Monday, 13 December 2010
வாடகைத் தாய்
சுந்தரிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. குவைத்திலிருந்து அவளது புருஷன் அவளுக்கு விசா அனுப்பியிருந்தான். பத்தாவதுகூடப் படிக்காத தனக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பா என்று அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எல்லாம் இந்த குழந்தை பிறந்த அதிர்ஷ்டம்தான் என்று ஒரு வயதான தன் மகளை வாரி அணைத்து முத்தமிட்டாள். அவள் கணவன் குவைத்தில் கார் டிரைவராக இருக்கிறான். அவன் அங்கு போய் கிட்டதட்ட இரண்டு வருடங்களாகின்றன. இப்பொழுது தானும் வெளி நாடு போவது குறித்து சுந்தரிக்குப் பெருமை பிடிபடவில்லை. என்ன ஒரே வருத்தம் என்றால் ஒரு வயதுதான் ஆகும் மகளை தன் தாயிடம் விட்டுவிட்டு போகவேண்டும். மகளைப் பிரியும் வருத்தம் இருந்தாலும் அவளுக்காக சம்பாதிக்கத்தானே போகிறோம் என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
குவைத்தில் அவளுக்கு ஒரு நல்ல வீட்டில் வேலை கிடைத்தது. சுந்தரிவேலை செய்யும் வீட்டு எஜமானி ஆஃபீசில் வேலை செய்வதால் அவளின் 8 மாதக் குழந்தை அபூர்வாவைப் பார்த்துக் கொள்ளும் வேலை சுந்தரிக்கு. மகளிடம் காட்ட முடியாத அன்பை இந்தக் குழந்தையிடம் கொட்டினாள் சுந்தரி. அந்தக் குழந்தைக்கு உணவு கொடுப்பது, விளையாடுவது என்று ஆர்வத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாள். குவைத் வந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. இந்த நான்கு வருடங்களில் மகளுடன் போனில் பேசுவதும், அவளின் புகைப்படங்களைப் பார்பதும்தான் மகளுடன் அவளுக்கு இருந்த தொடர்பு. மாதாமாதம் மகளுக்காகக் கணிசமாகப் பணம் அனுப்ப முடிவதை நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்வாள். தன் மகளுக்காகத் தேக்கி வைத்த அன்பை அபூர்வாவிடம் காட்டி சந்தோஷப்படுவாள். அபூர்வா நடக்க ஆரம்பித்தது, பேசத் தொடங்கியது, play school போனது, பின் பள்ளிக்குப் போனது என்று ஒவ்வொரு நிலையிலும் தன் மகளின் வளர்ச்சியை மனக் கண்ணால் கண்டு மகிழ்வாள் சுந்தரி. அபூர்வாவும் அவளின் அம்மாவைவிட சுந்தரியிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டாள்.
அடுத்த வாரம் ஒரு மாத விடுமுறையில் இந்தியா போவது பற்றி சுந்தரிக்கு மிகவும் ஆவலாக இருந்தது. மகளுக்காகத் தங்கச் சங்கிலி, பொம்மைகள் என்று தன் சக்திக்கு ஏற்றவாறு வாங்கி வைத்திருந்தாள். அபூர்வாவின் பழைய பொம்மைகள், பிற விளையாட்டு சாமான்களை அவள் வீட்டு எஜமானி அவளுக்குக் கொடுத்திருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து தன் மகள் ஆசையோடு தன்னை முத்தமிடும் காட்சியை ஆயிரம் முறையாவது மனக் கண்ணில் கண்டு ரசித்திருப்பாள். அபூர்வாவை நினைத்தாலும் அவளுக்கு அழுகையாக வந்தது. தான் ஊருக்குப் போவதை அறிந்து ஒருவாரமாக தினம் அழுவதோடு அவளிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டது அபூர்வா. அபூர்வாவைச் சமாதானம் செய்வது பெரும்பாடாக ஆனது.
சென்னை விமான நிலையத்தில் தன் தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தயக்கத்துடன் எட்டிப் பார்க்கும் மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள் சுந்தரி. அவள் மகளோ அழுகையுடன் பாட்டியிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக்கொண்டாள். "இப்பதானே வந்திருக்கே. பழகக் கொஞ்சம் நாளாகும் அவளுக்கு" என்றார் அம்மா. ஒரு வாரமாகியும் சுந்தரி வாங்கி வந்த பொம்மைகளுடன் விளையாடினாளே தவிர அவள் மகள் சுந்தரியிடம் நெருங்கி வரவில்லை. எட்ட நின்று சிரிப்பது, கேட்ட கேள்விக்குப் பாட்டிக்குப் பின்னால் நின்று பதில் சொல்வது என்ற அளவிலேயே நின்றது அவர்கள் உறவு. குலதெய்வம் கோவில், உறவினர் வீடுகள் என்று அடுத்த பத்து நாட்களும் அலைய வேண்டிவந்தது. மகளின் பள்ளியில் (கான்வெண்ட் பள்ளி ஆயிற்றே!!) லீவு தராததால் அவளை வழக்கம்போல் அம்மாவிடம் விட்டுவிட்டு சுந்தரியும் கணவரும் ஊர் ஊராகப் பயணித்தார்கள். இந்த பத்து நாள் இடைவெளியில் மகள் மீண்டும் அவர்களுக்கு அந்நியப்பட்டுப் போனாள். மகள் விலகி இருப்பதைக் கண்டு கண்ணீர்விடும் சுந்தரியை 'இன்னும் பத்து நாள்தான் இருக்கு. நீ அவளை மாற்றி அவள் மனதில் இடம் பிடிப்பதற்குள் ஊருக்குப் போகும் நாளாகிவிடும். பின்னர் உன்னைப் பிரியும்போது குழந்தைக் கதறி அழும். எப்படி அவளைச் சமாதானப் படுத்துவாய்? அபூர்வாவே எப்படி அழுதாள் தெரியுமில்ல. இப்ப போனால் இன்னும் ஐந்து வருசமாகும் நாம வர. அதுவரை குழந்தையின் கண்ணீர் முகம்தான் நமக்கு நினைவுக்கு வரும். அதனால எட்டி நின்றே அவளை ரசி. இப்ப என்ன, அவள் உன் அம்மாகிட்டதானே இருக்கா. அடுத்த முறை நாம் வரும்போது அவள் விவரம் தெரிந்த பெரிய பொண்ணா இருப்பா. அப்ப உன்னைவிட்டுப் பிரியாம இருப்பா. கவலைப் படாதே" என்று அவள் கணவன் சமாதானப்படுத்தினான். கணவனின் வார்த்தைகளின் உண்மை அவளைத் தாக்கக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன்னை நினைத்து அழுதுகொண்டிருக்கும் அபூர்வாவிற்குத் தன்னால் இயன்ற பரிசுப் பொருட்களை வாங்க கடைக்குப் போகத் தயாரானாள்.
'விலைமீது விலை வைத்து கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா...." என்று ரஜினி டிவியில் உருகிப் பாடிக் கொண்டிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
தன் மகளின் நல் வாழ்வுக்காக இந்த தாய் செய்யும் தியாகம் மிகவும் பெரிது. அவள் பெரியவள் ஆனதும் உன்னை புரிந்து கொள்வாள் என்று அவள் மனதை புரிந்து கொண்டு சரியாக ஆறுதல் கூறும் அவள் கணவனின் அன்பு மனதை தொடுகிறது. அழகான கதை.
மன்னிக்கவும்! கதையின் தலைப்பு இன்னும் கொஞ்சம் கதையை சார்ந்து இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
நன்றி மீனாக்ஷி. தன் அன்பைக் கொட்டிக் கொடுத்தாலும் அபூர்வாவிடம் உரிமை கோர முடியாது; உரிமை உள்ள மகளுக்கு வெறும் பணம் மட்டும் அனுப்பும் இயந்திரமாக அவளின் வாழ்க்கை. இதைக் குறிக்கவே வாடகைத்தாய் என்று தலைப்பு வைத்தேன். பொருந்தவில்லையோ?
'வாடகை தாய்' என்ற தலைப்பை பார்த்தவுடன் surrogate mother என்று எண்ணி நான் கதையை படிக்க தொடங்கியதால்தான் இந்த தலைப்பு கதையை சார்ந்து இல்லாதது போல் எனக்கு தோணிவிட்டது.
பல நேரங்களில் நான் மனதில் நினைப்பதை மிக சரியாகதான் எழுதி இருப்பதாக நினைத்து கொண்டிருப்பேன் அதை பிறர் படித்து சொல்லும் வரை. அதே போல் பிறர் எழுதுவதையும் நான் எப்போதுமே ஏதோ ஒரு கோணத்தில் நினைத்து, படித்து, கருத்தும் சொல்லிவிடுவேன், இப்பொழுது உங்கள் தலைப்பை பற்றி
சொன்னது போல். நீங்கள் விளக்கியதற்கு நன்றி.
குறையோ நிறையோ தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் மீனாக்ஷி.
மிகவும் நன்றி கீதா.
வித்தியாசமான சிந்தனை. நன்றாக இருக்கிறது.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள். குழந்தை வளரும். பாசம் அல்ல என்பதை உணர்த்துகிறது கதை.
நன்றி துரை, ஸ்ரீராம்.
//குழந்தை வளரும். பாசம் அல்ல //. excellent.
சின்ன வயதில் நிகழும் சின்ன சின்ன பகிர்தலும், புரிதலும்தான் பெற்றோர்-குழந்தைகளிடையே நெருக்கத்தை உருவாக்குகிறது. அதன் இழப்பைக் கோடி கோடி பணத்தாலும் ஈடு செய்ய முடியாது.
ஒரு குழந்தைக்கு அதன் தாயானவள் அருகிலேயே இருந்து, அன்பும் பாசமும் கொடுத்து தன்னால் இயன்றவரை அவர்கள் வாழ வழி செய்து கொடுப்பது சிறந்ததா? இல்லை உங்கள் கதையில் உள்ளது போல் அவர்களை மிக நல்ல முறையில் வளர்பதற்காக, இது போல தியாகம் செய்து, பொருள் ஈட்ட பிரிந்து செல்வது, சிறந்ததா?
உங்கள் கதையை படித்ததிலிருந்து இந்த கேள்வி என் மனதை துளைக்கிறது.
நல்ல கேள்வி மீனாக்ஷி. படித்த படிப்புக்கேற்ற வேலை செய்யாது குழந்தைக்காக வீட்டிலிருந்து அவளை வளர்ப்பதும் ஒரு வகையில் தியாகமே. இந்தக் கதையில் வரும் தாய் செய்வதும் ஒரு வகையில் தியாகமே.
ஆனால் குழந்தைகளைப் பொறுத்த வரையில் குறைந்த பட்சம் 8 வயது வரை பெற்றோர்களின் அருகாமையும் அன்பும் அரவணைப்பும் மிக அவசியமான ஒன்று என்பது என் எண்ணம். பின்னர் அவர்களுக்குப் பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள் என்று நிறைய துணை கிடைக்கும்போது பெற்றோரின் வழிகாட்டல் மட்டும் போதுமானது. அந்த நேரத்தில் தாய் வேலைக்குச் செல்வது பெரிய வேறுபாட்டை உருவாக்காது என்று நினைக்கிறேன்.
அருமை கீதா. நிறைவான பதில்.
ரொம்ப டச்சிங்கா இருக்கு. இதைவிட கொடுமையான் நிகழ்வு என அத்தை மகளுக்கு நடந்திருக்கு. தன் மகள் பிறந்த அதே நேரத்தில் கணவன் விபத்தில் இறந்து போனான். மகளின் எதிர்காலத்துக்காக மலேசியா போனாள். ஆனால் மகள் ஒட்டாமலே போனாள். ஆணாய் இருந்தால் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு இன்னொன்று பெற்றிருப்பான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்.
//தன் மகள் பிறந்த அதே நேரத்தில் கணவன் விபத்தில் இறந்து போனான். மகளின் எதிர்காலத்துக்காக மலேசியா போனாள். ஆனால் மகள் ஒட்டாமலே போனாள். //
மிகவும் வருத்ததிற்குரியது.
//ஆணாய் இருந்தால் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு இன்னொன்று பெற்றிருப்பான்//
இதுதான் வருந்தவைக்கும் சமூக நியதி!!!
Post a Comment