Friday 11 June 2010

பசுமை நிறைந்த நினைவுகளே

               கோடைக் காலம் வந்துவிட்டது. பள்ளிக் காலங்களில் இந்த கோடை விடுமுறையை எத்தனை எதிர்பார்த்திருப்போம்!!!.  கோடை விடுமுறையில் என் சகோதர சகோதரிகள் மட்டுமில்லாமல் என் மாமாவின் குழந்தைகளும், சித்தியின் குழந்தைகளும் ஒன்றாகக் கூடி லூட்டி என்றால் அப்படி லூட்டி அடிப்போம்.  நாளொரு விளையாட்டும் பொழுதெல்லாம் சிரிப்பாகவும் போன காலங்கள் அவை.

                நாங்கள் அதிகம் ரசித்து விளையாடிய விளையாட்டுகளில் முதலிடம் வகிப்பது 904 என்ற சீட்டாட்டம்தான். இரண்டு டீமாகப் பிரிந்து ட்ரம்ப் வைத்து விளையாடும் ஆட்டம் அது.  என் அண்ணன் இருவரும் கையில் ஒன்றும் உருப்படியான சீட்டு இல்லையென்றாலும் 'சூப்பர், நாமதான் வின்' அப்படி இப்படியென்று பேசி எதிராளிக்கு பயத்தை உண்டு பண்ணுவார்கள்.  இதுகூடப் பரவாயில்லை. ட்ரம்பை மாற்றுவது போல் பாவனை செய்தே எதிராளிக்கு டென்ஷன் கொடுப்பார்கள்.  லுங்கியில் சில சீட்டுக்களை மறைத்து அழுகுணி ஆட்டம் ஆடுவார்கள்.  நிஜமாகவே கார்டை மறைக்கிறாங்களா இல்ல ஏமாத்தறாங்களா என்று கண்காணிப்பதிலேயே கவனம் செலுத்தி எங்கள் ஆட்டத்தைக் கோட்டை விடுவோம்.

              புளியங்கொட்டையை வைத்து 'ஒற்றையா, இரட்டையா' விளையாட்டு (நம் கைகளில் கொஞ்சம் கொட்டைகளை மூடி வைத்துக்கொண்டு நம் கையிலிருக்கும் கொட்டைகளின் எண்ணிக்கை odd or even number என்று எதிரிலிருப்பவர் ஊகிக்கவேண்டும்), கூழாங்கற்களை வைத்து அம்மானை ஆடுவது,  words building, 10-20 என்று ஒரு விளையாட்டு (இதைப் பலமுறை விளையாடியிருக்கிறோம்.  ஆனால் இப்பேது எப்படி விளையாடுவது என்று நினைவு இல்லை) என்று விளையாடுவது போதாதென்று நாட்டியம், நாடகம் எல்லாம் வேறு போடுவோம்.  என் மூத்த சகோதரி இதில் திறமை பெற்றவர்.  எங்களுக்கு அழகாக கதை சொல்லி நடிக்க, நாட்டியமாட எல்லாம் சொல்லிகொடுப்பார்.

            மாலை வேளைகளில் வீட்டிற்கு முன்பிருந்த பெரிய க்ரௌண்டில் நாலு கம்பம், help, பூப்பறிக்க வருகிறோம் (இந்த விளையாட்டெல்லாம் இப்போது குழந்தைகள் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை), கோ-கோ என்று ஓடி விளையாடிக் களைத்தபின்தான் வீடு திரும்புவோம்.

          மத்தியான வேளையில் நாங்களும் எங்கள் தெரு பிள்ளைகளும் எங்கள் வீட்டில் கூடி 'மலையாள பகவதி' என்று ஒரு விளையாட்டு விளையாடுவோம்.  எல்லா கதவு, ஜன்னல்களையும் மூடி வீட்டை இருட்டாக்கிவிட்டு படுப்பது போல் பாவனை செய்திருக்க ஒருவர் மட்டும் கறுப்பு போர்வையைப் போர்த்திக் கொண்டு மற்றவர்களைப் பயமுறுத்த வேண்டும்.  அந்த ஒருவரின் கற்பனை திறனையும், நடிப்புத் திறனையும் பொறுத்து விளையாட்டின் சுவை கூடும்.  ஒரு நாள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போது வீட்டு வாசல் கதவை யாரோ பலமாகத் தட்டும் ஓசை.  என் மூத்த சகோதரி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஒருவரையும் காணோம்.  கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு மீண்டும் தட தட என்று தட்டும் சத்தம்.  மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தால் ஒருவரும் இல்லை.  இப்போது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது (விளையாட்டின் effect!!!). இப்படியே மூன்று நான்கு முறை; அதுவும் ஒவ்வொரு முறையும் சத்தம் கூடிக் கொண்டே போனது; ஜன்னல் வழியே பார்த்தால் ஒருவரும் தென்படவில்லை.  எங்களுக்கோ கதவைத் திறக்க பயம்.  அடுத்த முறை கதவைத் தட்டும் ஓசை வந்ததும் என் சகோதரி பக்கத்து அறையின் ஜன்னல் வழியே பார்த்தால்....... அது என் மாமாதான்.  எங்களைப் பயமுறுத்தவே அப்படி செய்திருக்கிறார்.  பயம் தெளிந்து அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தோம்.

            இப்படி ஒவ்வொரு கோடைவிடுமுறையும் கொண்டாட்டம்தான்.  அந்த நாட்களை இன்று நினைத்தாலும் இன்பமாக இருக்கிறது.   நான் இத்தனை வரிகளில் சொன்னதை நான்கே வரிகளில் சொல்லும் ஒரு பழைய பாடல்தான் நினைவுவருகிறது.

              'குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே
               குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
               வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
              வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே!!'


எவ்வளவு உண்மையான வரிகள்.  கவியரசுக்கு இணை அவர் மட்டும்தான்!!!.


9 comments:

meenakshi said...

சுவாரசியமான பதிவு. அதற்கேற்ற பாடல் வரிகள். ரொம்ப நல்லா இருக்கு.

அப்பாதுரை said...

திருட்டாட்டம் பரம்பரையாக வருவது. அம்மா சித்திகளின் திருட்டாட்டத்தை எழுதாமல் என்னவோ ஆண்களுக்குச் சொந்தமாக எழுதியிருப்பது நியாயமா? அனியாயத்துக்கு சிக்னல் கொடுத்து விளையாடுவார்களே!

பத்து பைசாவாக இருந்த போது ஒரு மணி, பிறகு விலைவாசி காரணமாக நாலணா என்று உயர்ந்த போது அரை மணி, என்று விடுமுறை நாளில் வாடகை சைக்கிள் சுற்றியது சுகம். கோடை விடுமுறை நாளின் இன்னொரு அம்சம் - காலை வேளை பழையதும் மாவடுவும்.

geetha santhanam said...

துரை, மாமியும் சித்தியும் அழுகுணி ஆட்டம் ஆடுவார்களோ இல்லையோ பெரிசா சண்டை போட்டு உங்கள் cheatடாடத்தை பிரயோசனமில்லாமல் ஆக்குவார்கள்.
சைக்கிள் கற்றுக் கொண்டது சுவையான அனுபவம். எங்களுக்குக் கற்றுக் கொடுக்க நீயும் ஸ்ரீராமும் எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள்!
பழையதும் மாவடுவையும் விடு, கோடைக்கால
terror ஆன விளக்கெண்ணெயும் வேப்பங்கொழுந்தையும் மறக்கமுடியுமா!.
மீனாக்ஷி, நன்றி.

ஸ்ரீராம். said...

இப்போ எல்லாம் சென்னை வெய்யிலுக்கு எங்கே விளையாடுவது..? கம்ப்யூட்டரும் டிவியும் பாதி நேரம் ஆக்கிரமித்து விடுகிறது....

எல் கே said...

அருமை. எனது சிறு வயதை நினைவிற்கு கொண்டு வந்து விட்டீர்கள். இப்பொழுது விடுமுறையிலும் கற்க வேண்டுமாம். அப்பொழுத்தான் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வரமுடியுமாம்.

geetha santhanam said...

ஸ்ரீராம், LK, நீங்கள் இருவரும் சொன்ன காரணங்களுக்காகவே இன்றைய பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கு.---கீதா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நினைவுகூறல்..

geetha santhanam said...

nandri muththuletchumi.--geetha

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//உருப்படியான சீட்டு இல்லையென்றாலும் 'சூப்பர், நாமதான் வின்' அப்படி இப்படியென்று பேசி எதிராளிக்கு பயத்தை உண்டு பண்ணுவார்கள்//
ஆமாங்க...எனக்கும் இந்த அனுபவம் உண்டு... இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டு டென்ஷன் பண்ணியே தோக்கடுசுடுவாங்க...

//புளியங்கொட்டையை வைத்து 'ஒற்றையா, இரட்டையா' விளையாட்டு//
ஆஹா...கொசுவத்தி சுத்த வெக்கறீங்க கீதா.... அதெல்லாம் அந்த காலத்துல மறைமுகமா கணக்கு பாடம் படிக்க ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுன்னு இப்போ யோசிச்சா புரியுது...

//'மலையாள பகவதி'//
ஆஹா... இது புதுசா இருக்கே...

//அந்த நாட்களை இன்று நினைத்தாலும் இன்பமாக இருக்கிறது//
வாஸ்துவம்... அந்த இனிமை இன்னிக்கி பிள்ளைகளுக்கு இல்லை தான்... எப்பவும் கம்ப்யூட்டர்ம் டிவியும்... கொடுமைடா சாமி...