரொம்ப சீரழியும். என் அம்மா பாதி நாள் "சாய் கோய் பேய்" என்று தான் பல நாள் கத்துவாள். நான் பதிலுக்கு "தர்மா குர்மா" என்று சொல்லுவேன். என் அம்மாவை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே தறுதலை நான்தான் !

எங்கள் வீட்டில் சிறு வயதில் எல்லோருக்கும் ஒரு பட்டபெயர் வேறு !! நான் எட்டு மாதத்தில் பிறந்தாதல் வந்த சுறுசுறுப்பு நிறையேவே என்பதால் எனக்கு "சில்வண்டு", ரோஹிணிக்கு "வெண்கல பானை" எப்போதும் முகத்தை அப்படி தூக்கிவைத்துக்கொள்வாள், வெங்கடேஷுக்கு "வெங்காயம் மற்றும் வெங்குசு ", குமாருக்கு குண்டாய் இருந்தான் என்பதால் " குண்டாப்பை", நாராயணன் எப்போதும் தெருவில் விளையாட போய்விடுவான் என்பதால் "நடுத்தெரு நாராயண்" அவனை துரை மட்டும் "நான்ஸி" என்று குப்பிடுவான்.

geetha santhanam said...

சாய்ராம், சுவையான பின்னூட்டம். பட்டப் பெயர்களும், உன் லஞ்ச ஒழிப்புப் போராட்டமும் interesting- ஆக இருந்தது. 'இந்தியன்' நீதானோ.

ஸ்ரீராம். said...

பெயர் வந்த காரணம் குறித்து இவ்வளவு சுவாரஸ்யமாய் எழுத முடியும் என்று காட்டி இருக்கிறீர்கள். சுவையான குழப்பங்கள். குறிப்பாக கீது கீதா.. பின்னூட்ட அனுபவங்களும் மிகுந்த சுவாரஸ்யம்..

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம்ஜி.

சாய்ராம் கோபாலன் said...

//geetha santhanam said... சாய்ராம் ...உன் லஞ்ச ஒழிப்புப் போராட்டமும் interesting- ஆக இருந்தது. 'இந்தியன்' நீதானோ.//

நீ வேறே கீது, நான் மனுஷனே இல்லை மிருகம் என்று பெயர் வாங்கிக்கொண்டு இருக்கின்றேன். இந்திய மிருகம் என்று வேண்டுமானால் சொல்லு

அப்பாதுரை said...

கொம்பு போல இருக்கேனு நெனச்சேன் சாய்..

Yaathoramani.blogspot.com said...

கதம்பம் பிரமாதம்
ரசித்துச் சுவைத்தேன்
தொடர வாழ்த்துக்கள்

geetha santhanam said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரமணன்ஜி.
சாய்ராம் துரை சொன்னதும் எனக்கும் அப்படி இருப்பதுபோல் இருக்கு.

சாய்ராம் கோபாலன் said...

துரை / கீது - உங்கள் கொம்பு கமெண்ட் புரியவில்லை. மிருகமாய் இருப்பதாலோ என்னவோ ?

தக்குடு said...

பெயர்காரணம் நன்னா இருக்கு மேடம்! என்னோட உண்மையான பெயர்காரணம் ஒரு பதிவா எழுதனும் (மூனு பேர் எழுத சொல்லி இருக்கா). அனந்தராம ஹரிஹரசுப்ரமணியன்னு ஒரு தோஸ்த் எங்க தெருல எனக்கு உண்டாக்கும்...:)

geetha santhanam said...

நன்றி தக்குடு அவர்களே. உங்களை இங்க வரவழைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு.

தக்குடு said...

கீதா மாமி, தக்குடு ஒன்னும் பெரிரிரிய ஆள் கிடையாது, "நம்பாத்துக்கு பால்கோவா சாப்பிட வாடாகோந்தை!"னு வாஞ்சையோட யாரு அழைச்சாலும் ஓடி வந்துடும்...:) நீங்க தோஹாவுக்கு பக்கத்து ஊர்தான் போலருக்கு!!..:)