Thursday, 28 January 2010

LUNCH BOX

                   நினைத்துப் பார்த்தால் இந்த lunch box ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு வில்லனாகவே இருந்து வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.  பள்ளி, கல்லூரிக் காலங்களில் lunch box-ல் எது எடுத்துக் கொண்டு போனாலும் அது ஆறி அவலாகிப் (அவலமாகி) போய்விடும். பள்ளி நாட்களில் மிகவும் கொடுமை. தயிர் சாதம், ரசம் சாதம் கூடக் கொண்டு போயிருக்கிறேன். சில நேரங்களில் excess ரசமோ தயிரோ கொட்டி என் நோட்டு புத்தகங்களெல்லாம் நனைந்து போயிருக்கின்றன.   Wet-grinder வழக்கத்திற்கு வந்தபின் நிலமை கொஞ்சம் பரவாயில்லை.  என் அம்மாவும் வேலைக்குப் போனபடியால் எங்கள் வீட்டில் ஞாயிறன்று இட்லி மாவு அரைக்கப்பட்டு இட்லி, தோசை, தோசை , இட்லி என்று மாறி மாறி lunch box-ல் வைக்கப்படும். சில நாட்கள் நான் பருப்பு சாதம் கூடக் கொண்டு போயிருக்கிறேன். என் தோழி இத்தனை வருடங்கள் கழித்து சமீபத்தில் இமெயிலில் இதைப் பற்றி எழுதியிருந்தாளென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் சிறப்பை.


                கல்லூரியோடு இந்த பிரச்சினை முடிந்தது என்று நினைத்தேன்.
ம் ஹூம்!!!. Post doctorate செய்ய கனடா சென்றபோது இந்த பிரச்சினையும் என்னோடு கூடவே வந்தது. முதல் நாள் எனக்குத் தெரிந்த வகையில் லெமன் ரைஸ் (அதுதான் என் முதல் சமையல் அனுபவம்) செய்து stainless steel டப்பாவில் எடுத்துக்கொண்டு போனேன். எங்கள் லேபில் எல்லோரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். என்னைத் தவிர எல்லோருமே கனடாவைச் சேர்ந்தவர்கள். அவர்களெல்லாம் அழகாக ஒரு food saver -ல் (டப்பர் வேர் என்று மெட்ராஸில் சொல்கிறார்கள்) கொஞ்சம் பிரெட்டும், நிறைய பழங்களும் கொண்டு வந்திருந்தார்கள். எனக்கு ஒரு மாதிரி கூச்சமாக ஆகிவிட்டது.  அன்று மாலையே கடைக்குச் சென்று ஒரு டப்பாவை வாங்கிக் கொண்டேன். அவர்களைப் போலவே நிறைய பழங்களும் கொஞ்சம் சாதமும் சாப்பிடப் பழகினேன்!!!.

                  இப்போது குழந்தை பிறந்த பின்பும் அந்த lunch box பிரச்சினை விடாமல் துரத்துகிறது. முதலில் என் மகள் கொண்டு போன lunch -ஐத் தொடாமலே அப்படியே கொண்டு வருவாள். சாம, தான பேத தண்ட முறைகளைப் பயன்படுத்தி எப்படியோ சாப்பிடப் பழக்கினேன். பின்னர், ஒவ்வொரு நாளும் விதவிதமாக lunch தரவேண்டும் என்றாள். (இரண்டு நாள் இட்லி, இரண்டு நாள் தோசை என்றெல்லாம் பஜனை பண்ண முடியாது!!!). எப்படியோ ஐந்து நாட்களுக்கும் விதவிதமாக கொடுக்கப் பழகினேன். இப்பொழுது "அம்மா! break பத்து நிமிஷம்தான். எனக்கு விளையாட வேண்டும். அதனால் கையில் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டே சாப்பிடுவது மாதிரி lunch வை" என்கிறாள். எத்தனை யோசித்தாலும் தோசை, பிரெட், சப்பாத்தியைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. தினமும் பீட்சா, கேக் என்று தரவும் மனமில்லை. என்ன செய்ய?!!! இந்த lunch box பிரச்சினை என்னை வில்லனைப் போல் விடாமல் துரத்துகிறது!!!.

2 comments:

அப்பாதுரை said...

மூணடுக்குக் கேரியரில் சாதம், கறி, ரசம், சாம்பார், மோர் எல்லாம் எடுத்துச் சாப்பிட்ட சுகம் நினைவுக்கு வருகிறது. காரைக்காலில் டிபன் பாக்ஸ் மாறிப் போய் சுவையான மீன் கறி அறிமுகம்.

Anonymous said...

அன்புள்ள கீது,
உட்கார்ந்து சாபிட்டுகொண்டே விளையாடற மாதிரி புது விளையாட்டு விளையாட சொல்லு

அன்புள்ள லதா