Thursday 20 March 2014

கலர் தேர்தல்



 நானும் என் மகளும் துணிக் கடைக்குப் போக என் கணவரைத் துணைக்கு அழைத்தோம். " டிவிலே எலக்ஷன் பத்தி அலசிப் பேசிண்டிருக்கா. இப்ப போகனும்னா எப்படி? அப்பறமா போலாமே" என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார் அவர். "எங்கள் கல்லூரியில் ஒரு வீதி நாடகம் போடறோம் அப்பா. அதுக்குத்தான் துணி வாங்கனும். இன்னிக்கேப் போகணும்" என்று அடம் பிடித்தாள் என் பெண். ஒரு வழியாக அவரைச் சரிக்கட்டி ஜவுளிக் கடைக்குப் போனோம்.

"வாங்க, வாங்க. ரொம்ப நாளாக் காணுமே" என்று வரவேற்றார். அண்ணாச்சி. " என் பொண்ணு காலேஜில் ஏப்ரல் மாசம் முக்கியமான விழாவாம். அதுக்கு bulk-ஆத் துணி எடுக்கனும். காட்டுங்க அண்ணாச்சி" என்றோம்.

"இந்த துணி தரவா? இலை டிசைன் போட்டிருக்குப் பாருங்க. நல்ல ஸ்டிராங்கானத் துணி. சாயம் போகாது." என்றார் அண்ணாச்சி.
" நல்லாதான் இருக்கு. ஆனா 40 மீட்டருக்கும் குறைவா இருக்கும் போலிருக்கே. எங்க கல்லூரியில் எல்லாருக்கும் போறாதே. வேற துணியோடு சேர்த்து தைச்சா ஸ்டிராங்கா இருக்காது. நமக்கு மட்டும்னா பரவாயில்லை. எல்லாருக்கும்னு சேர்த்து வாங்கும்போது யோசிக்க வேண்டியிருக்கு......" என்றாள் மகள்.

"சரி இந்தத் துணி பாருங்க. கறுப்பு சிவப்பு கலந்து இருக்கு. சூரியன் மாதிரி டிசைன் கூட இருக்கு. கொஞ்சமா இருந்தாலும் வேற கலர் துணிகளும் 'கை' கொடுக்கும்" என்று புதிய பேல் துணியை விரிச்சுப் போட்டார்.
"ம்... நல்ல தரமா இருக்குமா? இது என்ன லைன்மாதிரி...இந்த 'அலைவரிசை'தான் கொஞ்சம் பயமுறுத்துது..யோசிக்க வேண்டியிருக்கே.. வேற காட்டுங்க" என்றேன்.

" இதைப் பாருங்க. பச்சை, வெள்ளை, ஆரஞ்சு கலர்ல இருக்கே. இதைத் தான் உங்க காலேஜுல ரொம்ப நாளா வாங்கிருக்காங்க...." என்றார் அண்ணாச்சி.
" இது பழைய கலர். எல்லாரும் இதை யூஸ் பண்ணி போரடிச்சு போயிருக்கா. போன தடவை வாங்கினது சாயம் வேற போயிடுத்து. ..." என்றாள் மகள்.
" இது புது ப்ராண்ட். 'ராகா'ன்னு புதுசா வந்திருக்கு..."
" புதுசா....  வேற வேற ப்ராண்டுன்னாலும் ஓனர் ஒருத்தர்தான். எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். வேற காட்டுங்க..." என்றோம்.

" அப்படியா. இந்த காவி கலர் எப்படி இருக்கு?" என்றார் அண்ணாச்சி.
" காவியா? சந்நியாசி கலர்னு நிறைய பேருக்குப் பிடிக்காதே....." என்று யோசித்தாள் மகள்.
" இல்லம்மா. இது 'நமோ' பிராண்டுங்க. ரொம்ப பேருக்குப் பிடிச்சிருக்கு. நிறையவும் உங்களுக்குக் கிடைக்கும்... " என்றார் அண்ணாச்சி.

அதற்குள் அவரிடம் ஒருவர் ஏதோ விஷயம் சொன்னார். அண்ணாச்சி "ஐயா, நீங்க பார்த்துட்டு இருங்க. அதுக்குள்ள வாசல்ல ஒருத்தர் தொடப்பம் எடுத்து வந்திருக்கார். இங்க க்லீன் செய்யறேங்கறார்" என்றார். நாங்கள் ஒரே குரலில் " ஐயோ, தொடப்பம் எடுத்துண்டு வராரா!!!!! அவர் இந்த வேலைக்கே 'ஆப்பு' வைச்சுருவாரு.  நாங்க இதுலேயே ஒண்ண செலெக்ட் செஞ்சுட்டு போயிடறோம். ப்ளீஸ்" என்று அலறினோம்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... ஹா...

G.M Balasubramaniam said...


துடைப்பத்தைக் கண்டால் அவ்வளவு பயமா.?

geetha santhanam said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் மற்றும் GM.Balasubramaniam சார்.