Tuesday 12 October 2010

குவைத்தில் நவராத்திரி

          
               நவராத்திரி எப்பொழுதுமே எனக்கு ஒரு சுவாரசியமான பண்டிகையாகத்தான் இருந்திருக்கிறது.  சிறுவயதில் எங்கள் வீட்டில் கொலு வைக்க வீட்டிலுள்ள மேஜை, பெட்டிகள் மற்றும் பலவற்றைக் கொண்டு கொலுப் படிகள் அமைப்பதில் தொடங்கி கொலு பொம்மைகள் அடுக்குவது வரை உற்சாகமாகச் செய்வோம்.  நானும் என் சகோதரியும் ராதா-க்ருஷ்ணா, மடிசார் மாமி என்று வித விதமாக வேஷமிட்டுக் கொண்டு எங்கள் தெருவில் எல்லோரையும் கொலுவிற்கு அழைப்போம்.(சிறுமிகள் இப்போதும் இந்த மாதிரி வேஷம் போட்டுக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை). எல்லோர் வீட்டிலும் பாடச்சொல்லிக் கட்டாயப் படுத்துவார்கள்.  ஏதோ பெரிய பாடகி போல் நானும் என் சகோதரியும் தாளமெல்லாம் போட்டுப் பாடுவோம் . கொஞ்சம் வளர்ந்த பின் கொலுவிற்கு முன் ரங்கோலி, முத்தாலத்தி (ஜவ்வரிசியால் தட்டில் கோலம் போடுவது) போடுவது என்று பிற விஷயங்களில் ஆர்வம் வந்தது. பொதுவாகவே நவராத்திரி என்பது நமது creativity -ஐ வளர்க்கவும், வெளிக்காட்டவும் ஒரு நல்ல வாய்ப்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து.

              நான் சிறுமியாக இருந்த போதெல்லாம் நவராத்திரி simple-ஆகவேக் கொண்டாடப்பட்டது.  ஒரு பொட்டலத்தில் சுண்டலைக் கட்டி வெத்திலை, பாக்குடன் கொடுப்பார்கள்; பெரியவர்களுக்கு மிஞ்சிப்போனால் ஒரு ரவிக்கை துணி. அவ்வளவுதான்.

             ஆனால் குவைத்தில் நவராத்திரி ஒரு விழாவாகவே நடக்கிறது.  இந்தியாவில் கூட இவ்வளவு விமரிசையாக நடக்கிறதா என்று தெரியவில்லை. இங்கு எல்லோரும் நவராத்திரிக்குக் குடும்ப சகிதமாகவே  அழைக்கிறார்கள்.  குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வயதிற்கேற்ப பரிசுப்பொருள் கொடுக்கிறார்கள்.  ஒரு சுண்டல் மட்டும் கொடுத்து escape பண்ண முடியாது.  குறைந்தது ஒரு ஸ்வீட், ஒரு காரம் இவற்றுடன் சுண்டலும் என்று குறைந்த பட்ச மெனுவில் தொடங்கி தோசை (சுடச் சுட வார்த்து பரிமாறப்படும்!!), இட்லி, பூரி என்று ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு விரிவான மெனுவுடன் பெரிய விருந்தும் நடைபெறும்.  சில வீடுகளில் கச்சேரிகளும் உண்டு.  இங்குள்ள தமிழர்கள் நவராத்திரியை ஒரு பண்டிகையாக மட்டும் கொண்டாடுவதில்லை.  தெரிந்தவர் அனைவரையும் குடும்பத்துடன் கண்டு உரையாடக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கிறார்கள்.  அதனால் ஒவ்வொரு வீட்டிலும் நவராத்திரி சமயத்தில் குறைந்த பட்சம் 25 முதல் 70-75 குடும்பங்களுக்கு வெற்றிலை-பாக்கு மற்றும் விருந்து அளிக்கிறார்கள். பொதுவாக ஜீன்ஸ்-டீ ஷர்ட்டில் உலாவரும் பெண்களெல்லாம் நவராத்திரியில் பட்டுப் புடவை, நகைகள் அணிந்தும் ஆண்கள் குர்தா-பைஜாமா அணிந்தும் வருவார்கள்.  இந்த உடையலங்காரமும், சிறுவர் சிறுமிகளின் கல கலவென்ற ஆரவாரமும் ஒரு கல்யாண வீடுபோன்ற தோற்றத்தை உண்டாக்கிவிடும். நம் வீட்டில் விருந்தளித்த நாள் போக மற்ற நாட்களில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3-8 வீடுகளுக்குப் போக நேர்வதால் இரவு 10.30 மணிவரை நகரமே கலகலவென்று இருக்கும். இது தவிர தாண்டியா நிகழ்ச்சிகளும் நடக்கும்.


               தமிழர்கள் நவராத்திரி விழாவை விமரிசையாகக் கொண்டாடுவது போல் வட இந்தியர்கள் தீபாவளியை ஒட்டி 'open house' என்று வைத்து நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்தளிப்பார்கள்.  அநேகமாக எல்லா இந்தியர்களின் வீடுகளும் serial light அலங்காரத்தில் ஜொலிக்கும்.


தீபாவளியன்றும் மறுநாளும் எல்லோரும் பொது இடத்தில் ஒன்று கூடி வெடிகளை வெடித்து மகிழ்வோம். நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை நாம் இருப்பது குவைத்தா இல்லை இந்தியாவா என்று சந்தேகம் வருமளவு இங்கு நகரமே விழாக்காலம் பூண்டிருக்கும்.

அப்படியே எங்க வீட்டு கொலுவையும் பார்த்துவிட்டு பக்கத்திலுள்ள பிரசாதத்தையும் எடுத்துக்கோங்க!!










13 comments:

எல் கே said...

உங்கள் வீடு கொலு அருமை ...

geetha santhanam said...

nandri LK.--geetha

அப்பாதுரை said...

creativityனு தொடங்கி சாப்பாட்டுல முடியுது.. பாரம்பரியம் அப்படி.

கொலு அழகா இருக்கு.

சாய்ராம் கோபாலன் said...

சுண்டல் நீயா இல்லே சந்தானமா கீது ? படம் சூப்பர் - டெஸ்ட் எப்படியோ ?

meenakshi said...

ராதா கிருஷ்ணா, வெண்ணை தாழி கிருஷ்ணர் நல்லா இருக்கு! விளக்கு பூஜை செட் குருக்களோட, அமர்க்களம்! அந்த தலையாட்டி நடன மாது, எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும். செட்டியார் அம்மாவை விட, செட்டியார் ஐயா படு க்யூட்டா இருக்கார். மரப்பாச்சி அலங்காரம் நல்ல கை வண்ணம். சட்டுன்னு பாக்கும்போது கீழ் படியை அலங்கரிக்கற மாலை சரவெடி மாதிரி தெரிஞ்சுது, தீபாவளி வருது இல்லையா, அதான். பக்கத்துல செழிப்பான கிராமம், கண்ணுக்கு குளிர்ச்சியா ரொம்ப பிரமாதமா இருக்கு.

சரி, உங்காத்து கொலு பாத்தாச்சு. ஸ்வீட்டும், சுண்டலும் சாப்பிட்டாச்சு. எல்லாம் ரொம்ப நன்னா இருக்கு. எங்கே வெத்தலை பாக்கு, பழம், பரிசை, காணுமே? மறந்து போச்சா! கிளம்பணுமே, குடுக்கறேளா!

ராம்ஜி_யாஹூ said...

குவைத்தில் மட்டும் அல்ல, எல்லா வெளிநாடுகளிலும் தான் ( அமெரிக்க, இங்கிலாந்து, துபாய்) இந்திய பண்டிகைகளும், இந்திய அரசு சுதந்திர நிகழ்சிகளும் ஆர்வமாக கொண்டாடப் படும்.

இது பொதுவாக உள்ள மனித இயல்பு. ஒரு பொருள், நிகழ்வு நமக்கு அருகில் இருக்கும் பொழுது அதன் பெருமையை உணரமாட்டோம், போற்ற மாட்டோம்.

இந்தியாவில் வசிக்கும் இங்கிலாந்து, அமெரிக்கா தேசத்தவரும் ஈஸ்டர், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை அங்கே விட இங்கே சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

அயல் ஊருக்கு சென்றதும் பயம் கவலை வருவது இயற்கையே. அந்த பயத்தை போக்க கடவுள் பக்தி அதிகரிக்கும்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

geetha santhanam said...

நன்றி துரை,சாய்ராம், மீனாக்ஷி & ராம்ஜி யாஹு.
ராம்ஜி, நீங்கள் சொல்வது சரிதான். எங்கே நம் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் தெரியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்திலேயே வெளி நாட்டில் வாழும் நாம் எல்லா பண்டிகைகளையும் விரிவாகக் கொண்டாடுகிறோம்.
மீனாக்ஷி, கொலுவை டீடைலா ரசித்ததற்கு நன்றி. வெத்தலைப் பாக்கு வேய்த்திருக்கிறேன், எடுத்துக்கோங்க. நினைவு படுத்தியதற்கு நன்றி.
சாய்ராம், சுண்டலை அடுப்பில் ஏற்றி இறக்கியது மட்டும் நான், மற்றதெல்லாம் சந்தானம் வேலை. தைரியமாக சாப்பிடவும்.
துரை, வயிற்றுக்கு ஈவது முக்கியமானது. அதில்கூட creativity-ஐக் காட்ட முடியுமே.--geetha

geetha santhanam said...

மீனாக்ஷி, ஸாரி, 'வேய்த்திருக்கிறேன்' இல்லை; 'வைத்திருக்கிறேன்' என்று படிக்கவும்.
--கீதா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருமை..விளக்குபூஜை செட்.. டிஸ்னி செட் பிடிச்சது
அப்பறம் அந்த மாட்டுவண்டியும் சாக்குமூட்டையும் சூப்பர்.. கூடவே கறிகாய் கடை ..நல்லா இருக்கு வெத்தலை
எடுத்துக்கிட்டேன்..
எங்க வீட்டு(ப்ளாக்) கொலுக்கும் வாங்க..

geetha santhanam said...

நன்றி முத்துலஷ்மி. இதோ, உங்கள் வீட்டு கொலுவிற்கு வந்துண்டே இருக்கேன்.--கீதா

ஸ்ரீராம். said...

கொலு படங்களை விட, சுண்டல், ஸ்வீட் படங்கள் கவர்கின்றன...!

சாய்ராம் கோபாலன் said...

//ஸ்ரீராம். said...கொலு படங்களை விட, சுண்டல், ஸ்வீட் படங்கள் கவர்கின்றன...!//

ப்ரஹ்மணா போஜன ப்ரியா !!

geetha santhanam said...

சாய்ராம், எல்லாருக்குமே உணவு முக்கியம். ஆனால் அதை ஒரு ரசனையோடு, வகைவகையாகச் செய்வது மட்டுமில்லாமல், அதை ஏதாவதொரு பண்டிகை மற்றும் கடவுளோடு தொடர்புபடுத்தி உண்பது நாம்தான்.--geetha