Thursday, 25 March 2010

திருடா திருடா

              அரை ப்ளேடு அருணாச்சலமும் ஆறுமுகமும் அந்தத் தெருமுனையில் குத்த வைத்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆறுமுகம்: "என்ன அரை ப்ளேடு, பொய்ப்பெல்லாம் எப்படி கீது?"

அரைப்ளேடு: "என்னத்த சொல்ல.  பஸ் மாறி பஸ் ஏறி எறங்கினாலும் யூஜில்ல.  எல்லாரும் உள்பாக்கெட், பாக்கெட்டோட அண்டிராயர்னு சுகுரா இருக்கானுவ. அப்படியே பர்ஸ் கெடைச்சாலும், அது என்னவோ க்ரெடிட் கார்டாமே, அதுதான் கீது. அந்த எழவாலே நமக்கு ஒன்னியும் பிரோசனமில்ல.  அத்த வுடு.  உன் பொய்ப்ப சொல்லு."

ஆறுமுகம்:" நமக்கும் ஒன்னியும் சரியில்ல மாப்ளே.  அதென்னவோ புள்ளிங்களுக்கெல்லாம் எக்ஸாமாமே. அல்லாம் படிக்குதுங்க.  அவங்க அப்பனும் ஆத்தாளும் அலாரம் வைச்சு முழிச்சு காபி, டீ தராங்க.  இவங்க எப்ப தூங்குவாங்கன்னு பாத்து பாத்து நமக்கு அசந்து போனதுதான் மிச்சம்.  ரெண்டு மாசமா ஒன்னியும் பேரல. ஹும்".

               அவர்களின் கவனத்தை ஈர்த்தது ஒரு வேலைக்காரியிடம் ஒரு பெண் பெரிய குரலில் பேசியது.  "நீ நாளைலேர்ந்து பத்து நாள் வரவேண்டாம்.  நானும் பையன் சரணும் சாயந்திரம் ட்ரெயினுக்கு ஊருக்குப் போறோம்.  ஐயர் மட்டுந்தான் இருப்பாரு. "   ஆஹா என்று ஆறுமுகம் அந்த வீட்டை நோட்டம் விட்டான். போர்டிகோவில் கார், உள்ளே பெரிய டி.வி, ஒரு காட்ரேஜ் பீரோ- திருப்தியோடு அரைப்ளேடைப் பார்த்தான்.  அரைப்ளேடு கொஞ்சம் சந்தேகத்தோடு பார்க்கவே, "கேட்டுகினியா, ஐயரூட்டம்மா ட்ரேயின்ல போகுதாம். நகையெல்லாம் கள்ட்டி வைச்சுட்டுதான் போகும்.  இன்னக்கு நல்ல வேட்டைதான்" என்று சந்தோஷமாக ஆறுமுகம் அரைப்ளேடுடன் 'நாஷ்தா தின்ன'ப் போனான்.

              மாலை ஒரு பெரிய பெட்டி, இரண்டு கட்டைப் பைகள், ஒரு பெரிய டப்பா சகிதம் ஐயர்வீட்டு மாமி ஊருக்குக் கிளம்பினார்.  அவர் மகன் சரண் மட்டும் அப்பாவை விட்டுப் போக மனமில்லாமல் அழுதுகொண்டே இருந்தான்.  கையில் ஒரு நாய் பொம்மையுடன் அழுது கொண்டே இருந்த அவனைச் சமாதானப்படுத்தி தூக்கிவந்த ஐயர் (ஸ்ரீதர்) காரில் ஏறப் போனார்.  அப்போது பின்னாலிருந்து 'பாம் பாம்' என்று பெரும் சத்தத்துடன் லாரி வரவே சரண்  கையிலிருந்த நாய் பொம்மை 'வவ் வவ்' என்று குரைத்தது. சோம்பலோடு படுத்துக் கொண்டிருந்த தெரு நாய் உடனே குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிக் குலைத்தது. உடனே அழுகையை மறந்து, சரண் 'ஒன்னும் இல்ல, லாரிதான். பயப்பட்டு குரைக்காதே' என்று நாய் பொம்மையுடன் விளையாடத் தொடங்கினான்.  ஸ்ரீதரும் மனைவியையும் மகனையும் ஸ்டேஷனுக்குக் கொண்டுவிட காரைக் கிளப்பினார்.

               இதையெல்லாம் தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்த அரைப்ளேடும் ஆறுமுகமும் திருப்தியோடு தலையசைத்தனர்.  இருட்டும் வரை காத்திருந்து அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் டிவி சீரியலில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதர் வீட்டில் நைஸாக நுழைந்து பாலாறு சம்பிற்குப்(sump) பின்னால் ஒளிந்து கொண்டனர்.

               8.30 மணிபோல் வீடு திரும்பிய ஸ்ரீதர் ஒரு சம்பிரதாயத்திற்கு (மனைவி ஃபோனில் கேட்பாளே!!) வாசலில் சுற்றிப்பார்த்துவிட்டு கேட்டைப் பூட்டினார்.  கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்கப் போனார்.  அரைப்ளேடும் ஆறுமுகமும் மெதுவாக வீட்டின் பின்பக்கம் நோக்கி செல்ல எத்தனித்தனர்.  அப்போது அரைப்ளேடு கால் இடறி ஸம்பை மூடும் தகர மூடியின் மீது 'தம்' என்ற சத்தத்துடன் விழுந்தான்.   அதே நொடியில் மின்சாரமும் போனது.  ஸ்ரீதர் எமர்ஜென்சி லைட்டைத் தேடி எடுத்துவருவதற்குள், அரைப்ளேடும் ஆறுமுகமும் மாடிப் படியில் வேகமாக ஏறி மாடியிலுள்ள Syntex water tank-க்குப் பின்னால் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டனர்.  இதற்கிடையில் ஒரு நாய் ஈன  ஸ்வரத்தில் 'வவ் வவ்' எனக் குரைக்க ஒன்று, இரண்டு, மூன்று என பல நாய்கள் கோரசில் சேர்ந்து கொண்டன.  எல்லா நாய்களும் சடுதியில் ஒன்று கூடி ஸ்ரீதர் வீட்டைப் பார்த்து குலைக்கத் தொடங்கின.  இதற்குள் ஸ்ரீதரும் வாசலுக்கு வந்து "யாரு?" என்று பெரிதாகக் (பயமுறுத்துவதாக நினைத்து) கத்தினார்.
அக்கம் பக்கத்திலிருந்தும் அவரின் நண்பர்கள் எமர்ஜென்சி லைட்டோடு ஓடி வந்தனர். இவர்கள் ஏற்படுத்திய சத்தத்தில் தெரு நாய்களும் கலைந்து ஓடிவிட்டன.

              சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துவிட்டு யாரையும் காணாததால் வாசலுக்கே வந்தனர்.  என்னவாயிருக்கும் என்று கூடி ஆலோசித்த அவர்கள் பின் ஸ்ரீதருக்குத் துணையாக அவருடன் இருப்பது என்று முடிவெடுத்தனர்.  "சார், தெரு நாயெல்லாம் உங்க வீட்டைப் பார்த்து கத்துகின்றன.  நீங்க வேற ஏதோ சத்தம் கேட்டது என்று சொல்றீங்க.  நாளைக்கு ஏதாவதென்றால் அண்ணிக்கு யார் பதில் சொல்றது.  நாங்க உங்ககூட இன்னைக்கு நைட்டு தங்கிவிட்டுக் காலையில் போறோம்" என்று உரிமையுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

              "நாங்க night patrol செய்றோம் மாமா" என்று நான்கைந்து இளைஞர்கள் முன்னுக்கு வந்தனர்.  அவர்கள் க்ரிகெட், அரசியல், சினிமா என்று     பேசிக்கொண்டே நடைபயின்றார்கள்.  'பாவம் பிள்ளைகள்' என்று சில அம்மாக்கள் முறை வைத்து டீ போட்டுக் கொடுத்தார்கள்.  இப்படி அந்தத் தெருவே ஒரு கல்யாண வீடு போல் களைகட்டிவிட்டது.

              கொஞ்ச நேரத்தில் கரண்ட்டும் வந்தது.  எல்லா லைட்டையும் போட்டு வீட்டைச் சுற்றி பார்த்தனர்.  அரை ப்ளேடு மற்றும் ஆறுமுகத்தின் நல்ல நேரம் அவர்கள் மாடிக்குச் சென்று பார்க்கவில்லை (வேறென்ன, பயம்தான்!!).  வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று டிவி பார்த்தனர்.  "சார், பேசாமல் லைட்டெல்லாம் போட்டு வைத்திருப்போம்.  நாளைக்கு லீவுதான்.  நம்ம வழக்கமான சீட்டுக் கச்சேரியை இன்னைக்கே போடுவோம்.  பொழுதும் போகும்.  நாம முழித்திருப்பதால் திருடனும் வரமாட்டான்" என்று நண்பர் கூறியதை மற்றவர்களும் ஒப்புக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.  விளையாட்டு ஸ்வாரஸ்யத்தில் திருடனைப் பற்றி மறந்தே போயினர்.

               வாட்டர் டாங்க் பின்னால் ஒளிந்து கொண்ட அரை ப்ளேடுக்கும் ஆறுமுகத்திற்கும் அடுத்தடுத்து எல்லாம் தங்கள் ப்ளானிற்கு எதிராகவே நடப்பதை நினைத்து பெரும் ஏமாற்றம்.  இப்போது மறைவிடத்திலிருந்து வெளியிலும் வரமுடியாத நிலமை!!.

              இப்படியே காலை 5 மணியாகிவிட்டது.  நண்பர்களும் சீட்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீடு செல்ல வெளியில் வந்தனர்.  "ஏம்பா, நேற்று திருடன் இருப்பானா என்ற கோணத்திலேயே தேடினோம்.  ஒரு வேளை நாய் ஏதாவது அடிபட்டுக் கொண்டிருக்குமோ!.  இருங்கள், நான் காருக்குக் கீழே பார்க்கிறேன்" என்று ஸ்ரீதர் காரைச் சுற்றி வந்தார்.  காலால் காரை எத்தி சத்தம் செய்தார்.  'வவ் வவ்' என்று சத்தம் வரவும் நண்பர்களும் வந்து கரைச் சுற்றிப் பார்த்தனர்.  ஒன்றும் இல்லை.  திடீரென்று நினைவு வந்தவராக ஸ்ரீதர் கார் சாவியைக் கொண்டு வந்து காரிலிருந்து ஒரு நாய் பொம்மையை வெளியில் எடுத்தார்.  விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.  ஒன்றும் புரியாமல் விழித்த நண்பர்களிடம் 'இது சரனோட பொம்மை.  சத்தம் வந்தால் குரைக்கும்.  நேற்று ஏதோ நாய் இந்தப் பக்கம் 'தம்' என்ற சத்ததுடன் குதித்துப் போயிருக்க வேண்டும்.  சத்தம் கேட்டதும் இந்த பொம்மை வவ் வவ் என்று குரைத்திருக்கும் மற்ற நாய்களும் தன் தோழன் யாருக்கோ பிரச்சினை என்று குரைத்திருகின்றன.  இதுவும் சத்ததிற்குப் பதில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.  நாமெல்லாம் ஏதோ திருடந்தான் வந்துவிட்டான் என்று எண்ணி வீட்டைச் சுற்றி தேடியிருக்கிறோம். Any way , சீட்டாட்டம் நன்றாகத்தான் இருந்தது" என்றார்.  நண்பர்களும் கூடிச் சிரித்தனர்.

              " இது நல்லா இருக்கே.  நான் கூட ஒன்று வாங்கி வாசலில் வைக்கப் போகிறேன்.  சத்தம் கேட்டால் இது குரைக்க, தெரு நாய்களும் குரைக்க, திருடன் அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவான்.  பாவம், உன் பையன் இதை மிஸ் பண்ணி அழப் போறான்" என்றனர்.  ஸ்ரீதர் ஒரு நிமிடம் யோசித்தார்.  பின்னர் நண்பர்களிடம் " அவன் பாவம்.  நேற்று என்னை விட்டுப் போக மனமில்லாமல் ரொம்ப அழுதான்.  அந்த களேவரத்தில்தான் இந்த பொம்மையை வைத்துவிட்டுப் போயிருப்பான்.  காலையில் எழுந்தவுடன் இந்த பொம்மையைக் காணாமல் அழுவான்.  ஜுரம் ஏதாவது வந்துவிடப் போகிறது.  நான் 5.45 மணி ரதிமீனா பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போய் இதைக் கொடுத்துவிட்டு ராத்திரி பஸ்ஸில் திரும்ப வருகிறேன்.  வீட்டுச்சாவியை உங்களிடம் கொடுக்கிறேன்.  பார்த்துக் கொள்ளுங்கள் " என்றார்.  மகனிடம் அவர் வைத்திருந்த பாசம் ஊரறிந்த விஷயம் ஆதலால் நண்பர்களும் அவரைத் தடுக்கவில்லை.

               ஏமாற்றத்தோடு மறைவிடத்தில் நின்றிருந்த ஆறுமுகமும் அரைப்ளேடும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

(நன்றி எங்கள் ப்ளாக்.  உங்களின் அனுபவத்தில் என் கற்பனை கொஞ்சம் கலந்திருக்கிறேன்.  royalty  எதுவும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!)

7 comments:

ஸ்ரீராம். said...

கற்பனைக் குதிரையை தட்டி விட்டுட்டீங்களா....ம்....நல்லா இருக்கு.

சாய்ராம் கோபாலன் said...

அடி பாவி ?

அதுவும் அங்கே எங்கள் ப்ளாக் போய் படித்து இங்கே உன் ப்ளாக் வந்தால் இது.

இது என்ன நாய்கள் வாரமா ? இல்லே எங்களை பார்த்தால் நாய்கள் மாதிரி உனக்கு இருக்கா.

Have you read my story on Dog love ? Read that. My first short "nach" story if I am right.


http://poothoorigai.blogspot.com/2008/03/blog-post.html

சாய்ராம் கோபாலன் said...

அரை ப்ளேடு அருணாச்சலமும் ஆறுமுகமும் - Waste

If I were them, I would have gone to the other guys houses and got even more bigger booty !!

geetha santhanam said...

சாய்ராம், இந்த மாதிரி திருடன் வருவானோ என்ற சந்தேகம் வந்தால் பெண்கள் எவ்வளவு உஷாராக இருப்பார்கள்? தூங்குவாங்களா? கொஞ்சம் சத்தம் கேட்டாலும் சீட்டாடுபவர்கள் ஒன்றுகூடி வரமாட்டார்களா? அவங்க கிட்ட மாட்டிப்பாங்களா அரைப்ளேடு அருணாசலமும் ஆறுமுகமும்
----------கீது

geetha santhanam said...

சாய்ராம், இருந்தாலும் உன் comment-க்காக மேலும் சில வரிகளைச் சேர்த்திருக்கிறேன். --கீது

சாய்ராம் கோபாலன் said...

//சாய்ராம், இந்த மாதிரி திருடன் வருவானோ என்ற சந்தேகம் வந்தால் பெண்கள் எவ்வளவு உஷாராக இருப்பார்கள்? தூங்குவாங்களா?//

They will be busy watching serial !!

meenakshi said...

கதை கோர்வையா நல்லா வந்திருக்கு. தலைப்பை படிச்சதுமே இந்த திருடங்க கதை கொஞ்சம் நகைச்சுவையா இருக்கும்னு தோணித்து. இந்த திருடர்களோட இரண்டாவது முயற்சியும், தோல்வி அடையறா மாதிரி, உன்னோட சுவாரசியமான கற்பனையில் கதையை தொடரலாமே!