Tuesday, 2 November 2010

உச்சி மீது வெடிவந்து வீழுகின்ற போதிலும்....





              நம் பண்டிகைகளிலேயே நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருப்பது தீபாவளிக்குத்தான். பள்ளியில் படிக்கும்போது என் தோழிகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளி countdown ஆரம்பித்துவிடுவோம்.  புது ஆடையை உடுத்தி பெருமையோடு வலம் வருவதில் ஒரு ஆர்வம். அன்று முதல் இன்று வரை எல்லா வயதினருக்கும் ( பிற மதத்தினருக்குக் கூட) தீபாவளி ஸ்பெஷல் வெடிகள்தான். என் அக்கா, அண்ணன்மார்களின் உதவியால் வெடி வெடிப்பது என் ஆர்வத்தைத் தூண்டியதே அன்றி ஒருபோதும் பயமே இருந்ததில்லை. சிறு வயதில் என் அம்மா வெடிகளை வாங்கி எங்களுக்குள் பங்கு போட்டுக் கொடுப்பார்.  அதை வெயிலில் காய வைத்து தீபாவளியன்று ஒரு வெடிகூட வீணாகாமல் போட்டி போட்டுக் கொண்டு வெடிப்போம். என்னுடைய favorite  எலக்ட்ரிக் சரம் மற்றும் atom bomb தான்.  அதுபோல் புஸ்வானத்தை யார் வீட்டில் வைத்தாலும் அது முடியும் வரை ரசிப்பேன்.



              கல்யாணமாகி முதலில் அபுதாபி, பின்னர் கனடாவில் வசித்தபோது தீபாவளியானால் இந்த வெடிகளை வெடிக்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கும்.

              என் மகள் வெடிகளை வெடிக்க வாய்ப்பு கிட்டாதோ என்ற என் ஏக்கம் குவைத் வந்ததும் தீர்ந்தது.  நல்ல வேளை, குவைத்தில் வெடிகளுக்குத் தடையில்லை.  கடந்த நான்கு வருடங்களாக எல்லோரும் ஒன்று கூடி வெடித்து மகிழ்கிறோம்.  என் மகளுக்கும் என்னைப் போல் வெடி வெடிப்பதில் ஆர்வம் உண்டு (உடனே அவள் ரொம்ப தைரியசாலி என்று எண்ணாதீர்கள். She is afraid of anything that moves and has more than two legs . ஆனால் amusement park-ல் எல்லா rides -லும் தைரியமாகப் போவாள்.  நான்தான் பயந்து அவள் இறங்கி வரும்வரை கண்களை இறுக்க மூடிக் கொண்டிருப்பேன்)..முதலில் கொஞ்சம் தயங்கினாலும் மத்தாப்பு, சங்கு சக்கரமென்று மூன்று வயதிலேயே (அதுதான் அவள் கொண்டாடிய முதல் தீபாவளி) வெடிக்கத் துவங்கினாள். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ராக்கெட் சரியாக அவள் தலையில் லேண்டாகியது.  கொஞ்சம் தலைமுடியையும் பொசுக்கிவிட்டது.  பயத்தில் அவள் கத்த, கூட இருந்த நானும் நடுங்கக் கொண்டாட்டம் போய் திண்டாட்டமாகியது.  பக்கத்திலிருந்தவர்கள் '  paste தடவினால் சரியாகும், பௌடர் போட்டால் சரியாகும்...' என்று எது சொன்னாலும் உடனே அங்கிருந்த கடையில் நுழைந்து எடுத்து அவள் தலையில் தடவி அவள் தலையை ஒரு வண்ணக் களஞ்சியமாக்கிவிட்டேன். இதற்குள் அவள் தலையில் ஒன்றும் பெரிய காயமில்லை என்று எனக்குப் புரிந்துவிட்டதால் நான் நிதானமானேன்.  ஆனால் என் மகளோ அழுகையை நிறுத்தவேயில்லை.  நாங்கள் அப்பொழுதுதான் புது வீட்டிற்கு குடி புகுந்து ஒரு வாரமாகியிருந்தது.  என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு டாக்டர்.  அவரிடம் கொண்டு காட்டினோம். அவரும் கவலைப் பட ஒன்றுமில்லை என்று கூறினார்.  அவர் ஒரு டாக்டர் என்று அறியாததால் (மூன்று வயது குழந்தைதானே.  அவர் வீட்டில் casual dress-ல் இருந்ததால் அவரை டாக்டரென்று நம்ப மறுத்தாள்).  "எனக்கு டாக்டர்கிட்ட போகணும்" என்று கீறல் விழுந்த ரெகார்ட் போல அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.  பின்னர் ஹாஸ்பிடல் போய் வந்ததும்தான் அழுகையை நிறுத்தினாள். எங்கள் பக்கத்து வீட்டு டாக்டர் இன்றும் அவளைப் பார்க்கும்போது "டாக்டர்கிட்ட போகணும்னு அடம்பிடித்த முதல் குழந்தை நீதான்" என்று சொல்லிச் சிரிப்பார்.

            அடுத்த வருடம் கொஞ்சம் பயந்தாலும் நாங்கள் தைரியம் கூறவே வெடிக்கத் தயாரானாள்.  நாங்களும் மற்றவர்களெல்லாம் வருவதற்கு முன்னரே வெடித்துவிட்டு வர முடிவு செய்தோம் (எங்கள் நண்பர் வட்டாரத்தில் எங்களுக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்ற பட்டப் பெயர் உண்டு).  புஸ்வாணம், சங்கு சக்கரம், மத்தாப்பு எல்லாம் கொளுத்தி திருப்தியுடன் வீட்டிற்குத் திரும்ப எத்தனித்தோம். அப்போது சுமார் ஒரு மீட்டர் தள்ளி யாரோ விட்ட தரைச் சக்கரம் சூப்பர்மேன் போல் ஒரு தாவு தாவிக் குதித்து எங்களனைவரையும் விட்டுவிட்டு சரியாக வைபவியின் காலில் வந்து விழுந்து வணக்கம் சொல்லியது.  'ஒரு காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே...' பாட்டுக்கு அபிநயம் பிடிப்பது போல் அவள் குதிக்கத் தொடங்கினாள். ஒருமாதிரி அவளைச் சமாதானப்படுத்தி வீட்டிற்குக் கூட்டி வந்தோம்.

             சென்ற முறை தீபாவளியை எந்த சிக்கலும் இல்லாமல் நன்றாக வெடித்துக் கொண்டாடினோம்.  பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்குப் பயந்து மற்றவர்களிடமிருந்து தள்ளி நின்றே வெடித்தோம். இந்த முறை தீபாவளிக்கு வெடி வாங்கியாகிவிட்டது.  என் மகள் தூக்கத்தில் கூட மத்தாப்பு, சங்கு சக்கரம் என்று புலம்பும் அளவு மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாள். நாங்களும் ஆவலுடன் தீபாவளியை எதிர் நோக்கி இருக்கிறோம்.

             lநீங்களும் நிறைய வெடித்து தீபாவளியை மகிழ்சியுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் எண்ணச்சிதறல் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

(மேலேயுள்ள diwali greeting ஐ வரைந்தது எங்கள் மகள் வைபவி)

11 comments:

எல் கே said...

விபத்தில்லா தீபாவளிக்கு வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

வெடி போட்டு முடி பற்றிய கதை நல்ல திகில்.
தீபாவளி வாழ்த்துக்கள்.

(அனைவரும் அளவோடு தின்று வளமோடு வாழ்க!)

அப்பாதுரை said...

greetings சித்திரம் அழகாக இருக்கிறது.

geetha santhanam said...

thanks durai and LK. wish u & ur family a very happy deepavali .

ஸ்ரீராம். said...

தீபாவளி வாழ்த்துக்கள். படம் போட்டு வாழ்த்துச் சொன்ன வைபவிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விபத்தில்லா தீபாவளிக்கு வாழ்த்துக்கள்
//
ஆமாமா..:) வாழ்த்துக்கள்..

வைபவியின் படம் அழகாக இருக்கிறது.
அதோட அவளுடைய அனுப்வங்க்ளை க் கூறியதுமிக அழகு, ரசித்தேன்.. சிரிப்பா க இப்ப இருந்தாலும் அந்நேரம் நிச்சயமாக கஷ்டமாக இருந்திருக்கும் உங்களுக்கு..

ஆயில்யன் said...

//பள்ளியில் படிக்கும்போது என் தோழிகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளி countdown ஆரம்பித்துவிடுவோம்//

அதே! திங்கிற பலகார ஐட்டங்களில் ஆரம்பிச்சு வெடிச்சு முடிக்கிற வரைக்கும் வந்து நிறுத்தி பிறகு டிரெஸ்ல ஆரம்பிச்சு தீபாவளி ரீலிஸ் சினிமாவுல நிப்பாட்டி ஹய்ய்ய்ய்யோ சூப்பரா இருக்கும் ஹம்ம்ம்ம் இப்ப தனியா உக்காந்து ஃபீல் பண்ணிக்கிடவேண்டியதுதான்!

இனிய தீபாவளி வாழ்த்துகள்_அட்வான்ஸா :)

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம். உங்கள் ஸ்பெஷல் வாழ்த்துக்களை வைபவியிடம் சொல்லிவிட்டேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி முத்துலெட்சுமி. நீங்கள் சொல்வது போல் அவளுக்கு அடிபட்டபோது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது.
ஆமாம் ஆயில்யன்,

தீபாவளியென்றால் இனிப்பு, வெடி, சினிமா என்று சந்தோஷம்தான். இப்ப அப்படியா? டிவி முன்னால் சரணடைந்து வெடிப்பதுகூட குறைந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.

சாய்ராம் கோபாலன் said...

Geethu & family

தீபாவளி வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

தீவாளிக்கு வெடியெல்லாம் நல்லா வெடிச்சீங்களா?

geetha santhanam said...

நன்றி சாய்ராம்.
துரை, இந்த முறை உற்றார், நண்பர்களுடன் கூடி வெடித்தோம். வைபவியும் பயப்படாமல் (விபத்தில்லாமல்) வெடித்து மகிழ்ந்தாள்.