Sunday, 12 September 2010

உலகம் சுற்றும் வாலிபன்




          
                சமீபத்தில் SOTC டூர் கம்பெனியின் ஏற்பாட்டில் யூரோப்பில் சில நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. (ஆமாம், ஆமாம், பயணக் குறிப்புகள் பற்றிய பதிவு கட்டாயம் உண்டு!!).  எங்கள் டூர் மானேஜர் Mr. Rattan Daruwalla.  எங்களுடன் பல நாட்டிலிருந்தும் இந்தியர்கள் வந்திருந்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு.  அவர்களனைவரையும் ஒருமுகப்படுத்தி ஓரளவுக்குத் திருப்தி படுத்துவது உண்மையிலேயே கடினமான வேலை.  அந்த வேலையை மிகவும் லாவகமாக செய்தார் ரட்டன். எல்லா நகரங்களைப் பற்றியும் தகவல் சொல்வது அவரின் வேலைதான் என்றாலும் சில நுணுக்கமான தகவல்களைச் சொல்லும்போது வேலையில் அவரின் ஈடுபாட்டை எண்ணி வியந்தோம்.  தினமும் ஒரு பஜனைப் பாடலுடந்தான் பயணத்தைத் துவக்குவார். பின்னர் ஒரு ஜோக்கும் சொல்வார். நன்றாகப் பாடுவார். அவருடைய திறமையாலும், தினமும் ஒரு நாடெனச் சுற்றும் அவரின் வேலையாலும் கவரப்பட்டு அவரை ஒரு பேட்டி எடுத்தேன். (ஹி, ஹி, சுற்றுலாவிலும் ப்ளாகிற்கு மேட்டர் தேத்தும் கவலைதான்!!!).


                                                                 Mr.  Rattan Daruwalla


அவருடைய பேட்டி:

கே:  நீங்கள் இந்த வேலையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
 ப:   முதலில் ஒரு பிரபலக் கம்பெனியில் கிளர்க்காகத்தான் இருந்தேன்.  ஒரு நாளைப்போல் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான (monotonous) அந்த வேலை எனக்குக் கசந்தது. அப்போதுதான் இந்த வேலை வாய்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.  நான் இயல்பிலேயே கொஞ்சம் சுறுசுறுப்பாக, துறுதுறுவென்று இருப்பவன். இந்த வேலை எனக்கு ஏற்றதாக இருக்கும் என்று தோன்றியதால் இதில் சேர்ந்தேன்.  இன்றுவரை மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

கே: இந்த வேலையில் தங்களைக் கவர்ந்த விஷயங்கள் என்ன?
ப:  ம்ம்ம்... தினமும் புதிய மனிதர்களைச் சந்திப்பது; அவர்களின் எதிர்ப்பார்புகளைப் பூர்த்தி செய்யவேண்டிய சவால்; அதன் மூலம் கிடைக்கும் புதிய நட்பு; பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு; அதன் மூலம் அவர்களின் கலாச்சாரம், உடைகள், உணவு எனப் பல விஷயங்களை நேரிடையாகஅறியும் வாய்ப்பு.

கே: இந்த வேலையின் கஷ்டங்களாக நீங்கள் கருதுவது?
ப: வருடத்தில் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது; கட்டாயமாக நல்ல family support இருந்தாலொழிய இந்த வேலையைச் செய்வது கடினம். அதிகமாகப் (பெரும்பாலும் சுற்றுலா பேருந்திலேயே இருக்க நேரிடுவதால்) பயணம் செய்ய வேண்டியிருப்பதால் உண்டாகும் உடல் அயர்ச்சி; தினமும் ஒவ்வொரு நாட்டில்  வெவ்வேறு விடுதிகளில் தங்குவதால் தூக்கமின்மை மற்றும் உணவுப் பிரச்சினைகள்.
இவை தவிர இந்த வேலையில் job security கிடையாது.  பிடிக்கவில்லையென்றால் அன்றே பணி நீக்கம்தான். மற்ற வேலைகளில் இருப்பது போல் gratuity எல்லாம் கிடைக்காது.  அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டியதுதான் (உடலில் வலு இருக்கும்போதே முடிந்த அளவு சுற்றி சேர்க்கவேண்டியதுதான்).

கே: இந்த வேலையில் சேர விழைபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?
ப: கல்வித் தகுதியாக bachelors degree இருந்தால் போதுமானது.  சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியவேண்டும்.(SOTC யில்) பெரும்பாலும் இந்தியர்களே சுற்றுலா பயணிகளாக வருவதால் இந்தியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.  ஜெர்மன், ஃப்ரென்ச் போன்ற மற்ற மொழிகளில் கற்கும் ஆர்வமும் கொஞ்சம் தெரிந்தும் இருந்தால் நலம். எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுபவர்களாக இருக்க வேண்டும்.
பல நாடுகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு (update செய்துகொண்டே இருக்க வேண்டும்) அதைத் தேவையான நேரத்தில் சுவைபட சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.  நிறைந்த பொறுமை வேண்டும்.  பலதரப்பட்ட மனிதர்கள் ஒன்றாக 10-15 நாட்கள் பயணிப்பதால் பலமுறை சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். அதை சாமர்த்தியமாகத் தீர்க்கும் திறமை வேண்டும். எப்போது விட்டுக் கொடுக்கலாம், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் (assertive) என்ற வரையரையைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் சிறந்த management skill இருக்க வேண்டும்.

கே: இந்த வேலைக்காகச் சிறப்பாக ஏதாவது படிக்க வேண்டுமா?
ப: அப்படித் தேவையில்லை.  ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.  எங்கள் கம்பெனி நிறுவனர் நடத்தும் Couny academy யில் 3 மாத tourism course படிக்கலாம்.  இரண்டு மாதங்கள் கல்லூரியிலும் ஒரு மாதம் Zurich-ல் நேரடி பயிற்சியும் முடித்தால் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.

கே: இந்த வேலையில் நீங்கள் சந்தித்த சவால்கள்?
ப: customer களை நிறைவு செய்வது என்பது தினசரி சவால்தான்!!. சில பயணக் குழுவில் VIP சிலர் வருவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரும் மற்ற பயணிகள் போல்தான்.  அவர்களுக்கென்று எந்த சலுகையும் தர இயலாது.  அதை அவர்களுக்குப் புரிய வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்வது ஒரு சவால்.
ஒரு முறை என் பயணக் குழுவில் ஒருவர் எதிர்பாராவிதமாக உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.  அந்த சூழ்நிலையைச் சமாளித்தது என்னால் மறக்க முடியாதது.

கே: டூர் மானேஜராக உங்களைத் தனித்துக் காட்டும் அம்சமாக நீங்கள் நினைப்பது என்ன?
ப: என் பயணக் குழுவிடம் கட்டாயமாக punctuality-யை ஏற்படுத்துவேன்.  அப்பொழுதுதான் ஒரு நாளின் பயணத் திட்டத்தைச் சரியாக நிறைவு செய்ய முடியும்.  நான் நன்றாகப் பாடுவதாக என் customers பலர் பாராட்டியிருக்கிறார்கள்.  நீண்ட பயணங்களில் அவர்களோடு பாடி அவர்களை மகிழ்விப்பேன்.  தங்குமிடம், உணவு போன்ற ஏற்பாடுகளில் சிறு குறையும் இல்லாமல் முன்னேற்பாடுகளைத் திறம்படச் செய்வேன்.  போகும் நகரங்களைப் பற்றிய குறிப்புகளை internet-ல் படித்தும் அங்குள்ளவர்களிடம் பழகியும் update செய்துகொள்வேன்.

 நிறைய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக ரட்டனிடம் நன்றி சொல்லி விடை பெற்றேன்.  உலகம் சுற்ற ஆசை கொண்ட பல இளைய தலைமுறையினருக்கு இந்த பேட்டி பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதைப் போன்ற வித்தியாசமான, சுவாரசியமான வேலைகளுக்கும் முயற்சிக்கலாமே!!!.

5 comments:

அப்பாதுரை said...

பேட்டி எடுத்திங்க சரி, ஒரு போட்டோ எடுத்திங்களா?

geetha santhanam said...

ஃபோட்டோ போட்டாச்சு.---கீதா

meenakshi said...

வித்யாசமான, அருமையான பதிவு. உலகில் நிறைய இடங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ற வேலை இது. புது, புது முகங்களும், புதிது புதிதாய் அனுபவங்களும், சுவாரசியமாக இருக்கும். விரைவில் நீங்கள் பார்த்த இடங்களை பற்றி குறிப்புகளுடன் கூடிய உங்கள் வர்ணனையை எதிர்பார்க்கலாமா!

மோகன்ஜி said...

சுவாரஸ்யமான பதிவுங்க. விறுவிறுப்ப எழுதியிருக்கீங்க.சபாஷ்!

geetha santhanam said...

thanks, Meenakshi and Mohanji.--geetha