Thursday 9 December 2010

முக்காலின் முக்காபுலா

              காலை வேளையில் கடலைப் போட்டுக் கொண்டே கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்ய நானும் என் தோழியும் அருகே உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்வோம்.  நிறைய அரட்டையோடு கொஞ்சம் treadmill, கொஞ்சம் cycling, கொஞ்சம் rowing செய்வோம். wii-யில் கற்றுக் கொண்ட aerobics பயிற்சியையும் கொஞ்சம் செய்வோம்.  அன்றும் அப்படித்தான் ஏரோபிக்ஸ் செய்து கொண்டிருந்தேன்.


            

                 மூன்று aerobics step stoolsஐ மூன்றடி இடைவெளிவிட்டு வைத்து பாண்டி விளையாடுவது போல் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தேன். வேறு ஒரு பெண் ஒரு ட்ரைய்னரிடம் கற்றுக் கொள்வதைப் பார்த்து நான் பழகியது இந்த பயிற்சி.  குரு தக்ஷிணை தராமல் பயின்றதல்லாவா, தண்டனை உடனே கிடைத்தது.  முதல் இரண்டு ஸ்டூலைத் தாண்டி மூன்றாவதைத் தாண்ட முயலும்போது கால் பிசகித் தடாலென்று விழுந்தேன்.  கொஞ்சம் வலி; ஆனால் வீக்கம் ஒன்றும் இல்லை.

             வீட்டிற்கு வந்ததும் தைலம் தடவி வழக்கமான வீட்டு வேலைகளைச் செய்தேன்.  வலி ஒன்றும் தெரியவில்லை.  பகல் ஒரு மணிக்கு என் மகளை அழைத்துவர பள்ளிக்குச் செல்லும் முன் ஒரு முறை தைலம் தடவலாமென்று பாதத்தைப் பார்த்தேன்.  இதுதான் நான் செய்த தவறோ?  அதுவரை வலியே தெரியாத எனக்கு, காலில் (ankle-ல்) மூட்டு டென்னிஸ் பந்துபோல் வீங்கியிருப்பதைப் பார்த்ததும் எப்படித்தான் அப்படி வலிக்கத் தொடங்கியதோ!
அதுவரை கூலாக நடந்து கொண்டிருந்தவள் நொண்டுவதற்கே சிரமப்பட ஆரம்பித்தேன். ortho doctorஐப் பார்க்க அடித்து பிடித்து ஓடினோம்.  நல்ல வேளை, எலும்பு முறிவு ஒன்றும் இல்லை என்றார்.  நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் "ligaments tare என்பதால் மாவுக்கட்டு போடவேண்டும். இரண்டு வாரங்களுக்கு அடிபட்டக் காலை தரையில் ஊன்றக் கூடாது" என்றார்.  ஐயயோ, எப்படி நடப்பது என்று கேட்டால், "கவலை வேண்டாம்.  ஒரு காலுக்கு பதில் இரு (ஊன்று)கால்களைத் தருகிறேன்" என்றார்.

          


               மூன்று காலில் நடப்பது முதலில் கடினமாக இருந்தது.  முதலில் இரு ஊன்று கோல்களையும் முன்னால் நகர்த்தி பின்னர் என் ஒரே காலால் குதித்து முன்னேற வேண்டும்.  இந்த sequence சரியாக நிதானமாக செய்தால் பிரச்சினை இல்லை.  நான் இரு ஊன்று கோல்களையும் தூக்கும்போதே என் ஒரே காலையும் தூக்குவது, அல்லது ஊன்றுகோலைத் தவறவிடுவது என்று ஏதோ தவறுகள் செய்து இப்பொழுதுதான் சரியாக நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.  ஒருவழியாக 'முக்காலும்' உணர்ந்த ஞானியாகிவிட்டேன்!!!.

             இரண்டு கால்களில் ஓரிடத்தில் நிற்காமல் ஏதாவது செய்துகொண்டே (அல்லது செய்வதுபோல் நடித்துக் கொண்டே) இருந்த நான் மூன்று காலிருந்தும் கணவர் மற்றும் மகளின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து
மூலையில் உட்காரும் நிலமை.  சமையல் மற்றும் உதவிக்கு ஒரு பெண்மணி வருகிறார்.  அதனால் சும்மாயிருப்பதுதான் எனக்கிருக்கும் ஓரே வேலை.

             இந்த முக்காலின் முக்காபுலாவால் என்ன நன்மைகள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

             இதுவரை நான் 5-6 பதிவர்களின் வலைத் தளங்களையே ரெகுலராகப் படிப்பேன்.  இப்பொழுது நேரம் அதிகம் கிடைப்பதால் தமிழ்மணத்தில் போய் எல்லா புதிய இடுகைகளையும் ஒரு glance பார்க்க முடிகிறது. என் கணவர் வாங்கிக் குவித்திருக்கும் தன்னம்பிக்கைப் புத்தகங்கள் சிலவற்றைப் படிக்கிறேன்.  என் மகளோடு விளையாட்டு (உட்கார்ந்த இடத்தில்தான்), கதைகள் படித்துக் காட்டுவது என்று அதிக நேரம் செலவழிக்கிறேன். "நான் ஹெல்ப் பண்றேன்மா" என்று ஓடிவரும் அவள் அன்பில் சந்தோஷப்படுகிறேன். அவள் மட்டுமன்றி என் கணவர், பக்கத்துவீட்டுத் தோழி, மேல் வீட்டு மாமி, என் வீட்டில் வேலை செய்பவர் என்று பலரின் அன்பு உள்ளங்களை உணர நல்ல வாய்ப்பாகவும் இது அமைந்தது.

            இப்படி வேலையில்லாமல் உட்கார்ந்திருப்பதில் குறைகளும் உண்டு.  முன்பெல்லாம் தேர்வு நேரத்தில் மட்டும்தான் என் மகளைப் படிக்கவைப்பேன்.  அதுவும் அவளே படித்தபின் ஒரு கேள்வித்தாள் கொடுப்பதுதான் என் வேலை. இப்பொழுதோ எனக்குப் பொழுது போகாததால் crossword பண்ணு, maths puzzle பண்ணு என்று அவளை torture பண்ணிக் கொண்டிருக்கிறேன்.  உருப்படாத சீரியலைப் பார்க்கவும் பிடிக்காததால் டிவி சேனலை மாற்றிக் கொண்டேயிருப்பது ஒரு habbit ஆக மாறிவிடுமோ என்று கவலையாயிருக்கிறது.  இதெல்லாவற்றையும்விட வேலை எதுவும் செய்யாமலிருப்பதால் நான் கஷ்டப்பட்டுக் குறைத்த 2 kg கொழுப்பும் வட்டியும் முதலுமாக என் உடலில் சேமிப்பாகிவிடுமோ என்ற கவலைதான் பிரதான கவலையாக இருக்கு. முக்காலும் உணர்ந்த அந்தக் கடவுள்தான் இந்த முக்காலிலிருந்து சீக்கிரம் விடுதலை தரவேண்டும்!!.

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முக்காலும் உணர்ந்த ஞானி !
உங்களைச் சுற்றிலும் இருக்கு
அன்பூறும் கேணி!
அடிக்கவராதீங்க படிச்சிட்டு..:))

அப்பாதுரை said...

பெஞ்சு தடுக்கி பயிலாவானா?

meenakshi said...

விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்!

// 2 kg கொழுப்பும் வட்டியும் முதலுமாக என் உடலில் சேமிப்பாகிவிடுமோ என்ற கவலைதான் பிரதான கவலையாக இருக்கு. //
:) இந்த கவலையிலேயே இன்னும் 2 kg. குறைஞ்சிடும் பாருங்க.

ஸ்ரீராம். said...

சீக்கிரம் குணமடைய வேண்டிக்கிறேன். ஓய்வு பலவகைகளில் கஷ்டம் என்றாலும் சில நன்மைகளும் உண்டுதான்.

geetha santhanam said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மீனாக்ஷி, ஸ்ரீராம்.
ஆமாம், முத்துலக்ஷ்மி.
//முக்காலும் உணர்ந்த ஞானி !
உங்களைச் சுற்றிலும் இருக்கு
அன்பூறும் கேணி! //
அவர்கள் என்னைக் காக்கிறார்கள் பேணி
விரைவில் நலமாகும் என் மேனி.
(டி.ராஜேந்தர் படித்துவிட்டு அழுதாராம்.--சற்று முன் கிடைத்த செய்தி!!).
துரை, பயிலாவானா- good one.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) சர்தான்

கௌதமன் said...

விரைவில் நலம் காண என் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும். கம்பியூட்டரில் படிப்பதற்கு, பி டி எஃப் புத்தகங்கள் எதுவும் வேண்டும் என்றால், (தமிழ் / ஆங்கிலம்) உங்கள் ஃபேவரைட் ஆதர் பெயர் சொல்லுங்கள். அல்லது எங்கள் ப்ளாக் மின்னஞ்சலுக்கு ஒரு அஞ்சல் அனுப்புங்கள்.

geetha santhanam said...

அன்பிற்கு நன்றி KGG சார். நான் படிக்க விரும்பும் புத்தகங்களின் விவரத்தை விரைவில் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது அனுப்பி வையுங்கள். தங்கள் உதவிக்கு நன்றி.

சாய்ராம் கோபாலன் said...

கீது, எனக்கு மெயில் அனுப்பி நலம் விசாரித்தாய், இங்கே நீ இப்படி டே"புல்" தடுக்கி பயில்வானா இருக்கே !!

தன்னம்பிக்கை புத்தகம் - ஐயோ எனக்கு அது ஒரு கப்பல் நிறைய வேணுமே !!!

வீட்டோடு சமையல்காரியா - பலே பலே. கொழுப்பு ஏறாமல் !! இங்கே நான் சமைத்துக்கொண்டு இருக்கின்றேன் - அடி பாவி அனுபவி ஜோரா அனுபவி