Wednesday, 22 December 2010

மாதங்களில் அவள் மார்கழி

              சும்மாவா சொன்னார் கவியரசு 'மாதங்களில் அவள் மார்கழி' என்று?!!.  கொளுத்தும்  வெயிலிலிருந்தும், கொட்டும் வியர்வையிலிருந்தும் நம் சென்னை வாசிகளுக்குக் கொஞ்சம் விடிவு வருவது மார்கழி மாதத்தில்தானே.  சிறுவர் சிறுமியர் கூட குளித்துவிட்டுதான் கோவில் போவது வழக்கம்.  இதற்கு கொஞ்சம் விதிவிலக்கு மார்கழி மாதக் காலை பஜனைதானே!!.  காலையில் பல் துலக்கியவுடன்'எம்பாவாய் எம்பாவாய்' என்று கூட்டத்தோடு கோவிந்தா போட்டுவிட்டு மார்கழித் திங்களில் தானே 'மடி நிறைய பொங்கலோடு' என்ஜாய் பண்ணலாம்!!

              நான் பள்ளி போகும் பருவத்தில் மார்கழி மாதத்தை மிகவும் ரசித்திருக்கிறேன்.  என் அம்மா மிக நன்றாகப் பாடுவார்.  அதுவும் 'மார்கழி திங்கள்...' என்று திருப்பாவையை அவர் பாடும் அழகு எந்த கும்பகர்ணனையும் எழ வைக்கும்.  அரையாண்டு தேர்வுக்குப் படிக்கக் காலையில் எழும் நாங்கள் அம்மாவின் பாட்டால் கவரப்பட்டு திருப்பாவையில் தொடங்கி கிருஷ்ண பஜன் வரை அம்மாவிற்குப் பின்பாட்டு பாடுவதில் ஐக்கியமாகிவிடுவோம். இப்படியே காலைப் பொழுது படிக்காமல் போனதால் கிருஷ்ணர்தான் தேர்வில் நல்ல மார்க் வாங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணையிருப்பார் என்று நினைக்கிறேன்.

               மார்கழி பனிக்கு மஃப்ளர் கட்டிக் கொண்டு வாசல் முழுவதும் கோலம் போட்டதும் இனிமையான நினைவுதான்.  என் மூத்த சகோதரி கோலம் போட்டால் அதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். இன்றைய அடுக்குமாடி சென்னையில் மார்கழியில் கோலம் போடுகிறார்களா தெரியவில்லை.

              எங்கள் பம்மல் ஸத்சங்கத்தில் திருப்பாவை/திருவெம்பாவை சொல்லிவிட்டு நாங்கள் பொங்கல் வாங்கி சாப்பிடுவோம்.  அந்தக் குளிருக்கு சுடச்சுட பொங்கல் எவ்வளவு சுவை!! ஆவணி அவிட்டத்திற்க்குக் கூட கோவில் போக அடம்பிடிக்கும் என் அண்ணன்மார்கள் மார்கழி மாதம் காலையிலேயே ஆஜராகிவிடுவார்கள் பொங்கல் வினியோகம் செய்ய!!

             பின்வரும் தைப் பொங்கல் விருந்துக்குக் கட்டியம் கூறும் வகையில் வைகுண்ட ஏகாதசி பொங்கல், கூடாரைவல்லி சர்க்கரைப் பொங்கல் (மூட நெய் பெய்து முழங்கை வழிவார... என்ன ஒரு taste ஆண்டாளுக்கு!!), 'கறவைகள் பின் சென்று' (கூடாரைவல்லிக்கு முன் தினம் என்று நினைவு),பாடலுக்குத் தயிர்சாதம், ஹனுமத் ஜெயந்தி வடை, ஆருத்ரா தரிசனம் களி/தாளகம் என்று மார்கழி மாத விருந்து பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே ரகம். (எங்க ஆரம்பிச்சாலும் கரெக்டா சாப்பாட்டு மேட்டருக்கு வந்துவிடுவியே என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது).

             திருவாதிரை அன்று விடிகாலையில் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு நான் என் பாட்டியுடன் போவேன். அந்த அதிகாலைப் பொழுதில் மேளம் ஒலிக்க சிவனை வணங்குவது ஒரு தனி அனுபவம்.   திருவாதிரை அன்று  ஏன் களி செய்கிறார்கள் என்று என் அம்மா வேடிக்கையாக ஒரு விளக்கம் சொல்வார். 'திருவாதிரைக்கு ஒரு வாக்களி (வாக்கு அளி)' என்பதை 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்று புரிந்து கொண்டதால் என்று.  குவைத் வந்த பின்னும் திருவாதிரை அன்று அதிகாலையிலேயே (நான் 5 மணிக்கு எழுவது திருவாதிரை மற்றும் தீபாவளி அன்று மட்டுமே) சிவனை வழிபடுவதும் ஒருவாக்களி உண்பதும் தொடர்ந்தது.  இந்த முறை காலில் அடிபட்டு சும்மா இருப்பதால் களி உண்டபின் இந்த களி விஷயத்தைக் கொஞ்சம் 'கிண்டுவோமே' என்று கூகிளில் தேடினேன்.

              திருவாதிரைக்குக் கேரளாவில் (சிவனால் எரிக்கப்பட்ட காமன் உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் வகையில்)  விரதமிருந்து திருவாதிரைக் களி (கூத்து) என்று பெண்கள் நடனமாடுவார்களாம்.  .  அதிலிருந்துதான் களி பிறந்ததோ?  சிவனின் நட்சத்திரமான ஆதிரை நட்சத்திரத்தைப் போற்றும் வகையிலும் நடனமாடுகிறார்கள் என்று சில செய்திகள் கூறுகின்றன.  'களி'க்க(நடனமாட) சோம்பல் பட்டு நம் மக்கள் களி உண்டு'களிக்க' ஆரம்பித்தார்களோ?


(படம் உபயம் : welcome2kerala.com.)

              இந்த களி பிரசாதத்திற்கு ஒரு கதையும் உண்டு.  சேந்தனாரென்ற ஒரு சிவபக்தர் சிவனடியாருக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொடுத்த பின்னரே உண்ணும் பழக்கம் கொண்டிருந்தாராம்.  ஒரு நாள் நல்ல மழையில் ஒரு சிவனடியார் வந்து பசிக்கு உணவு கேட்டாராம்.  விறகெல்லாம் நனைந்து ஈரமாகியிருக்க சேந்தனாரின் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் விறகை எரியவைத்து சிவனடியாரை மேலும் காக்க வைக்கக் கூடாது என்று விரைவில் ஏதாவது சமைக்க எண்ணி வெல்லத்தையும் அரிசி மாவையும் வைத்து களி செய்தாராம்.  "இதுதான் இன்று செய்ய முடிந்தது.  தயை கூர்ந்து ஏற்க வேண்டும்" என்று சிவனடியாரிடம் வேண்டிக் கொண்டார்களாம்.  அதை மகிழ்சியோடு சிவனடியார் சாப்பிட்டு சென்றவுடன் கோவிலுக்குப் போன அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.  சிவன் கோவிலில் களி சிந்தியிருக்க சிவபொருமான் வாயிலும் களி ஒட்டிக் கொண்டிருந்ததாம்.

            இந்த மார்கழி மாதத்தை செவிக்கும் (இசை விழாவின் இசை மழையில் நனைந்து) வயிற்றுக்கும் ஈந்து கொண்டாடி மகிழுங்கள்.

23 comments:

எல் கே said...

கூடாரவல்லி என்று நினைவு . :) கிருஷ்ணருக்கு ஓவர் டைம் வொர்க் எல்லாம் தந்து இருக்கீங்க ? உங்க கால் எப்படி இருக்கு ?

geetha santhanam said...

பரவாயில்லை. தேறிக் கொண்டு வருகிறது. நன்றி LK.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

'களி'க்க(நடனமாட) சோம்பல் பட்டு நம் மக்கள் களி உண்டு'களிக்க' ஆரம்பித்தார்களோ?//

:)

சாய் said...

சூப்பர் நகைச்சுவையாக எழுதி இருக்கே. உனக்கு இவ்வளவு நகைச்சுவை வரும் என்று எனக்கு தெரியாது. "ஒருவாய்க்கு களி" இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. அம்மா வந்து இருப்பதால் என்றாவது ஒரு நாள் பண்ணுகின்றேன் என்று சொல்லி இருக்கிறாள். பெரியம்மா இறந்துவிட்டதால் மற்றொரு நாள் பண்ணுவாள். களியும் தாளகமும் இந்த வாரம் ஒரு நாள் நிச்சயம் இருக்கும். என் தம்பி குமார் விரும்பி சாப்பிடுவான்.

எங்கள் வீட்டு சிறியவன் இருக்கானே - காய்கறி என்றாலே ஏதோ மண்ணை தின்னுவதை போல் செய்வான். (அவியல், பொரிச்ச குழம்பு போன்றவை) நான் இப்போது வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் மதியம் அவன் வரும்போது - நேற்று என் அம்மா செய்த அவியலின் காய்கறியை சாதத்துடன் பிசைந்து ஊட்டி விடுகின்றேன். என் அம்மா அவன் சாப்பிடாவிட்டால் என்னை அழைத்தால் போதும் - சமத்தா சாப்பிட்டுவிடுவான். இன்னும் இரண்டு மூன்று வருடம் ஆனால் அவனுக்கும் ஏணி வைத்து தான் ஊட்டிவிடவேண்டும்.

பெரியவன் பிரச்னை இல்லை. எங்களுக்கே வைக்காமல் கூட தின்று விடுவான். சிறு குழந்தையாக இருக்கும்போது "கேப்பை கஞ்சி" பண்ணிக்கொடுக்கும்போது பாய்ந்து பாய்ந்து சாப்பிடுவான்.

என் சிறு வயதில் மயிலையில் இருக்கும்போது ஏன் அதற்கு பிறகும் கூட ஊரில் இருந்து வீட்டிற்க்கு வருபவர்களுக்கு கொடுத்தது போக மிச்சம் சொச்சம் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு எங்களுடையது. அடுக்குளையில் தோசை வார்த்தே என் அம்மா சோர்ந்து பார்த்து இருக்கின்றேன். மாவும் அரைக்கவேண்டும். இந்த கால பெண்கள் ஒன்றோ இரண்டோ குழந்தை வைத்துக்கொண்டு எல்லா வசதிகளும் இருந்தும் சோர்ந்துபோவதை பார்த்தால் வியப்பாக இருக்கின்றது !

எனக்கு இப்போது சாப்பிட பணம் இருக்கு ஆனால் உடம்பு சௌகர்யம் தான் இல்லை. என்ன கொடுமை.

meenakshi said...

'மார்கழி பனியில்' இதில் ஆரம்பித்து, கோலம், வைகுண்ட ஏகாதசி வெண் பொங்கல், திருவாதிரை களி, அனுமர் ஜெயந்தி வடை, கூடாரவல்லி சக்கரை பொங்கல் என்று நான் ரசிப்பதை, விரும்புவதை எல்லாம் உங்கள் பதிவில் வந்தது கண்டு மிகவும் சந்தோஷம். வைகுண்ட ஏகாதசியும், திருவாதுரையும் ஆயாச்சு. இன்னும் வடையும், சக்கரை பொங்கலும்தாம் தான் பாக்கி. அதுக்குதான் வெய்டிங்.

geetha santhanam said...

வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி, மீனாக்ஷி & சாய்ராம்.
பாராட்டுக்கு நன்றி சாய்ராம். ஏதோ முடிந்த அளவு டிரை பண்ணியிருக்கேன்.
எரிச்சகறி, தாளகம் எல்லாம் சாப்பிட ஆரம்பித்தால் தானாகவே காய்கறிகளுடன் சாப்பிட ஆரம்பிப்பான் கவலைப்படாதே.
என்னது, இன்னமும் ஊட்டிவிடுகிறாயா? அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் அதிகம் செல்லம் கொடுப்பதுபோல் தெரிகிறதே!! நடக்கட்டும், நடக்கட்டும்.

geetha santhanam said...

சாய்ராம், உடம்பு ஏன் சௌகர்யமில்லை?

அப்பாதுரை said...

மாதங்களில் நான் மார்கழினு தன்னைப் பத்தி கீதையில் சொன்னது கண்ணன்:) அவள் மார்கழினு இன்னொருத்தரைப் பத்தி அழகா சொன்னது கண்ணனுக்கு தாசன். அதுவும் சரிதான்.

மார்கழி மாதம்னா என்னவோ சொல்வீங்கனு தொடர்ந்து படிச்சா சாப்பாட்டைப் பத்தியே விவரமா போயிட்டிருக்கே? இதானா மார்கழி சிறப்பு, ஒகே.

சத்சங்கம் பொங்கல் வினியோக நினைவு ஒன்று. கூடாரவல்லி போது ஒரு வீட்டிலிருந்து மிகவும் சிறிய பானையில் சர்க்கரைப் பொங்கல் வரும். சிறிய பானை கூட இல்லை, விளையாட்டுச்செம்பு என்று தான் சொல்லணும் - இரண்டு கைக்கு மேல் பொங்கல் இருக்காது. பொங்கலைப் பாலில் வேகவிட்டு செய்திருப்பார்கள். அந்தச் செம்பிலும், பச்சைக்கற்பூரம், திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து அரை இஞ்சுக்கு கரைகட்டிக் கொண்டு வருவார்கள். ரொம்ப ரொம்ப ஏழைக் குடும்பம். இருந்தாலும் வருடம் தவறாமல் கொண்டு வருவார்கள். பொங்கலை னைவேத்தியம் செய்யும் போது குறியாக இருப்போம். பஜனை முடிந்ததோ இல்லையோ முதல் வேலையாக எங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு விடுவோம். "க்ருஷ்ணர் சாப்பிட்டா என்ன, நீங்க சாப்பிட்டா என்னடா?" என்றபடி கொடுத்து விட்டுத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விடுவார் மாமி. இப்போது அநக் குடும்பத்தார் எப்படியிருக்கிறார்களோ தெரியவில்லை.

அப்பாதுரை said...

மார்கழி மாத நினைவுகளில் இன்னொன்று: முதலில் ஐந்து மணியளவில் ஒலிபெருக்கியை அலறவிட்டுக் கொண்டிருந்தார்கள்; நெருக்கடி பெருகாத நாட்களில் இது முத்தமிழ் நகர், இது பாலாஜி நகர் என்று அடையாளம் சொல்லக்கூடிய வகையில் ஒலிபெருக்கிகளில் பாடல்கள் கேட்கும். நாளாக அக மூன்றரை மணிக்கே அலறவிடத் தொடங்கினார்கள். எதுவுமே கேட்கமுடியாதபடி எல்லாம் கலந்த காட்டுக்கூச்சலாக மாறிவிட்டது. இப்போது எப்படி தெரியவில்லை.

geetha santhanam said...

இந்த ஒலிப்பெருக்கி பிரச்சினை பெரிய பிரச்சினை. நம்ம துர்கை அம்மன் கோவிலில்கூட வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நம் சகோதரிக்குக் குழந்தை பிறந்த மார்கழி மாதத்தில் பெரியதாக அலறவிட்டார்கள். போய் கேட்டால் "இதைக் கொடுத்தவர்கள் அவர்கள் வீட்டு வரை கேட்கும்படி வைக்க வேண்டும்னு சொன்னாங்க" என்றார் வேதாசலம் மகன். "அப்படின்னா அவங்க வீட்டு மாடியிலேயே வைக்க சொல்லுங்க" என்று சண்டை போட்டு வந்தேன். இரண்டு மூன்று நாள் போராட்டத்துக்குப் பிறகு வழிக்கு வந்தார்கள்.

ஸ்ரீராம். said...

ஆச்சர்யம். எதையோ தேடும்போது கிடைத்த கோல நாட்டினால் நான் கூட மார்கழிப் பதிவு ஒன்று எழுதி வைத்துள்ளேன்! இங்கு வந்தால் அதே மார்கழி, கோலம்....ஆனால் நான் தயார் செய்து வைத்துள்ள பதிவு இந்த அளவு சுவையாக இல்லை. சாய்ராம் பின்னூட்டம் சுவை.

மாற்றிய டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது.

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம். உங்கள் பதிவைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். உங்கள் பதிவுகள் போல் ஸ்வாரஸ்யமாக எழுத நானும் ஏதோ கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறேன் அவ்வளவுதான்.

அம்பிகா said...

உங்கள் மார்கழி பதிவு மிக அருமை. கோலம், பஜனை, ஏகாதசி, திருவாதிரை அனைத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.
//'களி'க்க(நடனமாட) சோம்பல் பட்டு நம் மக்கள் களி உண்டு'களிக்க' ஆரம்பித்தார்களோ?// :-)))

geetha santhanam said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அம்பிகா. அடிக்கடி வாங்க.

சிவகுமாரன் said...

ஆகா, இங்கும் மார்கழித் திருநாளா?
பதிவோடு சாய், அப்பாத்துரை பின்னூட்டங்களும் சுவையாக உள்ளன.
என் அம்மா திருவாதிரைக்கு ஆற்று மணலால் ஏழு லிங்கம் மாதிரி செய்து இனிப்பு அடை 7 செய்து படைத்து வழிபடுவார். என் மனைவி செய்யும் அடை அந்த அளவுக்கு சுவையாக இருப்பதில்லை.

சாய் said...

//geetha santhanam said... சாய்ராம், உடம்பு ஏன் சௌகர்யமில்லை? //

கீது, நான் சொல்ல வந்தது, பசி இருந்தபோது வேண்டும் அளவு உணவில்லை. இப்போது உணவு இருக்கின்றது - ஆனால் உடல் உபாதைகளால் எல்லாவற்றையும் உண்ணும் கொடுப்பினை இல்லை என்றேன். இனிப்பு / எண்ணெய் கூடாது. வரும் கோவத்திற்கு காரம் ஆகாது - அப்புறம் மனுஷன் நாரையும் புல்லையும் தான் தின்னவேண்டும் !! பாட்டிக்கு நான் கருப்பாய் இருந்ததால் என்னை பிடிக்காதோ அல்லது தாத்தாவை போல் நான் இருந்ததால் என்னை பிடிக்காதோ - டியாபெடிக் மட்டும் அவர்களை கொண்டு நாற்பது வயதிலேயே ! இன்று அம்மா காலையில் ஜபம் செய்யும் போது அழுதே விட்டார்கள். எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" பாடலை கேட்க்கும்போது. அப்போது எதுவும் இல்லை சந்தோஷம் இருந்தது இப்போது எல்லாம் இருக்கு சந்தோஷம், நிறைவு, திருப்தி இல்லை என்று. உண்மை தானோ ! என்னவோ போ

சாய் said...

மார்கழி மாதம் பஜன் - என் கடைசி சித்தாப்பாவின் கமெண்ட் தான் நினைவுக்கு வரும். திருநெல்வேலி பாளையம்கோட்டையில் என் சித்தியும் அவரின் தாயும் அவர்களுக்கு வீட்டிற்கு முன் வந்தவுடன் குரலெடுத்து பாடுவார்களாம் (கத்துவார்கள் என்று சித்தப்பு சொல்லுவார்). அதுவரை பத்தோடு பதினைந்தாக பாடும் பலரும் யாராவது தெரிந்தவர்கள் வந்துவிட்டால் இப்படித்தான்.

சாய் said...

//geetha santhanam said... என்னது, இன்னமும் ஊட்டிவிடுகிறாயா? அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் அதிகம் செல்லம் கொடுப்பதுபோல் தெரிகிறதே!! நடக்கட்டும், நடக்கட்டும்.//

Doing it after his early baby days in fact !!

geetha santhanam said...

சாய், உன்னுடைய பின்னூட்டங்களே ஒரு பதிவைப் படித்த திருப்தியைத் தந்தது.

சிவகுமாரன், //என் அம்மா திருவாதிரைக்கு ஆற்று மணலால் ஏழு லிங்கம் மாதிரி செய்து இனிப்பு அடை 7 செய்து படைத்து வழிபடுவார்.//
இது கேள்விப் பட்டது இல்லையே. முடிந்தால் விளக்கமாகக் கூறுங்கள்.

சாய் said...

//geetha santhanam said... சாய், உன்னுடைய பின்னூட்டங்களே ஒரு பதிவைப் படித்த திருப்தியைத் தந்தது.//

ரொம்ப போட்டுடோனே ?? இதான் கடைசி.

அப்பாவி தங்கமணி said...

உங்க பதிவு படிச்சு எனக்கும் ஊர்ல மார்கழி குளிர் / பஜனை / பொங்கல் / கோலம் எல்லாம் கண் முன்னால வந்துடுச்சு... அருமை போஸ்ட்... ஆமா... நீங்க சொன்னாப்ல வரிசயா ஒரு ஒரு விசேஷ நாளா வரும் மார்கழி வந்ததும்.... I miss that

geetha santhanam said...
This comment has been removed by the author.
geetha santhanam said...

நன்றி அப்பாவி தங்கமணி. இந்தியா பயணமெல்லாம் நல்லா இருந்ததா?