Thursday, 29 March 2012

திண்ணைப் பேச்சு-3

               பெயரிலொன்றும் பெரிய பெருமை இல்லை என்று பெரியவர்கள் சொன்னாலும் நீயா நானா நிகழ்ச்சியில் பெயர் சரியாக அமையாமல் நொந்த கதையைப் பலர் சொன்னார்கள்.  பெண்களுக்குப் புகழேந்தி என்று ஆண்கள் பெயரும் ஆண்களுக்குக் கல்யாணி, கண்மணி என்று பெண்கள் பெயரும் வைக்கப்படுவது கேட்டு ஆச்சர்யமாக இருந்தது.  அதிலும் ஒருவர் இப்படி பெண் பெயர் வைத்ததால் மற்றவர்களின் ஏளனத்துக்கு ஆளானது குறித்து அழாத குறையாகக் கூறிய போது வருத்தமாக இருந்தது.  ஆனால் அந்த விஷயத்தைக் கூட நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட அன்னக்கொடி என்ற பெயருடைய ஒருவர் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. அவர் கடன் வசூல் செய்யும் வேலையில் சேர்ந்தாராம். அவருடைய பாஸ் அவரைத் தன்னிடம் கடன் வாங்கியவர் வீட்டிலெல்லாம் அறிமுகம் செய்து இவர்தான் இனிமேல் வசூல் செய்ய வருவார் என்றாராம்.  அன்னக்கொடி என்ற அவரின் பெயரைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒருவர் "ஏய், அன்னக்காவடி வந்திருக்கார் பாரு, வட்டிக் காசை எடுத்து வா" என்றாராம். தன் பெயர் இப்படி இருகிறதே என்று வெட்கி வேதனைப் படாமல் "எங்கள் காலேஜில் நடந்த எலக்ஷனில் 'பாவாடை' என்ற பெயருடையவர் போட்டி போட்டார். அவரே தன் பெயரைப் பற்றிக் கவலைப் படாதபோது நாமும் இந்தப் பெயரை ஈசியாக எடுத்துக் கொள்ளவேண்டும்" என்று அவர் கூறிய போது  'what is in a name' என்பதை உண்மையென்று உணர்ந்தேன். எந்த விஷயத்தையும் நாம் நோக்கும் கோணம்தான் அதைப் பெரியதாகவோ அல்லது அற்பமானதாகவோ ஆக்குகிறது.

               சில வாரங்களாக சன் டீவியில் மீண்டும் 'சிவாஜி வாரம்' எம்ஜியார் வாரம்' என்று சினிமா வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.  எங்களுக்குக் குவைத்தில் வசதியாக இரவு 8.30 மணிக்கு வருவதாலும், என் மகளுக்கு விடுமுறையானபடியாலும் தினம் சினிமா பார்க்கிறோம்.  பழைய சினிமாக்களில் அம்மா பாசம், அண்ணா-தங்கை , அண்ணா-தம்பி உறவு பற்றி அதிகம் பேசப்பட்டதைக் கவனித்தேன்.  இப்பொழுதெல்லாம் சீரியலிலும் சினிமாவிலும் இளம் வயது காதல், அடுத்தவன் மனைவியைக் காதலிப்பது என்று வரையறை இல்லாமல் வருவதுதான் சமூகம் சீரழியக் காரணமோ என்று தோன்றியது.

              சமூகம் சீரழிவது இருக்கட்டும், உலகமே டிசம்பர் 21,2012-ல் அழியப் போகிறதென்று சொல்கிறார்களே. அதுவும் ஃப்ரான்சிலுள்ள  Pic de Bugarach என்ற இடத்தில் கூடியுள்ள மக்களை மட்டும் கடவுள் (aliens)அடுத்த உலகத்திற்க்குக் கூட்டிச் செல்வார் என்ற நம்பிக்கையில் பலர் அங்குக் கூட ஆரம்பித்துவிட்டார்களாம்.


அது என்ன அந்த இடத்தில் சிறப்பு என்று கேட்கிறீர்களா? பொதுவாக மலையில் உச்சியில் இருக்கும் கற்கள் மலை அடிவாரத்தில் இருக்கும் கற்களைவிட வயது (geological age) குறைவானதாக இருக்கும்.  இந்தக் குறிப்பிட்ட மலையில் மட்டும் மலை முகடு வயதில் அதிகமாகவும் அடிவாரம் குறைவானதாகவும் இருக்கும் அதிசயம் நிகழ்ந்திருப்பதாகவும் அது Nostradamusஅவர்கள் குறிப்பிலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். நித்யானந்தா, யாகவா முனிவர் போல சாமியார்களின் கேலிக் கூத்து இங்கு என்றால் இதைப்போல் மூட நம்பிக்கை ஐரோப்பிய மக்களுக்கு!!!.

              ஆனால் பூமியின் பல தட்டுக்கள் நேர்விசை அழுத்தத்துக்கு (horizontal pressure) ஆளாகும்போது நடுப்பகுதி உயர்ந்து மலையாகிறது.




 பூமியின் மேல் தட்டு உயர்ந்து மலை முகடாகிறது. அதனால் மலைமுகடு வயதில் குறைந்ததாகவும் மலை அடிவாரம் வயது முதிர்ந்ததாகவும் அமைகிறது.  சில சமயம் இத்தகைய அழுத்தம் ஏற்படும் இடத்தில் பிளவு(fault) இருந்தால் Pic de Bugarach மாதிரி உல்டாவாகவும் அமையும் என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  இதைப் பற்றிய விளக்கத்தை hudsonvalleygeologist.blogspot.com என்ற ப்ளாகில் பார்க்கலாம்.
எது எப்படியோ Pic de Bugarach பார்ப்பதற்கு அழகான இடம் போலத்தான் தோன்றுகிறது!!! 2013-ல் (உலகம்) பிழைத்துக் கிடந்தால் போய்ப் பார்க்கலாம்!!!!!

7 comments:

ஸ்ரீராம். said...

வித்தியாசமான பெயர்கள் பற்றி எங்கள் ப்ளாக் வெட்டி அரட்டையில் கூட ஒருமுறை அரட்டை அடித்திருந்தோம்...

இரண்டாவது பாரா அட்சரலட்சம்! வைபவிக்கு லீவா...அப்போ 'நம்ம ஏரியா'வில் படம் வரைய ஆளைக் காணோமே...! :))))

அப்புறம்....உலகம் 2012 டிசம்பரில் அழியாதாம்... நேற்று வாங்கிய ஊறுகாய் பாட்டிலில் எக்ஸ்பைரி டேட் ஜூலை 2914 என்று போட்டிருந்தான்! (ஹி...ஹி... பழைய ஜோக்!)

கௌதமன் said...

Nice share. The last link (is it a video?) is not working.

geetha santhanam said...

நன்றி KGG சார் & ஸ்ரீராம். KGG சார், கூகிள் க்ரோமில் வீடியோ வருகிறதே. ஸ்ரீராம் சார், வைபவியை வரையச் சொல்கிறேன்.எக்ஸ்பைரி ஜோக் நல்ல ஜோக்.

Anonymous said...

இந்த நீயா நானா ஷோ நானும் பார்த்தேன். பெண்களுக்கான பெயரை ஆண்களுக்கும், ஆண்களுக்கான பெயரை பெண்களுக்கும் வைத்திருப்பது விசித்திரமா இருந்தது. சமீபமாக நீயா நானா ஷோ தொடர்ந்து பாக்கறேன். நல்ல சுவாரசியமா இருக்கு.

எனக்கென்னவோ டி.வீ சீரியல், சினிமா எல்லாம் பார்த்து சமூகம் சீரழிந்து விட்டதாக தோன்றவில்லை. மறைவில நடக்கறது எல்லாம் இப்போ திரையிலும் வரது. அவ்வளவுதான்.

எம்.ஜி.ஆர். வாரம் சிவாஜி வாரம் படங்களில் சிலதை நானும் பாக்க நெனச்சேன். ஆனா இங்கே ராத்திரி பதினொரு மணிக்குதான் ஆரம்பிக்கறது.
அதனால ஜூட் விட்டுட்டேன்.

2012 கடைசியில் உலகம் அழிய போகிறதா! நான் என்னென்னமோ நெனச்சுண்டு இருக்கேனே. சரியா போச்சு போங்க! சரி 'பொழச்சு கிடந்தா பிச்சகாரனுக்கு பாக்கலாம்'. இது எப்பவுமே என் அம்மா சொல்ற டயலாக். இப்ப இங்க நானும் சொல்லிட்டேன். :)

geetha santhanam said...

இல்லை மீனாக்ஷி, பரவலாகத் திரைப்படத்திலும், சீரியலிலும் பார்ப்பதால் இளைஞர்கள் இது பெரிய தவறில்லை என்று எண்ணும் வாய்ப்பு அதிகம். பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்குப் பார்க்கலாம் இல்லை--பிக்-த-(பு)காரானுக்குப் பார்க்கலாம்!!!.

Anonymous said...

நன்றி கீதா. எனக்கு இது தெரியாது. இந்த வார்த்தைக்கு அர்த்தமும் கொஞ்சம் சொல்றீங்களா.

geetha santhanam said...

மீனாக்ஷி, Pic de Bugarach (பிக்-த-(பு)காரன்)வைத்தான் பிச்சைக்காரனில் பொருத்தியிருக்கேன், அவ்வளவுதான்.