Tuesday, 22 February 2011

நான் அவனில்லை


             அவனை நினைத்தாலே ஆத்திரமாக வருகிறது.  இன்று மட்டுமல்ல என் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனை நினைத்தாலே எனக்கு வருவது ஆத்திரம் மட்டுமே.  யார் அந்த அவன் என்று கேட்கிறீர்களா?  அந்தக் (நொந்த) கதையைச் சொல்கிறேன்.

              எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம்.  என் அப்பா, சித்தப்பா எல்லோரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.  நான் பிறந்து எட்டாவது மாதத்தில் மதன், என் சித்தப்பாவின் மகன் பிறந்தான்.  எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னரே அண்ணா ஆனதுடன் எதற்கெடுத்தாலும் தம்பிக்கு விட்டுக் கொடுக்கவும் பழக்கப்பட்டேன்.  அவன் உன்னைவிடச் சின்னவன்தானே, விட்டுக் கொடு என்று சொன்னவர்கள் நானே சின்னவன்தான் என்பதை மறந்தார்கள்.

              இது மட்டுமா? இரண்டு பேரும் ஒன்றாகவே பள்ளிக்குப் போகட்டும்; ஒருத்தருக்கு ஒருத்தர் துணை என்று இருவரையும் ஒரே பள்ளியில் ஒன்றாகச் சேர்த்தார்கள்.  அவன் படிப்பில் சுட்டி.  நானும் நன்றாகப் படிக்கும் ரகம்தான் என்றாலும் அவனை முந்தவேண்டும் என்று அதிக நேரம் படிக்க வேண்டியதாக இருந்தது.  பின்னே, என் தம்பி என்னைவிட அதிகம் மார்க் எடுத்தால் என் மதிப்பு என்னாவது? இப்படி எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து எனக்கு டென்ஷன் கொடுத்துக் கொண்டே இருப்பவனை நினைத்தால் ஆத்திரம் வராதா?

            பள்ளி, கல்லூரியில் அவனுடன் விருப்பமில்லாமல் ஒன்றாகப் படிக்க நேர்ந்தது.  மேல் படிப்பு முடிந்தவுடன் நான் பங்களூருவிலும் அவன் ஹைதராபாத்திலும் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை சேர்ந்தோம்.  இந்த ஐந்து வருடங்களாகத்தான் அவனைப் பார்க்காமல் நிம்மதியாக இருக்கிறேன்.

            பார்ப்பதற்கு நாங்கள் இருவரும் ஒரே ஜாடையில் இருப்போம்.  அவனுக்கு என்னைவிட கொஞ்சம் சப்பை மூக்கு; தாடை கொஞ்சம் வளைந்திருக்கும். மதன் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கிவிடுவான். என் அம்மா, அப்பா ஏன் இப்ப என் மனைவி கூட அவனுக்குத்தான் சப்போர்ட். "அவர் நல்லாத்தானே பழகறார்.  உங்கள் மனசில்தான் ஏதோ வீண் கோவம்" என்று என் மனைவிகூட அவனுக்குச் சான்றிதழ் கொடுக்கிறாள்.  எனக்கும் மதனுக்கும் ஒன்றாகவே திருமணம் ஆனாலும் அவனுக்கு இரு வருடங்கள் கழித்தே நான் குழந்தை பெற்றுக் கொண்டேன்.  பின்னே, நான் பெற்ற கஷ்டம் என் மகன் பட வேண்டாமே.  இப்பொழுது என் மகன்தான் குடும்பத்திற்கு இளையவன்.  அவன் யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டாமே.
    
             ஒரு நாள் என் மனைவி, மகனுடன் பிருந்தாவன் கார்டன்ஸ் பார்க்கப் போயிருந்தேன்.  என் மகனின் கைபிடித்து அழைத்துச் செல்லும்போது  திடீரென்று கால் தடுக்கிக் கீழே விழுந்தேன். மிக வேகமாக விழுந்ததால் முகத்திலிருந்து ரத்தம் கொட்ட அங்கேயே மயக்கமானேன்.  விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் இருக்கேன்.  என் மனைவி, அப்பா, அம்மா எல்லோரும் என்னைச் சுற்றி கவலையுடன் அமர்ந்திருக்கிறார்கள்.  என்னால் வாயை அசைக்க முடியவில்லை. என் அப்பா "இங்க பாரு.  உனக்கு ஒண்ணும் இல்ல. கவலைப் படாதே.  விழுந்த வேகத்தில் உன் கீழ் பற்கள் இரண்டு மேல் தாடையில் குத்தி உள்ளே சென்று விட்டதால் அதை எடுத்து, பின் கிழிந்த தாடையைப் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டுமாம்.  இரண்டு வாரத்தில் எல்லாம் குணமாகிவிடுமாம். கொஞ்சம் பொறுத்துக் கொள்"  என்றார்.  ப்ளாஸ்டிக் சர்ஜரி முடிந்து முதலில் வாயை அசைக்கவே முடியவில்லை.  கொஞ்ச நாட்களில் முன்னேற்றம் தெரிந்தது.  மெதுவாக ரெகுலர் உணவு கடித்து சாப்பிட முடிந்ததும்தான் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

            வீட்டிற்கு வந்து முதன்முறையாக என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து 'வீல்' என்று அலறினேன்.  அழுகை அழுகையாக வந்தது.  பின்ன என்னங்க, நான் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தேனோ, அவன் முகம் போல் என் முகம் மாறியிருந்தது.

7 comments:

எல் கே said...

கடைசியில் எதிர் பாரா ட்விஸ்ட் ... இன்னும் முயற்சி பண்ணுங்க

ஸ்ரீராம். said...

ஹா..ஹா... என்ன கொடுமை இது...!

சாய்ராம் கோபாலன் said...

கீது வாவ், திருப்பம் புதியது

வடை எனக்கு தான்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹஹஹ்ஹா..
அது சரி .. அண்ணன் நல்லா படித்தால் அவனை மாதிரி இரேண்டா என்று இவர் பையனுக்கு ஒன்றும் ப்ரச்சனை வரவில்லயா ? :))
நல்ல கதை..

meenakshi said...

குட்டி கதை ரொம்ப சுவாரசியமா இருந்துது! நறுக்கு தெரித்தாற்போல் சட்டுன்னு ஆரம்பிச்சு பட்டுன்னு முடிச்சுட்டீங்க.
இதுவும் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மைதான். இது ஒரு நீறு பூத்த நெருப்பா அவங்க அடி மனசுல எப்பவும் இருந்துண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை வெளிப்படுதிண்டே இருப்பாங்க. அதன் உச்சம்தான் ரெண்டு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துண்டது. கதைல நீங்க இதை ரொம்ப அழகா வெளிபடுத்தி இருக்கீங்க. முடிவும் சூப்பர்!

அப்பாதுரை said...

இப்ப இன்னும் நல்லா பழித்திட்டம் போடலாமே?

geetha santhanam said...

நன்றி LK, ஸ்ரீராம், சாய்ராம், முத்துலக்ஷ்மி, மீனாக்ஷி & துரை.

LK, அடுத்த முயற்சி விரைவில்.

ஸ்ரீராம், குளவி கொட்டி கொட்டி புழுவைக் குளவியாக்குமாமே. அதுபோல் மதனை நினைத்துக் குமுறி குமுறி இவனும் அவன்போல் ஆனான் போலும்.

சாய்ராம், சாரி. வடை உங்களுக்கு இல்லை போலிருக்கே.

முத்துலக்ஷ்மி, இந்த முறையாவது விட்டுக் கொடுப்பது மதனின் வாரிசாக இருக்கட்டும் என்பது இவனின் எண்ணம்.

மீனாக்ஷி, நீங்கள் சொல்வது சரி. இத்தகு தாழ்வு மனப்பான்மை என்னும் நோய் எத்தனை அறிவுரை சொன்னாலும் போகாது.

துரை, முடித்த கதைக்கு ஒரு சுவையானத் தொடக்கத்தைக் கொடுக்கின்றீர்களே.