Thursday, 7 March 2013

முன் ஜாக்கிரதை முத்தண்ணா


                 திரு மதன் அவர்களின் முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஜோக்சைப் பலரும் படித்து சிரித்திருப்போம். நான் நிஜ வாழ்வில் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவோடு இருவது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். அந்த மு.மு. வேறு யாருமில்லை- என் தம்பி தான்.

               என்றைக்காவது பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றால் என்ன செய்வது என்று ஒவ்வொரு தினமும் வாளியில் தண்ணீர் பிடித்து வைப்பான்.  வெளியூர் போக ரெயில்வே ஸ்டேஷனுக்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்பே போய் விடுவான். கேட்டால் வழியில் traffic jam ஆகிவிட்டால் என்ன செய்வது என்பான். கரெண்ட் போனால் அவசரத்துக்கு டார்ச் லைட்டைப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் என் தம்பி பாட்டரியெல்லாம் தனியே எடுத்து வைத்திருப்பான் - டார்ச் லைட்டிலேயே இருந்தால் பாட்டரி லீக்காகி டார்ச் வீணாகிவிடுமாம்.

              சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான்.  எப்போதும் இரண்டு பேனா, இரண்டு பென்சில், இரண்டு ரப்பர், இரண்டு ஷார்ப்பனர் என்று எல்லாமே இரண்டிரண்டாக எடுத்துப் போவான். "இந்த மட்டும் புத்தகங்களெல்லாம் இரண்டு செட்டு வேணுமுன்னு கேட்காமல் இருக்கானே என்று சந்தோஷப்படு" என்பார் என் அப்பா. "ஸ்கூல் பஸ்ஸில் ஏறும்போது 'uncle, நான் சீட்டில் உட்காரும் வரி வைட் பண்ணி வண்டி எடுங்க' என்று  L.K.G. படிக்கும் போது எங்கம்மா சொன்னதைப் பனிரண்டாம் வகுப்பு வரை ஞாபகம் வைத்துக் கொண்டு தினமும் சொல்வான். சில நேரங்களில் நாங்கள் பஸ்ஸில் ஏறும்போது எல்லோரும் கோரசாக  'uncle, நான் சீட்டில் உட்காரும் வரி வைட் பண்ணி வண்டி எடுங்க' என்று சொல்லும்போது எனக்கு வெட்கமாக இருக்கும்.

              என் அப்பா விளையாட்டாக, "அவன் பிறக்கும்போதே அப்படித்தானம்மா. ஆஸ்பத்திரி நீட்டா இருக்கா, டாக்டர்ஸெல்லாம் ஒழுங்க வேலை பார்க்கிறாங்களா என்று டெஸ்ட் பண்ணிட்டுத்தான் பிறந்தான். உங்கம்மா இரண்டு முறை வலி வந்து அட்மிட்டாகி மூன்றாம் முறைதான் இவன் பிறந்தான்." என்று கூறி சிரிப்பார். நானும் "போங்கப்பா. நீங்க ரெண்டு பேரும் ஒழுங்க குழந்தைங்களை வளர்ப்பீங்களா என்று என்னை முதலில் பிறக்கவிட்டு மூணு வருஷம் டெஸ்ட் செய்துவிட்டு அப்புறம்தான் அவன் பிறந்தானாக்கும்" என்று கேலி செய்வேன்.

             அவன் கொஞ்சம் வளரும் வரை நாங்கள் வாசல் கதவைத் திறந்து வைத்துக் காற்று வாங்கிக் கொண்டு கதை பேசுவோம். இப்பொழுதெல்லாம் வாசல் கேட்டுக்கு ஒரு பூட்டு, கிரில் கதவுக்கு ஒரு பூட்டு, மரக் கதவிற்கு ஒரு பூட்டு என்று அடுக்கடுகானப் பாதுகாப்பு எங்கள் வீட்டுக்கு. காலமும் கொஞ்சம் கெட்டுக் கிடக்கு என்றாலும் இது கொஞ்சம் அதிகமாகப்படுகிறது எனக்கு. ஒவ்வொரு முறையும் மூன்று பூட்டுக்களைத் திறந்து வெளியே போகும்போதும் 'நம்ம வீட்டுக்கு ஒரு திருடன் வந்தால் அன்னிலேர்ந்து அவன் திருட்டுத் தொழிலையே விட்டுவிடுவான்' என்று சலித்துக் கொள்வேன். அதுவும் வீட்டைப் பூட்டிகொண்டு வெளியே போகும்போது என்னவோ அடி பம்பில் தண்ணி அடிப்பதுபோல் அவன் அந்தக் கதவு தாழ்ப்பாளைப் பிடித்துத் தொங்கும்போது கோவத்தைவிட சிரிப்புதான் வரும்.

               ஒரு முறை இப்படித்தான் எங்கள் அப்பா ஊரில் இல்லாத சமயம் இரவு பனிரெண்டு மணிக்கு வாசல் கேட்டைத் தட்டும் சத்தம் கேட்டது. லைட்டைப் போட்டு ஜன்னல் வழியாக என் அம்மா பார்த்தபோது கேட்டருகில் ஒரு தபால் ஊழியர் நின்றுகொண்டு "அம்மா பாம்பேயிலிருந்து தந்தி வந்திருக்கு" என்றார். எங்கள் மு.மு.வோ கதவைத் திறக்க்ப்போன அம்மாவைத் தடுத்து, " எங்கேயிருந்து தந்தி வந்திருந்தாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல வாங்க" என்று அதட்டினான். அந்தப் பெரியவரோ அழும் குரலில் "அப்பா, தந்தி வந்தால் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று ரூல். நான் பாவம், பல்லாவரத்திலிருந்து இந்தக் குளிரில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் தயவு செய்து வந்து வாங்கிக்கங்க" என்று கெஞ்சினார். இதற்குள் பக்கத்து வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வரவே என் தம்பி தைரியமாகக் கதவைத் திறந்து வந்து தந்தியை வாங்கிக் கொண்டான். அந்தப் பெரியவர் ஒரு பெரிய கும்பிடு போட்டு அவனுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

              எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன் என் அம்மா அப்பாவிடம் கூட சொல்லாமல் இரண்டு நாட்கள் என் கணவரை வீடு, ஆஃபீஸ், கடைகளென்று துரத்திச் சென்று கண்காணித்திருக்கிறான் இந்த பாச மு.மு. மூன்றாம் நாள் என் கணவரே இவனை அழைத்து, "அப்பா மைத்துனரே. நான் உண்மையிலேயே நல்லவந்தான். நம்பு. இப்படி ஆஃபீஸ் முன்னால் நின்று என்னைச் சங்கடப்படுத்தாதே" என்று கெஞ்சாத குறைதான். இப்பவும்கூட வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர் இவனைக் கிண்டல் செய்யத் தவற மாட்டார்.

              இந்தப் பாசக்காரத் தம்பிக்கு நாளைத் திருமணம் - அதுவும் காதல் திருமணம். எப்படி இவனைப் பிடித்தாயென்று இவனின் காதலியைக் கேட்டால் "அக்கா. அவர் எப்பவும் முன் ஜாக்கிரதையாக இருப்பார். எதையும் முன்னேற்பாட்டோடுதான் செய்வார். ஒரு நாலு வருஷமா இவரைப் பார்த்து இவரின் நல்ல குணங்களை அலசியபின், என் அம்மா அப்பாவின் சம்மதத்தோடுதான் இவரிடம் என் காதலைச் சொன்னேன்" என்றவாறு தன் ஹேண்ட் பேகைத் திறந்து, அதிலிருந்து ஒரு pouch-ஐ  எடுத்துத் திறந்து அதிலிருந்து ஒரு சாவியை எடுத்து தன் காரைத் திறந்தாள். ஜாடிக்கேத்த மூடிதான் போங்க!!!.
14 comments:

G.M Balasubramaniam said...

அவருக்குத் தெரியுமா இந்தப் பதிவு பற்றி.?

geetha santhanam said...

இது ஒரு கற்பனைதான். எனக்குத் தம்பியே கிடையாது

அப்பாதுரை said...

ரைட்டு.
சரியான ஆசாமியை நினைவு படுத்தியது.

kg gouthaman said...

நல்ல கற்பனை! எங்கள் வீட்டிலும் ஒரு மு மு உண்டு.

ஸ்ரீராம். said...

இந்த மாதிரி முன்ஜாக்கிரதைகள் நல்ல விஷயம்தான். பஸ்ல டிக்கெட் எடுக்கற ஜோக் நினைவு பார்த்திருக்கீங்களோ?

geetha santhanam said...

வருகைக்கு நன்றி ஸ்ரீராம் சார், கேஜிஜி சார் & அப்பாஜி. ஸ்ரீராம் சார், அது என்ன பஸ்ஸில் டிக்கெட் நினைவு படுத்துவது, தெரியவில்லையே? துரை, குறைந்தது மூன்று பேராவது நினைவு வந்திருக்கணுமே?

ஸ்ரீராம். said...

கண்டக்டர் : ஏன்யா... டிக்கெட் எடுத்திட்டியா? எத்தனை தரம் கேக்கறது?"

பயணி : "இதோ"

கையைக் காட்டுகிறார். 2 டிக்கெட்டுகள்.

கண்டக்டர் : "2 டிக்கெட் இருக்கே... இன்னொருத்கார் யாருய்யா..?"

பயணி : "யாரும் இல்லை... ஒன்னு தொலைந்தால் எதற்கும் இருக்கட்டுமே என்றுதான் 2 எடுத்தேன்"

கண்டக்டர் : "யோவ்..லூசு.. ரெண்டும் தொலைஞ்சா என்ன பண்ணுவே..?"

பயணி : "நீதான்யா லூசு... நான்தான் சீசன் டிக்கெட் வச்சிருக்கேன் இல்லே.."

geetha santhanam said...

நல்ல ஜோக் ஸ்ரீராம் சார்.

malar balan said...

நல்ல கற்பனை அதுவும் ஜாடிகேத மூடி சூப்பர் திருடனுக்கே சாவால் விடும் பூட்டு கற்பனை ஹா ஹா ......
ஸ்ரீராம் ஜோக்கு சூப்பருங்கோ

geetha santhanam said...

முதல் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி மலர் பாலன்ஜி

சென்னை பித்தன் said...

// ஜாடிக்கேத்த மூடிதான் போங்க!!!.//
அப்படி வரவில்லையென்றால் இருவருக்குமே கஷ்டமாகப் போயிருக்கும்.
நகைச்சுவையோடு சிறப்பாகச் சொல்லியிருக் கிறீர்கள்1

geetha santhanam said...

நன்றி சென்னைப் பித்தன் ஸார்.

இராஜராஜேஸ்வரி said...

ஜாடிக்கேத்த மூடி

சரி நிகர் ஜோடி ....

கோமதி அரசு said...

ஜாடிக்கு ஏற்ற மூடி
சரியான ஜோடி.
வாழ்க வளமுடன்.