அலைக் கற்றை விவகாரம் பெரிய புள்ளிகளையெல்லாம் படுத்தியெடுக்கிறது என்றால் இந்த அலைபேசி நம்மைப் போல் சாமான்யர்களை எப்படி மாற்றியிருக்கிறது! ஒரு பூக்காரி கூட "எங்க கீர? வர சொல பல்லாவரம் ஸ்டேஸனாண்ட புள்ள டூசன் போயிருக்கு, அத்த இட்டாந்துரு" என்று செல்லில் பேசி அலட்சியமாக அதைச் சுருக்குப் பையில் போட்டு முடிந்து வைக்கும் அளவு நாட்டில் செல்லின் செல்வாக்குப் பரவியிருக்கிறது.
சென்னையிலிருந்து கும்பகோணம் இரயிலில் போவதற்குள் ஒரு சந்தைக் கடை போல் ஒவ்வொருவரும் செல்லில் கத்தி கத்தி பேசுவது ஒரு கதம்பமாகக் கேட்பதற்குச் சுவையாக இருக்கும். கண்ணை மூடி அங்கங்கே வரும் பேச்சை மட்டும் கேட்டால் அது ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும். இங்கே ஒரு சாம்பிள்:
seat number 23: 'ஆமாம், மாப்பிள்ள ரொம்ப நல்லவர்"
seat number 35: 'அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும், மூஞ்சில நாலு அப்பு அப்பிட்டுதான் பேசுவேன்"
-------------------------
seat number 42: '..எனக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு..."
seat number 53: 'அவ்வளவு சீக்கிரத்தில அது நடந்துருமா? பிரச்சினை பண்ண மாட்டோம்? அண்ணாச்சின்னா சும்மாவா?"
--------------------------
ஒரு வழியா எல்லோரும் உரையாடிவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் நோக்கியா ரிங்க் டோன் ' டட டண் டன் டட டண் டன் டான்...." கேட்டவுடன் ஒரு பத்து பேர் அவசர அவசரமாக லைட்டைப் போட்டு கைப் பை, சட்டைப் பை என்று தேடி மொபைல் ஃபோனைப் பார்க்க, ஃபோன் வந்த ஒருவர் மட்டும் " இப்பதாண்டா படுத்தேன் செல்லம், குட் நைட்..." என்று கொஞ்சிப் பேச மற்றவர்களெல்லாம் கடுப்போடு மீண்டும் தூங்கப் போவார்கள்.
பொது ரிங்க் டோனால் இந்தப் பிரச்சினை என்றால் சிலரின் ஸ்பெஷல் ரிங்க் டோனால் வேறு பிரச்சினைகள். கோவிலில் கூட்டத்தில் நீந்தி கர்ப்பக்ருஹம் அருகில் வந்தவுடன் கண்மூடி சாமியைக் கும்பிடும்போது 'என் உச்சி மண்டைல சுர்ருங்குது..." என்று ஒருவரின் செல்போன் ஒலித்தால் உண்மையிலேயே அவர் உச்சி மண்டையில் நங் என்று குட்டத் தோன்றும்.
செல்ஃபோன் பல நேரங்களில் செல்லா ஃபோன் ஆகிவிடுகிறது. அதுவும் கிராமங்களில் செல்ஃபோன் ரிங் மட்டும்தான் கேட்கும். பேச ஆரம்பித்தால் வெறும் சத்தம்தான் கேட்கும். ஒருமுறை கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் என் உறவினர் வீட்டுக்கு வர ஒரு நண்பர் வழி கேட்டு செல்ஃபோனில் அழைத்தார். ஹாலில் உட்கார்ந்திருந்த நண்பர் "ஹலோ, கேக்கலையா... இப்ப கேக்குதா?.." என்று கேட்ட வண்ணம் முதலில் வாசலுக்குப் பின் தெருவிற்கு, பின் மெயின் ரோடுவரை போய்விட்டார். போன் செய்தவர் "இப்பதான் தெளிவா கேக்குது. தெளிவா பாக்கக்கூட முடியுது. அப்படியே லெஃப்ட்டில திரும்பிப் பாருங்க, நான் நின்னுண்டிருக்கேன்..." என்றாரே பார்க்கலாம்.
சிலருக்கோ செல்ஃபோன் செல்ல ஃபோனாயிருக்கும். குளிக்கப் போகும்போதுகூட கையில் எடுத்துப் போவார்கள். அதுவும் கல்லூரி மாணவ/மாணவிகள் தூங்கும்போதுகூட செல்ஃபோனைப் பிரிவதில்லை. நடுராத்திரி தூங்கும்போது திடீரென்று எழுந்து பார்த்தால் பக்கத்தில் படுத்திருப்பவர் தலை வரை போர்வை மூடியிருக்க உள்ளே இருந்து கொள்ளிவாய்ப் பிசாசு போல் வெளிச்சம் வர பயந்து லைட்டைப் போட்டுப் பார்த்தால் போர்வைக்குள்ளிருந்து கையில் செல்ஃபோனுடன் வெளிவருவார்கள். கேட்டால் நண்பர்களுடன் சாட்டிங்காம்!!!.
இன்னும் சிலருக்கோ செல்ஃபோன் 'கொல்'ஃபோனாகிவிடுகிறது. ஒருமுறை ஸ்டெர்லிங்க் ரோட்டில் ஆட்டோவில் பொய்க்கொண்டிருந்தேன். சிக்னலில் நிற்கும்போது பைக்கில் ஒருவர் செல்ஃபோனில் " வழி சொல்லுங்கண்ணே. ஆ, சரி, மேல சொல்லுங்க. ரைட்ல கட் பண்ணனுமா...சரி, சரி, மேல எப்படி போறது...?" என்று பேசிக்கொண்டே இருக்க எங்கள் ஆட்டோ டிரைவர் ஹாரன் அடித்து, "சரிதாம்பா, இப்படி பேசிக்குனு போனால் நேர மேலதான் போணும். ஓரத்தில நிப்பாட்டிக்க; பொறவு பேசு.." என்றார். மிகச் சரியான ஆலோசனையாக எனக்குப் பட்டது.
ஒரு சிலர் செல்ஃபோனை பயன்படுத்துவதில் 'கருமி'யாக இருப்பர். Missed call விடுபவர்கள் ஒருவகை என்றால் இவர்கள் அதற்கும் மேல். அவசரத்திற்குப் தோடர்புகொள்ளத்தானே செல்ஃபோன். இவர்களோ சார்ஜ் வீணாகுமென்று (பேட்டரி சார்ஜ்!!) செல்ஃபோனை அணைத்தே வைத்திருப்பார்கள். தேவையானபோது மட்டும் on செய்து பேசிவிட்டு மீண்டும் அணைத்துவிடுவார்கள். இவர்களின் ரிங்க் டோனே இதுதானோ என்று எண்ணுமளவு எப்பொழுது ஃபோன் செய்தாலும் ' இந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்ற செய்திதான் வரும்!!!
இன்னும் சிலரோ செல்ஃபோன் பயன்படுத்தி இந்த சமூகத்தையே வருத்தும் 'கிருமி'யாக இருப்பர். ஃபோனைக் கண்டபடி ஃபோட்டோ எடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்தி அதையும் இணையத்தில் இட்டு பிறரை, குறிப்பாகப் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். அதுவும் இந்த அவலம் கல்லூரியில் நடக்கிறது என்று அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. செல்போனைக் கல்லூரியில் தடை செய்ததும் ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றியது.
ஒரு நிமிஷம் இருங்க! என் செல்ஃபோன் ஒலிக்கிறது; பேசிவிட்டு வருகிறேன். " ஹலோ, யாரு? என்ன பேசறது கேக்கலையா? ... இப்ப கேக்குதா? இப்ப கேக்குதா? இப்பவாவது கேக்குதா? ... என்ன, ஹியரிங்க் எய்ட் ரிப்பேர் பண்ணனுமா? அட, ராங்க் நம்பருங்க!!!..."
(thanks to shutterstock.com for the picture)
20 comments:
ஹலோ யார் பேசுறது..
ஹஹாஹ் விளம்பர அழைப்புகளை பற்றி சொல்லவே இல்ல
பதினைந்து வருஷத்தில் எப்படியாகி விட்டது! அடுத்த தலைமுறை செல்போன் பேசுவதில்லை - எல்லாம் டெக்ஸ்ட் மயம். மாடியிலிருக்கும் மகளைக் கீழே வா என்று டெக்ஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது!
நன்றி துரை, எல்.கே & கவிதைவீதி சௌந்தர்.
துரை, மெசேஜ் அனுப்புவது நல்லதுதான். செல்ஃபோன் பேசுவது காது முதல் மூளை வரை பாதிக்கும்னு சொல்றாங்களே (எனக்குக் கவலை இல்லை!!)
எல்.கே., எனக்கு விளம்பரத் தொந்தரவு இல்லை ஆனால் நிறைய வெட்டி மெசேஜ் வருகிறது. இமெயிலுக்கு spam filter மாதிரி ஏதாவது இருந்தால் பரவாயில்லை.
சௌந்தர், நீங்கதாங்க பேசறது (எவ்வளவு வடிவேலு காமெடி பார்த்திருப்போம்!)
தொண்ணுருகளின் கடைசியில் தான் நான் செல் போன் உபயோகிக்க ஆரம்பித்தேன். இருந்தும், இப்போது இருக்கும் கர்பால் டன்னல், டென்னிஸ் எல்பௌ என்றும் இருக்கும் கை வலிக்கு இதுவும் (ஒரு நாளைக்கு ஆறு முதல் / எட்டு மணிவரை தொலைபேசியை கையில் பிடித்து பேசியது !), ப்ளாக்பெரி என்று அதில் ஈமெயில் நோண்டியது என்று எல்லாமே சேர்ந்து இப்போது நன்கு ஆப்பு வைத்து விட்டது.
என் பெரியவன் conversation போலே sms டெக்ஸ்ட் செய்கிறான் ? எத்தனை சிறுவயதில் கம்ப்யூட்டர் உபயோகம். இவர்களுக்கு கைவலி என்னை போல் வரமால் இருக்கவேண்டும்.
பஸ்ஸிலோ ரெயிலிலோ செல்லும்போது சுற்றியிருக்கும் ஜனக் கூட்டம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில் குடும்பக் கதைகளை செல்லில் ரகசிய அலறலாய் பேசும்போது அதில் தெரியும் ஒரு தற்பெருமையையும் கவனிக்க முடிகிறது. முகம் தெரியா சக பயணியிடம் தன்னை விளம்பரப் படுத்திக் கொல்லும் முயற்சி! எந்தெந்த இடங்களில் செல்லை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும், எந்தெந்த இடங்களில் சைலன்ஸ் மோடில் வைக்க வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் நல்லது..!
சாய்ராம், நானும் இந்த ப்ளாக்பெர்ரி addicts-ஐப் பார்க்கும்போது மெசேஜ் செக் பண்ணி பண்ணிஅவர்கள் கட்டை மற்றும் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக ஆடத்தொடங்குமோ என்று நான் நினைப்பேன்.
ஆமாம் ஸ்ரீராம் ஜி, இந்த செல்ஃபொனுடன் டெக்னிகல் விஷயத்திற்கு புத்தகம் தருவது போல் cellphone etiquittes என்று தனியாக ஒரு புத்தகம் கொடுத்தால் பரவாயில்லை.
//முகம் தெரியா சக பயணியிடம் தன்னை விளம்பரப் படுத்திக் கொல்லும் முயற்சி!//
ரசித்தேன்.
சுவாரசியமா எழுதி இருக்கீங்க. செல் போன் இப்பொழுது உடல் உறுப்பில் ஒன்றாகி விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் செல் போன் வைத்துக் கொள்ளாதவர்களை ஊனமுற்றோர் பிரிவில் சேர்த்து விடுவார்கள் போலிருக்கிறது.
செல் போனை வடிவேலு ஒரு படத்தில் செய்வது போல் பிரிச்சு மேஞ்சிட்டிங்க ... உண்மையில் செல் போன் தொல்லை போன் தான்
நன்றி மீனாக்ஷி & பத்மநாபன்
ஹா ஹா ஹா... சங்கடங்களை சிரிப்பாய் சொன்னது சிறப்பு..:)
நன்றி அப்பாவி தங்கமணி. என்ன செய்வது, இடுக்கண் வருங்கால் நகுக.
மிகவும் இரசித்துப் படித்தேன். சமீபத்தில் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு - வீடு மாற்றுவதற்காக ஒரு டிரான்ஸ்போர்ட் வண்டி ஓட்டுபவரை அலைபேசியில் அழைத்த போது, 'மதுரைக்குப் போகாதேடி அங்கு மல்லிப்பூ ....' என்று ஒரு பாட்டு வந்தது. மேற்கொண்டு பேசி அவருடைய வண்டியை வாடகைக்கு அமர்த்துவது எனக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. அதை அவரிடம் சொன்னதும், மறு நிமிடம் அந்த ஹலோ டியூனை மாற்றினார்.
நன்றி KGG சார்.
மேடம் நீங்கள் இவ்வளவு நகைச்சுவையாகவும் எழுதுவீர்களா ?
அருமை.
நன்றி சிவகுமாரன் சார்.
உங்களின் பார்வையில் நல்லாவே ரசிக்கப் பட்டிருக்கிறது செல்போன்களின் ஆதிக்கம்
நல்ல எழுத்து நடை. ரசித்தேன்.
ஆலோ இன்னாது ? can i speak ஆ? அதான் பேசிகுனுகீறியேடா பேமானி.... இன்னாடா சாரி... ராங் நம்பெருன்னா இன்னாத்துகுடா போட்டே பன்னி... ஆங் .. அன்னாத்தையா... மன்சிகங்கனா. யாருனா அது? ஓ உங்க பையனா.. நான் CBI லேருந்துனு டெண்செனாயிட்டேன்னே... இன்கமிங் பிரீ இன்கமிங் பிரீனு சொல்லி உங்க குடும்பமே எல்லா பைசாவும் அவுங்க அக்கவுன்டுலே அடிச்சுட்டானுங்களே அண்ணே..... இன்னாது can I talk later ஆ? லெட்டரெல்லாம் வேணான்டா நாயே, போனுலே பேசுடா பன்னாடை... ஆங் மறுபடி அண்ணனா? மன்சிகங்கனா....
என் அருட்கவி வலைத் தளத்துக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி பனித்துளி சங்கர் & ஸ்ரீராம். சிவகுமரன் சார், கொஞ்சம் நாளாய் இணையத்தில் அதிக நேரம் செலவிடமுடிவதில்லை. கட்டாயம் அருட்கவி படிக்க வருகிறேன். நன்றி.
Post a Comment