Tuesday, 12 April 2011

சென்னைக் கதம்பம்


             என் மகளின் பள்ளி விடுமுறையை ஒட்டி சென்னைக்கு ஒரு விசிட் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது.  இரண்டு கல்யாணங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வேறு.  இப்பொழுதெல்லாம் கல்யாணம் ஒரு திருவிழா போல் நடக்கிறது.  வெஜிடபிள் கார்விங்க் என்று காய்கறியில் பிள்ளையார், கிருஷ்ணர் முதல்  பெங்குவின், பூக்கள் என்று கலக்குகிறார்கள்.  அதுபோக சின்னப் பசங்களுக்குக் குச்சிமிட்டாய், பஞ்சுமிட்டாய் கடை வேறு.  சில திருமணங்களில் மெஹந்தி மற்றும் தலையலங்காரக் கடைகளும் உண்டாம்.  எல்லாம் காண்டிராக்டர்களின் பிஸினஸ் டெக்னிக்தான்.

            திருமணம் என்றவுடன் தங்கம் , வெள்ளி விலை நினைவுக்கு வருகிறது.  ஒரு கையகல சின்ன வெள்ளித்தட்டு விலை  நான்காயிரமாகிறது.  டி நகர் தங்க மாளிகையில் கல்யாண சீர்வரிசை என்று வெள்ளியில் பெரிய தட்டு, பன்னீர் சொம்பு, சொம்பு போன்றவற்றை ஒரு கண்ணாடி பீரோவில் வைத்திருக்கிறார்கள். விலைவாசி ஏறும் போக்கைப் பார்த்தால் இன்னும் சில காலத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தங்கமாளைகைக்குக் கூட்டிக் கொண்டு வந்து 'நல்லா பாத்துக்கங்க' என்று இந்த சீர்வரிசைகளைக் காட்டி கூட்டிக் கொண்டு போக வெண்டியதுதான் போலும். 

              தேர்தல் நேரத்தில் ப்ளாகெல்லாம் படிக்க முடியாமல் சென்னையில் மாட்டிக் கொண்டோமே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்தது.  ஆனால் சென்னையில் call taxi டிரைவர்களிடம் என் கணவர் உரையாடிக் கொண்டு வந்தபோது அவர்களின் அரசியல் அலசல் ஆச்சர்யமாக இருந்தது. கால் டாக்சி ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று சாதாரண குடிமக்கள் கூட ஊழல், விலைவாசி உயர்வு, கூட்டணிக் கட்சிகளின் பலம் என்று அக்கு வேறு ஆணி வேறாக அலசுவதைக் கேட்கும்போது இந்தத் தேர்தலில் ஒரு நல்ல முடிவை மக்கள் ஆராய்ந்து எடுப்பார்கள் என்று தோன்றியது.  ஆனால் பாவம் அவர்களுக்கு ஒரு நல்ல மாறுதலை அளிக்கும் தலைமை இல்லையோ என்ற வருத்தம் தோன்றியது. தனியார் தொலைக்காட்சிகள் அழுகை சீரியலுக்குத்தான் லாயக்கு என்ற என் எண்ணம் மாறியது.  மக்களின் இந்தப் பரவலான அரசியல் அறிவுக்குத் தனியார் தொலைக்காட்சிகள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ப்ளாக் படிக்கும் மற்றும் எழுதும் மக்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: கட்டாயமாக உங்கள் ஓட்டைப் போடுங்கள். இத்தனை அரசியல் ஆர்வம் மற்றும் முதிர்ச்சியுடன் இருக்கும் அந்தப் பாமரர்களின் கனவு பலிக்க நீங்கள் செய்யக் கூடிய சின்ன விஷயம் உங்கள் ஓட்டைக் கட்டாயமாகப் போடுவதுதான்.

               அதே போல் என்னை வியப்பில் ஆழ்த்தியது உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் நம் மக்கள் காட்டிய ஆர்வம். எனக்குக் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கிடையாது.  கல்லூரிப் பருவத்துடன் கிரிக்கெட்டிற்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தன்று என் சகோதரி குழந்தைகளுடன் பீச்சிற்குப் போனால் அங்கு கூட்டமே இல்லை.  நல்லதாப் போச்சு என்று குழந்தைகள் ராட்டினம் மற்றும் இதர விளையாட்டுகளை ஆசை தீர விளையாடினார்கள். வீட்டிற்கு வந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்தால் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று ஒவ்வொரு ஆறுக்கும், நாலுக்கும் எழுந்த சந்தோஷக் கூச்சல் கேட்டு வியப்பாக இருந்தது. இந்தியா உலகக் கோப்பை வென்றதற்கு தீபாவளியைவிட அதிகம் வெடித்தார்களோ என்று தோன்றியது.