Wednesday, 23 February 2011

பொன்னாரம் பெரும்பாரம்


               


              சந்தியா இரயிலிலிருந்து இறங்கப் பெட்டி, பைகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.  நாத்தனார் மகளின் திருமணத்திற்குக் கும்பகோணம் போய்விட்டுக் குடும்பத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  அம்மா, அப்பா, பெண் என்று எல்லோரையும் எழுப்பி ரெடியாக இருக்கச் சொன்னாள்.  அவள் கணவன் மட்டும் நாளை மறு நாள் திரும்புகிறார்.  சந்தியாவின் மகளுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.  அந்த விசேஷம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதில் நினைத்தவாறே லக்கேஜெல்லாம் இறங்கும் வாசலுக்கருகில் கொண்டு வைத்து தானும் வாயிலுக்கருகே கம்பியைப் பிடித்தவாறு நின்று கொண்டாள்.

               அம்மா மெல்லிய குரலில் "நகையெல்லாம் பத்திரமா இருக்கா.  கைப் பையை ஒரு முறை செக் பண்ணிக்கோ" என்றார்.  நகைப் பையை கைப்பையில் வைத்தது நினைவிருந்தாலும் அம்மாவின் திருப்திக்காக ஒரு முறை அதை எடுத்துப் பார்த்து உள்ளே வைக்க எத்தனித்தாள்.  அப்போது திடீரன்று ட்ரெயின் நின்றதால் தடுமாறியதில் நகைப்பை கையிலிருந்து தூரத்தில் விழுந்தது.  உடனே பதறிப்போய் அம்மாவிடம் பையைக் கொடுத்துவிட்டு கீழே இறங்கினாள்.  "அம்மா, ட்ரெயின் போகத் தொடங்கினால் நீங்க போய் ஸ்டேஷனில் இருங்கோ.  நான் தேடி எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று அவள் சொல்லவும் ட்ரெயின் புறப்படவும் சரியாக இருந்தது.

               அதிகாலை வேளை. இருட்டு இன்னும் முற்றிலுமாக விலகவில்லை.  சூரியனே அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு கொஞ்சம் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் புதராக இருந்தது. இந்தப் பை எங்கே விழுந்ததோ தெரியவில்லை.  மகள் திருமணத்திற்காக வாங்கிய பெரும்பான்மை நகைகள் இந்தப் பையில்தான் இருந்தது.  அதை விட்டுவிட்டும் போக முடியாது. தன்னோடு வராதக் கணவனை மனதிற்குள் திட்டியவாறே புதர்களுக்குள் தேடலானாள்.  கடைசி நேரத்தில் டென்ஷன் படுத்திய அம்மாவிற்கும் மனதில் அர்ச்சனை நடந்தது. அவள் அம்மா கவலையுடன் இரெயிலிலிருந்து எட்டிப் பார்த்தவாறே செல்வது தெரிந்தது.  'பாவம் அம்மா, அவள் கவலை அவளுக்கு.  ட்ரெயினில் விட்டு விடப் போகிறோமே என்று எச்சரித்தார்.  நான்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்.  ஸ்டேஷன் வரப் போகிறதே என்று வாசலில் நின்றேன்.  இந்த பாழாப் போற டிரைவர் அப்பதானா சடன் ப்ரேக் போடணும்' என்று மனதில் நொந்தவாரே புதர்களின் பின்னால் போய்த் தேடலானாள். 'பிள்ளையாரப்பா, இந்தப் பை கிடைக்கணும்.  108 கொழக்கட்டை பண்றேன்.  காப்பாத்துப்பா' என்று வேண்டியவாறே தேடிக் கொண்டு போனாள்.

              'விடிகாலையில் ஸ்டேஷன்லயே ஆள் நடமாட்டம் கம்மி.  இவள் நடு வழியில் இறங்கிவிட்டாளே. நகை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.  என் பொண்ணு பத்திரமா வரணும்.  பிள்ளையாரப்பா, 108 கொழக்கைடை பண்றேன்.  காப்பாத்துப்பா' என்று சந்தியாவின் அம்மாவும் மனமுருக வேண்டிக் கொண்டாள். அதற்குள் ட்ரையின் ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டது.  முதலில் வயதால் தளர்ந்த தன் கணவரை இறக்கிவிட்டு பின் பேத்தியின் உதவியுடன் மற்ற சாமான்களை இறக்கிவைத்தாள் சந்தியாவின் அம்மா.  தான் போய் அம்மாவை அழைத்து வருவதாகச் சொன்ன பேத்தியைத் தடுத்து நிறுத்தி மகள் வரக்கூடிய வழியையே பார்த்த வண்ணம் பதைத்து நின்றாள் சந்தியாவின் அம்மா. 'வேகமாக நடந்தால் 1௦-15   நிமிடத்திற்குள் வந்துவிடலாம்.  உன் அம்மா நல்ல தைரியசாலி.  வந்துவிடுவாள்' என்று பேத்தியைச் சமாதானப்படுத்தினாள்.

             புதர்களுக்குள் பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்த சந்தியா கழுத்தில் ஏதோ குறுகுறுக்கவே திரும்பிப் பார்த்தாள்.  ஒரு ரௌடி அவள் தாலி சங்கிலியை எடுக்க முயன்று கொண்டிருந்தான்.  கண்மூடித் திறக்கு முன் அவன் மூக்கைப் பார்த்து குத்து விட்டு கீழே குனிந்து ரெயில்வே ட்ராக்கருகில் கிடந்த சரளைக் கற்களைச் சரமாரியாக அவன்மேல் வீசினாள்.  அதில் ஒன்று ரௌடியின் கண்ணைப் பதம் பார்க்கவே அவன் தடுமாறினான்.  அந்த வேகத்தில் அவனைக் கீழே தள்ளி மேலும் முகத்தில் மாறிமாறி குத்தினாள். எத்தனை வடிவேலு-கோவை சரளா காமெடி பார்த்திருப்பாள்!!. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பெரிய கல்லையும் அவன்மேல் தூக்கிப் போட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடத்தொடங்கினாள்.

                'அந்த நகைப் பை கிடைக்கலையே.  இந்த ரௌடி வேற வந்து படுத்திட்டான்.  அவன் எழுந்தால் என்ன செய்வானோ.  நகையாவது வேறு வாங்கிக்கலாம்.   போய் இரெயில்வே ஸ்டேஷன் போலீஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணலாம்.  அவாளோடு வந்து தேடிப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு.  நம்மை விட்டுப் போகாது" என்று பலவாறு எண்ணியவாறே தாலி செயினைக் கையில் இறுகப் பற்றியவாறு ஸ்டேஷன் நோக்கித் திரும்பிப் பார்க்காமல் ஓடினாள் சந்தியா.

                சந்தியா அடித்த அடியில் நரகத்திற்கும் பூமிக்குமாக ஷட்டில் செய்து கொண்டிருந்தான் அந்த ரௌடி.  கண்ணைத் திறக்க முடியவில்லை.  'சே! ஒரு செயினுக்கு இந்த அடி அடிக்குதே அந்தம்மா.  பெரிய ரௌடி பொம்பிளைதான்' என்று அவன் உள்மனது சொல்லிக்கொண்டிருந்தது.தலையில் வேறு பெரிய கல்லால் அடி விழுந்ததால் மயங்கிவிட்டான்.    மயங்கிய அவன் கைக்கு அருகில் இருந்த நகைப் பையிலிருந்த smiley face அவர்கள் இருவரையும் பார்த்து 'நகை'த்துக்கொண்டிருந்தது.

10 comments:

ஸ்ரீராம். said...

என்ன அநியாயம்...அந்த 'கெட்டவ'னுக்கு அருகில் நகைப்பை...அது சரி இப்போ பிள்ளையாருக்கு நூத்தி எட்டு கொழுகட்டையாவது கியாரண்டி இல்லை? அவங்க அம்மா வேண்டுதல் நிறைவேறிடுச்சே...

அப்பாதுரை said...

கல்லை நம்பினார் கைவிடப்படார்னு சொல்லுங்க.

geetha santhanam said...

துரை, உங்கள் கமெண்ட்டை ரசித்தேன். ஸ்ரீராம், விநாயகரும் தாயுள்ளத்துக்கு உடனடியாகச் செவிசாய்க்கிறார் போலும்.

மோகன்ஜி said...

இப்படி அப்பாதுரை கமென்ட் போட்டு கலகலக்க வச்சுட்டாரே பிள்ளையார். அம்மாக்காரி கொழக்கட்டை அவருக்கு. கல்லெறி காந்தாவை அப்பாதுரைக்கும் எனக்கும் ஆளுக்கு ஐம்பத்துநாலு கொழக்கட்டை அனுப்பச் சொல்லுங்க.
சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க கீதா!

geetha santhanam said...

வருகைக்கு நன்றி மோகன்ஜி. கல்லெறி காந்தாவா, நல்லா இருக்கே பட்டப் பெயர்.

சிவகுமாரன் said...

நல்லாருக்கு கதையும் அப்பாத்துரையின் கமெண்டும்.

geetha santhanam said...

நன்றி சிவகுமாரன்.

எல் கே said...

கல்லும் எறிவாள் பத்தினி ??

geetha santhanam said...

வல்லவனுக்குக் கல்லும் ஆயுதம் இல்லையா LK

அப்பாதுரை said...

கல்லெல்லாம் மண்டையடிக் கல்லாகுமா?