என் மகளின் பள்ளி விடுமுறையை ஒட்டி சென்னைக்கு ஒரு விசிட் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு கல்யாணங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வேறு. இப்பொழுதெல்லாம் கல்யாணம் ஒரு திருவிழா போல் நடக்கிறது. வெஜிடபிள் கார்விங்க் என்று காய்கறியில் பிள்ளையார், கிருஷ்ணர் முதல் பெங்குவின், பூக்கள் என்று கலக்குகிறார்கள். அதுபோக சின்னப் பசங்களுக்குக் குச்சிமிட்டாய், பஞ்சுமிட்டாய் கடை வேறு. சில திருமணங்களில் மெஹந்தி மற்றும் தலையலங்காரக் கடைகளும் உண்டாம். எல்லாம் காண்டிராக்டர்களின் பிஸினஸ் டெக்னிக்தான்.
திருமணம் என்றவுடன் தங்கம் , வெள்ளி விலை நினைவுக்கு வருகிறது. ஒரு கையகல சின்ன வெள்ளித்தட்டு விலை நான்காயிரமாகிறது. டி நகர் தங்க மாளிகையில் கல்யாண சீர்வரிசை என்று வெள்ளியில் பெரிய தட்டு, பன்னீர் சொம்பு, சொம்பு போன்றவற்றை ஒரு கண்ணாடி பீரோவில் வைத்திருக்கிறார்கள். விலைவாசி ஏறும் போக்கைப் பார்த்தால் இன்னும் சில காலத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தங்கமாளைகைக்குக் கூட்டிக் கொண்டு வந்து 'நல்லா பாத்துக்கங்க' என்று இந்த சீர்வரிசைகளைக் காட்டி கூட்டிக் கொண்டு போக வெண்டியதுதான் போலும்.
தேர்தல் நேரத்தில் ப்ளாகெல்லாம் படிக்க முடியாமல் சென்னையில் மாட்டிக் கொண்டோமே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்தது. ஆனால் சென்னையில் call taxi டிரைவர்களிடம் என் கணவர் உரையாடிக் கொண்டு வந்தபோது அவர்களின் அரசியல் அலசல் ஆச்சர்யமாக இருந்தது. கால் டாக்சி ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று சாதாரண குடிமக்கள் கூட ஊழல், விலைவாசி உயர்வு, கூட்டணிக் கட்சிகளின் பலம் என்று அக்கு வேறு ஆணி வேறாக அலசுவதைக் கேட்கும்போது இந்தத் தேர்தலில் ஒரு நல்ல முடிவை மக்கள் ஆராய்ந்து எடுப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் பாவம் அவர்களுக்கு ஒரு நல்ல மாறுதலை அளிக்கும் தலைமை இல்லையோ என்ற வருத்தம் தோன்றியது. தனியார் தொலைக்காட்சிகள் அழுகை சீரியலுக்குத்தான் லாயக்கு என்ற என் எண்ணம் மாறியது. மக்களின் இந்தப் பரவலான அரசியல் அறிவுக்குத் தனியார் தொலைக்காட்சிகள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ப்ளாக் படிக்கும் மற்றும் எழுதும் மக்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: கட்டாயமாக உங்கள் ஓட்டைப் போடுங்கள். இத்தனை அரசியல் ஆர்வம் மற்றும் முதிர்ச்சியுடன் இருக்கும் அந்தப் பாமரர்களின் கனவு பலிக்க நீங்கள் செய்யக் கூடிய சின்ன விஷயம் உங்கள் ஓட்டைக் கட்டாயமாகப் போடுவதுதான்.
அதே போல் என்னை வியப்பில் ஆழ்த்தியது உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் நம் மக்கள் காட்டிய ஆர்வம். எனக்குக் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கிடையாது. கல்லூரிப் பருவத்துடன் கிரிக்கெட்டிற்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தன்று என் சகோதரி குழந்தைகளுடன் பீச்சிற்குப் போனால் அங்கு கூட்டமே இல்லை. நல்லதாப் போச்சு என்று குழந்தைகள் ராட்டினம் மற்றும் இதர விளையாட்டுகளை ஆசை தீர விளையாடினார்கள். வீட்டிற்கு வந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்தால் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று ஒவ்வொரு ஆறுக்கும், நாலுக்கும் எழுந்த சந்தோஷக் கூச்சல் கேட்டு வியப்பாக இருந்தது. இந்தியா உலகக் கோப்பை வென்றதற்கு தீபாவளியைவிட அதிகம் வெடித்தார்களோ என்று தோன்றியது.
13 comments:
அருமையாகவும் குறிப்பாகச் சுருக்கமாகவும் பகிர்ந்து உள்ளீர்கள். தமிழ் எழுத்தாளர்களும் பதிவர்களும் உங்களிடம் கற்க வேண்டிய பாடம் இது
நன்றி ராம்ஜி அவர்களே. தொடர்ந்து படித்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நச்சென்று ஒரு நல்ல பதிவு.
//விலைவாசி ஏறும் போக்கைப் பார்த்தால் இன்னும் சில காலத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தங்கமாளைகைக்குக் கூட்டிக் கொண்டு வந்து 'நல்லா பாத்துக்கங்க' என்று இந்த சீர்வரிசைகளைக் காட்டி கூட்டிக் கொண்டு போக வெண்டியதுதான் போலும்//
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிடீங்க. ரொம்ப சரி! ஆனா, உலககோப்பை கிரிகெட் இறுதி ஆட்டம் பாக்காம பீச்சுக்கு போயிட்டீங்களே!
நன்றி மீனாக்ஷி. நாந்தான் சொன்னேனே கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு இல்லை என்று. இந்தியாவிலிருந்து ஊர் திரும்பி வந்தாச்சா?
வந்தாச்சு!
\\\இன்னும் சில காலத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தங்கமாளைகைக்குக் கூட்டிக் கொண்டு வந்து 'நல்லா பாத்துக்கங்க' என்று இந்த சீர்வரிசைகளைக் காட்டி கூட்டிக் கொண்டு போக வெண்டியதுதான் போலும்.///
இப்போது காமெடியாகத் தெரிந்தாலும் இன்னும் சில வருடங்களில் இதுவே உண்மையாகப் போகிறது.
\\\இன்னும் சில காலத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தங்கமாளைகைக்குக் கூட்டிக் கொண்டு வந்து 'நல்லா பாத்துக்கங்க' என்று இந்த சீர்வரிசைகளைக் காட்டி கூட்டிக் கொண்டு போக வெண்டியதுதான் போலும்.///
அப்படி எல்லாம் இல்லை. இந்தியர்கள் தங்கத்தை வாங்குவுதை நிறுத்தி விட்டால் கோல்ட் மைன்ஸ் என்னாவது. கேரளா வீட்டு கல்யாணம் ஒன்று அட்டென்ட் செய்யுங்கள். உங்கள் குடும்ப நகை ஒரு கேரளா பெண்ணின் கையில் இருக்கும் வளையலுக்கு சமமாகாது !
அது சரி,
கிரிக்கெட் வோர்ல்ட்கப் பார்க்கவில்லையா - என்ன பெண் நீ ? நான் அப்போது சென்னையில் இருந்தேன். பெண்களே பாரில் தண்ணி அடித்த மிச்ச நேரங்களில் வாயில் விசில் அடித்துக்கொண்டு அமோகமாக பார்க்கின்றார்கள் !
பெங்களூர் எம்.ஜி ரோடு இந்திய மேட்ச் சமயம் போல் இருந்தால் - அந்தகாலத்தில் நான் ஒரு நாளைக்கு ஐம்பது சேல்ஸ் கால் போயிருப்பேன் !
சிவகுமாரன் ஜி, விலைவாசி அப்படி ஏறுகிறது. ஆனாலும் தங்க மாளிகையில் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
ஆமாம் சாய்ராம், தங்க மாளிகையில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் இவர்களுக்கெல்லாம் கணக்கே (தங்கத்தின் விலையைக் கணிக்க) தெரியாதோ என்ற சந்தேகம் வருகிறது.
ரொம்ப நாள் ஆச்சு கிரிக்கெட் பார்ப்பதை விட்டு. அதனால் உலகக் கோப்பைப் போட்டி என்னை ஈர்க்கவில்லை. 20-20 மட்டும் அப்பப்ப பார்ப்பேன்.
//கூட்டத்தைப் பார்த்தால் இவர்களுக்கெல்லாம் கணக்கே (தங்கத்தின் விலையைக் கணிக்க) தெரியாதோ என்ற சந்தேகம் வருகிறது.//
Whatever said and done, Gold is Safe Heaven for most. After Real Estate - Gold gives the best return - And in fact Gold is not risky at all.
So I don't blame them. I have a cousin who bought 1 Oz at 800 $ and now it is doubled in 5 years. I do not think you can get any return like this.
Read more on www.goldprice.org on why it is still a better bet.
I am thinking of buying gold (not jewels) as I know for sure it will touch 2000 $ for 1 Oz
//" கட்டாயமாக உங்கள் ஓட்டைப் போடுங்கள். இத்தனை அரசியல் ஆர்வம் மற்றும் முதிர்ச்சியுடன் இருக்கும் அந்தப் பாமரர்களின் கனவு பலிக்க நீங்கள் செய்யக் கூடிய சின்ன விஷயம் உங்கள் ஓட்டைக் கட்டாயமாகப் போடுவதுதான்"//
உங்கள் எண்ணம் நிறைவேறி விட்டது என்றே தோன்றுகிறது. எழுபத்தெட்டு சதவிகிதத வாக்குப் பதிவு.
இந்த மாதிரி அரசியல் வெறுப்புகளையும், விரக்திகளையும் தீர்த்துக் கொள்ள கிரிக்கெட் ஒரு வடிகாலாக இருந்திருக்கலாம்!!
கருத்துக்கு நன்றி ஸ்ரீராம், சாய்ராம்.
அதிக வாக்குப் பதிவானது குறித்து மகிழ்ச்சியே. ஆட்சிப் பொறுப்பு ஏற்பவர்களும் மக்களின் கனவை நினைவாக்கட்டும்.
சாய்ராம், முதலீடு என்ற வகையில் தங்கம் வாங்குவது நல்லதுதான். ஆனால் அதைப் பாதுகாப்பது என்ற கவலை ஒன்று இருக்கே.
//சாய்ராம், முதலீடு என்ற வகையில் தங்கம் வாங்குவது நல்லதுதான். ஆனால் அதைப் பாதுகாப்பது என்ற கவலை ஒன்று இருக்கே.//
பேங்க் லாக்கர் கீது
Post a Comment