Sunday, 10 January 2010
அந்த ஏழு நாட்கள்
யோகா, aerobics, walking, jogging என்று எல்லாம் முயற்சி செய்தும் size zero வேண்டாம், அட,கொஞ்சமாவது இளைக்குமா என்றால் ஒன்றும் பயன் தரவில்லை. வழக்கம்போல் இணையத்தில் வலைபோட்டு தேடியதில் கிட்டியது sevendays miracle diet. சரி, முயன்றுதான் பார்ப்போமே என்று ஆரம்பித்தேன்.
முதல் நாள் பழங்கள் (வாழைப் பழம் தவிர) மட்டுமே உண்ண வேண்டும். காலையில் சுறுசுறுப்பாக ஆரம்பித்த diet மாலைவரை தாக்குப் பிடித்ததே பெரிய சாதனையாக இருந்தது. எப்படியோ அன்றைய பொழுது கழிந்தது.
இரண்டாம் நாள் வேக வைத்த அல்லது பச்சை காய்கறிகள் மட்டும் சாப்பிடலாம். இருந்த பசிக்கு வேக வைக்கவெல்லாம் பொறுக்காமல் அப்படியே கடித்து வயிறைக் கொஞ்சம் சமாதானப்படுத்தினேன். பின்னர்தான் நாக்கு என்னையும் கொஞ்சம் கவனி என்று ஈன ஸ்வரத்தில் சொல்வது கேட்டது. அடுத்த வேளைக்கு கொஞ்சம் உப்பு போட்டு காய்கறிகளை வேக வைத்து சாப்பிட்டேன்.
மூன்றாம் நாள் பழம் மற்றும் காய்கறிகள் மட்டும் உண்ண வேண்டும். நான் கடையில் போய் கண்ணில் பட்ட காய் கனிகளையெல்லாம் அள்ளிய வேகத்தைப் பார்த்து கடைக்காரர் 'நான் வேணுமானால் கோடவுனிலிருந்து கூடையோடு அனுப்பவா அம்மா?' என்றார். அன்றைக்கும் உப்பு சப்பில்லாமல் உணவு கொடுத்ததால் என் நாக்கும் வயிறும் பெரும் போராட்டம் செய்யத் தொடங்கின.
நான்காம் நாள் '(கர்ணன் படப் பாடலைப் போல்) என்ன கொடுப்பாள், ஏது கொடுப்பாள்' என்றிவர்கள் (நாக்கும் வயிறும்) எண்ணும் முன்னே பழம் கொடுத்தேன், வாழைப் பழம் கொடுத்தேன் -- போதாது போதாது என்றதால் இன்னும் கொடுத்தேன் -- இவையும் குறைவென்றதால் பின்னொன்றும் கொடுத்தேன். (இன்றைக்கு menu - 8 வாழைப் பழங்களும் பாலும் ). தயா நிதியே என்று வாயும் வயிறும் வாழ்த்தவில்லை என்றாலும் மறு நாள் காலைகடன் கஷ்டமில்லாமல் கழிந்தது.
ஐந்தாம் நாள் என்ன என்று மெனுவை ஆவலுடன் பார்த்தேன். ஒரு கப் சாதமும், 6 தக்காளியுமாம். எப்படியோ நான்கு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் அரிசியைக் கண்டதும் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.
இந்த ஐந்து நாட்களுக்குள் வயிறு அனைத்தையும் தாங்கும் பக்குவத்துடன் ஒருமாதிரி தவ நிலைக்கே போய்விட்டது. அதனாலோ இல்லை சக்தியில்லாததாலோ ஆறாம் நாள் மெனுவைப் பார்த்ததும் (காய்கறிகள் மட்டுமே உண்ண வேண்டும்) வயிறும் நாக்கும் பெரிதாக போராட்டத்தில் இறங்கவில்லை.
ஆறாம் நாளன்று நானே முகம் வெளுத்து, கண்கள் பஞ்சடைந்து காற்றில் பறப்பது போல்தான் இருந்தேன். (டைரக்டர் பாலா பார்த்திருந்தால் அடுத்த படத்திற்கு புக் பண்ணியிருப்பார்!!!).
ஏழாம் நாள் ஒரு கப் சாதம் மற்றும் ஒரு டம்ளர் ஜூசும் மட்டும் குடித்து எப்படியோ அன்றைய பொழுதையும் கழித்தேன்.
அப்பாடா, விடுதலை, விடுதலை விடுதலை என்று சந்தோஷமாகக் குதித்தபடியே அடுத்த நாள் எழுந்தேன். இருந்த சக்தி அனைத்தயும் சேர்த்து, சூப்பராக வெங்காய சாம்பார், மைசூர் ரசம், சேப்பங்கிழங்கு கறியென்று நாக்கிற்குச் சுவையான விருந்து சமைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டேன். தொண்டனுக்கும் உண்டான உண்ட களைப்பில் சுகமாக தூங்கினேன்.
விழித்ததும் மகளும் கணவரும், என்ன எத்தனை கிலோ இளைத்தாய்? என்று கேட்டவுடன்தான் எடை பார்க்கும் நினைவே வந்தது. அதற்குள் நாக்கும் வயிறும் இன்னொரு ஏழு நாள் தண்டனைக்குத் தயாராக இல்லை என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தன. எண் ஜான் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்ற முதுமொழிக்கு மதிப்பளித்து என் நாக்கிற்கும் வயிற்றுக்கும் அடிபணிந்து 'இனிமேல் எடை பார்க்கும் கருவி பக்கமே போவதில்லை' என்று சபதம் செய்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
பழம் சாப்பிடலாமென்றால் முழுசாக பலாப்பழம் சாப்பிடலாம் என்றா பொருள்?
உண்மையிலேயே எடை குறைக்க வேண்டுமா?
காலை ஆறு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை, மணிக்கொரு முறை, பழம், காய்கறி, இட்லி, சாதம் என்று அளவோடு ஏதாவது சாப்பிடுங்கள். மதியம் இரண்டு மணிக்கு மேல் தண்ணீர் தவிர எந்த உணவும் ஏற்காமல் ஆறு மாதங்கள் இருந்து பாருங்கள். எடை குறையவில்லையென்றால் பெயரை மாற்றிக் கொள்கிறேன்.
இப்படிக்கு ராஜாமணி.
ஆறு மாதமா? ம், முயற்சி செய்து பார்க்கலாம் அதையும்.---கீது
:))
ஏதைக்கும் அந்த ஒரு வாரத்தில் என்னதான் குறைஞ்சீங்க்ன்னு பாத்து சொல்லி இருக்கலாம்
முத்துலக்ஷ்மி, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த diet menu-வைப் படித்துப் பார்த்தேன், அதைப் பற்றி (blog-ல்)எழுதிப் பார்த்தேன். அவ்வளவுதான். அதை try பண்ணினால், உடம்பு இளைத்தால் கட்டாயம் சொல்கிறேன். ----கீது
Lucky you! I have always been size 0 - that's supposed to be a "sign of poverty", as my colleague was kind enough to tell me one day.
Obesity, whatever be its demerits, has always been associated with a joyous spirit. It is the "Johnny Thin"s who are always accused of cat-drowning and other acts of crime.
sign of poverty?!!. thanks for telling me this. ---geedhu
Post a Comment