Friday 24 December 2010

பகிர்தலும் இன்பமே

            
             நான் என் நாய் டானுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.  13 வயது சிறுமியான எனக்கு டான்தான் நல்ல நண்பன்.  நான் சைக்கிள் ஓட்டி விளையாடும்போதும், ஸ்கேட்டிங் செய்யும்போதும் என்னுடன் ஓடி வந்து விளையாடுவான்.  எனக்கு அக்கா இருந்த போதும் வயது வித்தியாசம் காரணமாக அதிகம் விளையாடமாட்டாள்.  எங்கள் அக்கம்பக்கத்தில் என் வயது சிறுமிகளும் இல்லை.  எனக்கு டான்தான் சிறந்த தோழன்.

             என்றும்போல் அவனுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து அம்மாவுடன் டின்னர் ரெடி செய்ய உதவிக்கொண்டிருந்தேன்.  உள்ளே வந்த அப்பா என்னை அழைத்து, "Mr.Roth-க்கு மிகவும் உடல் நலம் சரியில்லை.  உனக்கே தெரியும் அவர் வீல்சேரில்தான் நகர்கிறார்.  கண்பார்வையும் சரியாக இல்லை. அவரின் மகனும் மகளும் வேலைக்குச் செல்வதால் பகல் நேரங்களில் மிகவும் தனிமையாக உணர்கிறார். அவருக்கு துணையாக ஒரு நாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்" என்றார்.  "ஓ! கடையில் வாங்கிக்கலாமே அப்பா.  நிறைய கடைகளில் கிடைக்கின்றனவே" என்று நான் ஒன்றும் புரியாதது போல் பதில் சொன்னேன். " ஏற்கனவே அவரின் ஆஸ்பத்திரி செலவு அதிகம்.  மேலும் சில மாதங்களே அவர் இருப்பார் என்று டாக்டர் சொல்கிறார்...." என்று நீட்டினார் அப்பா.  "அப்பா, டான் தான் எனக்கிருக்கும் ஒரே விளையாட்டுத் துணை.  அவனை என்னால் பிரிய முடியாது" என்று சொல்லிவிட்டு என் அறைக்கு அழுதுகொண்டே ஓடிவிட்டேன்.

              ஆனாலும் என் மனசாட்சி என்னை விடவில்லை.  'உன்னைவிட அதிகத் தனிமையில் வாடுவது Mr.Rothதான்.  டான் அவருக்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பான்.  இப்பொழுது சுயநலமாக இருந்துவிட்டு ராத்தின் மறைவுக்குப் பின் அழுது என்ன பயன்' என்று என்னைக் குடைந்தெடுத்தது.  ஒரு தீர்மானத்துடன் அப்பாவிடம்" அப்பா, இப்பவே வந்து அவர் மகனை டானைக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுங்கள்.  நாளைக் காலை என் மனம் மாறினாலும் மாறிவிடும்" என்று அழுதுகொண்டே சொன்னேன்.  அப்பா என் கண்ணீரைத் துடைத்து முத்தமிட்டு நன்றி சொன்னார்.

               டான் என்னைவிட்டு பிரிந்து இன்றோடு மூன்று வாரம் ஆகிறது.  மாலை வேளைகளின் அவனில்லாமல் மிகவும் தனிமையாக உணர்கிறேன்.  எனக்கு சிறந்த நண்பன் மட்டுமில்லாமல் என்மீது வேறு யாரையும்விட அதிக அன்பைப் பொழிவது டான்தான். அவனும் நானில்லாமல் எப்படி தவிக்கிறானோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது எங்கிருந்தோ நான்கு கால் பாய்ச்சலில் ஓடிவந்த டான் என் மீது விழுந்து புரண்டது.  மிக்க அன்போடு என் முகம், கை என்று நக்கியது.  மூச்சு வாங்க பாய்ந்து வந்த டானுக்கு உடனே தண்ணீர் கொடுத்தேன்.  இடையிடையே என்னை நக்கி அன்பைத் தெரிவித்த வண்ணம் தண்ணீரை ஓரே மூச்சில் குடித்தான் டான்.  நானும் அவனைத் தடவிக் கொடுத்து என் அன்பை வெளிப்படுத்தினேன்.

              கால்மணி நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த Mr.Roth-ன் மகன் டானைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.  "என்னால் நம்பவே முடியவில்லை.  நாங்கள் வெளியில் செல்லும்போது டான் மதிலேறி குதித்து அடிபட்டுக் கொள்ளாமல் இருக்க அவனைச் சங்கிலியால் கட்டுவோம். இன்று மதியம் என் அப்பாவுடன் டான் பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.  ஏதோ மறதியில் டானைக் கட்டிப் போடாமல் நாங்கள் கடைக்குச் சென்றுவிட்டோம்.  இந்த சமயத்தைச் சரியாகப் பயன்படுத்தி டான் மதிலைத் தாண்டிக் குதித்து உங்கள் மகளைப் பார்க்க ஓடிவந்திருக்கிறான்.  என் அப்பா ஃபோன் செய்யவும் உடனே உங்களைப் பார்க்க வந்தேன்.   எப்படி உங்கள் வீட்டை நோக்கிச் சரியாக இவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கிறதே! unbelievable!! டானுக்கும் உங்கள் மகளுக்கும் இடையேயுள்ள அன்பை இப்பொழுது நான் உணர்ந்துகொண்டேன்" என்று என் அப்பாவிடம் சொன்னார்.  நானும் டானும் ஓடி விளையாடத் தொடங்கினோம்.

               இதற்குப் பிறகும் டானை இரவல் கேட்க ராத்தின் மகனுக்கோ என் அப்பாவிற்கோ மனமில்லை.  ஆனால் ராத்தின் வயதான அப்பாவைத் தனிமையில் தவிக்கவிட எனக்கு மனம் வரவில்லை.  அதனால் அவரின் மகனிடம் "uncle! நீங்கள் டானைக் கூட்டிக்கொண்டு போங்க.  ஆனால் வாரத்திற்கு ஒருமுறை நான் உங்கள் வீட்டிற்கு வர என்னை அனுமதிக்க வேண்டும்.  என்னை மீண்டும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் டானும் ஓடிவரமாட்டான்" என்றேன்.  எனக்கு நன்றி கூறிவிட்டு டானுடன் புறப்பட்டார் அந்த அங்கிள்.  மிகப் பெருமையோடு என்னை அணைத்துக்கொண்டார் என் தந்தை.

               இதற்குப் பின் வராவாரம் வெள்ளிக்கிழமை மாலை ராத் அங்கிள் வீட்டிற்குச் சென்று டானுடன் விளையாடலானேன்.  மேலும் ராத் அங்கிளுக்குப் புத்தகம் படித்துக் காட்டுவேன்.  அவரும் எனக்குப் பல கதைகள் சொல்வார்.  வெள்ளிக் கிழமை டானுடனும் ராத் அங்கிளுடனும் செலவழிக்கும் நேரம் எங்கள் மூவருக்குமே மிக நிறைவு தருவதாக இருந்தது.  இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் ராத் அங்கிள் சொர்கத்திற்குப் போய்விட்டார்.  டான் எங்கள் வீட்டிற்குத் திரும்பவும் வந்துவிட்டான்.  ராத் அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிய நானும் டானும் உதவியது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் திருப்தி.

(இந்த உண்மை சம்பவம் A second chicken soup for the women's soul என்ற westland books pvt ltd பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.  இது போன்ற பல நெஞ்சைத்தொடும் சம்பவங்கள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் அம்மா/மனைவி/சகோதரிக்கு மிகச் சிறந்த பரிசாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன்)

(எங்கள் வீட்டு christmas tree)


                 wish you all  merry christmas. கிருஸ்மஸ் பண்டிகை மற்றவர்களுடன் பகிர்ந்து அளிப்பதை, ஈவதைக் குறிக்கும் பண்டிகை. க்ருஸ்மசில் மட்டுமன்றி எல்லா நாட்களிலும் நம்மால் முடிந்தவரை நேரம், பணம், பொருள், அன்பை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்போம்.
(பதிவின் தொடக்கத்தில் உள்ள படம் உதவி கூகிள்)

 

10 comments:

ஸ்ரீராம். said...

நல்லதொரு பதிவு. நான் பயங்கர நாய் நேசன். சொன்னால் சிரிப்பீர்கள். நானும் ஒரு நாய்ப் பதிவு வைத்துள்ளேன்! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

geetha santhanam said...

நாயென்றாலே காத தூரம் ஓடும் என் மகளுக்கு இந்த கதை கேட்டவுடன் நாய்களிடம் ஒரு பரிவு ஏற்படத் தொடங்கிவிட்டது.
/நானும் ஒரு நாய்ப் பதிவு வைத்துள்ளேன்! /
இது என்ன coincidence. greatminds think alike ஆ!

சிவகுமாரன் said...

செல்லப் பிராணிகள் இப்பொது நான் வளர்ப்பதில்லை. சிறுவயதில் நாங்கள் வளர்த்து அதைப் பிரிந்த சோகம் இன்று வரை மறையாமல் இருக்கிறது.

அப்பாதுரை said...

நாய்க்கும் மரத்துக்கும் என்ன தொடர்பு என்று மண்டையை...

குரோம்பேட்டை வீட்டு 'டைகர்' போல் ஒரு நாயை நான் கண்டதில்லை.

geetha santhanam said...

வருகைக்கு நன்றி சிவகுமாரன், அப்பாதுரை.
துரை,
அந்த பெண்ணைப் போல் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது, கொடுப்பது christmas spirit... christmas
என்றால் christmas tree இல்லாமலா? (பின்ன எப்படி எங்க வீட்டு கிருஸ்மஸ் ட்ரீயை ப்ளாகில் போடுவதாம்?!!!)
எனக்கும் டைகர் நினைவு வந்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதை..

பத்மநாபன் said...

அன்பு செலுத்த அறிவும் தூரமும் தடையே இல்லை என்பதை எடுத்த சொன்ன கதை...டான் மனதிலேயே இருக்கிறான்.. நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...

geetha santhanam said...

நன்றி முத்துலெட்சுமி. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மனாபன்.

meenakshi said...

கீதா, இந்த கதையை நீங்கள் மொழி பெயர்தீர்களா! மிகவும் அருமை. விலங்குகள் செலுத்தும் அன்பு தூய்மையானது. அழகு, அறிவு, அந்தஸ்த்து என்று எந்த பாகுபாடும் அதற்கு தெரியாததால்தான் அந்த அன்பில் தூய்மையை காண முடிகிறது.
அருமையான கதை! பதிவிற்கு தலைப்பு கண பொருத்தம் கீதா. :)
Christmas tree அழகாய் இருக்கிறது. உங்கள் மகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசை கொடுத்தீர்களா?

geetha santhanam said...

thanks meenakshi.