Monday 26 October 2009

பிள்ளையார் சுழி

இணையத்தில் நிறைய தமிழ் பதிவுகளைப் படிக்க படிக்க எனக்கும் ஒன்றை ஆரம்பிக்க எண்ணம் வந்தது. பொழுது போக வேண்டாமா?. சிறு வயதிலிருந்தே எதையும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பழக்கம் உள்ளதால் முதலில் விநாயகரைப் பற்றி ஏதாவது எழுத நினைக்கிறேன். இந்த பழக்கம் என்னுடைய பாட்டி மற்றும் அம்மாவிடமிருந்து வந்திருக்க வேண்டும். பிள்ளையாரை வேண்டிக்கொண்டால் எல்லாமே கிடைக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடைய நண்பர் மற்றும் உறவினர் அனைவரும் இதை அறிவர்.
எனக்கு இந்த ஜெயன்ட் வீலில் ஏறுவது என்றாலே ரொம்ப பயம். ஒரு முறை சிலரின் கட்டாயத்தின் பேரில் ஏறினேன். என் மன்னியும் என்னுடன் வந்தார். மேலே போனவுடன் பயத்தில் முருகா முருகா என்று கத்தத் தொடங்கினேன். என் மன்னி உடனே "எப்போதும் பிள்ளையாரைத் தானே கூப்பிடுவீர்கள். இப்பொழுது என்ன முருகனைக் கூப்பிடுகிறீர் கள்?" என்றார். ஐயையோ, இது என்னடா குழப்பம்!! கோவத்தில் இரண்டு பேருமே காப்பாற்றாமல் விட்டுவிடுவார்களோ என்று பயந்து, "பிள்ளையாரே, முருகா... " என்று மாறி மாறி கத்தி கதறி அலறி அழுது ஒரு வழியாகக் கீழே இறங்கினேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் என்னைவிட ஒரு படி அதிக பக்தி உடையவர். காமெரா வாங்கினால் முதலில் பிள்ளையாரைப் படம் பிடிப்பார் (பிள்ளையார் போட்டோவைச் சொன்னேன்.). விடியோ காமெராவிலும் அப்படியே. அவர் செல்ஃபோன் வாங்கியபோது என்ன செய்தார் என்று நான் யோசிப்பது உண்டு.எது எப்படியோ, இந்த ப்ளாக் எழுதும் என்னையும், முக்கியமாக படிக்கும் உங்களையும் பிள்ளையார் காப்பாராக!!!!!

3 comments:

அப்பாதுரை said...

பிள்ளையார் சுழிக்கு இரண்டு மார்க் குறைத்த தமிழ் வாத்தியார் நினைவு வருகிறது. "கேட்ட கேள்விக்குத் தான் பதில் எழுதணும்; இஷ்டத்துக்குக் கண்ட இடத்துல அரிச்சுவடி (உ) எழுதிட்டிருந்தா மார்க் போயிடும்". அத்தோடு நின்றது பிசு.

Anu said...

Hi Geethu chithu,
Nalla velai! Blogleyum sriraamajeyam yezhudhiduviyonnu ninechen!

geetha santhanam said...

அச்சச்சோ, அதை மறந்துவிட்டேனே!!!அனு, உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நான் இப்பொழுதெல்லாம் ஸ்ரீராமஜெயம் எழுதுவதே இல்லை. இனிமேலாவது எழுத பார்க்கிறேன்.--

கீது