Thursday, 9 September 2010

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற..             
             சிறுவயதில் பள்ளிக்கூடம் தொடங்கிக் கல்லூரி வரை எனக்குத் தோழிகளைவிட பல ஆசிரியைகள் நெருக்கமானவர்கள்.  எனக்கு மிக அதிகமாக ஊக்கமளித்து என்னுள் எங்கோ புதைந்திருந்த திறமைகளை வலுக்கட்டாயமாக வெளிக்கொணர்ந்த பெருமை இந்த ஆசிரியர்களையே சாரும்.

             நான் படித்தது பல்லாவரம் தெரேஸா மகளிர் பள்ளி.  அந்த பள்ளியில் பெரும்பாலான ஆசிரியைகள் மாணவிகளைத் தன் மக்களுக்கும் அதிகமாக நேசித்ததாக உணர்வேன்.  பாடத்தை மட்டும் எடுத்துவிட்டு ஓட்டம் பிடிக்காமல் எப்போது அணுகினாலும் மாணவிகளின் தரம்,தேவை அறிந்து அதற்கேற்ப விளக்கங்கள் அளிப்பார்கள். அந்தப் பள்ளியில் நான் படித்த காலம் மறக்கமுடியாது.  இப்போதும் பல நாட்கள் என் கனவில் வருமளவு என் நினைவில் நின்ற காலம் அது.   ஐ.ஐ.டியில் படிக்கும்போது ஒருமுறை என் தோழியர்களிடம் ஒரு போட்டி.  யார் LKG தொடங்கி எல்லா ஆசிரியர்கள் பெயரையும் சரியாகச் சொல்கிறார்கள் என்பதே.  நான் எல்லாரையும் வரிசைப்பட சொன்னது அவர்களுக்கு ஆச்சர்யம்.  அவர்களால் அப்படி சொல்ல முடியாதது எனக்கு ஆச்சர்யம்.

             எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த எல்லாரையுமே பிடிக்கும் என்றாலும் அற்புதமேரி டீச்சர், ஜோஸ்பின் டீச்சர், அற்புதம் ஸிஸ்டர், தமிழ் இலக்கியங்களைச் சுவையாக நடத்திய நளினி ஆசிரியை மற்றும் சீதாலஷ்மி ஆசிரியை, +2வில் கணக்குக் கற்றுக் கொடுத்த ஹில்டா டீச்சர் (தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு +1-ல்தான் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்ந்த எங்களை இரண்டாம் பட்சமாக நடத்திய டீச்சர்களுக்கு இடையில் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி வகுப்பிலேயே நான் இரண்டாவது ரேங்க் எடுக்க காரணமானவர். இவரை இன்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!!), தேவிகாராணி டீச்சர் (+2 பரிட்சைக்கு முதல் நாள் நான் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு , அது பரிட்சையில் வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்திருந்தும், பரிட்சை அன்று அந்த பதிலை விளக்க ஓட்டமாக ஓடி வந்தவர்.  hats off!!!) இவர்களை என்றுமே மறக்கமுடியாது.

            தெரேஸா பள்ளியிலும் ஒரு டீச்சர் பெல் அடித்து மாணவிகள் ப்ரேயர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வீட்டுக்குப் போய்விடுவார்.  பெரும்பாலும் சரித்திரம், பூகேளம்தான் அவர் நடத்துவார்.  புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு மாணவிகளைப் படிக்கச் சொல்லிவிட்டு தான் தூங்கிவிடுவார். திடீரென்று விழித்துக் கொண்டு காதில் விழுந்த கடைசி வார்த்தையை ரிபீட் செய்வார்.  காமெடியாக இருக்கும். (ஒரு முறை நான் 'கிரானைட் பாறைகள்' என்று படித்துக் கொண்டிருக்க திடீரென்று கண்விழித்த அவர் 'என்ன நைட் பாறைகள்?' என்று கேள்வி கேட்க நாங்கள் 'கிரா நைட் பாறைகள்' என்று பின்பாட்டு பாடியதைப் பலமுறை சொல்லி சிரித்திருக்கிறேன்.)  Partiallity என்பதின் உச்சத்தை உணர்த்தியவர் இவரே.  ஒருமுறை என் தோழி பத்மபிரியா என்னைவிட அதிகம் மார்க் வாங்கினாரென்று அவரின் பேப்பரை வாங்கி மடமடவென்று நான்கு கேள்விகளுக்கு மார்க்கைக் குறைத்தார்.  நான் ஆடிப் போய்விட்டேன்.  தோழியிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டேன்!!!.

             பள்ளிப் படிப்பு முடிந்ததும் மீனாக்ஷி கல்லூரியில் வேதியல் படித்தேன்.  என் பள்ளி ஆசிரியைகளுக்கு ஈடாக இங்கும் பல devoted lecturers இருந்தார்கள். அவர்களில் முதன்மையானவராக (எனக்கு எடுத்த எல்லா டீச்சர்களிலும் முதல் ரேங்க் இவருக்குத்தான்) நான் நினைப்பது விஜயலக்ஷ்மி மேடம்தான்.  அவர் எங்களுக்கு  organic chemistry கற்றுக் கொடுத்தார்.  அவருடைய கேள்வித்தாள்களில் ஓரிரு கேள்விகள் தவிர எதுவுமே நேரிடையாக இருக்காது.  concept நன்கு புரிந்தால்தான் அவரின் கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.  முதல் டெஸ்டில் அனைத்து மாணவிகளும் 60-க்கும் கீழேதான் வாங்கினோம்.  "என் கேள்வித்தாள் இப்படித்தான் இருக்கும்.  நிறைய புத்தகங்களை லைப்ரரியிலிருந்து படியுங்கள். workout as many problems you can." என்று அட்வைஸ் செய்துவிட்டு போய்விட்டார். ஆனால் அந்த ஆண்டு இறுதியில் நாங்கள் அனைவரும் 85-95% வாங்குமளவு எங்களுக்குப் பாடம் நடத்தியதோடு organic chemistry யின் மேல் ஒரு காதலை வளர்த்தவர். ஒரு ஆசிரியர் எப்படி பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் நிச்சயமாக இவர் மட்டும்தான்.  அதே கல்லூரியில் இயற்பியல் எடுத்த சகுந்தலா மேடம், கணிதம் எடுத்த ஆலிஸ் (வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று நினைப்பாரோ என்னவோ அத்தனை மென்மையாகப் பேசுவார்) அவர்களையும் பல நேரங்களில் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.

               பின்னர் படித்தது பாண்டிசேரியில். அங்குள்ள ஆசிரியர்களும் தெரேஸா பள்ளிக்கு இணையாக தங்கள் பணியை ஒரு ஈடுபாட்டுடன் செய்தவர்கள்.  அவர்களில் முதன்மையானவர் Dr. சீதாராமன் அவர்கள்.  கண்டிப்பு மிக்கவர். மாணவர்களிடம் அக்கறை மிக்கவர்.  மிக முக்கியமாக தான் சிறிய தவறு செய்தாலும் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்குமளவு உயர்ந்த குணம் கொண்டவர். Dr.சிவராமன் அவர்களும் அந்தக் கல்லூரியில் தலைச் சிறந்த ஆசிரியர்.  அவரின் lectur-ஐக் கவனமாகக் கேட்டால் போதும், புத்தகங்களைப் படிக்காமலே நல்ல மார்க் வாங்கிவிடலாம்.  அவரை ஒரு அறிவுஜீவி என்று சொல்லலாம். கணக்கில் புலி.  சரியான வாய்ப்பு கிடைக்காததால் பெரிய அளவில் வரவில்லை. மேலும் Dr.ஸ்ரீனிவாசன், Dr.குணசேகரன், Dr.ஃபரூக் அவர்களும் மாணவர்களிடம் மிகுந்த அக்கறை காட்டுபவர்கள்.

               பின்னர் ஐ.ஐ.டியில் Dr. சங்கரராமன், Dr.கே.கே.பி, Dr. நாராயணன் மற்றும் பலர் எனக்கு முன்னேறும் வழிகாட்டியுள்ளனர்.  அவர்களுக்கும் நன்றி.

              நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றார் ஔவையார்.  அதுபோல் ஒரு பள்ளியில் நல்லாசிரியர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பல்லாயிரம் மாணவர்களும் உயர்வர்.

             இந்தப் பதிவை என் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியாக அர்ப்பணிக்கிறேன்.

7 comments:

LK said...

nice dedication to teachers

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாராட்டுக்கள் கீதா ..

geetha santhanam said...

LK, Muthuletchumi, thanks.--geetha

அப்பாதுரை said...

welcome back..!
தினம் தெரசாவிலிருந்து திரும்பியதும் வீட்டில் கும்பிடும் இந்து சாமிகளைக் கிண்டல் செய்து 'யேசு தான் நம் காப்பாளன்' என்று நீ சொன்னதெல்லாம் நான் மறக்கவில்லை.

சாய் said...

Gee2 - Welcome back..!

You really have great memory to remember all. I do not even remember my college lecturers and professors. Ofcourse I remember some of my 10th, 12th teachers.

I remember Teresa School. I remember going with Lakshmi to collect her mark sheet post her 12th exam.

meenakshi said...

வாருங்கள் கீதா, நலம்தானே!

ஆசிரியர்கள் தினத்தையொட்டிய உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் மீதுள்ள உங்கள் அபிமானம் நெகிழ வைக்கிறது. பதிவும், அதை நீங்கள் எழுதி இருக்கும் விதமும் மிகவும் நிறைவை தருகிறது. வாழ்த்துக்கள்.

geetha santhanam said...

நன்றி துரை, மீனாக்ஷி & சாய்ராம்.
துரை, இயேசுதான் பெரியவர் என்று நான் சொன்னேனா என்று நினைவில் இல்லை. ஆனால் ஸ்கூல் சர்சிற்கு தினமும் போவேன். துர்கை அம்மன் கோவிலுக்கும் தினமும் போவேன். என்னைப் பொறுத்தவரை நம்பிக்கைதான் கடவுள். மதம் என்பது அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான். எனக்கு எல்லா மதமும் சம்மதம்தான்.---கீதா