ஊருக்குப் போவதாக ஸ்ரீதர் சொன்னதைக் கேட்டதும் அரைப்ளேடுக்கு நம்பிக்கை மீண்டும் துளிர்விட்டது. அருணாசலத்தின் தோள்களைச் சந்தோஷத்தோடுத் தட்டிக் கொடுத்தான். இருவரும் ஸ்ரீதர் செல்லும்வரைஅங்கேயே மறைந்திருந்திருக்க முடிவு செய்தனர்.
ஸ்ரீதர் கிளம்புவதற்குள் அடுத்த வீட்டு அம்புஜம் மாமியிடமிருந்து ஃபோன் வந்தது. '' நேத்து திருடன் வந்து ஆன கூத்தில் நான் தூங்கவே இல்லை. காலையிலேயே வடகம் இட மாவு கிளறிட்டேன். நானும் பங்கஜமும் உங்காத்து மாடியில் வடகம் இட்டுக்கலாமா?" என்றார். ஸ்ரீதரும் சம்மதிக்கவே பங்கஜமும் அம்புஜமும் பத்து நிமிடங்களில் வடகம் இட ஸ்ரீதர் வீட்டு மாடியில் ஆஜராகினர். ஸ்ரீதர் வீட்டைப் பூட்டி சாவியை அம்புஜம் மாமியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். மாமிகள் இருவரும் சீரியல், சினிமா, சாமியார் கதைகளைப் பேசியபடியே வடகம் இட்டனர். மறைவிடத்தில் இருந்த அரைப்ளேடுக்கும் ஆறுமுகத்துக்கும் காலைக்கடன் கூட கழிக்க முடியாத நிலமை.
மாமிகள் வேலை முடித்ததும் தன் மகள்களை வரச் சொல்லி கைப்பேசியில் அழைத்தனர். மகள்கள் வந்ததும் "ஒன்பது மணிக்குதானே உனக்கு பாட்டு க்ளாஸ்? 8.30 மணிவரை இங்கே இருங்கோ. அப்புறம் இந்த குடைகளை வைத்துவிட்டு ஆத்துக்கு வாங்கோ " என்று சொல்லி இருவரும் கீழே சென்றனர். என்னடாயிது சோதனை என்று அரை ப்ளேடும் ஆறுமுகமும் தலையைப் பிய்த்துக் கொண்டனர். லேசாக எட்டிப் பார்க்கலாமென்று அரைப்ளேடு எண்ணும்போதே அவர்களின் நிழலைக் கண்டு ஒரு பெண் "அங்க பாருடி,யாரோ மறைஞ்சிருக்கா மாதிரி இருக்கே" என்று சொன்னாள். இரண்டாமவள் எதையும் பார்க்காமலேயே "திருடந்தாண்டி, வா அப்பாகிட்ட சொல்லலாம்" என்று முதலாமவளையும் இழுத்துக் கொண்டு ஓடினாள். கிடைத்த சான்ஸைப் பயன்படுத்தி மாடியிலிருந்து pipe- ஐப் பிடித்து சறுக்கியபடியே கீழே வந்த அரைப்ளேடும் ஆறுமுகமும், நொடியில் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். திருடன் இருக்கானா என்று தேடிக்கொண்டு மற்றவர்கள் மாடிக்கு வருவதற்குள் அரைப்ளடும் ஆறுமுகமும் அடுத்த தெரு வழியே அதிக தூரம் சென்றுவிட்டனர். ஒருவரையும் காணாததால் தன் மகள்கள் ஏதோ நிழலைக் கண்டு பயந்திருக்க வேண்டும் என்று சமாதானம் செய்தபடி திருடனைப் பிடிக்க வந்தவர்களும் வீட்டிற்குச் சென்றனர்.
தப்பியோடிய அரைப்ளேடும் ஆறுமுகமும் பக்கத்திலுள்ள பூங்காவில் நுழைந்தனர். 'இது எதுவும் வேலைக்கு ஆகாது.வேற இடம் பார்க்கலாம்' என்று அரைப்ளேடு அலுத்துக் கொண்டான். " டென்சனாகத மாப்ளே. இதுதான் சரியான நேரம். ஐயர் வீட்டைப் பாத்தியா? பக்கத்துலபெரிய க்ரௌண்டு. எதிர்ல போஸ்டாபீஸு. அதுவும் இன்னைக்கு லீவு. பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் எல்லாரும் வெயிலுக்கு பயந்து வீட்டுல அடங்கிடுவாங்க. நாம வேலையை சுளுவா முடிக்கலாம்" என்றான் ஆறுமுகம்.
ஆறுமுகம்: "நாம க்ரௌண்டு வழியா போயி சுவரேறி குதித்து உள்ள போவோம். மாடிப்படிக்கு கீழதான் பாத்ரூம் சன்னல் கீது. பாத்ரூம் சன்னல் க்ளாசை கழற்றிவிட்டால் நாம மெதுவாக உள்ளே போயிடலாம். ஐயரு போகசொல எல்லா சன்னல் கதவு, ஸ்க்ரீனெல்லாம் மூடினதால நாம உள்ள இருப்பது யாருக்கும் தெரியாது. சத்தம் போடாம காரியத்தை முடித்துவிட்டு சன்னல் வழியாகவே வெளியே வரலாம்"
அரைப்ளேடு: "க்ளாசை பிரிக்கும்போது யாரவது வந்துவிட்டால்?"
ஆறுமுகம்: " கரீட்டு. என் சின்னப் பையன் சுகுரான பார்டி. பக்கத்து க்ரௌண்டில் விளையாடுவது போல் நின்று அவன் யாராவது வந்தால் நமக்கு சிக்னல் கொடுப்பான்"
அரைப்ளேடு: "என்னப்பா இது. சின்ன புள்ளிய இப்டி கெடுக்கற. நான் இப்படி செய்தால் எம் பொஞ்ஜாதி சாமியாடிடும்"
ஆறுமுகம்: " உன் பிக்பாக்கெட் பொய்ப்பு இனிமேல அவுட்டு. நம்ம பொய்ப்பு அப்டியா? இப்பதான் எல்லா பசங்களும் படிச்சவுடனே கை நிறைய சம்பாதிக்கறாங்க. விதவிதமா வாட்ச், நகையெல்லாம் வாங்குறாங்கோ. பெருசுங்கமாதிரி பூட்டி வைக்காம, அசால்ட்டா போட்டு வைக்கறாங்கோ. பார், பார்ட்டின்னு சுத்தி லேட்டா வீட்டுக்கு வாராங்கோ. நம்மதிருட்டு தொழிலுக்கு இனிதான் நல்ல எதிர்காலம். என் பையனுக்கு தொழில்ல விருப்பம் இருக்கு. இதுலென்னதப்பு. பெரியவங்கல்லாம்சொல்லலை 'குலத்தொயிலை செய்'யின்னு?"
அரைப்ளேடு: "என்னமோ செய்யு. இப்ப எத்தினி மணிக்குப் போவனும்?"
ஆறுமுகம்: " நாஷ்தா துன்னுட்டு, ரெஸ்ட் எடுத்து, 12 மணிக்கு க்ரௌண்டுக்கு வா. நானும் பையனும் அங்க இருப்போம்".
ப்ளானை இருமுறை சரிபார்த்த பின்னர் இருவரும் பிரிந்து சென்றனர்.
பகல் பனிரெண்டு மணிக்கு ஆறுமுகம் சொன்னதுபோல் தெருவே அமைதியாக இருந்தது. ஆறுமுகத்தின் மகனும் அரைப்ளேடின் மகனும் க்ரௌண்டில் க்ரிகெட் விளையாடிக்கொண்டிருந்தனர். ஆறுமுகமும் அரைப்ளேடும் மெதுவாக சுவரேறி குதித்தனர். மெதுவாக பாத்ரூம் சன்னலில் சாய்வாக சொருகப்பட்ட க்ளாசை ஒன்றன் பின் ஒன்றாக கழற்றினர். ஆறுமுகத்தின் மகன் யாரேனும் ரோட்டுப் பக்கம் வந்தால் சிக்னல் கொடுத்தான். அப்போது இருவரும் ஒளிந்துகொண்டனர். இப்படியாக க்ளாசைக் கழற்றி வழி செய்தபின் மகன்களைப் போகச் சொல்லிவிட்டு இருவரும் பாத்ரூமிற்குள் குதித்தனர். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வீட்டிற்குள் செல்ல எத்தனிக்கையில் வாசக்கதவு திறக்கும் ஒலி கேட்டது. உடனே இருவரும் பாத்ரூமுற்குள் சென்று பதுங்கினர்.
உள்ளே வந்தது பங்கஜம் மற்றும் அம்புஜம் மாமியின் புதல்வர்கள். "சே, லீவுல கூட நிம்மதியா டிவி பாக்க முடியலை. தூங்கனும்னு, வால்யூமைக் குறைக்க சொல்றாங்க. நல்ல வேளை ஸ்ரீதர் அங்கிள் வீடு இருக்கு. நிம்மதியா டிவி பார்க்கலாம்"என்றபடி பாட்ஷா படத்தைப் பார்க்கத் தொடங்கினர்.
அரைப்ளேடு மாட்டிகொள்வோமே என்று பதறினான். ஆறுமுகமோ கதவருகில் குத்திட்டு அமர்ந்து பாட்ஷா பட வசனங்களை ரசிக்கத் தொடங்கினான். இந்த இடத்தில் ஆறுமுகத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவன் எதையும் கூலாக எடுத்துக் கொள்வான். ஜெயிலில் கூட விசிலடித்துக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் அவன் வேலை செய்வதைப் பார்த்து சில போலிஸ்காரர்களுக்கேப் பொறாமையாக இருக்கும்.
ஒருமணி நேரத்திற்குப் பிறகு மாமியின் புதல்வர்கள் டிவியை அணைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றதும் இருவரும் காரியத்தில் இறங்கினர். பெட்ரூமிற்குள் சென்ற அவர்கள் மெதுவாக பீரோவைத் திறக்க முற்பட்டனர். ஒன்று,இரண்டு, மூன்றாவது முயற்சியில் பீரோ தோற்று கதவைத்திறந்தது. பட்டுப் புடவைகள், நல்ல பேண்ட் சட்டைகள், வெள்ளிப் பாத்திரம் மற்றும் இரண்டு தங்கச் செயின், மோதிரங்கள் என பீரோவைச் சூறையாடினர். அப்போது வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு, பீரோவை மூடி, கட்டிலின் கீழே ஒளிந்து கொண்டனர். டிவி பார்க்க வந்தபோது தன் செல்ஃபோனை மறந்து விட்டுச் சென்ற மாமியின் மகன்கள் வந்து 'கருமமே கண்ணாக' ஃபோனை மட்டும் எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டு சென்றனர். ஃபோனில் பேசிகொண்டே சென்றவன் பேண்ட் பாக்கெட்டில் வைப்பதாக எண்ணி ஸ்ரீதர் வீட்டுச் சாவியை ரோட்டிலேயே தவறவிட்டு போனான். 'உள்ளே போன அப்பா ரொம்ப நேரமாக வரவில்லையே' என்று அந்தத் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் மகன் அந்த சாவியை எடுத்தான். யாரும் பார்க்கவில்லையென்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு ஸ்ரீதர் வீட்டுக் கதவைத் திறந்து சன்னமான குரலில் "அப்பா" என்று அழைத்தான். மகனின் குரல் கேட்டு ஆறுமுகம் அதிர்சியுடன் பெட்ரூமிலிருந்து வெளியே வந்தான். விவரங்களைக் கேட்டு சாவியை வாங்கிக்கொண்டு, மகனின் ஆர்வக் கோளாறைக் கண்டித்து அவனை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான். இதற்குள் ஹாலில் இருந்த வாட்ச், ipod முதலியவற்றை எடுத்து வைத்த அரைப்ளேடு VCR/VCD Player-யும் எடுக்க முற்பட்டான். "அத்த எடுக்காத மாப்ளே. ஐயரு வரும்வரை திருடன் வந்தது யாருக்கும் தெரியக் கூடாது. மத்தவங்களால ஈஸியா கண்டுபிடிக்க முடியாத சின்ன ஐட்டத்தை மட்டும் எடுத்துக்க, சீக்கிரம்" என்று ஆறுமுகம் அட்வைஸ் செய்தான். இருவரும் ஐந்து நிமிடங்களில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரயினர்.
வாசல் வழியாகப் போக எத்தனித்த அரைப்ளேடைத் தடுத்து, " சாவியை எடுத்துக்கோ. வந்தமாதிரியே பாத்ரூம் வழியாகவே போலாம். வெளிலே போனபின் சாவியை ரோட்டில் வீசிவிட்டு ஓடிவிடுவோம்" என்றான் ஆறுமுகம். இருவரும் வெளியே செல்வதற்காக பாத்ரூமிற்குள் சென்றனர்.
இதற்கிடையில் சாவியைத் தொலைத்ததை அறிந்த அம்புஜம் மாமியின் பையன் பதற்றத்தோடு ஸ்ரீதர் வீட்டிற்கு வந்தான். கதவு பூட்டப்படாமல் இருப்பது கண்டு அதிர்ந்து ஓசைப்படாமல் உள்ளே நுழைந்தான். பாத்ரூமுற்குள் பேச்சுக் குரல் கேட்டு வேகமாக வீட்டிற்கு வந்து அப்பா, மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்தான். அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வெளியே பாத்ரூம் சன்னலுக்கு இருபுறமும் மறைந்து நின்று கொண்டனர். வாசல் கதவருகே ஒருவர் நின்று கொண்டார்.
வெளியில் ஓசைப்படாமல் நடந்த இந்த முன்னேற்பாடு எதுவும் அறியாத அரைப்ளடும் ஆறுமுகமும் மெதுவாக திருடிய பொருட்களை சிறு மூட்டையாக்கி ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சன்னல் வழியே ஒருவர் பின் ஒருவராகக் குதித்தனர். குதித்தபின் இருபுறத்திலிருந்தும் வந்த கும்பலைப் பார்த்து செய்வதறியாது திகைத்தனர். தர்ம அடி அடித்து இருவரையும் கயிற்றால் கட்டி, போலீஸ் ஸ்டேஷனுக்குப் ஃபோன் செய்தனர் ஸ்ரீதரின் நண்பர்கள். " கவலப் படாத மச்சி. புழல் செயிலு எப்படி இருக்குன்னு பாக்கலாம். ஏதோ முட்டையோடு சோறு தருவதாக சொல்றாங்க" என்று சொன்ன ஆறுமுகத்தை வியப்போடு பார்த்தான் அரைப்ளேடு.
(இந்தக் கதையை எழுதத் தூண்டிய மீனாக்ஷிக்கு நன்றி)
4 comments:
நல்ல கற்பனை வளம்! நம் அன்றாட வாழ்க்கைல நடக்கறத வெச்சே அழகா எழுதி இருக்கே. ஆறுமுகம் கதா பாத்திரம் தன் தொழிலை பத்தி பெருமையா சொல்றதை படிச்சுட்டு பயங்கரமா சிரிச்சேன். கதை ரொம்ப நல்லா இருக்கு.
நீதி ஜெயித்ததா..இன்னும் அடுத்தடுத்த வெர்ஷனும் எதிர்பார்க்கலாமா?
நன்றி ஸ்ரீராம், மீனாக்ஷி மற்றும் ஜெரி ஈசானந்தன்.---கீதா
>>மத்தவங்களால ஈஸியா கண்டுபிடிக்க முடியாத சின்ன ஐட்டத்தை மட்டும் எடுத்துக்க, சீக்கிரம்
nice.செய்வனத் திருந்தச் செய்ன்றது இது தான்.. தொழில் ரகசியம்.
Post a Comment