Tuesday, 28 September 2010

ஹலோ யூரோப் - ப்ரஸ்ஸல்ஸ், அம்ஸ்டர்டம்


             லண்டனிலிருந்து யூரோ ஸ்டார் இரயில் மூலம் ஃப்ரான்ஸ் நாட்டின் calais என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  இங்கலீஷ் கால்வாயின் அடியில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை (tunnel)  வழியாக இந்த இரயில் செல்கிறது. இரயில் பெட்டியில் எங்களை பஸ்ஸோடு அப்படியே ஏற்றிவிட்டார்கள்.  நம் வாகனத்தோடு அப்படியே ஏற்றி இறங்குமிடத்தில் வாகனத்தோடு இறங்கிக் கொள்ளலாம்.  இதற்கு முன்பதிவு செய்யவேண்டும்.  கடலுக்கு அடியில் செல்லப் போகிறோம் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.  ஆனால் 98% நேரம் சுரங்கப் பாதையில் செல்வதால் இருட்டைத் தவிர வேறு ஒன்றும் பார்க்கவில்லை.  முழுவதும் சுரங்கப்பாதையில் செல்வதால் ஏதாவது பெரும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றாமலில்லை.  தீ விபத்தை அறிய கருவிகள் இருப்பதால் பயமில்லை என்கிறார்கள்.  அந்த கருவியின் வேலையில் (interfere) குழப்பம் உண்டு செய்யும் என்பதால் (flash)ஃபோட்டோ எடுக்கக் கூட அனுமதியில்லை. பயணத்தின்போது நாம் நமது வாகனத்திலிருந்து இறங்கி இரயில் முழுவதும் நடக்க வசதி உள்ளது. இந்தப் பயணம் த்ரில்லாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

             ஃப்ரான்ஸில் இறங்கினாலும் அங்கிருந்து நாங்கள் முதலில் பெல்ஜியம் சென்றோம்.  முதலில் ப்ரஸ்ஸல்ஸிலுள்ள 'அட்டொமியம்' (atomium) பார்த்தோம்.



 ப்ரஸ்ஸல்ஸில் 1958-ம் வருடம் உலக வர்த்தகக் கண்காட்சியின்போது கட்டப்பட்டதாம் இது.  இரும்பு மூலக்கூறு (ஒன்றுமில்லீங்க, a molecule of Iron என்பதைத்தான் தமிழில் எழுதினேன்!!) வடிவத்தில் அமைக்கப்பட்டது இந்த அட்டோமியம்.  அதன் ஒவ்வொரு கோளத்திலும் ஒரு கண்காட்சி இருப்பதாகச் சொல்கிறார்கள்.  அடித்த வெயிலில் அலுமினியத்தால் செய்யப்பட்ட அந்த அட்டோமியம் மிகவும் சூடாக இருக்கும் (குளிர்சாதன வசதிக்கும் மீறி) என்று சொல்கிறார்கள்.  நாங்கள் வெளியிலிருந்து ஃபோட்டோ மட்டும் எடுத்துக் கொண்டோம்.  அதன் மேலுள்ள கோளத்தின் முனையிலிருந்து( சுமார் 102 மீ உயரம்) கீழே கயிற்றில் சறுக்கி சாகசம் புரிந்துகொண்டிருந்தனர் சிலர்.
அதை ரசித்துவிட்டு பஸ்ஸிலேறி ப்ரஸ்ஸல்ஸின் சந்தை சதுக்கத்தை (market square) நோக்கிப் போனோம். நகரத்தின் மையத்திலிருந்த market square மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது.



கட்டிடங்களின் அழகு மனதைப் பறிப்பதாக இருந்தது.  பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை பல பொதுக்கூட்டங்கள், பெரு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் இந்த market square-ல்தான் நடக்குமாம்.  அங்கு எல்லா நேரத்திலும் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

 இங்கிருந்து சிறிது தொலைவில்தான் பெல்ஜியத்தின் icon ஆகச் சொல்லப்படும் manniken piss என்ற சிலை இருக்கிறது.


 இந்த சிலை மிகவும் சிறியது.  இதைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் இது எப்படி ஒரு நாட்டின் icon ஆகக் கருதப்படுகிறது என்ற வியப்பு நீங்கவில்லை.  இந்த சிலைக்கு விதவிதமான அலங்கார ஆடைகள் இருக்கின்றனவாம்.  அந்த ஆடைகளுக்காக டவுன் ஹாலில் ஒரு அருங்காட்சியகமும் இருக்கிறதாம்!!!

               மூட நம்பிக்கைகள் இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்திருந்தேன்.   யூரோப்பிலும் சில நகரங்களில் மக்களின் மூட நம்பிகையைப் பற்றி அறிய முடிந்தது.  Market square அருகிலேயே உள்ள இந்த சிலையின் பாதங்களைத் தடவிச் சென்றால் அதிர்ஷ்ட்டம் கிட்டும் என்று சொல்கிறார்கள்.


 அங்கு வரும் அனைவரும் அந்த சிலையை வருடிவிட்டுச் செல்வதைப் பார்க்க முடிந்தது.
.

               ப்ரஸ்ஸல்ஸ், லேஸ், சாக்லேட், waffels இவற்றிற்குப் புகழ் பெற்றது.  லேஸில் பின்னப்ப்ட்ட பல கலைப் பொருட்களை இங்கு வாங்கலாம்.

 waffels

waffels சாப்பிட்டோம்.  எங்களுக்கு என்னவோ அதன் சுவை பிடிக்கவில்லை.

              ப்ரஸ்ஸல்ஸ் நகர வீதியில் சுற்றிவிட்டு நெதர்லேண்ட் (நீதர்லேண்ட் என்றுதான் சொல்கிறார்கள்) நோக்கிப் போனோம். ஹாலந்த் என்றும் அழைக்கப்படும் நீதர்லேண்ட்ஸில் அம்ஸ்டர்டம், ஹேக் போன்ற நகரங்களை நன்றாகச் சுற்றிப் பார்த்தோம்.

முதலில் அம்ஸ்டர்டம் பற்றிய சில சுவையான செய்திகள்:

              நீதர்லேண்ட் நாடுதான் உலகிலேயே அதிக அளவு மக்கள் நெருக்கம் கொண்டது. மக்கள் நெருக்கத்தாலும், உள்ளேறி வரும் கடலைத் தடுக்கவும் land reclamation மூலம் கடல் நீரைத் தள்ளி நிலத்தை வாழ மற்றும் பயிர் செய்ய வசதியாக்கியிருக்கிறார்கள்.

dykes

கடல் நீரைப் புறம் தள்ள dykes கட்டி தண்ணீரைக் காற்றாலைகளின் உதவி கொண்டு கால்வாய்காளில் விட்டு நிலத்தை வாழ்வதற்கேற்றவாறு பண்படுத்தியிருக்கிறார்கள். இப்பொழுது காற்றாலைகளின் வேலையைப் பெட்ரோலால் இயங்கும் பம்புகளால் செய்கிறார்கள்.

               இந்த நாடு டூலிப் மலர்களுக்குப் பெயர்போனது.  உலகில் ஏற்றுமதி செய்யப்படும் மலர்களில் பெருமளவு இங்கிருந்துதான் செய்யப்படுகிறது.(திருப்பதி வெங்கடமலையானுக்கும் இங்கிருந்து பூ வருகிறது என்று கேள்விப்பட்டேன்!).

               அம்ஸ்டர்டமில் மக்கள் சைக்கிளைத்தான் அதிக அளவு உபயோகிக்கிறார்கள்.  முதன்முதலில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காகத் தனி பாதை அமைக்கப்பட்டதும் இங்குதான் (கி.பி.1930).  நகரத்தின் இடையில் தெருக்கள் போல கால்வாய்கள் இருப்பதால் படகையும் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

               ஹை வேயில் செல்லும் வாகனங்களின் இரைச்சலால் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க ரோட்டின் இரு பக்கமும் fiber wall அமைத்திருக்கிறார்கள்.


 அரசுக்குத்தான் மக்கள் மேல் எத்தனை கரிசனம்!!.

             இங்கு குளிர் காலங்களில் மக்கள் பெரும்பாலும் மரத்தாலான காலணிகளையே அணிகிறார்கள்.  இந்த ஷூக்கள் பல வண்ணங்களில் கண்ணைக் கவருவதாக இருக்கின்றன.



பண்டை நாட்களில் தன் மனம் கவர்ந்த பெண்ணுக்குத் தன் கையாலேயே ஷூ செய்து அவள் வீட்டு வாயிலில் வைப்பார்களாம் காதலர்கள்.  அவள் அந்த ஷீவை ஏற்றுக் கொண்டால் காதலுக்குச் சம்மதம் என்று பொருளாம்.  (இந்தக் காலத்தில் ஷூவுக்குள் பேங்க் கணக்குப் புத்தகத்தையும் வைக்க வேண்டியிருக்கும்!!).

              முன் காலத்தில் இங்கு வீட்டின் வாயிலின் அளவை வைத்து வரி வசூலிக்கப்பட்டதாம்.  அதனால் பெரும்பாலான வீடுகளின் வாசற்கதவு மிகவும் சிறியதாகவே இருக்கும்.  பின் எப்படி வீட்டிற்குத் தேவையான furnitures-ஐ வீட்டுக்குள் கொண்டு செல்வது?  ஜன்னல் வழியாகத்தான் கொண்டு வருவார்களாம்.



அதற்கு உதவும் வகையில் கட்டிடங்களின் மேலே ஒரு கொக்கி உள்ளது.  அதன் மூலம் கயிற்றைக் கட்டி, கயிற்றில் furnitures -ஐக் கட்டித் தூக்கி ஜன்னல் வழியே வீட்டிற்குள் இறக்குவார்களாம். (நம்மாட்களாக இருந்தால் வீட்டிற்கு வாசற் கதவே வைக்காமல் ஜன்னல் வழியே எகிறி குதித்துப் போயிருப்பார்கள்!).

அம்ஸ்டர்டம்மின் அடையாளமாகக் கருதப்படுவது அந்த நகரிலுள்ள காற்றாலைகள்தான் (windmill).


 முற்காலத்தில் நீரை அகற்ற கட்டப்பட்ட அவை பெரும்பாலும் பயன்பாடு இழந்து போனதால் அழிக்கப்பட்டுவிட்டன.  இருக்கும் 1000 காற்றாலைகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்ததனால் அவை பிழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  காற்றாலைகளின் பருத்த அடிப்பாகத்தில் கதவமைத்து பல ஏழை மக்களுக்கான குடியிருக்கும் வீடுகளாக மாற்ற்றிக் கொண்டுள்ளனர்.

               அம்ஸ்டர்டம் நகரைப் பற்றியும், மடுரோடம் என்ற சின்னஞ்சிறிய (miniature) அம்ஸ்டர்டம் நகர் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.




8 comments:

அப்பாதுரை said...

ப்ரசல்ஸ் போக வேண்டும் என்று அடிக்கடி நினைத்ததுண்டு... இதைப் படித்ததும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. well written; good photos.

SurveySan said...

interesting.

geetha santhanam said...

thanks durai and surveysan.--geetha

சாய்ராம் கோபாலன் said...

Lived 2 years in UK but never managed to see other than France and that too was a short trip !

Swiss was good as it was almost 8 odd days.

Send me a mail on the travel company that you used. May be I will do a European trip from US if they offer similar stuff from here. It is easier for me !!

I have always felt Europe presents better places to visit and see - You just need money

meenakshi said...

பார்த்த இடங்களை பற்றி அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். படங்களும் நன்றாக இருக்கிறது.

பெல்ஜியம் போனீங்களே, வைரம் வாங்கினீங்களா? :)

geetha santhanam said...

நன்றி மீனாக்ஷி & சாய்ராம். மீனாக்ஷி, டி கோஸ்டா வைரம் பட்டை செய்யும் கம்பெனிக்குப் போனோம். ஆனால் வைரம் வாங்கத் தோணவில்லை.
சாய்ராம், எங்களுடன் அமெரிக்காவிலிருந்து 4 குடும்பங்கள் வந்திருந்தன. நீ இணையத்தில்கூட புக் செய்யலாம். விவரங்கள் இமெயிலில் அனுப்புகிறேன். --கீதா

ஸ்ரீராம். said...

மூட நம்பிக்கைகள் இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்திருந்தேன். யூரோப்பிலும் சில நகரங்களில் மக்களின் மூட நம்பிகையைப் பற்றி அறிய முடிந்தது."//

முன் காலத்தில் இங்கு வீட்டின் வாயிலின் அளவை வைத்து வரி வசூலிக்கப்பட்டதாம். அதனால் பெரும்பாலான வீடுகளின் வாசற்கதவு மிகவும் சிறியதாகவே இருக்கும்"//

எல்லோரும் மனிதர்கள்தானே...எந்த ஊர் எந்த நாடாக இருந்தால் என்ன..!

படங்கள் அருமை... வைபவியா அது?

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம். ஆம், அது வைபவிதான்.--கீதா