Wednesday, 23 November 2011

தொடரும் தங்கத் தவளை (எங்கள் ப்ளாகின் கதைப் போட்டிக்கான கதை )

              எங்கள் ப்ளாகில் அறிவிக்கப்பட்டத் தங்கத்தவளைப் பெண்ணே கதையைத்  தொடர்ந்து எழுதப்பட்டது இது. (எங்கள் 2K + 11)
        
               அந்தப் பொன்னிற மங்கை, புங்கவர்மனிடம் சொன்னாள்: "மன்னா உங்களிடமிருந்து எனக்கு ஓர் உதவி தேவை. அந்த உதவியை உங்களால் மட்டுமே செய்ய இயலும். நான் பக்கத்து நாட்டு இளவரசி. என் கணவனுடன் இங்கு உல்லாசப் பயணம் வந்தேன். என் கணவரை ஓர் அரக்கன் பிடித்துப் போய், இங்கிருந்து மேற்கே ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி, ஓரிடத்தில் சிறை வைத்திருக்கின்றான். அடுத்த பௌர்ணமிக்குள் அவரை மீட்டு வந்துவிட்டால் அந்த அரக்கன் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இந்தப் பக்கம் மீண்டும் வராமல் சென்றுவிடுவான். வருகின்ற பௌர்ணமிக்குள் அவரை யாராலும் மீட்க முடியாவிட்டால், அரக்கன் என் கணவனைக் கொன்று, என்னைக் கடத்திச்  சென்றுவிடுவான். மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்றாள்.

            அடடா இது என்னடா சோதனை! அடகு வைத்த என்னுடைய கிரீடத்தையே என்னால் மீட்க முடியவில்லை. இவள் என்னவோ கணவனை மீட்டுக் கொடு என்கிறாள்' என்று மனதில் நினைத்துக் கொண்டே, "என்னால் மட்டுமே முடியும் என்றாயே? ஏன்? என்னைவிட வீரமானவன் யாருமில்லை என்றுதானே?" என்று கேட்டான்.  'ஹுக்கும், நீ சாப்பாடு, தூக்கம் தவிர வேறு எதிலும் பெரிய நாட்டம் காட்ட மாட்டாய்.  அதனால் உன்னை இந்த வேலைக்கு ஒத்துக் கொள்ள வைப்பதே முடியாத காரியம் என்பதால்தான் உன்னால்தான் என் கணவனைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்ததே அந்தப் பாழாய்ப் போன அரக்கன்தான்' என்று மனதில் எண்ணங்களை ஓடவிட்ட இளவரசி , "ஐயனே.  இளமையும் அழகும் பொருந்திய உங்களைப் பார்த்ததுமே நீங்கள்தான் எனக்கு உதவ முடியும் என்று முடிவு செய்துவிட்டேன்" என்றாள்.

            "அது சரி.  இதனால் எனக்கு என்ன லாபம்? ஏன்னா ஏழு கடல் ஏழு மலை தாண்டனும்னா எத்தனை பெரிய ஆபத்துக்களைச் சந்திக்கவேண்டும்!" என்றான் பு.வர்மன்.  "என் கணவரை மீட்டுக் கொடுத்தால் எங்கள் பரந்த ராஜ்ஜியத்தில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்குக் கொடுக்கிறோம்.  மேலும் என் கணவரின் தங்கையையும் உங்களுக்கு மணம் செய்து வைக்கிறோம்" என்றவுடன் பு.வர்மனுக்குக் கொஞ்சமே கொஞ்சம் இந்த வேலையில் நாட்டம் வந்தது. "உன் புருஷனையோ அந்த அரக்கனையோ எனக்குத் தெரியாதே.  எப்படி கண்டுபிடிப்பது...  ம்?" என்று மீசையைத் தடவியபடியே யோசித்தான் பு.வர்மன். கையில் இரண்டு மூன்று முடிகள் வந்தனவே தவிர யோசனை ஒன்றும் வரவில்லை.  தவளைப் பெண் பு.வர்மனிடம், " மன்னா.  கவலைப் படாதீர்கள்.  அந்த அரக்கனே என்ன செய்யவேண்டுமென்று சொல்லியிருக்கிறான். நீங்கள் மூன்று நாட்கள் உணவு , தூக்கமில்லாமல்  'நம் நஹ; கம் கஹ; டம் டஹ' என்ற மந்திரத்தை ஜபிக்கவேண்டும்..." என்றாள். அவள் முடிப்பதற்குள் " ஐயையோ, மூன்று நாள் சாப்பிடாமல், தூங்காமல் இருப்பதா. என்னை மன்னித்துவிடு" என்று ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான்.  அவன் கால்களை நகர முடியாவண்ணம் இருக்கப் பிடித்துக் கொண்டு "அரசே.  நீங்கள் இந்தப் பேதைக்கு உதவியே ஆகவேண்டும்.  நான் சொல்வதைச் சினம் கொள்ளாமல் கேட்கவேண்டும்.  நீங்கள் உணவு, தூக்கத்தை எதற்கும் துறக்க மாட்டீர்களென்பதால்தான் உங்களால்தான் என் கணவனை மீட்க முடியுமென்று அந்த அரக்கன் கூறினான்.  எப்படி உங்களைச் சம்மதிக்க வைப்பது என்று கவலைப் பட்டு அழுதவண்ணம் இந்தக் காட்டைச் சுற்றி வந்தபோது என் மேல் இரக்கம் கொண்ட ஒரு சந்நியாசி எனக்குச் சில வரங்களைக் கொடுத்தார்.  கவனமாகக் கேளுங்கள்." என்றவாறு மரப்பொந்தில் வைத்த மூட்டையை எடுத்துப் பிரித்தாள்.  "இந்த வேரை மென்றால் உங்களுக்குத் தூக்கம், பசி இரண்டையும் கட்டுப்படுத்தும் சக்தி கிடைக்கும்.  மூன்று நாட்கள் எனக்காக உங்கள் மனதைக் கட்டுப் படுத்திக்கொள்ளுங்கள்.  நான்காம் நாள் காலை நாமிருவரும் இந்த மந்திரக் கம்பளத்திலமர்ந்து ஏழு மலை, ஏழு கடல்களைத் தாண்டிவிடலாம்." என்றாள்.

             'பரவாயில்லை.  இந்தப் பெண்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறாளே.  கஷ்டப்படாமல் நாட்டையும், மங்கையையும் வாங்கிவிடலாம் போலிருக்கே' என்ற பு.வர்மனின் எண்ணத்தைத் தடை போடும் வண்ணம் "ஆனால் ஐயனே, அந்த அரக்கன் தன் சக்தியின் வடிவங்களை அரக்கர்களாக இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் மலைகளில் உங்களைத் தடுக்க ஏவிவிட்டிருப்பான்." என்றாள்.  "போச்சுடா. இதென்னம்மா மாத்தி மாத்தி பயமுறுத்துகிறாயே. இதுக்கு ஏதாவது வழியிருக்கா?" என்று கெஞ்சினான் பு.வர்மன்.  "இரண்டாம் மலையிலிருக்கும் அரக்கன் விஷ வாயுவைக் கக்கி நம்மை அழிக்க வருவான்.  நீங்கள் இந்த மந்திரக்கோலால் நம்மைச் சுற்றிக் கோடு போட நம்மைச்சுற்றி ஒரு மெல்லிய திரை உருவாகி நம்மை அந்த விஷ வாயுவிலிருந்து காப்பாற்றும்.  நான்காம் மலையில் பெரும் சுழற்காற்று ரூபத்தில் அரக்கனின் சக்தி நம்மை அலைக்கழிக்கும்.  நீங்கள் மன உறுதியோடு பறக்கும் கம்பளத்தை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டு பறந்தால் மலையைக் கடந்துவிடலாம். தவளையான என்னையும் பத்திரமாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ஆறாம் மலையில் ஒரு கழுகு வடிவில் வரும் அரக்கனின் சக்தி.  இந்த மந்திரக் கத்தியால் அதனை இரண்டாகப் பிளக்கவேண்டும்.  அந்தக் கழுகின் பிளவுபட்ட இரு பாகங்களும் கீழே விழுந்தால் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து நம்மைத் துரத்தும்.  அதனால் அதன் ஒரு பகுதியை உங்களுடனே வைத்திருங்கள்.  ஏழாம் மலையிலிருக்கும் எரிமலையில் அதை வீசிவிடுங்கள்.   ஏழு மலை ஏழு கடல் தாண்டியவுடன் வரும் காட்டின் நடுவில்தான் அந்த அரக்கன் என் கணவரை வைத்திருக்கிறான்.  இந்த சக்திகளை நாம் முறியடிக்கும்போதே அந்த அரக்கன் நாம் வருவதை உணர்ந்துவிடுவான்.  அதனால், நான் அந்த காட்டிற்குள் வரமுடியாது.  நீங்கள் மட்டும்தான் உள்ளே சென்று என் கணவரை மீட்க வேண்டும்" என்றாள்.  'கடைசியா வைச்சியே ஒரு ஆப்பு' என்று நினைத்தாலும் பு.வர்மனுக்கும் இந்த சவால் பிடித்திருந்தது.  "உங்களுக்கு மேலும் ஒரு உதவி. முனிவர் கொடுத்த இந்த தைலத்தை  நுகர்ந்தால் ஐந்து நாழிகைக்கு உங்கள் உருவம் மற்றவர் கண்ணுக்குத் தெரியாது.   அரக்கனுக்குத் தெரியாமல் அங்கு சென்று என் கணவரை மீட்டு வருவது உங்கள் பொறுப்பு.  இந்த பௌர்ண்மிக்குள் நாம் என் கணவரை எங்கள் நாட்டுக்குள் கொண்டு போகாவிட்டால் என் கணவர் இறந்துவிடுவார்.  பின் நானும் இறக்கவேண்டியதுதான் அண்ணா. எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்." என்று கண்ணீர்விட்டு அழுதாள்.  மங்கையின் கண்ணீர் கண்டு மன்னனின் மனம் பதறியது.  "தங்கையே! கவலைப் படாதே.  இப்பொழுதே அந்த வேரைக் கொடு.  மந்திரத்தையும் சொல்.  பசி தூக்கத்தை துறந்து அதை ஜெபித்து  இன்றிலிருந்து நான்காம் நாள் உன்னுடன் புறப்படுவேன்" என்றான்.
 சொல்லியவாறே நான்காம் நாள் அங்கிருந்து கிளம்பி வழியில் தோன்றிய இடர்களையெல்லாம் தவளைப் பெண்ணின் ஆலோசனைப்படி வென்று மந்திரவாதியிருக்கும் காட்டை அடைந்தான்.

             தன் அம்சங்களான கழுகு உள்ளிட்டத் தடைகளை அழித்து புங்கவர்மன் தவளைப் பெண்ணுடன் முன்னேறி வருவதை அறிந்து கொண்ட அரக்கன் தவளைப் பெண்ணின் கணவனை அழைத்தான்.  "பரவாயில்லை.  உன் மனைவி புத்திசாலிதான். எப்படியோ அந்த புங்கவர்மனை எல்லாவற்றையும் செய்ய வைத்துவிட்டாள்.  ஆனால் இங்கு வந்து உன்னைக் கண்டுபிடிப்பது அவனால் முடியவே முடியாது.  நான் உன்னை மாதிரி தோற்றம் கொண்ட பத்து பேரை உருவாக்கி உன்னுடனே உலவவிடப் போகிறேன்.  உனக்கும் இன்னும் அரை நாழியில் உன் நினைவு மறக்கும்படி செய்துவிடுவேன்.  புங்கவர்மன் உன்னை எப்படிச் சரியாகக் கண்டுபிடிக்கிறான் என்று பார்க்கிறேன்.  அவன் உன்னைத் தவிர உன்னுருவில் இருக்கும் வேறு யாரையாவது இந்தக் காட்டைவிட்டுக் கூட்டிக் கொண்டு போனால் அந்த நொடியிலேயே அவன் உயிரும் உன் உயிரும் பறிபோகும்.  ஹா...ஹா.. என்று பெரிதாகச் சிரித்தான்.  "கொடிய அரக்கனே! கடவுள் கிருபையாலும் என் மனைவியின் அசையாத நம்பிக்கையாலும் புங்கவர்மன் என்னைக் கண்டுபிடிப்பான். உனக்கு அழிவு நிச்சயம்" என்று ஆக்ரோஷமாகக் கத்தியதில் அரக்கன் பூஜைக்காக வைத்திருந்த சந்தனம், குங்குமம் அரசன் மேல் கைகளில் கொட்டியது.  அதைக் கோவமாகத் துடைத்துத் தன் மொட்டைத் தலையில் தடவிய வண்ணம் நகர்ந்தான்.  "ஹே--ஹே--ஹே" என்று கெக்கெலித்த வண்ணம் அரக்கன் காளி பூஜைக்குக் கிளம்பினான்.

             காட்டை அடைந்தவுடன் பு.வர்மன் தவளையை இறக்கிவிட்டு "அம்மா தாயே. இந்த இடத்திலேயே பத்திரமாக இரு.  திரும்பவும் உன்னைத் தேடி ஏழுமலை ஏழு கடலைத் தாண்டி என்னால் அலைய முடியாது.  அதுசரி, இப்ப உன் கணவனை எப்படி கண்டுபிடிப்பது?  ஏதாவது குடும்பப் பாட்டு இருக்கா உங்களுக்கு?" என்றான்.  " குடும்பப் பாட்டெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவருக்குப் பாட்டே பிடிக்காது.  ஆனால் மிக அழகாகச் சித்திரம் வரைவார்.  அவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.  உங்கள் திறமையைத்தான் நான் நம்பியிருக்கேன்" என்றாள் தவளைப் பெண்.

             புங்கவர்மன் தவளைப்பெண் கொடுத்தத் தைலத்தையும் கம்பளத்தையும் எடுத்துக் கொண்டு காட்டில் அரசனைத் தேடி அலைந்தான். தொலைதூரம் அலைந்தபின் ஒருவனைப் பார்த்தான்.  அவனை அணுகிக் கேட்கலாமென்று நெருங்கியபோது அவனைப் போலவே இன்னொருவனும் இருந்தான்.  ஆச்சர்யத்தோடு மறைந்து நின்று பார்த்தால் ஒரு பத்து பேர் இவனைப் போலவே ஏதோ வேலையைச் செய்துகொண்டிருந்தார்கள்.  பு.வர்மனுக்கு இவர்களில் யாரோதான் அரசன் என்பது விளங்கியது.  உண்மையான அரசனை எப்படிக் கண்டுபிடிப்பது?  சரி, இவர்களைக் கொஞ்ச நேரம் கண்காணிப்போம் என்று சத்தமில்லாமல் மரத்தின்மீது ஏறி வசதியான இடத்தில் அமர்ந்துகொண்டு யோசித்தான்.  உற்றுப் பார்த்ததில் ஒருவனின் மொட்டைத் தலையில் மட்டும் ஏதோ வித்தியாசமாக இருக்க, அவனைக் கூர்ந்து கவனித்தான்.  அவன் தலையில் சந்தனத்தால் அழகிய அன்னம் வரையப்பட்டிருந்தது. 'ஆஹா, தவளைப் பெண் அரசனுக்கு நன்கு ஓவியம் வரையவருமென்றாளே! தவளைப் பெண்ணின் நாட்டுக் கொடியில் அன்னம் இருக்கும் என்றும் சொன்னாளே. நமக்கு அடையாளம் தெரியத்தான் இவன் அன்னத்தைத் தன் தலையில் வரைந்திருக்க வேண்டும். அப்படியானால் இவன்தான் உண்மையான அரசன்!. பின்னிட்டடா புங்கவர்மா !!!' என்று தன்னைத்தானே பாராட்டியவாறு தவளைப் பெண் கொடுத்த களிம்பை நுகர்ந்தான்.  எவர் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்த அவன் அரசனைக் கையால் பிடித்துக் கொண்டு சென்று அவன் மூக்கிற்கு நேராக  தைலத்தை காண்பிக்க அவனும் பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான்.  அவனையும் பறக்கும் கம்பளத்தில் ஏற்றிக்கொண்டு விரைவாக வெளியேறித் தவளைப் பெண்ணையும் எடுத்துக் கொண்டு பறந்தான்.  நிமிடங்களில் காடடை விட்டு வெளியேறிச் சில நாழிகைக்குள் ஏழுகடல் ஏழு மலைகளைக் கடந்துவிட்டான்.  இதற்குள் பு.வர்மனும், அரசனும், தவளைப் பெண்ணும் அவரவர் உரு வரப்பெற்றனர்.  அரசனுக்கும் தன் நினைவு வந்தது.  தன் மனைவியை ஆரத்தழுவிக்கொண்டான். பு.வர்மனுக்கு இருவரும் நன்றி சொன்னார்கள்.

'எல்லாம் நல்லாதான் இருந்தது.  ஆனால் அந்த ஜோசியர் ஏதோ இனிமையான அனுபவம் கிட்டும் என்றார்.  ஏழுகடல், மலைகளைக் கடந்தும் ஒன்றும் இனிமையான அனுபவம் என்று சொல்லும்படியில்லையே' என்று யோசித்துக்கொண்டிருந்த பு.வர்மனிடம் தன் தங்கையை அறிமுகம் செய்தான் அரசன். அவள் அழகில் மயங்கிய பு.வர்மன் ஜோசியர் சொன்ன இனிமையான அனுபவம் இதுதான் என உணர்ந்தான்.  மனதிற்குள் பாராட்டினான் அவரை.

13 comments:

ஸ்ரீராம். said...

அருமை. நன்றாக கற்பனைக் குதிரையை ஓட விட்டிருக்கிறீர்கள் ததாஸ்து களிம்பு மாதிரி மாயமாஸ்து களிம்பு நடுவில் தைலமாகி மறுபடி களிம்பாகியது! முடிவில்லாக் கதையாக பத்து பேரில் யார் அரசன் என்று கண்டுபிடிக்க தனியாகச் சென்ற அரசன் கண்டுபிடித்தானா அவரை என்று முடித்து விடுவீர்களோ என்று பார்த்தேன்!

kg gouthaman said...

கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். எவ்வளவு வார்த்தைகள் இருக்கின்றன என்று எங்கள் நிபுணர் எண்ணிக் கொண்டே ஏ ஏ ஏ இருக்கின்றார்!

அப்பாதுரை said...

fantastic!
வேர்,மந்திரம், கம்பளம், களிம்பு.. லேகியம் தவிர மிச்ச எல்லாத்தையும் கதைக்குள்ள கொண்டுவந்தாச்சு.. சுவாரசியம், சுவாரசியம். மொதல்ல ஆரம்பிச்ச காமெடியை கண்டின்யூ பண்ணியிருக்கலாம்னு தோணிச்சு.

(ஆமா எத்தனை வார்த்தைகள்னு எண்ணிப் பாத்தீங்களா? word accountant வச்சு வார்த்தை எண்ணுறாங்களாம்)

அப்பாதுரை said...

தலையில் அன்னப்பறவை படமா? புதுசு தான்.

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம். மிகுந்த கவனத்துடன் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னதும்தான் கவனித்தேன். களிம்பைஎல்லாம் தைலமாக மாற்றினேன் (நுகர்வதற்குக் களிம்பைவிட தைலம்தானே வசதி!!). நன்றி.
//முடிவில்லாக் கதையாக பத்து பேரில் யார் அரசன் என்று கண்டுபிடிக்க தனியாகச் சென்ற அரசன் கண்டுபிடித்தானா அவரை என்று முடித்து விடுவீர்களோ என்று பார்த்தேன்!//
கதை வளவளவென்று போனதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறீர்களே. என்ன செய்ய ரொம்ப நாள் கழித்து கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டதால் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்துவிட்டது.

நன்றி KGG சார் .

நன்றி துரை. வேண்டுமானால் 'சிட்டுக்குருவி லேகியத்தை ருசித்தவாரே அரக்கன் அரசனிடம் பேசினான்' என்று சேர்த்துவிடவா? வார்த்தைகளை எண்ணுகிறார்களா? தருமி பாணியில் எவ்வளவு அதிகம் வார்த்தைகள் இருக்கோ சன்மானத்தில் (கிடைத்தால்!!) அத்தனைக் குறைத்துக்கொள்ளச் சொல்லிக் கேட்கலாமா?

kg gouthaman said...

மொத்தம் ஆயிரத்து நூற்றுத் தொண்ணூறு வார்த்தைகள். (என்று எண்ணி சொல்லிவிட்டு, எங்கள் கணக்கீட்டாளர் ஒரு வாரம் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார்!)

geetha santhanam said...

'எண்ணி'த் துணிக கர்மம் என்பதை நினைவில் வைத்துக் கொள்கிறேன். இப்பொழுதுதான் பின்னூட்டத்தில் பார்த்தேன் 1000 வரை அனுமதித்திருக்கிறீர்கள் என்று. ஒப்புக்குச் சப்பாணியாக என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்.

kg gouthaman said...

ஆட்டத்தில் உடனேயே சேர்த்துக் கொண்டுவிட்டோம். எங்கள் ப்ளாக் சைடு பாரில், உடனேயே சுட்டி கொடுத்துவிட்டோம்.

geetha santhanam said...

மீண்டும் நன்றி KGG சார்

வல்லிசிம்ஹன் said...

ஏயப்பாஆஆஆஆ. என்ன கற்பனை. ச்சும்மா அதிருதில்ல:) 1900 வார்த்தைகள் ஓடியிருக்கிறதே. நல்ல குதிரைதான். நீங்கள் சிறுவர் கதைப் பத்திரிகை ஆரம்பித்தால் நானும் சேர்ந்து கொள்கிறேன். வெற்றிக்கு வாழ்த்துகள் .

geetha santhanam said...

நன்றி வல்லிசிம்ஹன். எல்லாம் என் மகளுக்குக் கதை சொன்ன அனுபவம்தான்.

meenakshi said...

சூப்பர்! அந்த காலத்து மாயஜால படம் பாத்தா மாதிரி இருந்துது. கண்டுபிடிக்க குடும்ப பாட்டு ஏதாவது இருக்கான்னு கேட்டது செம கிண்டல். :)

geetha santhanam said...

நன்றி மீனாக்ஷி. உங்களை இந்தப் பக்கம் காணுமே என்று நினைத்தேன். சாய்ராமும் ப்ளாக் பக்கம் வருவதில்லையே. அவருக்கு கைவலி தேவலையா?