Friday, 22 October 2010

ஹலோ யூரோப் - வெனிஸ்

             வெனிஸ் நகரின் அழகைப் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம் (சமீபத்தில் வந்த 'houseful' ஹிந்தி படத்தில்கூட பார்த்திருக்கலாம்).  அதனால் வெனிஸ் நகரத்திற்குப் போவதை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அந்த நகரின் கொடுமையான வெயிலிலும் கொட்டும் வியர்வையிலும் என் ஆவல் நொடியில் காலியாகிவிட்டது. கட்டாயமாக sunscreen lotion, cooling glass, cap, umbrella, ஒரு டவல், நிறைய தண்ணீர் இவை அத்தனையும் எடுத்துக் கொண்டு போனால் ஏதோ கொஞ்சம் பிழைப்போம்.

             வெனிஸ் நகரம் 117 சிறு தீவுகள் இணைந்தது.  இந்தத் தீவுகளை 150 கால்வாய்கள் இணைக்கின்றன.  இந்த கால்வாய்களைக் கடக்க சுமார் 409 சிறு சிறு பாலங்கள் உள்ளன.  இதிலிருந்தே இந்த நகரம் நீரால் சூழ்ந்த நகரம் என ஊகிக்கலாம்.



               நீருக்கடியில் மிக ஆழத்தில் மரக்கட்டைகளை இறக்கி சம நிலைப்படுத்தி அதன்மேல் கட்டிடங்களை எழுப்பி இருக்கிறார்கள். நீருக்கடியில் மரம் உளுத்துப் போகுமே!  ஆனால் நீருக்கடியில் ஆழத்தில் மண்ணுக்குள் புதைத்திருப்பதால் இந்த மரக்கட்டைகள் இத்தனை வருடங்களான பின்னும் உளுத்துப் போகாமலிருக்கின்றன. அதன் மேல் எழுப்பப்பட்ட கட்டிடங்களும் நிலைத்திருக்கின்றன.  ஆனால் எல்லா கட்டிடங்களுமே அதன் பழமையை உணர்த்தும் வகையில் காரை பெயர்ந்தும், விரிசல்களுடனும் இருக்கின்றன. வெள்ள ஆபாயத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் முதல் தளத்தில் யாரும் வசிப்பதில்லை.

            
               நகரெங்கும் சுற்றுலா வந்த வெளி நாட்டவர்களைப் பார்க்க முடிகிறது.  கடைத்தெருக்களிலும் நல்ல கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.  உலகத்திலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்படும் புகழ்பெற்ற St.Mark square (piazza)இங்குதான் இருக்கிறது. போகும் வழியெல்லாம் கடைகளும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிறைந்திருக்கிறார்கள். உங்கள் பர்ஸையும், பாஸ்போர்ட்டையும் மிக பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 St.Marks Basilica

               St.Mark square பிற ஐரோப்பிய நகரச் சந்தை சதுக்கத்தைப் போல நிறைய கடைகளும், நீண்ட பெரிய கட்டிடங்களும் கொண்டதாக இருக்கிறது.  ஒருபுறம் பெரிய மேடையும் (நாடகம் மற்றும் கூட்டங்கள் நடத்த) மற்ற புறங்களில் அழகிய நீண்ட கட்டிடங்களும் அமைந்துள்ளன.  ஒரு மூலையில் பெரிய மணிக்கூண்டும் உள்ளது.  இந்த சதுக்கத்தில் மிக அதிக அளவில் உள்ள புறாக்கள் நம் கையில் கொஞ்சம் தானியத்தை வைத்திருந்தால் நம் தலை மற்றும் கையில் வந்தமர்கின்றன. இப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.

          
  வெனிஸ் நகரத்தின் தனிச்சிறப்பே அங்குள்ள gondola (பொன்னியின் செல்வனில் வரும் ஓடம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது) தான்.  அதிலேறி வெனிஸ் நகரக் கால்வாய்களில் பயணம் செய்து அந்நகரின் பழமையானக் கட்டிடங்களைப் பார்ப்பது சுவையான அனுபவமாக இருந்தது. மிகக் குறுகிய கால்வாயிலும் திருப்பங்களிலும் gondola- வை லாவகமாக ஓட்டிச் செல்வதை ரசித்தபடியே நகரை ஒரு சுற்று சுற்றி வந்தோம்.

              Bridge of sigh எனும் பாலம் வெனிஸ் நகரை அந்நகரின் சிறைச்சாலையிருக்கும் தீவோடு இணைக்கிறது.  சிறைக்குச் செல்லும் கைதிகள் இந்தப் பாலத்தின் ஜன்னல் வழியே வெனிஸைப் பார்த்து பெருமூச்சுவிட்டு செல்வார்களாம்.   அதனால் அந்தப் பெயர்.


 இந்தக் காலத்தில், காதலர்கள் இந்த பாலத்தினடியில் மாலை வேளையில் gondola-வில் ஒன்றாகச் சென்றால் காதல் கைகூடும் என்ற மூட நம்பிக்கை இருக்கிறதாம். (ஓடக்காரர்களே கிளப்பிவிட்டிருப்பார்கள்.  சும்மாவா, ஒரு முறை ஓடத்தில் வலம் வர 100 யூரோ!!. ஒரு ஓடத்தில் அதிகபட்சமாக 6 பேர் உட்காரலாம்; அதனால் நாங்கள் அந்த வாடகையைப் பகிர்ந்துகொண்டோம்).

               வெனிஸ் கண்ணாடி பொருட்களின் வேலைப்பாட்டுக்கும் புகழ் பெற்றது.

அங்குள்ள முரானோ கண்ணாடி தொழிற்சாலைக்குச் சென்று அவர்களின் வேலைப்பாடுகளைப் பார்த்தோம்.  கண்ணாடியில் இவ்வளவு கைத்திறனைக் காட்ட முடியுமா என்று வியந்தோம்.  கண்ணாடியில் செய்யப்பட்ட நகைகள் மிகவும் அழகாக இருந்தன.  இத்தாலியில், கல்யாணத்திற்கு நேர்த்தியான வேலைப்பாடு மிக்க கண்ணாடி குவளைகளைப் பரிசாக அளிப்பார்களாம்.
பி.கு: நாங்கள் கேள்விப்பட்ட இன்னொரு சுவையான விஷயம்: இங்கு Bar-ல் நின்று கொண்டு மது அருந்துவது உட்கார்ந்து மது அருந்துவதைவிட செலவு குறைவானதாம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!!!.

4 comments:

எல் கே said...

nalla pugaipadangal

அப்பாதுரை said...

பார்க்க வேண்டிய இடங்களில் குறித்துக் கொண்டேன்.

ஸ்ரீராம். said...

புகைப் படங்கள் அருமை.

geetha santhanam said...

thanks,LK, Durai and Sriram.--geetha