Tuesday, 26 October 2010

என்னடா பொல்லாத வாழ்க்கை

        
              சாப்பிட்டு முடித்தபின் வெற்றிலை பாக்குப் பெட்டியுடன், ஈஸிசேரையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.  ஈஸிசேரில் சாய்ந்தபடி வானத்திலுள்ள நட்சத்திரங்களை வெறித்து நோக்கினேன். உள்ளே 'கடவுளே, அவருக்கு இந்த வேலை எப்படியாவது கிடைக்கட்டும்' என்று குழந்தைகளுக்குத் தெரியாவண்ணம் கண்ணீர் சிந்தி வேண்டிக்கொண்டிருப்பாள் என் மனைவி.   என்னவோ எல்லாமே சலிப்பாக இருந்தது.  இத்துடன் நான் வேலையை உதறிவிட்டு வருவது பத்தாவது முறை.  எதிர்த்த வீட்டு ராமசாமி போலவோ, அடுத்த வீட்டு பத்மநாபன் போலவோ என்னால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்து போக முடிவதில்லை.

            Born with the silver spoon என்பார்களே அப்படி செல்வத்தில் பிறந்து திகட்டத் திகட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவன். வாழ்க்கையின் வலி அறியாமல் வளர்ந்தவன்.  நன்றாக போய்க்கொண்டிருந்த என் தந்தையின் பிஸினஸ் என்னுடைய தவறான ventures மூலம் நிர்மூலமானது.  இன்று என் மனைவி, இரு குழந்தைகளுக்காக இன்னொருவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டிய நிலமை. ஊழல், மரியாதையில்லாத செய்கை, மற்றவர்களின் அதிகப் பிரஸங்கித்தனமான/ முட்டாள்தனமான பேச்சு என்று ஏதாவது ஒரு விஷயம் என் மூக்கின்மேல் எப்போதும் இருக்கும் கோவத்தை விசிறிவிட நான் பத்து முறை வேலை மாறியாகிவிட்டது.

              நினைத்தால் சலிப்பாக இருக்கிறது. எனக்கு நன்றாகக் கதை எழுத வரும்.  மிக அழகாக ஓவியமும் வரைய வரும்.  ஆனால் இதில் எதிலுமே பெரு வளர்ச்சி பெறவில்லை.  எந்த வேலையில் சேர்ந்தாலும் அதில் முதன்மையாக வரக்கூடிய திறமை, மேலதிகாரியின் பாராட்டைப் பெறுமளவு உழைப்பு எல்லாமிருந்தும் என்னால் ஒரு வேலையிலும் நிலைத்து நிற்க முடியவில்லையே. இன்னும் எத்தனை நாள் இப்படிப் போராடுவது.  என்னடா இது பொல்லாத வாழ்க்கை!!

            இந்த மாதிரி மனம் சலிப்படையும்பொதெல்லாம் எனக்கு ஆறுதலாயிருக்கும் என் மாமனாரை நினைத்துக் கொள்கிறேன்.  ஒரு நண்பன் போல் புரிந்து கொள்ளுதலும், ஒரு சகோதரனைப் போல் ஆதரிப்பதிலும் அவர் எனக்குப் பெரும் பலமாக இருந்தார்.  எனக்குச் சரிவு ஏற்படும் போது என்னை ஊக்கப்படுத்துவார்.  அவர் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சாப்பிட்டபின் இது போல் வெளியில் அமர்ந்து விடியும் வரை பேசுவோம். என் வருங்காலம், அவரின் இறந்த காலக் கதைகள் என்று எங்களுக்குப் பேச விஷயத்திற்குக் குறைவே இல்லை. அவர்தான் எத்தனை உயர்ந்த மனிதர். தன்னைச் சேர்ந்தவர்களின் முகத்தில் மகிழ்சியைக் கொண்டு வர எதுவும் செய்யத் தயங்கமாட்டார். யாருக்கும் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் பாரத்தைக் கூடக் கொடுக்காமல் தனிமையில் மாரடைப்பால் காலமானவர். அவர் இறந்தது என்னால் ஏற்க முடியாத பெரும் இழப்பு. அவரிடம் பேசும்போதெல்லாம் என் மனச்சுமை குறைந்திருக்கிறது.

            'அப்பா, நேரமாச்சு, தூங்கலாம் வா' என்ற மகளின் குரல் என் நினைவுகளைக் கலைத்தது. என் மோட்டார் சைக்கிளில் சாய்ந்த வண்ணம் என்னைக் கூப்பிட்டாள் அவள். மோட்டர் சைக்கிள் மீண்டும் என் நினைவுகளைக் கிளறியது.  மார்கெட்டிங் துறையில் வேலை கிடைத்தவுடன் இந்த மோட்டார் சைக்கிளை வாங்க பணம் ஏற்பாடு செய்தவர் என் மாமனார்தான். அதில் போக எனக்கு முதலில் கொஞ்சம் பயம்.  அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'ஓய், நீர் சும்மாதானே இருக்கீர். என்னோட வாருமேன்" என்று துணையாக அவரை பின்னால் வைத்துக் கொண்டு போவேன்.  எதிரில் ஒரு வாகனம் வந்தால் போதும், அவரை இறங்கச் சொல்லி வண்டியை ரோட்டின் ஓரத்திற்கே கொண்டு போய் நிறுத்திவிடுவேன்.  இப்படி எவ்வளவு நேரம்தான் ஏறி இறங்கிப் போக முடியும்!.  கொஞ்ச நேரத்தில் பார்த்தால் எதிரில் வரும் வாகனங்களெல்லாம் ஒதுங்கிப் போக எனக்கு ஓட்டுவது எளிதானது.  மாமனார் முன் மானம் போகாமல் இருந்ததற்காக மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே 'ஓய் பார்த்தீரா, எவ்வளவு ஜோரா ஓட்டினேன்" என்றேன் பெருமிதமாக. அவரோ " ஆமாமாம். நான் பின்னாலிருந்து கொண்டு வண்டி டிரைவர்களுக்கு ஒதுங்கிப் போகச் சைகை செய்தேன்.  நீ எளிதாக ஓட்ட முடிந்தது" என்றார்.  இருவரும் வெகு நேரம் இந்தப் பயணத்தைப் பற்றி பேசிச் சிரித்தோம்.

              "ஏண்ணா, நாளைக்குத் திருச்சிக்கு இண்டர்வ்யூ போகவேண்டாமா?  கொஞ்சம் தூங்குங்கோ" என்ற மனைவியின் குரல் கேட்டு வீட்டிற்குள் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் பிடிக்கவில்லை.  ஏனோ இன்று என் மாமனாரைப் பற்றிய எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்தன. நெடுந்தூரம் பயணம் செய்ய நேரிடும்போதெல்லாம் அவர் என்னுடன் பின்னால் உட்கார்ந்து வர நாங்கள் கதைகள் பேசிச் செல்வோம்.  வேலையில்லாவிட்டாலும் திருநீர்மலை, திரிசூலம் என்று சென்று நெடு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.  இப்பொழுது மட்டும் அவரிருந்தால் என்னுடைய இன்றைய மனச்சலிப்பை அவருடைய பேச்சால் குறைத்திருப்பார்.  தூக்கம் வராமல் புரண்டு கொண்டே அந்த இரவைக் கழித்தேன்.

             விடிகாலையில் கிளம்பி என்னுடைய மோட்டார் சைக்கிளிலேயே திருச்சி இண்டர்வ்யூவிற்குச் சென்றேன்.  எல்லாம் நன்றாக நடந்தது என்றாலும் நான் பலமுறை வேலை மாறியதைச் சுட்டிக் காட்டி வேலைத் தரத் தயங்கினார்கள். எப்படியோ அவர்களைச் சரிகட்டி கொஞ்சம் குறைந்த சம்பளமானாலும் பரவாயில்லை என்று வேலையை ஒத்துக் கொண்டேன்.
சென்னை திரும்பி வரும்போது மனம் மிகவும் சோர்ந்து, சலிப்படைந்திருந்தது. சே, இன்னும் எத்தனை நாள் இப்படி அடுத்தவனிடம் கைகட்டி வாழ்வது!  எனக்கு மட்டும் ஒரு சரியான வாய்ப்புக் கிடைத்தால் இவர்களையெல்லாம்  overtake செய்து பெரிய பிசினஸ் மேனாகிவிடுவேன்!!

              கோவத்திலும் சலிப்பிலும் தன்னிச்சியாக கியர் மாற்றி வேகமாகச் சென்றேன்.  முன்னால் சென்ற ஸ்கூட்டரை ஒவர்டேக் செய்ததும் மனதில் ஒரு நிறைவு.  எல்லாரையும் வென்று வீழ்த்தியதைப் போல் ஒரு பெருமிதம். ஒரு வெறியுடன் மேலும் சீறிப் பாய்ந்து எனக்கு முன்னால் செல்லும் கார், லாரியென்று எல்லோரையும் முந்தினேன்.  மனம் 'சபாஷ்டா ராஜா. நீ யாரென்று இவர்களெல்லாம் புரிந்து கொள்ளட்டும்" என்று கொக்கரித்தது.  வந்த வேகத்தில் சாலையைக் கடக்கும் ஒரு முதியவருக்காகக் கொஞ்சம் ஒதுங்கும்போது எதிரே வந்த லாரியின் மேல் மோதி அப்படியே தூக்கி எறியப்பட்டேன்.  காற்றில் பறந்து கீழே விழப்போனேன். அப்போது எதிரே தும்பைப்பூ போல் வெள்ளை வேட்டியுடன், அள்ளி முடியப்பட்டக் குடுமியுடன் சிரித்தபடி வந்த என் மாமனார் என்னை இரு கைகளால் தாங்கிக் கொண்டார். ஒரு இனம் புரியாத நிம்மதி என்னை ஆட்கொண்டது.

               பின்னர் நான் படுத்துக் கிடக்க, என் மனைவியும், மாமியாரும் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  குழந்தைகளோ ஒன்றும் புரியாமல் மருட்சியுடன் இருக்கிறார்கள்.  கொஞ்சம் தொலைவில் என் மச்சினர்கள் கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு என்ன ஆயிற்று??.








                மெதுவாகக் கண்களை விழித்துப் பார்க்கிறேன்.  என் அசைவைக் கண்டதும் என் மனைவி ' ஏண்ணா! இப்படி பயமுறுத்திவிட்டீர்களே!' என்று பெரிதாக அழத்தொடங்கினாள்.  குரல் கேட்டு என் குழந்தைகள் 'அப்பா" என்று ஓடிவந்து என்னை அணைத்து கொண்டனர்.  "பார்த்துப் போகவேண்டாமா மாப்பிள்ளை.  உங்க மாமனார் இருந்திருந்தால் பின்னால் உட்கார்ந்து வழிகாட்டியிருப்பார்" என்று மெல்லிய குரலில் என் மாமியார் சொல்லவும் "அவர்தானே அம்மா வழிகாட்டினார்.  இனி ரோட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நிதானத்தைக் கடைபிடிக்க அவர்தானே நல்வழிகாட்டினார்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.  என் குழந்தைகளை அள்ளி அணைத்துக் கொண்டேன்.  எங்களை வருடிச் சென்ற சில்லென்ற காற்றில் கலந்திருந்த என் மாமனாருக்கு மனதால் நன்றி சொன்னேன்.

4 comments:

அப்பாதுரை said...

நல்லா இருக்கு.
(எல்லாருமே பேய்க்கதை எழுத ஆரம்பிச்சுட்டமா?)

geetha santhanam said...

நன்றி LK & துரை.
துரை, எல்லாம் உங்களிடமிருந்து கிடைத்த inspiration தான்.--கீதா

Anonymous said...

A heartwarming story. the relationship between a man and his FIL is very special and one that is rarely touched upon unlike their female counterparts. very beautifully written.

shanthi

geetha santhanam said...

thanks shanthi.--geetha