பன்னீர் சோடா என்ற
blog -ல் தமிழ் மொழி பற்றிய இந்த பதிவையும் (டமில் வால்க) அதன் பின்னூட்டங்களையும் படித்ததும் தமிழ் ஒன்றும் கற்றுக்கொள்ள அத்தனை கடினமானது இல்லை என்று சொல்ல தோன்றியது.
தமிழ் மொழியில் எழுத்துக்கள் அதிகமாம். ஏறக்குறைய அனைத்து மொழிகளிலுமே உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் உண்டு என்று நினைக்கிறேன். ஒரு ஒப்பீட்டுக்காக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம்.
Vowels எனப்படும்
a,e,i,o,u உயிரெழுத்துக்கள், ஏனைய எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் எனலாம். தமிழில் இவை தவிர உயிர்மெய் எழுத்துக்கள் 216 இருப்பது தான் பிரச்சினையா?.
பிற மொழிகளில்
phonetics-ஐ வார்த்தைகள் கற்கும்போது கற்போம். தமிழில் அதற்கு ஒரு படி முன்னதாகவே எழுத்துக்கள் கற்கும்போதே (உயிர்மெய் எழுத்துக்களாக) கற்கிறோம், அவ்வளவுதான். உதாரணத்திற்கு, பி என்னும் உயிர்மெய் எழுத்து ப் மற்றும் இ இணைவதால் வருகிறது. ஆங்கிலத்திலும் பி என்ற ஒலிக்கு p மற்றும் i (vowel) என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துகிறோம். இந்த உயிர்மெய் எழுத்துக்களால் ஒரு வார்த்தை எழுத பயன்படுத்தும் எழுத்துக்கள் குறைகின்றன (அதாவது ஒவ்வொரு முறை எழுதும்போதும் பயன்படுத்தும் எழுத்துக்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைகின்றது).
உதாரணம் : குறைவு , க்உர்ஐவ்உ
மற்ற மொழிகளைக் கசடறக் கற்பதில் முதலில் அதிகமாக முனைய வேண்டும். ஒரு ஒப்பீட்டிற்காக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். எழுத்துக்கள் குறைவுதான். ஆனால் எழுத்து ஒலிவடிவத்திற்கும் வார்த்தைகளில் பயன்படுத்தும் ஒலிவடிவத்திற்கும் சம்பந்தமே கிடையாது. எழுத்துக்களை
a (ஏ),
e(இ),
i(ஐ),
o(ஓ),
u(யு) என்று படிக்க கற்றுக்கொண்டு வார்த்தைகளில் வேறு ஒலிவடிவத்தில் பயன்படுத்துவோம்.
உதாரணம் :
pat (a- ஒலிவடிவம் அ),
pet (e-ஒலிவடிவம் எ),
pit( i- ஒலி வடிவம் இ),
pot (o-ஒலி வடிவம் ஆ),
put (u-ஒலி வடிவம் உ),
but (u-ஒலி வடிவம் அ). (என் மகள் U.K.G., படிக்கும்போது "யாரும்மா இப்படி தப்பு தப்பா மாத்தி மாத்தி வைச்சா?" என்று கேட்டாள்).
இதுவே மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களை உடைய வார்த்தைகளானால் முற்றிலும் வேறான விதிகள்.
உதாரணம்:
base(a-ஒலி வடிவம் ஏ),
band (a-ஒலி வடிவம் அ),
ball(a- ஆ),
bend(e- ஒலி வடிவம் எ),
beat (e- ஒலி வடிவம் ஈ).
இப்படி ஒவ்வொரு எழுத்தின் பயன்பாட்டு ஒலியைக் (
phonetics) குழப்பாமல் கற்றுக் கொடுக்கவும், குழம்பாமல் கற்கவும் செலுத்தும் முனைப்பில் கால்பங்கு செலுத்தினால் போதும், தமிழில் ந, ன,ண மற்றும், ல,ள, ழ உச்சரிப்பின் வேறுபாட்டை (
phonetics) எளிதாகக் கற்கலாம். இந்த எழுத்துக்களில் எதை நீக்குவது என ஆராய்வதைவிட, எதற்கு நீக்குவது எனக் கேட்கலாம்.
மனம் (உள்ளம்), மணம்(வாசனை)
பலம், பழம்
வால், வாள்
அரி, அறி
ஒரு சிறிய (எழுத்து மற்றும் உச்சரிப்பு) மாற்றம் எத்தனை பொருள் (
meaning) வேறுபாட்டை உணர்த்துகிறது.
இது போல் ஆங்கில இலக்கண விதிகளையும் ஆராயலாம். தமிழைப் பொறுத்தவரை நான், நீ, அவன் எல்லோரும் சமமே. ஆங்கிலத்தில் நானும், நீயும் சமம், ஆனால் அவன்(ள்) மட்டும் தனிமைப் படுத்தப் படுவார்.
'உதாரணம் : என்னிடம் புத்தகம் இருக்கிறது -- I have a book
உன்னிடம் புத்தகம் இருக்கிறது -- you have a book
அவனி(ளி)டம் புத்தகம் இருக்கிறது --- (s)he has a book.
அதே அந்த மூன்றாவது மனிதன் கும்பலாக (plural) வந்தால் என்னையும் உன்னையும் போல் நடத்துவார்கள்.
அவர்களிடம் புத்தகம் இருக்கிறது -- They have a book.
தமிழில் இந்த பாகுபாடெல்லாம் கிடையாது, எல்லோரும் சமம்.
அது மட்டுமா, capital letters, small letters, cursive writing என்று இருக்கும் 26 எழுத்துக்களை விதவிதமாக எழுதவேண்டி வருவதோடு,பெயர் வந்தால் முதலெழுத்து capital letter, வாக்கியத்தின் முதலெழுத்து capital letter என்று எத்தனை விதிகள்!!. தமிழில் இந்த தொந்தரவுகள் இல்லை. எழுத்துக்களை மட்டும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டால் போதும், கவலையின்றி மொழியில் பூந்து விளையாடலாம்.
தமிழில், பால் பாகுபாடு (
gender) மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. பொருள்களுக்கு கிடையாது. இந்தி,
French, German போன்ற மொழிகளில் மேசை, பேனா போன்ற பொருட்களைக் கூட பால் பாகுபடுத்தி கற்க வேண்டும். பொருட்களின் பாலுக்கேற்ப
le telephone, la television (french) என்றோ,
der garten, das jhar (
german) என்றும் கூற எத்தனை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.
இத்தனை விஷயங்களை அலசிப் பார்க்கும்போது தமிழ் நிச்சயமாக செம்மொழிதான், பயன்பாட்டிற்கு எளிய மொழிதான் (USER FRIENDLY) என்று ஆணித்தரமாகக் கூறுவேன். தமிழில் ஆர்வமும், தமிழை அடுத்த தலைமுறைக்குக் கற்பிக்கும் விருப்பமும் ஒவ்வொரு தமிழனுக்கும் வருமானால், மூன்று தலைமுறை என்ன, நூறு தலைமுறை கடந்தும் தமிழ் வாழும்.