Monday, 17 September 2012

ஆறில் சனி

         ஒரு குடும்பத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் என்று மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.

        ஆறு மனமே ஆறு!! இதனால் எத்தனை நன்மைகளிருக்கின்றன தெரியுமா? தாய்மார்களே, சமையல் எரிவாயுவைச் சேமிக்கும் பொருட்டு வெகு நேரம் கொதிக்க வைப்பது, வெகு நேரம் வறுப்பது எல்லாம் கட். அதனால் உங்களுக்கு டிவி சீரியல் பார்க்க அதிக நேரம் கிடைக்குமே!!.

        ஆறு சிலிண்டர்தான் என்றால் மீதி நாளுக்கு எப்படி சமைப்பது? சமைக்காமல் அப்படியே காய் கனிகளைச் சாப்பிட வேண்டியதுதான்!!. இதனால் எவ்வளவு நன்மைகள் -- உடல் எடை குறையும்; சர்க்கரை வியாதி, cholesterol எல்லாம் கட்டுக்கு வரும்; நேரம் மிச்சமாகும்.

         வயசானவங்களுக்கு இப்படி என்றால் இளைய தலைமுறைக்கு இன்னும் பல லாபங்கள். மனதிற்குப் பிடித்ததை ஹோட்டலில் சாப்பிடலாம்.  யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

        அரசாங்கத்துக்கும் எவ்வளவு நன்மை!!  இப்படி ஹோட்டலில் சாப்பிடுவது அதிகமானால் hotel industry வளரும்;  நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். ஹோட்டல் சாப்பாட்டில் வயறு கோளாறு வந்தால் ஹாஸ்பிட்டல் போவார்கள். மருத்துவத் துறையும் வளரும்!!!! 

       சமையல் கேசும் அதிகம் கிடைக்காது;  induction  அடுப்பு வேலை செய்ய மின்சாரமும் தொடர்ந்து கிடைக்காது என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?  லங்கணம் பரம ஔஷதம் என்று பாதி நாள் சாப்பிடாமல் இருக்க வேண்டியதுதான். இதனால் செலவும் கம்மி!! இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று ஒபாமா உட்பட பல பேரிடம் ஏச்சு வாங்க வேண்டாம்.

         அதை எல்லாம் விட இந்த கேஸ் சிலிண்டர் கொண்டுதரும் தொழிலாள வர்க்கத்துக்குதான் எத்தனை மவுசு வரும்!!.  கற்பனை பண்ணிப் பாருங்கள்.

தலை தீபாவளிக்குச் ஜவுளி எடுத்து வந்த கணவனிடம் மனைவி கேட்கிறார்:
மனைவி: என்னங்க.. மாப்பிள்ளைக்கு இவ்வளவு பணத்தில் வான்ஹுசைன் சட்டை வாங்கியிருகீங்களே, ரொம்ப சந்தோஷங்க!!
கணவன்: அடியே, அது கேஸ் சிலிண்டர்காரருக்கு.  அதைப் பத்திரமா வை.  மாப்பிள்ளைக்கு முறுக்கே அவர் தயவில்தான் வரும் தெரிஞ்சிக்கோ!

கிராமத்தில் புதியதாக வந்தவர்: அது யாருங்க, MP யா இல்ல  MLA வா? எல்லாரும் வணக்கம் சொல்றாங்க?
நண்பர்: அதுதான் எங்க கிராமத்தில் கேஸ் சிலிண்டர் போடறவரு. நீங்களும் ஒரு வணக்கம் வைங்க, உங்களுக்கு உதவும்.

        அது சரி அது என்ன கணக்கு, ஐந்து, பத்து இல்லை, ஒரு டஜன் என்று round fingure ஆக இல்லாமல் ஆறு சிலிண்டர்கள் என்று முடிவு செஞ்சாங்க? ஏன்னா, எட்டில் சனி, ஏழரை சனி எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம், இப்ப இந்தியர்களுக்கு ஆறில் சனி!!! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் 6-8 மணி நேரம் வரை மின் தட்டுப் பாடு அமலுக்கு வந்தது. இப்போது எரிவாயு தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் கேஸ் சிலிண்டருக்கு ரேஷன் வந்து விட்டது. இனிமேல் எந்த பிரச்சினையையும் சரி செய்ய யோசிக்காமல் குடிமக்களின் தேவைகளை அடக்கி சர்வாதிகாரமாக ஆளத் தயங்க மாட்டார்கள் போலிருக்கிறது. இந்திய மக்களை ஆறில் சனி பிடித்திருப்பதால் இனி இப்படியும் சட்டங்கள் வரலாம்:

1.பல இடங்களில் பருவ மழை பொய்த்து இருப்பதால் மக்களே ஒரு நாளுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆறு லிட்டர் தண்ணி தான் வழங்கப்படும்.
2.விளைச்சல் குறைவால் மக்களே, ஒரு குடும்பத்துக்கு வருடத்திற்கு 6 Kg அரிசிதான் வழங்கப்படும்.
3.ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் மின்சாரம் (க்கும், அதுதான் ஏற்கனவே இருக்கே!!!).
4.கடுப்பில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் சார்பாக ஒரு சட்டம்: ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம்தான் டிவி சீரியல் பார்க்கலாம்.
5.வெறுப்பிலிருக்கும் மக்கள் சார்பாக ஒரு சட்டம்: ஆறு கோடிக்கு மேல் எந்த அரசியல்வாதியும் ஊழல் செய்யக் கூடாது. ஆறு வருஷத்துக்கு மேல் எந்த அரசியல்வாதியும் அரசியலில் இருக்கக்கூடாது.

17 comments:

ஸ்ரீராம். said...

ஆறு வருஷத்துக்கு மேல் அரசியல்வாதி அரசியலில் இருக்கக் கூடாது என்பது ஆறுதலாக இருக்கிறது!! ஆறு சிலிண்டர் சொல்லி, மக்கள் போராடிய பின் நான்கு மூன்று என்று குறைக்கலாம், ரொம்ப எதிர்ப்பு இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடலாம் என்று எண்ணியிருப்பார்கள்!

எல் கே said...

இப்ப பத்து சிலிண்டரா மாத்த போறாங்களாம்

ஆறு கோடியா ?? பல லட்சம் கோடி போயாச்சு எப்பவோ

geetha santhanam said...

வருகைக்கு நன்றி LK & ஸ்ரீராம் . ஒருத்தரே பல லட்சம் கோடி அடிப்பதைத் தடுத்து எல்லா அரசியல்வாதிக்கும் equal opportunity கொடுக்கலாமென்ற நல்லெண்ணம்தான்! ஸ்ரீராம் ஆறில் ஆரம்பித்து நான்கு என்று குறைப்பதா, வயற்றில் ஈரத்துணிதான்.

அப்பாதுரை said...

ஜோக் அட்டகாசம்.
ஆறு சிலிண்டர் கணக்கு ஒரு நாளைக்கா, மாதத்துக்க, வருஷத்துக்கா, ஆயுளுக்கா?
எனக்கென்னவோ ஆறு ரொம்ப அதிகம்னு தோணுதே?

G.M Balasubramaniam said...


இடுக்கண் வருங்கால் நகுக என்பார்கள். அதிலும் ஆறுதல்தரும் விஷயங்கள் பல பட்டியல் இட்டிருக்கிறீர்கள். அதிகப் பணம் கொடுத்தால் வேண்டிய அளவு கிடைக்குமே.

geetha santhanam said...

வருகைக்கு நன்றி GMB ஐயா & துரை. ஐயா அதிகப் பணம் வான்ஹுசேன் சட்டையாக மாறியிருக்கிறது. ஆனால் எல்லாராலும் அதிகப் பணம் கொடுக்க முடியுமா? அந்த நடுத்தர வர்கத்தைதானே அரசு சட்டங்களால் காக்க வேண்டும்?
துரை, ஆறு சிலிண்டர் வாழ்நாள் முழுக்கவா? சித்தர்களால் தான் சமாளிக்க முடியும்.

சிவகுமாரன் said...

இடுக்கண் வருங்கால் நகுக - என்கிறீர்கள்.
நகைத்து வைப்போம்.
வாரத்தில் ஒருநாள் எல்லோரும் பட்டினி இருக்க வேண்டும் என்று அரசாங்கம் சொன்னாலும் ஆச்சரியப் பட வேண்டாம்.

Anonymous said...

படிச்சு ரசிச்சு, திரும்ப ரசிச்சு படிச்சேன். :) ஜோக்ஸ் பிரமாதம். நகைச்சுவை உணர்வோட எழுதறது உங்களுக்கு ரொம்ப இயல்பா வரது. வாழ்த்துக்கள்!

geetha santhanam said...

நன்றி மீனாக்ஷி &சிவகுமாரன்.

சாய்ராம் கோபாலன் said...

அட்டகாசம்....

Durai, which world you are in !!

கதம்ப உணர்வுகள் said...

ஆறு மனமே ஆறுல தொடங்கி பட படன்னு நகைச்சுவை பட்டாசு பொரிகிறதே கீதா... :)

ஒரு குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் தான் அப்டின்னு சொன்னதுல இருந்து மக்கள் சோகமா இருக்கும்போது உங்க பயனுள்ள இந்த விஷயங்களை படிச்சால் கண்டிப்பா போடாப்பா போ.... ஆறு என்ன ஆறு அது கூட வேணாம்னு இயற்கை உணவுக்கு மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை....

வாரத்துல ஆல்டர்நேடிவ் நாட்களில் காய் கனி உண்டு... மீதி நாட்களில் வறுவல் இல்லை எண்ணை அதிகம் இல்லை வேக வைப்பதும் அதிகம் இல்லை.. அதனால் டீவி அதிக நேரம் பார்க்கலாம்ல தொடங்கி.. அட்டகாசம் கீதா ஹோட்டலும் ஹாஸ்பிட்டலும் தான் கொழிக்கும் போலிருக்குப்பா...

கரெண்ட் போச்சு.... பஸ் கட்டணம் உயர்த்தியாச்சு... பால் கட்டணம் உயர்த்தியாச்சு... இப்ப கேஸ் சிலிண்டர் இந்த லட்சணம்.. மக்கள் நிம்மதியாக வாழலைன்னாலும் ஏதோ வாழ்ந்துட்டு இருந்ததிலும் இப்ப நெருப்பள்ளி போட்டுட்டு மக்கள் வாழ்வதே இப்ப கேள்விக்குறி ஆக்கிக்கொண்டு வரும் இந்த அரசியலை என்ன செய்தால் என்ன என்று நினைக்கவைக்கும் அளவுக்கு பகிர்வு அசத்தல்பா...

சிவகுமார் சொன்னது போல இடுக்கண் வருங்கால் நகுக...நகைத்து வைப்போம்...

மாப்பிள்ளை முறுக்கெல்லாம் இனி வேலைக்கு ஆகாது...

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பிரோக்கரிடம்... ஏம்பா மாப்பிள்ளை நல்லா பெரிய உத்யோகஸ்தனா இருக்கணும்...

அப்டின்னா டாக்டர் இஞ்சினியர் அப்படி பார்க்கட்டுமா ஐயா?

அட நீ ஒன்னு நாட்டு நடப்பு அறியாதவனா இருக்கியேப்பா... எலக்ட்ரிசிட்டி போர்ட்ல வேலை செய்றவனோ இல்ல கேஸ் சிலிண்டர் போடுறவனோ இருந்தா பாருப்பா இப்பல்லாம் மார்க்கெட்ல இந்த மாப்பிள்ளைகளுக்கு தான் மவுசு அதிகம் :)

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு கீதா... அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு..

geetha santhanam said...

நன்றி சாய்ராம் & மஞ்சுபாஷினி.

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் பகிர்வு... தொடர்ந்து எழுதவும்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

geetha santhanam said...

தனபாலன் அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .நன்றி. வலைச்சர சரவேடியில் அறிமுகமானப் பதிவர்களிக்கு அது குறித்து தெரிவிக்கும் உங்கள் கடமையுனர்ச்சிக்குப் பாராட்டுக்கள்.

மோகன்ஜி said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ.. உங்கள் நகைச்சுவை உணர்வு பதிவில் நன்கு வெளிப்பட்டிருக்கிறது..

நிறைய எழுதுங்கள்

Matangi Mawley said...

Very interesting post! The jokes were real good!
Nice blog...

geetha santhanam said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Matangi அவர்களே.
மோகன்ஜி லேட்டானாலும் உங்கள் வருகை நல்வரவுதான் .