மறு நாள் எல்லோருக்கும் முன்பாக எழுந்த நேஹா அம்மாவையும் அப்பாவையும் ' ம், சீக்கிரம், ப்ளேனுக்குப் போகணும். எழுந்திருங்க..' என்று எழுப்பினாள். அத்தனை excitement அவளுக்கு. ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் செல்வதால் வீட்டிலிருந்தே வேன் வைத்து கூட்டிக்கொண்டு விமான நிளையம் செல்வது முதல் எல்லாம் அவர்கள் பொறுப்பு. இரவு ஏழு மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். விமான நிலையத்தில் இவர்களைப் போல டூர் வரும் நான்கைந்து குடும்பங்களின் அறிமுகம் கிட்டியது.
முதலில் பாங்காக் சென்று, பட்டாயா, கொரெல் ஐலேண்ட் பின்னர் மலேசியாவில் முக்கிய இடங்களான sunway lagoon park, genting island என்று சுற்றிய களைப்பே தெரியாமல் enjoy பண்ணினார்கள். சிங்கப்பூரின் night safari, underwater world இவைதான் நேஹாவிற்கு மிகவும் பிடித்திருந்தன. அவளுக்கு அந்த இடங்களைவிட்டுவர மனமே இல்லை.
இப்படியாக 15 நாட்கள் சென்றதே தெரியாமல் ஊர் சுற்றினார்கள். அன்று சென்னை திரும்ப வேண்டும். புதிதாக கிடைத்த பிற நாட்டு நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த பின்னர் சென்னை செல்லும் நண்பர்களுடன் விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள் சுரேஷ் குடும்பத்தினர். check-in செய்துவிட்டு வெளியில் வந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒருவர் டூர் ஏஜென்சி சார்பில் அனைவருக்கும் ஒரு அழகாக gift wrap செய்யப்பட்ட ஒரு பரிசு பொருளைக் கொடுத்தார். "fragile item என்பதால் இதை இப்ப பிரிக்காதீங்க. வீட்டில் போய் பாருங்கள். ஒரு surprise gift" என்று அன்புக் கட்டளை வேறு. சித்ராவின் மகள் நேஹாவுக்கோ கிஃப்ட் என்றால் உடனே பிரித்தாக வேண்டும். சித்ராவுக்கோ மற்றவர்களெல்லாம் பிரிக்காதபோது நம் மட்டும் எப்படி பிரிப்பது என்ற தயக்கம். மேலும் அது ஏதாவது கண்ணாடிப் பொருளாக இருந்தால் பத்திரமாகக் கொண்டு போகவேண்டுமே; அதனால் பிரிக்கக்கூடாதென்று மகளை எப்படியோ சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். இதற்குள் போர்டிங் நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் அவரவர் கிஃப்டுடன் security scanning செய்யக் கிளம்பினர். Scanning முடிந்ததும் அங்கிருந்த அதிகாரி அனைவரிடமும் 'இந்த பரிசை gift wrap செய்தபடியே வைத்திருங்கள். பிரிக்க வேண்டாம். அப்பதான் customs-ல் பிரச்சினை எதுவும் இருக்காது" என்றார். நேஹாவுக்கோ என்னடா இது இந்த கிஃப்ட்டைப் பிரிக்கவிட மாட்டேங்கிறாங்களே என்று கோவம். ஆனால் 'customs பிரச்சினை' என்றதால் ஒருவருமே அதைப் பிரிக்காமல் வீடு சென்றபின் பிரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். அசதியில் நன்கு தூங்கியவர்கள் சென்னை வந்ததும்தான் விழித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இவர்களை அழைத்துச் செல்ல டூர் ஏஜென்சியிலிருந்து இரண்டு பேர் வந்திருந்தனர். ஒருவர் கையில் இவர்களைப் போலவே wrap செய்யப்பட்ட gifts இருக்க சுரேஷுக்கு ஒரே ஆச்சர்யம். கேட்டதற்கு இங்கு சுற்றுலா வந்த வெளி நாட்டு வாடிக்கையாளர்களுக்குத் தரவே வைத்திருப்பதாகக் கூறினார். டூர் சிறப்பாக ஏற்பாடு செய்தது மட்டுமில்லாமல் ஒரு கிஃப்ட்டும் கொடுத்தது பற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி (என்ன இருந்தாலும் ஓசியில் ஏதாவது கிடைத்தால் அதன் ஆனந்தமே தனிதானே!!). இருவரும் சேர்ந்து அனைவரது லக்கேஜையும் எடுத்து வேனில் ஏற்றினார்கள்.
அந்த இரண்டாவது நபர் கிஃப்ட்டுக்களுடன் செல்ல எத்தனிக்கையில் விமான நிலையத்திலிருந்து போலீஸ் இருவர் வந்து அவரை இழுத்துக் கொண்டு போனார்கள். டூர் சென்றவர்கள் ஏறிய வேனையும் நிறுத்தி இரு போலீஸ்காரர்கள் காவலுக்கு நின்றனர். சித்ரா 'பிள்ளையாரப்பா, எந்த பிரச்சினையும் இல்லாமல் காப்பாத்து. உனக்கு கொழுக்கட்டை பண்ணுகிறேன்' என்று வேண்டிக் கொண்டாள். இவர்களின் எந்த கேள்விக்கும் போலீஸ்காரர் சொன்ன ஒரே பதில் 'பொறுத்திருந்து பாருங்கள்" என்பதே. 30-40 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்தினுள்ளிருந்து வந்த போலீஸ்காரர் ' sorry for the trouble. நீங்க போகலாம்" என்று சொன்னார். சுரேஷ் மற்றும் அந்த வேனிலிருந்த ஆண்கள் அனைவரும் இறங்கி 'என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டதால்அந்த போலீஸ்காரர் சொல்லத் தொடங்கினார்.
"உங்களுக்கு கிஃப்ட்டாகக் கொடுத்தார்களே, அது ஒரு மெழுகு பொம்மை. அதில் வைரக் கற்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள். உங்களைப் போன்ற unsuspecting tourist கிட்ட கொடுத்து எடுத்து வந்து இங்கே வந்தவுடன் உங்களுக்குத் தெரியாமல் அந்த பாக்கெட்டை மாற்றிவிடுவார்கள். இதுதான் அவர்கள் modus operandi. இவர்களைப் பற்றி கண்டுபிடித்ததும் சிங்கப்பூர் போலீஸ் எங்களை அணுகினர். இங்கு சென்னையில் இவர்கள் கூட்டாளிகளைக் கையும் களவுமாகப் பிடிக்கவே இந்த கிஃப்ட்டை நீங்கள் பிரிக்கவேண்டாமென்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் கேட்டுக் கொண்டார். நீங்களும் அதன்படி நடந்ததால் எங்கள் வேலை எளிதானது. அவன் அந்த கிஃப்ட் பாக்கட்டுகளை மாற்றும் வரையில் கண்காணித்துக் கொண்டிருந்த நாங்கள் உடனே வந்து அவனைக் கைது செய்தோம். உங்களிடம் உள்ள கிஃப்ட்டையும் சாட்சிக்காக எடுத்துக் கொள்ளவே உங்களைக் காக்க வைத்தோம்." என்றார்.
"சே. பிரபலமான ஏஜென்சி என்று நம்பிதானே போனோம். இப்படி மோசம் செய்துவிட்டார்களே" என்று சுரேஷ் கேட்க," அவர்கள் மேல் தவறு இல்லை. தங்கள் நிறுவனப் பொருட்களுக்கு இலவச விளம்பரம் பெறுவதற்கே இது போல் கிஃப்ட் கொடுப்பதாகக் கூறி டூர் ஏஜன்சியை அணுகியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இதனால் நன்மையிருப்பதால் டூர் ஏஜென்சி இதற்கு சம்மதித்திருக்கிறது. அவ்வளவே அவர்களின் பங்கு" என்றார்.
அனைவரும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் தங்களுக்குத் தரப்பட்ட கிஃப்ட்டை போலீசிடம் கொடுத்துவிட்டு வீடு நோக்கிப் போனார்கள்.
நீதி: ஓசிப் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்.