Tuesday, 23 August 2011

கிருஷ்ண ஜெயந்தி

              கிருஷ்ண ஜெயந்தி என்றால் நாங்கள் சிறு வயதில் கொண்டாடியதுதான் நினைவு வரும்.  என் அம்மாவும் பாட்டியும் சீடை, முறுக்கு, திரட்டிப்பால் என்று செய்ய வீட்டில் வாசனை தூக்கும்.  ஆனால் இரவு பூஜை வரை நாக்கைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.  மாலையில் வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வரைவோம்.  இதெல்லாம் விட மாலையில் பூஜை முடிந்ததும் என் அம்மா அவர்கள் செய்யும் பஜனையை என்றுமே மறக்க முடியாது.  'கிருஷ்ணா முகுந்தா முராரே...', 'ஜிலுஜிலு ஜிலிஜிலுவென..', என்று பல பாடல்களை அவர் பாட, என் அண்ணன் ஒரு பலகையை வைத்து தாளம் போட நாங்கள் அனைவரும் பட்சணம், பசியை மறந்து பஜனையில் லயித்ததும் என்றும் நினைவில் நிற்பவை.

             திருமணமானபின் வளைகுடா நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை ISCON-ஐச் சேர்ந்த நண்பர் வீட்டில் கொண்டாடினோம். நிறைய பேரின் பங்கேற்பில் நூறுவகைக்கு மேல் பட்சணங்கள் நிவேதனம் செய்து, இரவு பனிரெண்டு மணிக்குப் புத்தாடை உடுத்தி ஆடல் பாடல்களோடு கொண்டாடியது பசுமையாக நினைவிருக்கிறது.

              என் நண்பரின் மகளுக்குப் பிடித்த தெய்வம் கிருஷ்ணர்.  எப்பொழுதும் கிருஷ்ணர் கதைதான் விரும்பிக் கேட்பாள்.  ஒரு முறை நான் அவளிடம் கிருஷ்ணர் பற்றி கிருஷ்ணரின் அப்பா பேர் என்ன, கம்சன் யார் என்று ஒரு மினி quiz நடத்த, டாண் டாணென்று சரியான பதில் அளித்தாள்.  கடைசியாக 'யாருக்குக் கிருஷ்ணரை ரொம்ப பிடிக்கும்' என்று (அவள் ராதா என்று சொல்வாள் என்று எண்ணி) கேட்க அவளோ 'எனக்குதான்!' என்று பதில் சொன்னாளே பார்க்கலாம்.!! அவளுக்கு நான்கு வயதாகும்போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது.  கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணர் பாதம் போடுவதைப் பார்த்த அவள் ஏனென்று கேட்க என் தோழி கிருஷ்ணர் இன்று நம் வீட்டுக்கு வருவார்; அதற்குத்தான் என்றாராம்.  குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி.  கிருஷ்ணரைப் பார்க்கலாமா? எப்ப வருவார்? எல்லார் வீட்டுக்கும் வருவாரா? என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.  என் தோழியும் குழந்தையிடம் கிருஷ்ணர் இரவு வருவார் என்று நம்பிக்கை அளித்த வண்ணம் இருந்தாள்.  இரவு பூஜை முடிந்து நாங்களெல்லாம் திரட்டிப்பால், சீடையை ஒரு பிடி பிடிக்கத் தயாராக அவள் மட்டும் 'கிருஷ்ணர் வரட்டும்; அவரோடு சேர்ந்து சாப்பிடலாம்' என்றாள்.  நாங்களும் குழந்தை மனசை நோக வைக்க வேண்டாம் என்று கிருஷ்ணர் இரவு கட்டாயம் வருவார்; அவர் எல்லார் வீட்டுக்கும் போய்விட்டு வருவார். நீ சாப்பிடு' என்று சொன்னோம். அவளோ பிடிவாதமாக சாப்பிட மறுத்துவிட்டாள். நேரமாக ஆகக் குழந்தை சாப்பிடவில்லையே என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது.  உடனே என் தோழியின் கணவர் சமயோசிதமாக தன் நண்பருக்கு ஃபோன் செய்து 'கிருஷ்ணர் வந்து கொண்டு இருக்கார்.  வழியில் டிராஃபிக் ஜாமானதால் வர இன்னமும் நிறைய  நேரமாகுமாம்' என்று சொல்லச் சொன்னார்.  குவைத்தில் சில நேரங்களில் டிராஃபிக்கில் மாட்டிய அனுபவம் இருந்ததால் அந்தக் குழந்தையும் சாப்பிட சம்மதித்து சாப்பிட்டுத் தூங்கியும்விட்டாள்.  காலை எழுந்ததும் முதல் கேள்வியாக 'அம்மா, கிருஷ்ணர் வந்தாரா?' என்றாளாம்.    இன்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவள் நினைவுதான் எங்களுக்கு வரும்.

           கடைசியாக ஒரு சின்ன சந்தேகம்.  ஜெயந்தி என்றால் என்ன அர்த்தம்?  பிறந்த தினம்?  ஆனால் பல பெண்களின் பெயர் ஜெயந்தி என்று இருக்கிறதே? பிறந்த தினம் என்றா பெயர் வைப்பார்கள்!!.

9 comments:

பத்மநாபன் said...

அந்த குழந்தையின் கிருஷ்ண பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது... கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின் மலரும் நினைவுகள் கொண்டு சுவையான பகிர்வு...

பத்மநாபன் said...

கீதா மேம் ..நடுவில் எதோ சுற்றுலா பதிவு ஒன்று போட்டமாதிரி இருந்தது.நானும் ஒரு பெரிய கமெண்ட் இட்ட ஞாபகம்..

ஸ்ரீராம். said...

குழந்தையின் நம்பிக்கை நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. கிருஷ்ண ஜெயந்தி அன்று புத்தாடை அணிந்து பழக்கமில்லை. பஜனையில் அண்ணன் தாளம் போடுவார்...பாடுவாரோ? ஜெயந்தி சந்தேகம் நியாயமானதுதான்!

அப்பாதுரை said...

நியாயமான சந்தேகம்.

ஜெயந்தி என்றால் பிறந்த நாள் என்று பொருள் கிடையாது (ஒரு செகன்ட் வைட் எ மினிட் ப்லீஸ்). ஜெயந்தி என்றால் வெற்றிகரமான என்று பொருள். க்ருஷ்ணருடைய பிறந்த நாள் 'உலகத்துக்கு வெற்றி - தர்மத்துக்கு வெற்றி' என்ற பொருளில் 'க்ருஷ்ண ஜெயந்த:' என்று சொல்லப்பட்டது. அதனால் ஜெயந்த/ஜெயந்தி என்ற சொல் பிறந்த நாள் என்ற பொருளில் க்ருஷ்ணருக்கு மட்டுமே பொருந்தி வந்தது. அப்புறம் எல்லாரும் ஏமாந்ததால் அனுமாரிலிருந்து காந்தி ஒபாமா வரைக்கும் ஜெயந்தி பிறந்த நாள் என்ற பொருளில் பழகிவிட்டது. ஜெயந்த/ஜெயந்தி என்ற வடமொழிச்சொல்லுக்கு வெற்றிகரமான என்று தான் பொருள். இனிமேல் விஷயம் தெரிந்த யாராவது உருப்படியான விளக்கம் சொல்லலாம்.

Kasu Sobhana said...

ஜெயந்தி என்ற பெயருக்கு, பார்வதி என்னும் பொருளும் உண்டு.

சாய் said...

கீது

கடைசி பத்தி சூப்பர். நான் தான் கேள்வியின் நாயகன். நீயுமா !

geetha santhanam said...

நன்றி பத்மநாபன், ஸ்ரீராம், அப்பாதுரை, காசு ஷோபனா & சாய்ராம்.
பத்மநாபன் சார், தவறுதலாக ஏதோ அழுத்த உலா பதிவை மற்றும் கமெண்ட்களைப் ப்ளாகர் விழுங்கிவிட்டார். ஊட்டியில் ட்ரெக்கிங் செய்ய மற்றும் காண அழகான இடங்கள் பற்றிய உங்கள் கமெண்ட்டிற்கு நன்றி.
பத்மநாபன், ஸ்ரீராம், நானும் அந்தக் குழந்தையின் நம்பிக்கையைப் பலமுறை எண்ணி வியந்திருக்கிறேன்.
துரை, உங்கள் ஜெயந்தி விளக்கத்திற்கு நன்றி. 'ஜெயம்' என்ற வார்த்தையிலிருந்து ஜெயந்தி வந்திருக்கிறது போலும்.
காசு ஷோபனா, பார்வதிக்கு ஜெயந்தி என்று பெயரென்பது தெரியாத செய்தி. கூகிளில் தேடியபோது இந்திரனின் மகளுக்கு ஜெயந்தி என்று பெயரென்று படித்தேன்.
சாய்ராம், உன்னோட தங்கைக்கு உன் 'கேள்வி ஞானத்தி'ல் கொஞ்சமாவது இருக்காதா?

meenakshi said...

இந்த குழந்தைக்காக, குழந்தையின் பெற்றோர் யாரவது ஒரு நண்பரின் உதவியுடன் ஒரு குழந்தைக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு, வீட்டிற்கு வரவழைத்து எல்லோருக்குமே ஒரு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம். கிருஷ்ணர் ஜெயந்தி இன்னும் கோலாகலமாக இருந்திருக்கும்.
நீங்க கிருஷ்ணர் ஜெயந்திக்கு எல்லா பட்சணமும் பண்ணீங்களா? :)

geetha santhanam said...

அதுகூட நல்ல யோசனைதான். ஆனால் வேஷம் போட்ட கிருஷ்ணரை அவள் கண்டுபிடித்துவிடுவாளே!