Thursday, 8 April 2010

படித்ததில் பிடித்தது-2

              சமீபத்தில் படித்த திரு. S.P.அண்ணாமலை அவர்கள் எழுதிய 'பிஸினஸ் வெற்றிக் கதைகள்' என்னை மிகவும் கவர்ந்தது.  விகடனில் தொடர்களாக வந்த கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரம் வெளியிட்ட நூல் இது.
இதயம் நல்லைண்ணெய், அணில் சேமியா, சக்தி மசாலா, லயன் டேட்ஸ், மெடிமிக்ஸ் சோப், professional courriers, Witco, சௌபாக்யா வெட் க்ரைண்டரென்று நமக்கு பரிச்சயமான பல பொருட்களைத் தயாரிக்கும் தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகள் என்பதால் படிப்பதில் அதிக ஈடுபாடு ஏற்படுகிறது. பேட்டியாக இன்றி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதையின் ஸ்வாரசியத்தோடும் விறுவிறுப்போடும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

           இந்த தொழிலதிபர்களில் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்கள். ( viking பனியன் தயாரிப்பாளர் 12 வயதிலேயே தொழிற்சாலையில் வேலை செய்தவராம்).  ஆனால் அனைவரும் சொல்வது, ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பருவத்திலேயே துளிர்விட்டது என்பதுதான்.  ஒவ்வொருவரும் பல தடைகளைத் தாண்டி வென்றிருக்கிறார்கள்.

             இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த சில விஷயங்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தொழில் முனைவோருக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பயன்தரும் வாழ்வியல் தத்துவங்களே இவை:

*** கூச்சம் தவிர்.
*** மனதில் சரியென்று பட்டதைத் தயங்காமல் செய்.
*** தவறை முதல் முறை மன்னிக்கலாம்.  திரும்பவும் மன்னிப்பது தொழிலுக்குச் செய்யும் துரோகம்.
*** ஒரு தொழிலில் இறங்கிவிட்டால் அதுவே ஆக்ஸிஜனாக மாறி உடலின் செல்களில் ஓடினால் வெற்றி தானாகவே நம்மைத் தேடிவரும்.

              ஒவ்வொருவரும் ஆரம்பக் காலங்களில் தங்கள் பொருட்களை விற்க பட்டக் கஷ்டங்களைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. சௌபாக்யா வெட்க்ரைண்டர் தயாரிப்பாளர் ஆரம்பக் காலத்தில் எந்த திருவிழா, exhibition நடந்தாலும் தவறாமல் க்ரைண்டருடன் demo கொடுக்கச் செல்வாராம். சக்தி மசாலாவை ஆரம்பக் காலங்களில் கடைக்காரர்கள் 'பெண்களுக்கு அவர்கள் குடும்ப முறைப்படி மசாலாக்களை சரிவிகிதத்தில் அரைத்து சமைத்தால்தான் திருப்தி.  அதனால் இந்த ரெடிமேட் பொடி விற்பனையாகாது' என்று வாங்க மறுத்தார்களாம் (அப்படி ஒரு காலம் இருந்ததா?!!!!). இலவச இணைப்புகளைப் பல வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தி வியாபாரத்தை வளர்த்தவர் இதயம் நல்லெண்ணெய் உரிமையாளர்.

              தொழிலதிபர்கள் பலரும் வெற்றிக்கு முக்கியமாகச் சொல்வது விளம்பர யுத்திகளைத்தான். ஒரு முறை முன்னணியில் இருக்கும் ஊட்டச்சத்து பான நிறுவனத்தின் உயரதிகாரியிடம், "உங்கள் பானம்தான் முதலிடத்தில் இருக்கிறதே.  இன்னும் ஏன் நீங்கள் புது புது விளம்பரங்களில் செலவழிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, 'முதலிடம் என்பது போன மாத விற்பனையை வைத்து சொல்வது.  இந்த மாதமும் இன்னும் வருகிற மாதங்களிலும் அதிகம் விற்றால்தான் முதலிடத்தைத் தக்க வைக்க முடியும்.  அதற்குதான் புது புது விளம்பரங்கள்" என்றாராம்.

               இப்படி பல நல்ல கருத்துக்களைக் கூறும் இந்த புத்தகத்தில் உலகமயமாக்கலால் நலிவுற்ற இந்தியத் தொழிலதிபரின் கருத்துக்கள் வருத்தம் தருவதாக இருக்கின்றது.  கோலிசோடா தயாரிபாளர்களின் வியாபாரத்தை அழிக்கும் நோக்குடன் குறைந்த விலைக்கு கோலா பானங்களை விற்றதோடல்லாமல் அவர்களுக்கு பாட்டில்களைக் கடனுக்குக் கொடுக்கும் தொழிற்சாலையையும் விலைக்கு வாங்கி அவர்களுக்கு பாட்டில்கள் கிடைக்காமல் செய்தார்களாம்.  இருந்தாலும் தானே பாட்டில்களைத் தயார் செய்து வியாபாரத்தைத் தொடர்ந்த 'மாப்பிள்ளை வினாயகர் சோடா' கம்பெனியைப் பெரும் விலைக் கொடுத்து வாங்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.  அதற்கெல்லாம் அயராமல் பரம்பரைத் தொழிலைச் செய்தே தீருவேன் என்ற மாப்பிள்ளை வினாயகர் சோடா கம்பெனி உரிமையாளரின் உறுதியை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

அடுத்தமுறை நூலகத்திற்கோ, புத்தகக் கடைக்கோ செல்லும்போது மறக்காமல் இந்த புத்தகப் பிரதியை வாங்கிப் படியுங்கள்.

9 comments:

சாய்ராம் கோபாலன் said...

//*** கூச்சம் தவிர்.
*** மனதில் சரியென்று பட்டதைத் தயங்காமல் செய்.
*** தவறை முதல் முறை மன்னிக்கலாம். திரும்பவும் மன்னிப்பது தொழிலுக்குச் செய்யும் துரோகம்.
*** ஒரு தொழிலில் இறங்கிவிட்டால் அதுவே ஆக்ஸிஜனாக மாறி உடலின் செல்களில் ஓடினால் வெற்றி தானாகவே நம்மைத் தேடிவரும்.//

கீது

முதல் காரணத்தால் பின் வாங்குவோர் தான் அதிகம். சொன்ன மூன்றாவது காரணத்தை சொல்லி இப்போதைய உடன் உழைப்போரை கேட்டால் - வேலையை உதறி செல்கின்றான் ?

அருமை அருமை. நிச்சயம் வாங்கி படிக்கவேண்டும். ஆங்கில பிரிதியும் இருக்கா ? ஆதித்தியாவை படிக்க சொல்லலாம்.

தைய்வான் நாட்டுக்கு பிறகு அதிக அளவில் தொழிலதிபர்களை கொண்ட நாடு என்று நம் நாட்டை சொல்வார்கள். நீ சொன்ன உதாரண பொருள்கள் இப்போதைய நிலைக்கு வர என்ன அயராத உழைப்பு வேண்டும்.

//'மாப்பிள்ளை வினாயகர் சோடா'//


நான் 1986-88 மெடிக்கல் ரேப் ஆக இருந்த காலங்களில் தமிழ்நாட்டு வெயிலுக்கு போகும் ஊரில் எல்லாம் விரும்பி குடித்த நாட்கள் நினைவு வருகின்றது. இது இல்லையேல் எலும்பிச்சை / ஐஸ் போட்ட சோடா.

ஸ்ரீராம். said...

உண்மை..
வெற்றிக்கு மூலதனம் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான். புதிய சிந்தனைகள்...ஷூ விற்கச் சென்ற இருவரில் ஒருவன் தனது மேலாளருக்கு "இங்கு யாரும் ஷூவே போடுவதில்லை...வந்தது வீண்...ஊர் திரும்புகிறேன்..." என்றும் அடுத்தவர், " ஷூ விற்க ஆயிரம் வாய்ப்பு..இங்கு யாருமே ஷூ போடுவதில்லை...உடனடியாக ஐயாயிரம் ஷூ அனுப்பவும்.." என்றும் கடிதம் போட்டார்களாம்..

geetha santhanam said...

நன்றி சாய்ராம் & ஸ்ரீராம். இந்த புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு இருக்கா என்று தெரியாது. ஆனால் ஆதித்யா வயதினர் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்தான்.---கீதா

meenakshi said...

நல்ல பதிவு. இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். கூச்சத்தை தவிர்த்து, மனதில் சரி என்று பட்டதை தயங்காமல், கூடிய மட்டும் தவறுகள் ஏற்படுவதை தவிர்த்து, கடுமையாக, நிச்சயம் உழைக்க முடியும். ஆனால் வெற்றி பெற நிச்சயமாக அதிர்ஷ்டம் பக்க பலமாக இருக்க வேண்டும். தைரியமாக முயன்று பார்க்கலாம், சராசரி வாழ்கை வாழ ஒரு வழி செய்து கொண்டால், இல்லையேல் எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் இருந்தால்.

geetha santhanam said...

நன்றி மீனாக்ஷி. சராசரி வாழ்க்கைக்கு வழி செய்து கொண்டு நமக்கு ஆர்வம் இருந்தால் தயங்காமல் செய்து பார்க்க வேண்டும். காலப் போக்கில் நிச்சயம் வெற்றி கிட்டும். risk எடுத்தால் வெற்றி கிட்டும் என்று இது போன்ற புத்தகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன.-geetha

shanthi said...

A very interesting and inspiring post. Thanx for recommending this book.

புஸ்தகத்தை உங்க கிட்டயிருந்தே சுட்டுடலாம்னு பாக்கறேன் ..

Your posts on jordan were also very informative. am sure u had taken a lot of efforts to put together such a detailed travelogue...

geetha santhanam said...

thanks shanthi. --geedhu

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

geetha santhanam said...

நன்றி ராமலஷ்மி.--கீதா