Tuesday 2 September 2014

படித்ததில் பிடித்தது



                   சமீபத்தில் விகடன் வெளியீடான திரு.டி.கே.வி.தேசிகாச்சார் அவர்கள் எழுதிய 'உடலே உன்னை ஆராதிக்கிறேன்' புத்தகம் படித்தேன். யோகா பற்றிய இந்தப் புத்தகம் யோகா பற்றிய பல புதிய தகவல்களை எனக்குத் தந்தது. மேலும் யோகா செய்யும் முறையை மட்டும் விளக்காமல், சரியாகச் செய்யவில்லையென்றால் என்ன பிரச்சினைகள் வரும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் நான் அறிந்த சில தகவல்கள்:

        1. ஏறத்தாழ கி.மு.3000 - அதாவது சிந்து சமவெளி நகரங்களான மொகஞ்சதாரோ/ ஹரப்பாவில் வாழ்ந்த மக்களே கூட யோகா செய்திருக்கிறார்களாம். அங்கு அகழ்வாராய்ச்சியில் பல யோகா இலச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
       2.நூலாசிரியரின் தந்தை திரு.கிருஷ்ணமாச்சாரியார் யோகாவின் மூலம் இருதயத் துடிப்பை இரு நிமிடங்கள் நிறுத்தி வைக்கும் ஆற்றல் படைத்தவராம்.
       3. எந்த ஒரு ஆசனம் செய்தாலும் மாற்று ஆசனம் (பிரதி கிரியாசனம்- counter posture) ஒன்றை அடுத்து செய்ய வேண்டும். உதாரணமாக முதுகை முன் பக்கமாக வளைக்கும் ஆசனம் செய்தால் மாற்றாக முதுகை பின் பக்கமாக வளைக்கும் ஆசனம் பிரதி கிரியாசனமாக அமையும்.
      4. நான்கு வயதிலிருந்தே யோகப் பயிற்சியயைத் தொடங்கலாம் என்று சொல்லும் இவர், அவரவர் உடல் மற்றும் வயதுக்கேற்ற ஆசனங்கள் செய்வதே நல்லது என்கிறார்.
      5. பிராணாயாமம் செய்ய classic ratio ஒன்றைச் சொல்கிறார். 1:4:2. அதாவது மூசை ஐந்து செகண்ட் உள்ளே இழுத்து, 20 செகண்ட் உள்ளே நிறுத்தி, 10 செகண்ட் வெளியே விடவேண்டும்.
      6. யோகாசனத்தின் மூலம் ஆஸ்மா உட்பட பல வியாதிகளைக் கட்டுக்குக் கொண்டு வரமுடியும்.
       7. புத்தகங்களைப் பார்த்தோ அல்லது சி.டி.க்களைப் பார்த்தோ ஆசனங்கள் பயில்வது ஏற்புடையது அல்ல. தகுந்த ஆசிரியரின் மூலம் ஒருவரின் வயது, உடல் நிலை இவற்றுக்குத் தக்கவாறு ஆசனப் பயிற்சி பெறுவதே சாலச் சிறந்தது.

                                மேலும் இந்தப் புத்தகத்தில் வாசகர் கேள்வி பதில் மூலமும் பலத் துறை வல்லுநர்களின் பேட்டி மூலமும் ஆசனங்கள் குறித்த பல சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலத்தைப் பேண விரும்பும் அனைவருக்கும் ஒரு சிறந்த கேயேடு இந்தப் புத்தகம்.

                                சுய சிகிச்சைக் கலை பற்றி திரு.பாஸ்கர் அவர்களின் C.D- யைக் கேட்கும் வாய்ப்பும் சமீபத்தில் கிடைத்தது. ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் என்று உடலின் முக்கியமான பகுதிகள் ஆற்றும் வேலையை ஒரு சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும் வகையில் எளிமையாக விளக்குகிறார்.  நாம் உண்ணும் உண்வும், உண்ணும் முறையும் சரிவர இருந்தால் அதுவே நோய் தீர்க்கும் வழியாக அமையும் என்கிறார். அவரின் உரையை படிக்க அல்லது கேட்க anatomictherapy.org என்ற இணையதளத்தைப் பாருங்கள். அவரின் அறிவுரைகளில் சில:

1. உணவின் ஒவ்வொரு சுவையும் ஒரு உறுப்பு வேலை செய்யத் தூண்டும். உதாரணமாக, இனிப்பு இரைப்பையையும், புளிப்பு கல்லீரலையும் வேலை செய்யத் தூண்டுமாம். எனவே அறு சுவை உண்டி ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்.
2. அதற்காக தினமும் அறுசுவை விருந்து செய்ய வேண்டும் என்பதில்லை. கருப்பட்டி இனிப்புக்கும், வேப்பிலைப் பொடி கசப்பிற்கும் போதுமானது. உணவு உண்ட பின்னர் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உணவில் எந்த சுவை விடுபட்டாலும் அதைச் சரிசெய்துவிடுமாம்.
3. வாயை மூடிக் கொண்டு உணவை நன்கு மென்று சாப்பிடுதல் மிக நன்று (இதைத்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள்).
4. காலைச் சம்மணமிட்டுக் கொண்டு சாப்பிடுவது உணவு செரிமானத்திற்கு ஏற்றதாம். நாற்காலியி கூட சம்மண்மிட்டு உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்கிறார்.
5. உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்னும் நீர் அருந்தக் கூடாது.

1 comment:

மோகன்ஜி said...

பல உபயோகமான தகவல்கள் மேடம் !